Monday, February 22, 2010

குறிப்புகள்

மொட்டை வெயிலில் வியர்வையில் ஊறித் திளைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் டிராஃபிக் போலீஸ்காரர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம் செலவில் இளநீர் வாங்கிக்கொடுத்து இதமாக இரண்டு வார்த்தை பேசலாமென தோன்றும். ‘லூஸூப்பயல்’ என சரியாக நினைத்து விடுவார்களோ எனும் பயத்தில் தவிர்த்து விடுவேன்.

***
தண்ணியா / தோசை பதத்துல / ஊத்தாப்ப பதத்துல - என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கை வைக்கிறார்கள். அவரவர்க்கேற்ற இளநீரை எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ?! சீவி, உறிஞ்சு குழாய் போட்டு, குடித்ததும் வாங்கி இரண்டாய் வகுந்து, சுரண்டி, ஒரு கரண்டியையும் செய்து - பத்து ரூபாய்க்கு இந்தச் சேவை மிக அதிகம். அன்னபூர்ணாவில் ஆர்டர் செய்த அரை மணி நேரம் கழித்து காஃபி வரும். 12.5% சர்வீஸ் டேக்ஸூடன்!

***
கவிஞர் கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’- நூலுக்கு மதுரையில் சமயவேல் அறிமுக அரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஜெயமோகன், யவனிகா ஸ்ரீராம், திருச்செந்தாழை, கடற்கரய், ரமேஷ் பிரேதன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். மதுரைவாழ் பதிவுலக நண்பர்கள் விழாவில் கலந்துகொள்வார்களென நம்புகிறேன்.

நூலின் முன்னுரையில் தனக்கு வினையூக்கியாக இருந்ததாக என்னுடைய பெயரையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார் கலாப்ரியா. போனிலும், சாட்டிலுமாக அவருக்கு இம்சை கொடுத்ததன்றி வேறென்ன செய்திருக்கிறேன் என்று தீவிரமாக யோசிக்கிறேன்.

***

தீபாவை பதிவுலகப் பறவைகளின் வேடந்தாங்கலான விஜி வீட்டில் சந்தித்தேன். பொதுவாக கூர்நாசி உடையவர்கள் தீர்க்கமானவர்கள் என்பது என் நம்பிக்கை. பொய்க்கவில்லை.

சில ஆளுமைகளின் புத்திரபாக்கியங்கள் ‘பிராண்ட் அம்பாஸிடராக’ மட்டுமே செயல்படுவார்கள். அப்பா என்பதையெல்லாம் விடுத்து சகபடைப்பாளியாக ஜெயகாந்தனை விமர்சன நோக்கோடு அணுகியது பிடித்திருந்தது.

***
தேசிய விருது பெறும் முதல் தமிழ் குறும்படம் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ‘கர்ண மோட்சம்’. சில நிமிடங்கள் மட்டுமே ஓடுகிற இப்படம் என்னை கடுமையாகப் பாதித்தது. முரளி மனோகர் இயக்கத்தில், எஸ்.ராவின் வசனங்களோடு உருவான இப்படம் பிரசன்னா இராசன் பதிவில் காணக்கிடைக்கிறது.

***

‘நீ நல்ல மார்க் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் நீ கேட்ட கோர்ஸ், கேட்ட காலேஜ்ல படிக்க நான் ஏற்பாடு பண்றேன். கவலையே படாதே!’ - என்று சும்மாவாச்சும் ஓர் உறுதிமொழி கொடுத்தால் பிள்ளைகளுக்கு தேர்வு பயங்களும், மனஅழுத்தமும் குறையலாம்.

மதிப்பெண்களால் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என்பது எல்லோருக்குமே தாமதமாகத்தான் புரியவரும்.

***

புத்தகமோ, சினிமாவோ, இசையோ எனக்குப் பிடித்திருந்தால், ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக் கொடுப்பது வழக்கம். ரசித்துக்கொண்டே இருக்கிறார்கள். திருப்பித் தருகிற பாடில்லை. ‘கன்னியும் புத்தகமும் கடனாய்ப் போனால் கசங்காமல் வீடு திரும்புவதில்லை’ என்றார் சுரதா. கசங்கினாலும் பரவாயில்லை. வீடு திரும்பினால் போதும் என்கிற மனநிலையில் இருக்கிறேன்.

***
ஓரே வளாகத்தில் எஞ்சீனியரிங்கும், கேட்டரிங்கும் இருக்கும் கல்லூரி ஒன்றில் பணியாற்றும் பேராசிரியர் அழைத்திருந்தார். அவர் சொன்ன இடத்தில் வெகுநேரம் காத்திருந்தும் ஆளைக் காணோமே என்று செல்லினேன். ‘ஐய்யா தாங்கள் நிற்பது பொறியியல் அறிவியல் கல்லூரி வாசலில்... நான் வரச்சொன்னது பொரியல் அவியல் கல்லூரிக்கு...!’ என்று பதில் வந்தது.

16 comments:

D.R.Ashok said...

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

//‘லூஸூப்பயல்’ என சரியாக நினைத்து விடுவார்களோ//

:-)))))

//கவிஞர் கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’- நூலுக்கு மதுரையில் சமயவேல் அறிமுக அரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஜெயமோகன், யவனிகா ஸ்ரீராம், திருச்செந்தாழை, கடற்கரய், ரமேஷ் பிரேதன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். மதுரைவாழ் பதிவுலக நண்பர்கள் விழாவில் கலந்துகொள்வார்களென நம்புகிறேன்.//

கண்டிப்பாக செல்வா.. முடிந்தால் வரப்பாருங்கள்

//தேசிய விருது பெறும் முதல் தமிழ் குறும்படம் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ‘கர்ண மோட்சம்’. //

ரொம்ப நாளைத் தேடிக்கிட்டு இருக்கேன். பகிர்வுக்கு நன்றி

க.இராமசாமி said...

நல்லா இருக்கு.

RR said...

'கர்ண மோட்சம்' கண்ணீர் விட வைகின்றது.......

Anonymous said...

1. இந்த நேயத்துக்கு பேர் தான் மனிதமோ? இலவசமா பட்டப்பெயர் வரும் போது வாங்கித்தரலாமே...

2.10ரூபாய்க்கு இளனீர் கிடைக்கிறதா செல்வா?

3.அதை விட வேறென்ன வேண்டும்..
ரொம்பத்தேன் தன்னடக்கம் செல்வா

4.வாழ்க தீபா..வளர்க விஜியின் சேவை

5.அவசியம் பார்க்கிறோம்.

6.உண்மை ஆனால் இப்ப எல்லாம் அதிகமார்க் தானா அம்மா அப்பாக்கு பெருமை,,,,,இதையெல்லாம் யோசிக்க கரென்சி கைகளுக்கு நேரமில்லை செல்வா

7.சுரதா வீடு சேர கூட்டு பிரார்த்தனை செய்வோம் நேரம் பிறகு அறிவிக்கிறேன்

8. இன்னும் நீங்க திருந்தலையா? ஹிஹிஹி

Deepa said...

"சகபடைப்பாளியாக" - இந்த வார்த்தை ரொம்ப அதிகம்; அக்கிரமம். தயவு செய்து எடுத்து விடுங்கள். :)

☼ வெயிலான் said...

// ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக் கொடுப்பது வழக்கம் //

எனக்கு புத்தகமோ, இசைக்குறுந்தகடோ இது வரை கொடுக்கவில்லை என்று பதிவு செய்து கொள்கிறேன் :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வுகள் அண்ணன்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

"சகபடைப்பாளியாக" - இந்த வார்த்தை ரொம்ப அதிகம்; அக்கிரமம். தயவு செய்து எடுத்து விடுங்கள். :)

February 23, 2010 10:16 AM
Blogger ☼ வெயிலான் said...

// ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக் கொடுப்பது வழக்கம் //

எனக்கு புத்தகமோ, இசைக்குறுந்தகடோ இது வரை கொடுக்கவில்லை என்று பதிவு செய்து கொள்கிறேன் :)//

நானும்.

கும்க்கி said...

☼ வெயிலான் said...
// ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக் கொடுப்பது வழக்கம் //

எனக்கு புத்தகமோ, இசைக்குறுந்தகடோ இது வரை கொடுக்கவில்லை என்று பதிவு செய்து கொள்கிறேன் :))))

வேறென்ன....
அதேதான்.

கும்க்கி said...

☼ வெயிலான் said...
// ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக் கொடுப்பது வழக்கம் //

எனக்கு புத்தகமோ, இசைக்குறுந்தகடோ இது வரை கொடுக்கவில்லை என்று பதிவு செய்து கொள்கிறேன் :))))

வேறென்ன....
அதேதான்.

அருவி said...

//கன்னியும் புத்தகமும் கடனாய்ப் போனால் கசங்காமல் வீடு திரும்புவதில்லை’ என்றார் சுரதா. கசங்கினாலும் பரவாயில்லை. வீடு திரும்பினால் போதும் என்கிற மனநிலையில் இருக்கிறேன்.//

உண்மையிலேயே உங்களுக்கு பரந்த மனது. மேற்கத்தைய சிந்தனை போல தெரிகிறது. இதை சொல்ல அசாதாரண துணிச்சல் வேண்டும்.

ஸ்ரீ said...

கண்டிப்பாக வருவேன் .

எம்.எம்.அப்துல்லா said...

படித்தேன்.இரசித்தேன்.

:)

நர்சிம் said...

பகிர்வு அருமைண்ணா.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in