சுவையற்றவை

ஜன்னலோரத்து இருக்கை எதையாவது எழுத துண்டி விடுகிற வசியத்தை வைத்திருக்கத்தான் செய்கிறது. அதிலும் புகைப்படம் எடுத்து விட முடிகிற கைப்பேசியும் இருப்பின் மனம் நிறுத்தத்திற்கு நிறுத்தம் கவிதையான காட்சிகளைத் தேடுகிறது அல்லது கிடைக்கிற காட்சிகளை கவிதையாக்க முயல்கிறது. இருமருங்கும் விரிந்து கிடக்கிற உப்பளங்களைக் கடந்து ஊர் நோக்கி விரைகிறது பேருந்து. பெரும்பாலும் ஐம்பதைக் கடந்தவர்கள்தாம் உப்பளங்களில் உப்பிழுத்துக்கொண்டிருக்கிறார்கள். கடல் நீரை சூரிய ஒளியில் காய்த்து உப்பை எடுப்பதைக்காட்டிலும் கவிதை எழுதுவது கடினமா என்ன?!

தென்னங்கீற்று வேய்ந்த கடலோர குடிசைகளுக்குள்ளும் கேபிள் நதி பாயத்தான் செய்கிறது. ஒவ்வொரு பயணத்திலும் குடிசைகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதைக் காண்கிறேன். ஊருக்கு நாலு கொழுத்த இரும்பு சிமெண்டு வியாபாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்குதான் போய் விடுகிறது அத்தனை சிமெண்டும்?!

ஏன் இப்படி சரக்கடித்த சங்கரம்பிள்ளை போல எழுதிக்கொண்டிருக்கிறேன் என யோசிக்கிறேன். சமீப காலமாய் வண்ணதாசன் கோட்டி பிடித்து ஒம்ம ஆட்டுதுவேய்.. என்கிற கணபதி சுப்ரமண்யத்தின் கண்டுபிடிப்பிலும் உண்மையில்லாமல் இருக்காது. மொத்த பொட்டலத்தையும் ஏக்தம்மில் உறிஞ்சிவிட்ட பரதேசி போல மாறுதுவேய் ஒம்ம நடை (எழுத்து நடைதான்) என அவர் சொல்வதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு இந்த ஜன்னலுக்கு வெளியே தெரியும் மொட்டைக் கிணற்றருகே குளிக்கும் பெண்ணை எடுத்துக்கொள்கிறேன். யாராவது இரைச்சலோடு ஒலிக்கும் இந்த "இன்பமே உந்தன் பேர் பெண்மையோ..." பாடலை நிறுத்த சொல்லி போராடினால் இருந்த இடத்திலிருந்தே ஆதரவு தர தயாராய் இருக்கிறேன். எவனுக்கும் என் ஆதரவு தேவையில்லையா?

ஊரை நெருங்குகையில் பொங்கலின் கால்சுவடுகள் தெரிகின்றன. அதையே பின்பற்றி போனால் எதாவது சந்தையின் குப்பை மேட்டை அடைந்து விடும் அபாயம் இருக்கிறது. 'ப' வடிவத்தில் கரும்புகளை அடுக்கி தலைப்பாகையோடு திடீர் வியாபாரிகள் முளைத்திருக்கிறார்கள். தீபாவளிக்கு பட்டாசு, பொங்கலுக்கு கரும்பு, கார்த்திகைக்கு காவோலையென பண்டிகைக்கு பண்டிகை தொழிலை மாற்றத்தெரிந்த சூத்திரதாரிகள். இந்த பொங்கப்பூவும் அதைக்கூவி விற்கும் வெள்ளுடை கிழவிகளும் வருடத்திற்கு ஒருமுறைதான் பூக்கிறார்கள்.

ஊருக்கு நூறு பனைகள் முண்டச்சி ஆகின்றன பொங்கலுக்கு. இன்னும் எங்கள் பெண்கள் பாரம்பர்யம் மாறாமல் ஓலையில்தான் பொங்கலிடுகிறார்கள். ஆனால் நைட்டி அணிந்துகொண்டு. ஐந்து வயதைக்கடந்த பிள்ளைகள் கூட சினிமா நடிகைகளைப் போன்ற விசித்திர உடைகளை அணிந்திருக்கிறார்கள். வீட்டிலிருக்கும் பாட்டிமார்களுக்கோ பேரக்குழந்தைகளைப் பார்க்கும்போதேல்லாம் சிறு வயதில் சர்க்கஸில் பார்த்த பபூன்களையும் நிணைத்து பொக்கையாய் சிரிக்கின்றனர்.

போகி அன்று சொக்க பனை கொழுத்தலாம் வாடா என எதிர்வீட்டு சிறுவனை அழைத்தேன். "போங்கள் அங்கிள்... சுத்த போர்..." என்றான் அந்த பவர் ரேஞ்சர்.

சுரைக்காய், சேனைக்கிழங்கு, குண்டு பூசணி, கருணை கிழங்கு, சிறுகிழங்கு என அன்றாட சமையல்கட்டுக்கு அன்னியமான காய்கறிகள் எங்கிருந்தோ பறித்து வரப்பட்டு சந்தை வாசலில் இறங்கிகொண்டிருக்கின்றன. காராமல் கருணைக்கிழங்கு பச்சடி வைக்கத் தெரிந்த பெண்களை தேர்ந்தெடுத்து ஐந்தாயிரம் ரொக்கப்பரிசு வழங்கலாமா? என யோசித்த நான் இன்னொரு போட்டியின் போஸ்டர்களை கண்டதும் அந்த மகாசிந்தனையை அவசரமாகத் துண்டித்துவிட்டேன். 16 அணிகள் கலந்துகொள்ளும் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கான கருப்பு வெள்ளை போஸ்டர் அது. வழக்கம்போல முதல் பரிசை வழங்குபவர் பெயரில் யார்க்கர் முருகனின் பெயர் இருந்தது. ஒரு இனிய மாலைப்பொழுதில் அவனையும் அறியாமல் வீசிய பந்து யார்க்கரைப்போன்று தோற்றமளித்து ஒரு சோதா பேட்ஸ்மேனின் விக்கெட்டை பதம் பார்த்ததிலிருந்து "யார்க்கர்" எனும் அடைமொழியோடு பிணைக்கப்பட்டுவிட்டான் முருகன். ஸ்ட்ரெயிட் பேட் ஜெபராஜ், லெக்கட்டு கண்ணன், காட்டடி கிறிஸ்டோபர், புல்டாஸ் புருசோத்தமன் என கிரிக்கெட்டிற்காக தங்கள் சொந்த பெயரை பறிகொடுத்தவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கத்தானே செய்வார்கள்.

தயிறூறூ... என ஒலிக்கும் கணீர் குரல் கேட்டவும் கண்விழித்து வாசலுக்கு ஓடிவரும் எனக்கு பானைக்குள் கைவிட்டு ஒற்றை விரலில் வெண்ணையை வழித்தெடுத்து என் விரலுக்கு அதை லாவகமாக கைமாற்றிவிட்டு நகர்வாள் தயிர்கிழவி. தினமும் டூத் பேஸ்டைப்போல விரலில் ஓட்டப்பட்டிருக்கும் வெண்ணையை நக்கித்தின்றபின் தான் எனது பள்ளிக் கவலைகள் ஆரம்பிக்கும். அந்த தயிர் கிழவி பொங்கலுக்குள் விற்றுவிடலாம் என சுண்ணாம்பு சிப்பிகளை வாங்கி வைத்து பெருமாள் கோவில் வாசலில் உட்கார்ந்திருந்தாள். பேட்டை வாசலில் இருக்கும் எவருக்கும் சிப்பியை வாங்கி கொதிநீரில் ஊற வைத்து வெள்ளையடிக்கும் அளவிற்கு அவகாசம் இல்லாததால் அவளது நம்பிக்கை ஏகத்துக்கும் பொய்த்து போயிருந்தது. கிழவி லேசுபட்டவளில்லை கொஞ்சம் செவப்பு சேர்த்து பாக்கெட் போட்டு வெத்திலை பாக்கு பெட்டி கடைகளில் விற்றுவிடும் தொழில் நுட்பத்தை போன வருட அனுபவத்திலேயே வரப்பெற்றவளாக்கும்.

பஜாரில் இறங்கி கொண்டேன். அப்பா வாங்கி கொடுத்த மஞ்சள் குலையை உடையாமால் வீடு சேர்க்கும் கடமையில் தோற்றுவிடக்கூடாது என சட்டையணியாத சிறுவனொருவன் செத்த எலியைப்போல கவனமாக குலையைத் தூக்கி நடந்து கொண்டிருந்தான். இன்ன கடைதான் என்றில்லாமல் எல்லாக் கடைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது ரீ-சார்ஜ் கூப்பன்கள். ஜனங்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பின் பேசிய அத்தனைக்கும் சேர்த்து வருந்த வேண்டிய நாளும் வந்து சேர்கிறது. ஏதாவது கடையில் பொங்கல் வாழ்த்து அட்டைகள் விற்கிறார்களா என விசாரித்தால், எஸ்.எம்.எஸ் வந்தபின் சிவகாசியிலேயே அச்சடிப்பதை நிறுத்தி விட்டார்கள் என்கிறார்கள்.

பஜாரை கடந்து பிள்ளையார் கோவில் தெருவுக்குள் நுழைந்தேன். இன்னும் வயசுக்கு வராத பாவாடைப்பெண்கள் பூசணிப்பூவை கூடைக்குள் வைத்து வீடு வீடாகச் சென்று விற்றுக்கொண்டிருந்தனர். வாசல் கோலத்தின் மேல் வீற்றிருக்கும் பூசணிப்பூக்களும், அவைகளுக்கு மத்தியில் தலைகாட்டும் செம்பருத்திகளும்தான் வீட்டுப்பெண்களின் கவுரப் பிரச்சனையாக இருக்கிறது. எனக்கு உனக்கு என்று அடித்து பிடித்து வாங்குகிறார்கள். அத்தனை அழகான பூவை சாணியிலா சொருகி வைப்பது?!

கோவிலில் பெங்களூர் ரமணியம்மாளின் பம்மபம்மன்னா ஒலிக்கிறது. பக்தி இசையில் பாப்பிசைமாதிரி அதிரடி இசையைக் கொடுத்தவர். இதையும் எதிர்காலம் ரிமீக்ஸ் செய்து காம்போதிகளை கபோதியாக்கும் காலம் வருவதற்குள் போய் சேர்ந்து விட வேண்டும். சோனிஎரிக்ஸனுக்கு பழகிய காதுகளுக்குகூட குழாய் ஒலி இனிக்கிறதென்பது ஆச்சர்யம்தான்.

பொங்கலன்றும் விடுதியறைப் பழக்கத்தில் தாமதமாகவே எழ முடிகிறது. அத்தனை வீட்டு வாசலிலும் அவரவர் வயிற்றின் வலிமையை பரைசாற்றும் அளவில் பானைகள் இருக்கின்றன. பால் பொங்குகையில் குலவையிட வெட்கமுறும் பெண்கள் வெறுமனே முணுமுணுக்கின்றனர். பொங்கல் வீட்டு முடிந்ததும் மொட்டை மாடிகளில் ஏறி நிற்கும் சிறார்கள் "கா...கா... காக்காச்சீயென..." திடீர் மரியாதையோடு காகத்திற்கு சோறு வைக்கின்றனர். கொத்துவது போல் பக்கம் வந்துவிட்டு போங்கு காட்டிவிட்டு விருட்டென பறக்கும் காகத்தை பசித்த சிறுவனொருவர் 'சனியனே' என சபிக்கிறான். அவர் நம்ம பாஸ்தான் அழைத்துவரட்டுமாயென கேட்கத்தெரியாத காகவாகனம் விண்ணில் எழும்பி மறைகிறது.

கொட்டுக்கார கம்பர் சோகையான நாகஸ்வர சிறுவனோடு வந்து வீடுவீடாக வாசித்து பொங்கல் படி வாங்குகிறார். 'யோவ் நீ வந்தாதான்யா தெரியுது பொங்கல்னு' என நக்கலோடு ரெண்டு ரூபாய் கொடுத்துவிட்டு பழையபடி பாப்பையாவில் ஆழ்ந்துவிட்டார் தாத்தா.

அப்பா, அம்மா, அத்தை, பெரியம்மா, ஆச்சியென பொங்கலுக்கு பொங்கல் எனக்கும் பொங்கல்படியென பெரும்பணம் சேர்வது வழக்கம். சொந்தங்களில் சிலரை காலக்கிரமத்தில் காலனுக்கு வாரி கொடுத்துவிட்ட பிறகு அப்பாவும், பெரியம்மாவும் பொங்கல்படி கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு அவர்களும் பொங்கல்படி கொடுக்கவில்லை. நானும் கேட்டு வாங்கவில்லை.

மஞ்சுவிரட்டு, வழுக்குமரம், உறியடி, இளவட்டம் என எல்லா பாரம்பர்ய விளையாட்டுக்களிலும் அதன் சுவைக்கேற்ற ஆபத்து ஒளிந்துகொண்டிருப்பதால் கிட்டத்தட்ட அத்தனையும் தடை செய்யப்பட்டு விட்டது. ஒரிரு வெளியூர் நோஞ்சாண்கள் மட்டும் ஒத்தை மைக்கை வைத்துக்கொண்டு கயிறு இழுத்தல், கபடி என ஜல்லியடித்துக்கொண்டிருந்தனர்.

முந்தைய ஆண்டுகளில் பொங்கலின் முதல் அடையாளமாய் தெரியும் உற்சாகம் மனித முகங்களில் விடுபட்டு போயிருக்கிறது. விலைவாசி உயர்வா, வெயிலின் கொடுமையா, கொண்டாடி தீர்த்துவிட்டதன் சலிப்பா எதுவென கண்டறிய இயலவில்லை. இதோ உரித்து தின்கும் இந்த சூம்பிப்போன பனங்கிழங்கைப்போலத்தான் அன்றைக்கு எங்களூர் பொங்கலும் இருந்தது.

Comments

Anonymous said…
விகடன்ல வாரா வாரம் நாலு வரி 'வெடிகுண்டு' எழுதற செல்வேந்திரன் நீங்கதானா?
Anonymous said…
சுவையற்றவை பதிவு சுவையாய் இருந்தது.

பதிவில் முடியலத்துவத்துக்கு நிறைய விசயங்கள் இருந்தது.

ஆவியில வரும் முடியலத்துவம் நன்றாகவே இருக்கிறது.

ஆமா! முடியவே முடியாதா?
Boston Bala said…
பொங்கப்பூ - என்ன மேட்டர் இது?
இப்படிக்கு...
சென்னை பீட்டர் :D
selventhiran said…
வாங்க ஐகாரஸ். அதே செல்வேந்திரன் தான். வெடிகுண்டா?!

வெயிலான், 'ம்'னு ஒரு வார்த்தை சொல்லுங்க முடிச்சிறலாம்.

பாலா, பொங்கலன்னிக்கு குத்துவிளக்கு முன்னால காய்கறிகள், பழங்கள், தேங்காய் போன்றவற்றை ஒரு இலையில் வைத்து படையலிடுவார்கள். அந்த இலையோரம் சாணியை பிடித்து (பார்க்க மினியேச்சர் மலை மாதிரி இருக்கும்) அதன் தலையில் வெள்ளை நிற புல்லில் அங்கங்கே பூ முளைத்தது போல இருக்கும் பொங்கல் பூவை சொருகி அதற்கு சந்தனம் குங்குமமும் வைத்துவிட்டால், சாணிப்பிள்ளையார் ரெடி. பிள்ளையார் பூ என்றும் மற்றொரு பெயர் உண்டு. பாரதிதாசன் இதை பார்த்துதான் "சாணிக்கு பொட்டிட்டு சாமியென்பான் செய்கை நாணி நீ நகைத்து கண்ணுறங்கு"ன்னெல்லாம் கவிதை எழுதினார்.
செல்வேந்திரன்,

சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, உங்களை மட்டும் சொல்லலை, பழங்காலத்தை நினைச்சுப் புலம்பற எல்லாத்துக்கும் சேத்தே சொல்றேன்..

பழங்காலத்துப் பழக்கவழக்கம்தான் சரி, அதுல எந்தக் குறையுமே கிடையாதுன்னா அது மாறியிருக்கவே இருக்காது.

கூவும் செல்போனின் நச்சரிப்பை -- கொஞ்ச நேரம் மறக்கலாம் - ஒரேயடியாக மறந்துவிட்டால்?

அது ஏன் உங்கள் கிராமம் மட்டும் நீங்கள் விட்டு வந்ததுபோல மாறாமலே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? கருணைக்கிழங்கு பச்சடி செய்து போட்டாலுமே தினமும் தின்ன நீங்கள் தயாரா?
பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்க நாம் மறுத்தபின் சிவகாசி அச்சடிப்பவர் நிறுத்திவிட்டதை கண்டிப்பது ஏன்?

அதாவது, என்ன சொல்லவரேன்னா, மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை, எல்லா மாற்றங்களுக்கும் நாமும் ஓரளவேனும் காரணம்!

புலம்புவதும் தவிர்க்க முடியாததுதான்,, ஆனால் ரொம்பப் புலம்பலைப் பார்த்தாலும் நன்றாக இல்லை.
selventhiran said…
வாங்க பினாத்தலரே!!
என்னத்த சொல்றதுன்னு தெரியல. . .
உள்ளேன் ஐயா.
(முழுவதும் (நிஜமா) படிச்சேன் ஐயா. . .)
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க கவிஞரே, சென்னைல உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்திட்டு இருக்கு.
அப்படியே, முடியலதுவத்த முடிச்சிட்டு இந்த மாதிரி சுவாரஸ்யமா எழுதலாமே.
நிஜமாவே, அருமையான வர்ணனை....
கலக்கிட்டீங்க போங்க...
செல்வா,

கலக்கலான புலம்பல்:-))))

அட்டாகாசமா இருக்கே, தேசியில் போட்டுறலாமுன்னு ஆளைப் பார்த்தா.......


யப்பா...'ஆவி' உலகில் இருக்கும் பூக்கடைக்கு வெளம்பரமான்னு ஆகிப்போச்சு.

என்ன சொல்றிங்க? தேசியில் இணைச்சுறலாமா?
selventhiran said…
welcome vikky,

Thulasi sir tharalamaa pannunga
GIYAPPAN said…
வணக்கம். காலத்தால் நம் வாழ்வில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் பல நேரங்களில் நமக்கு நம் பாரம்பையத்தை அன்னியமாகும் தன்மை உங்கள் பதிப்பில் காண்கிறேன். தொடர்க உம் தொண்டு. வாழ்த்துக்கள்.
விகடன்ல வாரா வாரம் நாலு வரி 'வெடிகுண்டு' எழுதற செல்வேந்திரன் நீங்கதானா?// :))
அப்ப விகடன் படிக்கிற அக்கம்பக்கம் எல்லார்கிட்டேயும், எங்க ப்ளாக் சினேகிதர் இவர்னு சொல்லிட வேண்டியதுதான்.
Karthikeyan G said…
Neenga vikatanla Murphy's law vai appidiyaeee translate panni unga perlae eluthidireengale..
selventhiran said…
dear karthikeyan what is Murphy's law ?
Karthikeyan G said…
Sorry Boss..
Confused u with one whos writing the "mudiyalthathuvam".

Congrats for good going of "வெடிகுண்டு" poems..

"The specialist learns more and more about less and less until, finally, he knows everything about nothing; whereas the generalist learns less and less about more and more until, finally, he knows nothing about everything." - A version of murphy's law.

THIS IS FOR ME :)
Anonymous said…
பொட்டப் பயலே...
இன்னும் உயிரோடு இருக்கியா??
என்னத்த சொல்றதுன்னு தெரியல. . .
உள்ளேன் ஐயா.
(முழுவதும் (நிஜமா) படிச்சேன் ஐயா. . .)
selventhiran said…
சிவா, வருகைக்கு நன்றி...!