Monday, June 27, 2016

அவ்வை முளரி


கலைஞர்களால் நிறைந்திருக்கிறது இந்த அவை. முளரி எனும் தமிழ்ச்சொல் தாமரை மலரைச் சுட்டும். வனம் என்றொரு பொருளும் உண்டு என்கிறது மதுரை தமிழ்ப் பேரகராதி. அவ்வைமுளரி எனும் சொற்சேர்க்கை கோணங்கியினுடையது. எந்த ஒரு சொல்லையும் வேறொரு உயரத்திற்கு தூக்கியடிக்கக் கூடிய ரசவாதி அவர். அவ்வை அறைக்குள் அமர்ந்தெழுதிய கவிஞி அல்ல. அலைந்து திரிந்தவள். ஓவியர் சந்ருவும் அவரது வழித்தோன்றல்களும் அப்படிப்பட்ட கலைஞர்களே என்பதைச் குறிப்புணர்த்தும் விதமாக ‘அவ்வை அலைந்து திரியும் வனம்’ என பொருள் படும்படி இந்தக் கல்லூரிக்குப் பெயர் தேர்வு செய்திருக்கிறார்.
ஒரு பேச்சரங்கில் இலக்கியத்தின் பயன் மதிப்பென்ன என்றொரு வழக்கமான பல்லவி ஜெயமோகனிடம் முன்வைக்கப்பட்டது. மனிதன் உயிர்த்திருக்க உணவே பிரதானம் என்றிருக்கையில் அதை விடுத்து இலக்கியத்தை கலைகளைப் பேசி திரிவதன் பொருளென்ன என்பது வினா எழுப்பியவரின் வாதமாக இருந்தது. “சோற்றால் மட்டுமே நிரப்பி விடமுடியாத இடமென ஏதேனும் ஒன்று உங்களுக்குள் இருக்குமாயின் அதை இலக்கியம் நிரப்பும்” என அவர் பதிலிறுத்தார். வாழ்தல் என்பதை வெறுமே உண்டு உறங்கி புணர்ந்து மறைதல் மட்டுமே என கருதுபவர்களுக்கு மத்தியில்தான் மீண்டும் மீண்டும் கலையின் அவசியத்தைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள் படைப்பாளிகள். இந்த விஷம் தோய்ந்த கேள்விகள் ஏன் கலைஞர்களிடம் மட்டுமே முன் வைக்கப்படுகிறதென்பது புரியவில்லை. விஷத்தை விழுங்கி விழுங்கிதான் கலைஞன் பளிங்காகிறான் எனும் ஹருகி முரகாமியின் சொற்களை இத்தருணத்தில் பொருத்தப்பாடு கருதி நினைவு கூர்கிறேன்.
கலையின் முதற் தகுதியே பயன்மதிப்பினை நிராகரிப்பதுதான் என்பதென் துணிபு. கட்டற்ற அழகுணர்ச்சியோடு பாயுமொரு உள்ளார்ந்த அறிவுச் செயல்பாடு. இலக்கியமும் கலையும் பலநூறு நிகர் வாழ்விற்கான சாத்தியங்களை வழங்குகிறது. ஒவ்வொரு கலைப்படைப்பும் நம்மை மேலும் விரித்துக்கொள்ளவே உதவுகிறது.
நவீன ஓவியங்களும் வரைகலை தொழில்நுட்பங்களும் தமிழ்ப் படைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஓர் இலக்கிய வாசகனாக என்னால் உணர முடிகிறது. நவீன ஓவியங்களுக்கும் நவீன கவிதைகளுக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. மீபுனைவு பெருநாவல்களில் வரைகலை தொழில்நுட்பத்தின் செல்வாக்கினை பா.வெங்கடேசன் சமீபத்திய இலக்கிய இதழ் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். எவ்வகையில் பார்த்தாலும் ஒரு தமிழிலக்கிய வாசகனுக்கு ஓவியங்களும் சிற்பங்களும் உபரி ரசனைகளாக இருப்பது தவிர்க்க ஏலாதது.
ஓவியர் சந்ருவினுடைய நேர்காணல்களும் நேர் உரையாடல்களும் எனக்கு ஓவியங்களைப் புரிந்துகொள்ளவும் கூடவே நவீன கவிதைகளோடு நெருங்கி உறவாடவும் உதவியிருக்கின்றன. அவ்வகையில் அவர் எங்களுக்கு மானசீக ஆசானும் கூட. இந்த மாமேதையின் வழிகாட்டலில் பயில இருக்கும் மாணவர்களை சற்றே பொறாமையுடன் வாழ்த்தி விடைபெறுகிறேன்.
(02-10-15 அன்று அவ்வைமுளரி நுண்கலைக் கல்லூரி திறப்பு விழாவில் வழங்கிய வாழ்த்துரையின் சுருக்கப்பட்ட வடிவம்)

No comments: