நெல்லை நினைவலைகள்


17 மாத வனவாசம் முடித்து மீண்டும் கோவைக்கே கிளம்புகிறேன். தலைப்பையும் முதல் வரியையும் பார்த்ததும் ‘அம்பி நோஸ்டால்ஜியாவை ஆரம்பிச்சுட்டன்’ என தலை தெறிக்க ஓடாதீர் உலகத்தீரே.. நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு குலுக்கல் முறையில் ஆச்சர்யமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன.
இந்த ஊர் என்னுடையது. இந்த மண்ணில்தான் என் உப்பிருக்கிறது என்ற போதும் பத்து வருடங்கள் கழித்து ஊர் திரும்பும் ஒருவனை அதே வெயிலும் சாதியுணர்வும் வன்முறையும் வாசலில் வந்து நின்று வா தம்பி என வரவேற்றால் திகைத்துப் போய் விட மாட்டேனா? நுண்ணிய மனவிலக்கம் ஒன்று வந்த நாள் முதலே என்னுள் இருந்து கொண்டே இருந்தது. இம்மனவிலக்கம் ‘தம்பி என்ன ஆளுக்க..’ கேள்விகளால் நாளுக்கு நாள் வலுப்பெற நான் இந்தப் பாழ் நிலத்திலிருந்து விடுபட்டு ஓடவே ஆத்மார்த்தமாக விரும்பினேன். ஒரு பணியிலிருந்து விலக மேலதிக விசையுடன் அதைச் செய்து முடிப்பதுதான் ஒரே வழி. நான் குனிந்த தலை நிமிராமல் பெரும் ஓட்டத்தை ஓடத் துவங்கினேன்.
நான் வந்திறங்கிய ஜனவரி மாதம் (2015) மழைக்குப் பதில் கொலைகள் விழுந்து கொண்டிருந்தன. ஜனவரியில் மட்டும் சற்றேறக்குறைய இருபத்தைந்து கொலைகள். வீட்டைச் சுற்றி ஐந்தாறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நாற்புறமும் 144 அமலில் இருந்தது. மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான எங்கள் அலுவல காவலாளி யாருக்கோ போட்டு வைத்த ‘ஸ்கெட்ச்சில்’ துரதிர்ஷ்டமாக சிக்கி பல துண்டங்களாக வெள்ளைத் துணியில் கட்டப்பட்டு மார்ச்சுவரியில் கிடந்தார். திருக்குறளரசி ஏக மனதாக இந்த ஊரில் வாழவே முடியாது என்றாள். வீட்டை குளிரூட்டி, கார் வாங்கிக் கொடுத்தெல்லாம் கூட தாஜா செய்ய முடியவில்லை. கொடு வெயில். அதைக் காட்டிலும் உறைப்பான முகங்கள். கடுத்த சொற்கள். சக மனிதனைக் கண்காணிக்கும் கண்கள். அவளும் இளவெயினியும் இன்னொரு நாட்டில் கொண்டு வந்து விடப்பட்டதாய் உணர்ந்தார்கள்.
சரி மேற்கண்ட மூன்று பாராக்கள்தான் திருநெல்வேலி தந்தவையா என்றால் மிக அழுத்தமாக இல்லை என்றே தலையாட்டுவேன். திருநெல்வேலியை அகராதியில் தேடிப்பார்த்தால் மரியாதை என அருஞ்சொற்பொருளாகும். கொங்குமண்டலத்தைத்தான் பொதுவாக எல்லோரும் ரொம்ப மரியாதையான ஊர் என்பார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே போடும் ‘ங்க’வும் நாசூக்கும் நறுவிசும் நம்மை அப்படி நினைக்க வைக்கின்றன. ஆனால் அவரது தோட்டத்து ஆளை அப்படி அழைப்பார்களா என்றோ ஏன் இன்னும் இரட்டைக்குவளை அங்கே நீடிக்கிறது என்றோ கேட்பது என் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. திருநெல்வேலியில் எவ்வளவு சாதிய முரண்கள் நீடிக்கின்றனவோ அதற்கு இணையான மரியாதையும் சகோதர உறவும் நீடிக்கிறது. என் வழிநெடுக உதவப்போகிற மரியாதை என்கிற மகா விஷயத்தை நான் இங்குதான் கற்றுக்கொண்டேன்.
வேணுவனத்தில் வாய்த்த நட்புகள் அபரிமிதமானவை. கிருஷியிடமிருந்து புகழ்ச்சியெனும் தைலம் தயாரிக்கும் ரகசியத்தையும், மயன் ரமேஷ் ராஜாவிடமிருந்து தொழில் முனைவையும், ஆணையாளர் தேவேந்திர பூபதியிடமிருந்து கடிதோச்சி மெல்ல எறியவும், ஆனந்த ஷங்கரிடமிருந்து விருந்தோம்பலையும் நான் அருகிருந்து கற்றுக்கொண்டேன். சந்ரு மாஸ்டரிடமும் பேராசிரியர் டி. தருமராஜிடமும் நிகழ்த்திய விவாதங்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் முன்பைக் காட்டிலும் ஒரு இஞ்சேனும் வளர்ந்த மனிதனாக உணர முடிந்தது. தேவதச்சனுடன் நான்கைந்து முறை வாய்த்த நெடிய உரையாடல்கள் மண்ணில் பலருக்கு வாய்க்காத நல்லூழ்களுள் ஒன்று. கோணங்கியோடு நிகழ்த்திய $(&)^)%$$%#%* கூட சுவாரஸ்யமானவையாகத்தான் இப்போது தோன்றுகிறது. புகழ்ந்து சிரச்சேதம் செய்யவும் விஷத்தை விழுங்கி பளிங்காகும் ரசவாதத்தையும் இந்தச் சொல்லேறுழவனிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
நெல்லையைப் போல பல்வேறு இலக்கிய மையங்கள் சத்தமாகவோ மெளனமாகவோ செயல்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு தமிழக நகரம் பிறிதொன்றில்லை. வண்ணதாசன், தோப்பில் முகமது மீரான், தொ. பரமசிவன், அ. ராமசாமி, வண்ண நிலவன், கார்த்திகைப்பாண்டியன், சக்தி நூலகம் பாலா, டாக்டர் ராமானுஜம், நாறும்பூநாதன், திவான், இஸ்ரவேல், அந்தோணி, தாமிரா, கைலாஷ் சிவன், வெள் உவண், டாக்டர் ராமகுரு, தச்சை ராஜா, மேலும் இலக்கிய அமைப்பு நண்பர்கள், சக்தி கலையக நண்பர்கள், ஹேமலதா, இந்து பாலா, முத்துச் செல்வி - அவரவர் நம்புகிற விழுமியங்கள் வேறு வேறானாலும் திரும்பிய திசையெல்லாம் உரையாட சாத்தியமுள்ள இலக்கிய ஆர்வலர்கள் வாய்த்திருப்பது எவ்வளவு அருமையானது? இந்த ஊரில்தான் நாளிதழ் வினியோகஸ்தர்கள் கூட இலக்கிய ஆர்வமுள்ளவர்களாக கூட்டங்களுக்கு ஆர்வத்துடன் கலந்து கொள்வதை நான் கண்டேன்.
மயன் ரமேஷ் ராஜாவும், கவி தேவேந்திர பூபதியும் நானும் மும்மூர்த்திகள் என்று வேண்டியவர்களாலும் பொன்னாடை தாசர்கள் (67*) என்று புல்லுருவிகளாலும் ஆகாவழிகள் என்று அவரவர் மனைவியராலும் பல ரூபங்களில் அழைக்கப்பட்டோம். சதுரங்க வேட்டை கிராணைட் வில்லன் கூட்டணியைப் போல ஒவ்வொரு மாலையிலும் சந்தித்துக்கொள்வோம். டீ என்பது ஒரு பானம் அல்ல. ஒவ்வொரு அரை மணிக்கூறுக்கும் அருந்த வேண்டிய டானிக் என இங்கெனக்கு கற்றுத்தரப்பட்டது. தமிழில் பின் நவீனத்துவ சொல்லாடல்கள் நிகழத் துவங்கிய காலகட்டத்தில் பெரும் பரவசத்துடன் எதிர்கொண்டு விவாதங்களையும் படைப்புகளையும் (அஸ்வமேதா) உருவாக்கிய ரமேஷூம், பிரம்மராஜன், ஆனந்த் எனும் கவிமரபின் கண்ணியான தே.பூபதியும், ஜெயமோகன் பள்ளியைச் சேர்ந்த நானும் எங்ஙனம் பொருந்திப் போனோம் என விழிவிரிவு கொள்பவர்கள் உண்டு.
வெண்முரசும் வெளிநாட்டுப் பயணங்களும் ஆசானை எப்போதும் துரத்திக்கொண்டிருந்தாலும் கூட நாங்கள் அவ்வப்போது சந்தித்து பிரபு ஹோட்டல் மட்டன் சுக்காவுடனும் நாயர்களின் தேசிய உணவான பழ பஜ்ஜியுடனும் ஞானத்தின் அடையாளமான தொப்பையை வளர்த்துக்கொண்டோம். திற்பரப்புக் குளியல்களும், ஆலயப் பயணங்களும், மாலை நடைகளும் அவ்வப்போது வாய்த்தன. இருந்த சுவடு தெரியாமல் அழிந்து போன அவரது திருவரம்பு பூர்வீக வீட்டருகில் ஏறக்குறைய ஆறு மணி நேரங்கள் உரையாடி ஒரு ஆவணப்படம் எடுத்தோம். சந்திரசேகர் சவக்குழியில் கவர் பிரிக்கப்படாத பிரயாகையும் சேர்த்து புதைக்கப்பட்ட தினத்தில் நிலையழிந்து போன ஜெயமோகன் முற்றிலும் வேறொரு மனிதன். நினைவில் மீண்டுமொரு முறை மீட்ட அச்சப்படும் நாட்கள் அவை. இத்தருணத்தில், ஏதோ ஒரு செய்தியை எனக்குச் சொல்ல வந்த தூதன் போல இங்கே வந்திருந்து தங்கி வழியனுப்பிய மறுதினமே மரணச்செய்தியாக திரும்பிய ஒரு சாலை மாணாக்கர் கவி குருபரனின் நினைவும் கூடவே வருகிறது.
சங்கரன் கோவில் சுல்தான் பிரியாணி, தென்காசி நந்தினி கூரைக்கடையின் அயிலை மீன் குழம்பு, தூத்துக்குடி நாடார் பேட்டை குனி இறால் மசாலா, திருச்செந்தூர் பாண்டியன் ஹோட்டல் சீலா மீன் குழம்பு, நாகர்கோவில் பிரபு ஹோட்டல் மட்டன் சுக்கா, திருவனந்தபுரம் சுல்தானியா மாட்டுக்கறி, சாத்தான்குளம் சாந்தி பரோட்டா, மதுரை அம்மா மெஸ் அயிரை மீன் குழம்பு, வைரமாளிகை வஞ்சிரம் தாவா ஃப்ரை என தினமும் உணவுத் திருவிழா கொண்டாடி 17 மாதங்களில் 15 கிலோ எடையேறி சித்தி விஜிராம் போன்ற அரைக்கிழடுகளெல்லாம் என்னை அங்கிள் என கூப்பிடுமளவிற்கு ஆகிப்போனேன். இது தவிர நெப்போலியன் என்கிற ஒரு உத்தம தமிழ் மீன் வியாபாரி சாளை, வாளை, பன்னா, அருக்கலா, குதிப்பு, வாவல், சங்கரா, பாறை, ஊளி, நெய் மீன், வஞ்சிரம், மாவுளா, நெத்திலி, இறால், விறால், கட்லா, கணவாய், காரப்பூச்சி, பிள்ளைச்சுறா, அயிலை, அயிரை, அறுக்குலா, காரல், கிழங்கான் என நான் நேசிக்கும் மீன்களைப் புதுக்கருக்கு குலையாமல் நாளும் பொழுதும் பார்க்காமல் கொடுத்து என் வாழ்வை பொருள் பொதிந்ததாக ஆக்கினார். ஓவ்வொரு ஊரிலும் ஒரு நெப்போலியன் இருந்தால்தான் இந்தியா வல்லரசாக முடியும்.
ஒன்பது பாராக்களைப் பொறுமையாக வாசித்தவர்களின் மனத்திண்மையைப் பாராட்டி பத்தாவது பாராவை ஒரு வரியுடன் நிறைவு செய்கிறேன்.

Comments

Popular Posts