கசப்பு அண்டா மனிதன்!

நண்பர்களே, ஒரு காலை நடை விவாதத்தில் ஜெயமோகன் ஒரு அவதானத்தை சொன்னார். நம் ஊர்பக்கம் வீட்டுப் பக்கம் நாம் சந்திக்கிற வயதானவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அறுவை கேஸூகளக இருப்பார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி அறுப்பார்கள் அல்லது நாங்கள்ளாம் அந்த காலத்துல என நோஸ்டால்ஜிக் கலர் ரீல் ஓட்டுவார்கள், அல்லது கடுவன் பூனைகளாக கடித்து வைப்பார்கள். ஆனால், நைனா கி.ராஜநாராயணனுக்கு 98 வயது, அசோகமித்திரனுக்கு 85 வயது, இந்திரா பார்த்தசாரதிக்கு 86 வயது, இலங்கை எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்புக்கு 83 வயது, ஆ. மாதவனுக்கு 84 வயது இவர்களெல்லாம் இன்றும் மிகச்சிறந்த உரையாடல்காரர்களாக இருக்கிறார்கள். புதியவர்களை சந்திப்பதில் ஒருபோதும் உற்சாகமிழக்காதவர்களாகவும் அபாரமான நகைச்சுவையுணர்வோடும் இருக்கிறார்கள். முதுமையின் சினிக்னெஸ் இவர்களிடம் சுத்தமாக இல்லை கவனித்திருக்கிறீர்களா என்றார். நல்ல அப்சர்வேஷன் சார்.. காரணம் என்ன என்றேன். அவர்களுக்குள் இருக்கும் ரசனையே காரணம் என்றார். கிரியேட்டிவிட்டியும் வாசிப்பும் கலைத்தேட்டமும் அவர்களை ஒரு ஆயுளுக்குள் பல்வேறு நிகர்வாழ்க்கை வாழ வைக்கிறது. ஆகவே, தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்த ஒரு சராசரி மனிதனின் கசப்புகள் இவர்களிடம் மண்டியதில்லை என்றார்.கலைஞனுக்கு வயதாக வயதாக அவனது கலைமனம் இளமையாகிறது என மெலட்டூர் கிராமத்தில் ஒரு பாகவத மேளா கலைஞர்  சொன்ன வரிகளை நான் நினைவு கூர்ந்தேன். தன் எண்பதாண்டு கால வாழ்வில் கசப்பின் சிறு நிழலும் எட்டிப் பார்க்காத பன்முக நுண்கலைஞன் பாரதி மணியைக் கொண்டாடும் நிகழ்வில் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்கிறேன் நண்பர்களே..

 இந்த மேடையில் பொன்னீலன் இருக்கிறார். எழுத்தாளன் ஒரு சராசரி அல்ல அவனொரு  ஆளுமை என பதின்மத்தில் என் மனம் பதிய காரணமாக இருந்தவர் அவர். பதினைந்து வயதில் நண்பர் ஈஸ்வர சுப்பையா உதவியுடன் பொன்னீலனைப் பேட்டி கண்டிருக்கிறேன். அவர் திகசியால் உந்தப்பட்டு எழுத வந்தவர். இன்று புதியதாக எழுதவரும் பலருக்கு திகசியின் பின்னத்தி ஏராக இருந்து உற்சாகமளிப்பவர்.

தோப்பில்  முகமது மீரானின் ஐந்து நாவல்களுக்குமே வடிவ ஒழுங்கு கொடுத்தவர் திகசி. பொன்னீலனும் திகசியும் எடுத்த பெருமுயற்சியில்தான் சாய்வு நாற்காலிகளுக்கு சாகித்ய அகாதமி கிடைத்தது. தமிழில் சிறுபான்மை இலக்கியத்தின் மீது விழுந்த முதல் வெளிச்சம் அது என்றே கூறலாம். அவரும் இந்த அவையில் இருப்பது பொருத்தப்பாடு மிக்கது.

அமைப்புகளால் தொகையால் அல்ல பெற்றுக்கொள்ளும் மனிதர்களாலேயே விருதுகள் கெளரவம் கொள்கின்றன. இந்த விருது பாரதிமணியின் பல பத்தாண்டு கலைச்சேவைக்கு அளிக்கப்படுகிறது. நந்தா விளக்கு விருது அமைப்பாளர்களுக்கு என் பாராட்டுகளைப் பதிவு செய்து கொள்கிறேன்.

வாழும் கலை

பள்ளிப்பருவத்தில் மு.வ எழுதிய பெர்னார்ட் ஷாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். அச்சிறுநூல் இளமையில் மகத்தான மன எழுச்சியை ஊட்டியது. ஒரு நாடக ஆசிரியனாக, எழுத்தாளனாக, அரசியல் சமூக விமர்சகனாக மட்டுமல்லாமல் சமரசமில்லா வாழ்வை செதுக்கிக்கொண்டவராகவும் அவர் எனக்கு தெளிவானார். அவரை வாழும் கலையின் பிதாமகன் என்றே மனம் சொல்லியது. விதிக்கப்பட்ட வாழ்வை அல்ல நீ வாழ விரும்பும் வாழ்வை உன்னால் அமைத்துக்கொள்ள முடியும் என ஒரு கிராமத்துச் சிறுவனுக்குள் விழுந்த முதல் விதை அப்புத்தகம். பின்னாட்களில் பாரதிமணி எனக்கு அறிமுகமானபோது ‘ஹா.. தன் வாழ்வை அழகாக செதுக்கிக்கொண்ட மனிதர் இவர்’ எனும் எண்ணமே தோன்றியது.

தொழில், இல்லறம், நாடகம், இலக்கியம், இசை, நண்பர்கள், மது, எழுத்து என எல்லாவற்றையுமே தன் வாழ்வை மேலதிக அழகும் செறிவும் இனிமையும் கொண்டதாக்கிக் கொண்டவர் அவர். மது அவருக்கு குடிக்கப்பட வேண்டியதோ அடிக்கப்பட வேண்டியதோ அல்ல.. சுவைக்கப்பட வேண்டிய ஒன்று. அவரது மதுசாலை உள்-அலங்கார நிபுணரான அவரது மனைவியால் டிசைன் செய்யப்பட்டது. ஒரு லட்ச ரூபாயில் ஒரு தொழிற்சாலை அமைக்க முடிகிற காலத்தில் ஒன்னேகால் லட்சத்தில் வீட்டில் குடிமனை அமைத்தவர் அவர்.  வெங்கட் சாமிநாதனின் சொற்களில் சொல்வதானால் “மணிக்கு எதுவும் வாழ்க்கைக்கு அழகு சேர்க்க வேண்டும்”

எஸ்.கே.எஸ் மணி எனும் நிர்வாகி

ஓர் இளம் மேலாளனாக நான் எப்போதும் வியப்பது பாரதி மணியின் காரிய சித்தியை. கார்ப்பரேட் பாஷையில் அவர் ஒரு 'Go Getter'. விராத் கோலி அளவுக்கு most reliable brand. அவரால் மாலை விருந்திற்கு எவரெஸ்ட் உச்சியிலிருந்து ஐஸ்கிரீமுக்கு பனிக்கட்டியை கொணரவும், வீட்டு வாசலில் வெள்ளை யானையை நிறுத்தவும் முடியும் என்பது அன்றைய டில்லியின் புகழ்மிக்க சொலவடைகள். சுப்புடுவால் வாங்க முடியாத ஒரு பென்ஸ் காருக்கான அனுமதியை மணி ஒரே நாளில் சுளுவாக வாங்கி விடும் சம்பவத்தை ஓர் எளிய உதாரணமாக இங்கே நினைவு கூர்கிறேன்.  சுஜாதாவின் ஓலைப்பட்டாசு தொகுதியில் ‘பீட்டர்’ என்றொரு சிறுகதை. சிவா பீட்டர் இருவரும் கல்லூரி விடுதியறை தோழர்கள். சிவா அபாரமான ஒழுக்கவாதி. தங்கப்பதக்கத்துடன் படிப்பை முடித்து ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக சேர்ந்து மேலாளராகப் பதவி உயர்கிறான். எந்நேரமும் கிடாரும் போதையுமாக திரிந்து கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்ட பீட்டர் ஒரு நிறுவனத்தின் தலைவர் ஆகிவிடுகிறான். இது என்ன வாழ்வின் நியாயம் என குமுறும் சிவாவிற்கு தான் வளர்ந்த கதையை பீட்டர் சொல்கிறான். தொழிலாளர் பிரச்சனையால் முடங்கி கிடக்கும் ஒரு தொழிற்சாலையை தன் அணுகுமுறை மனிதர்களை கையாளும் திறனால் பீட்டர் இயங்க வைக்கிறான். பாரதி மணி மேலாண்மை கல்லூரிகளில் படித்தவர் அல்ல. அவர் கற்றதெல்லாம் நடிப்பும் இலக்கியமும்தான். ஆனால் பாரதி மணிக்கு மனிதர்களைத் தெரியும். ஓவ்வொரு மனிதனும் தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அதற்குரிய மரியாதையை அவர் ஒருபோதும் வழங்கத் தவறியதில்லை. பாரதிமணியின் புகழ்மிக்க மேற்கோள்களின் ஒன்று என் அலுவலக வாழ்வில் எப்போதும் பயன்படக் கூடியது ‘நேரான விரலில் வராத நெய்.. வளைந்த விரலில் வரும்’

எழுத்தாளர் பாரதி மணி

திரு ஒருமுறை கேட்டாள் ‘பாரதிமணி ஏன் 74 வயதில் எழுத வந்தார்?’ வீட்டிற்குள்ளே க.நா.சு;  அலுவலகத்தில் சுப்புடு; வாழும் ஊரில் வெங்கட் சாமிநாதன். இத்தனை கடுவன் பூனைகளை மடியில் கட்டிக்கொண்டு ஒருவர் எப்படி எழுத முடியும் என்று வேடிக்கையாக பதில் சொன்னேன். டில்லி வாழ்வுக்குப் பின் சென்னை திரும்பி ‘பாரதி’ படத்தில் நடித்த மணிக்கு அந்த அடையாளமே சுமையாக மாறிப்போனது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நாடக கலைஞராகவும் இசை விமர்சகராவும் விளங்கிய அவரை ஒரு துணை நடிகராக மட்டுமே அடையாளம் காண்பது பொருத்தமானதல்ல. அந்தச் சுழலில் சுப்புடு மரணத்தையொட்டி அவர் எழுதிய புகழ்மிக்க அஞ்சலி குறிப்பு தீராநதியில் வெளியானது. பிற்பாடு மனுஷ்யபுத்திரனால் இழுத்து கொணரப்பட்டு உயிர்மையில் தொடர் எழுதலானார்.

நண்பர்கள் ஆக்ரோசமான விசையுடன் அரசியல் பேசும் தருணங்களிலும், ஊடகங்கள் உருவாக்கியளிக்கும் சித்திரங்களாலும் செவிவழி வதந்திகளாலும் உருவாக்கிக் கொண்ட அபிப்ராயங்களுடன் இன்று நிகழும் ஃபேஸ்புக் ரத்தக்களறி யுத்தங்களையும் புன்னகை மாறாத முகத்துடன் கடந்து செல்வது என் வழக்கம். ஓர் ஊடகவியலாளனாக ஒரு தரப்பின் உண்மைக்கும் மறு தரப்பின் உண்மைக்கும் மத்தியில் உண்மையான உண்மை எங்கோ தொலை தூரத்தில் மங்கிய ஒளியில் மயங்கிக் கிடக்கும் என்பதை அறியும் கூருணர்வு உண்டெனக்கு. இதன் பொருள் ஊடகக்காரனுக்கு ஞானக்கண் உண்டென்பதல்ல. நான் பூனைக்கண் கொண்டவனல்ல என்பதே. பாரதி மணி உயிர்மையில் தொடர் எழுதிய போது அந்த உண்மையான உண்மைகளை வரலாற்றுப் பின்புலத்துடன் இணைத்து எழுதக்கூடிய ஒரு ஆசிரியர் வந்து விட்டார் எனும் கொண்டாட்டம் என்னுள் கிளம்பியது. முதல்  கட்டுரைக்கே வாசகர் கடிதம் எழுதிய ஜெயமோகன், அ.முத்துலிங்கம், தி.க.சி உள்ளிட்ட பலருள் நானும் ஒருவன். அன்றாட அரசியலுக்கு அப்பால், கார்ப்பரேட் தரகர்களாலும், பொலிடிக்கல் லாபியிஸ்டுகளாளுமே இந்த தேசம் நிர்வகிக்கப்படுகிறதெனும் பேருண்மை பெரும்பான்மை தமிழ் வாசகனுக்குப் பாரதி மணி மூலமே அறிமுகமானது. அவரது நீராராடியா உரையாடல் பற்றிய கட்டுரையை இங்கே நினைவு கூர்கிறேன்.

அவரது உரைநடை அதிவிரைவானது. பலரும் முதல் புத்தகத்திலேயே இந்த உரைநடை எப்படி சாத்தியம் என இன்றும் விழி விரிக்கிறார்கள். ஜெயமோகனை மனதில் வைத்து நாஞ்சில் அதை பார்வதிபுரத்து பிஜிரார்ஜித சொத்து என்கிறார். தமிழில் எழுதுவதற்கு முன்பே இல்லஸ்ட்ரேட் வீக்லி போன்ற புகழ்மிக்க ஆங்கில இதழ்களில் டெல்லியின் ஜாலவித்தை ஆங்கிலத்தில் பாரதி மணி பெயர் குறிப்பிடாமல் எண்ணற்ற கலைவிமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ஒன்றை செய்தியாக்கும் போதே உண்மை சற்று அடிவாங்கும் எனும் சொலவடை பத்திரிகையுல்கின் உண்டு. பாரதி மணி எழுதும் விஷயங்கள் பேருண்மைகளின் தீவிரத்தால் கட்டப்பட்டவை. ’டேய் முட்டாப்பயலே.. நான் ஒருத்தன் என்னென்னமோ எழுதறேன்.. அதெல்லாம் உண்மைன்னு எப்படிரா நம்பறீங்க..’ எனும் கேள்வியை அவர் எல்லோரிடத்திலும் வைப்பார். என்னிடமும் ஒரு முறை கேட்டபோது நான் சிரித்துக்கொண்டே சொன்னேன் ‘நீங்கள் எழுதிய எல்லா விஷயங்களையும் அறிந்த இன்னொரு இணைமனம் வெசா.. நீங்கள் எழுதியதில் ஏதேனும் சரடு விட்டிருந்தால் அவர் உங்களை கட்டி வைத்து கபடி ஆடியிருப்பார் சார்..’ என்றேன்.

அசோகமித்திரன் தனது கட்டுரை தொகுப்பொன்றின் முன்னுரையில் இப்படி சொல்கிறார் ‘ஒரு நல்ல கட்டுரை சிறந்த சிறுகதை வாசித்த உணர்வை தரவேண்டும் என்பதே அதற்குரிய இலக்கணம்’ பாரதி மணியின் எல்லா கட்டுரையுமே சுயசரிதை தன்மை கலந்த சிறுகதைகளை வாசித்த உணர்வை கொடுப்பவை. தனியனுபவத்தின் மூலம் ஒரு காலகட்டத்தின் அறியப்படாத இணை வரலாற்றை தெரியப்படுத்துபவை. ஆகவே, வரலாற்றாவணங்களுக்கு இணையானவை.

அசோகமித்திரனின் எழுத்துக்களில் சுதந்திர காலகட்டத்தின் செகந்திரபாத் துலங்குவதைப் போல, அமுத்துலிங்கத்தின் வரிகளின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்ட இனங்களின் அவல வரலாறு ஆறாக ஓடிக்கொண்டிருப்பதைப் போல, நாஞ்சில் நாடனின் எழுத்துக்களில் நாஞ்சில் நாட்டு வெள்ளாள வாழ்வு துலங்கி வருவதைப் போல..  ஆறாம் நூற்றாண்டு யமுனை நதிக்கரையில்  தொடங்கி ஷாஜகனால் வடிவமைக்கப்பட்ட தில்லியின் மாபெரும் வரலாற்று நெடும்பயணத்தின் வரலாற்றைப் பதிவதில் பாரதி மணியும் ஒரு நீட்சி என்றே நான் புரிந்து கொள்கிறேன்.

சமீபத்தில் ஜெயமோகன் தளத்தில், இலக்கியம் ஒருவனின் வென்றெடுக்கும் உத்வேகத்தை மட்டுப்படுத்துகிறதா என்றொரு வினாவை எழுப்பியிருந்தேன். பல்வேறு தரப்பினரும் பல தரப்பட்ட கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இறுதியாக ஜெயமோகன் ‘Compartmentalism’ முக்கியமானது.  தொழில் வாழ்வில் இலக்கியத்தின் உணர்ச்சிகளையும், இலக்கியத்தில் தொழில் வாழ்வின் பிரச்சனைகளையும் கலந்து கொள்ள வேண்டியதில்லை. தொழிலுக்கான நேரம் மனநிலை தனி, இலக்கியத்திற்கான நேரம் மனநிலை தனி எனும் தெளிவு வேண்டும் என பதிலளித்தார்.

மகிழ்ச்சிகரமான வாழ்வை வடிவமைத்துக்கொண்ட மனிதனாகவும், பன்முக கலைஞனாகவும், எழுத்தாளனாகவும் வெற்றிகரமாக உயர்ந்து நிற்கும் பாட்டையாவைப் பார்க்கையில் அந்தக் கேள்வியே அபத்தமானது என இப்போது தோன்றுகிறது.

God bless you பாரதி மணி சார்!

(02/04/2016 அன்று நெல்லையில் பாரதி மணிக்கு நந்தா விளக்கு வழங்கிய போது ஆற்றிய உரை)

Comments