Thursday, November 27, 2008

அறிவிக்கப்படாத போர்

ரசாங்கத்தை நடத்துவது எளிதானது அல்ல. பொருளாதார வீழ்ச்சி, மின் தட்டுப்பாடு, உணவுப்பொருட்கள் பற்றாக்குறை, இனவாதம், இயற்கை பேரிடர், பகை நாடுகளின் அச்சுருத்தல், எதிர்க்கட்சிகளின் குடைச்சல், வறுமை, ஊழல் என்று எத்தனையோ இடர்கள். அத்தனையையும் சமாளித்து வளர்ச்சிப் பாதையில் தேசத்தை அழைத்துச் செல்வது சவாலானது. ஆனால் பொதுமக்களோ தம்மை ஆள்பவர்கள் அசாதாரணங்களை சமாளித்து விடும் திறமுடையவர்களாகவே இருத்தல் வேண்டும் என்று பேராசைப் படுவார்கள். ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற சாதாரண விஷயத்திலேயே கோட்டை விடும்போது பெரும் மனச்சோர்வும் பயமும் கொள்கிறார்கள்.

மும்பையில் அறிவிக்கப்படாத போர் நிகழ்கிறது. இது தேசிய அவமானம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால், பாராளுமன்றத்திலேயே நுழைந்து பட்டாசு வெடித்த சம்பவத்தை விடவா இது பெரிய அவமானம்?! இருபது நபர்களைக் கொண்ட குழு மும்பையைத் துப்பாக்கி முனையில் வைத்திருக்கிறது. நாளது தேதி வரை அங்கங்கே சிறிய குண்டுகளை வெடிக்க வைத்து உயிர்ப்பலி ஏற்படுத்திக் கொண்டிருந்தவர்கள் நேரடி தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நிகழ்ந்துவிட்ட நாச வேலைக்கு ஒரு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்கிறது என்றால் அது வாக்குமூலம் தருகிறது என்று பொருள் அல்ல. 'இதைச் செய்தது நாங்கள்தான். உங்களால் எங்கள் மசுரைக் கூட பிடுங்கமுடியாது' என்று சவால் விடுகிறது என்று பொருள்.

இந்தியா பயங்கரவாத்தை ஒருபோதும் அனுமதிக்காது. பயங்கரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று ஒவ்வொருமுறையும் ஊடகங்கள் நீட்டும் மைக்குகளுக்கு முன் சூலுரைக்கிறார் நமது பாரதப்பிரதமர். பின்பு கூட்டணிக்கும்மாங்குத்தில் ஆழ்ந்து விடுகிறார். மேற்கத்திய நாடுகளில் இதுமாதிரியான அழிச்சாட்டியங்கள் நிகழும்போது தார்மீக காரணங்களுக்காகவோ அல்லது பயம் கருதியோ தங்களுக்குள் ஓன்றுகூடி தீவிரவாதத்தை அழிக்கக் கிளம்பி விடுகிறார்கள். ஆனால் இந்தியாவோ மூன்றுபுறம் கடலாலும் நான்குபுறம் பகையாலும் சூழப்பட்டுள்ளது.

'தீவிரவாதம் குறித்து விரிவாக பேசப்பட வேண்டிய நேரம் இது' என்று என்.டி.டிவியில் யாரோ ஒரு அரசியல்வாதி ஆக்ரோசமாகப் பேட்டியளித்துக்கொண்டிருக்கிறார். ".... டேய் நீங்க விரிச்சதெல்லாம் போதும் ....மூடிகிட்டு இருங்கடா...." என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டிய ஒரு அறுவைச் சிகிட்சை தேவைப்படுகிறது. மதக்குழுக்களின் போர்வையில் தேசமெங்கும் இயங்கும் சில இயக்கங்களை அழித்தொழிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அல்லது ஜெரிமி பெந்தாமின் "பெரும்பான்மையோரின் மட்டற்ற மகிழ்ச்சி" என்ற கோட்பாட்டிற்கு நாமும் வந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

4 comments:

Anonymous said...

மிகவும் ஆபத்தான அபத்தமான கட்டுரை.தொண்ணூருகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் இந்து மதவாதம் வேர்விட்ட பிறகுதான் இம்மாதீர் குண்டு வெடிப்புகள் துவங்கின.தவிறவும் பெரும்பான்மை வாதம் என்பது பாசிசம் என்பதல்லாமல் வேறென்ன? ஜெர்மனியில் ஹிட்லடும் இன்று இந்த்யாவில் பி.ஜேபியும் மும்பையில் தாக்க்ரேக்களும் சொல்லும் பெரும்பான்மை வாதம் என்பது இந்தியாவில் ஒரு காலும் வெற்றி பெறாது.மிகவும் மேலோட்டமாக இம்மாதிரி கட்டுரைகள் எழுதாதீர்கள்.ப்ளீஸ்

கபீஷ் said...

// ஜெரிமி பெந்தாமின் "பெரும்பான்மையோரின் மட்டற்ற மகிழ்ச்சி" என்ற கோட்பாட்டிற்கு நாமும் வந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்//

Good post! What is that hypothesis?
I couldnt vote in Tamil manam, it shows error. could you please check it?

செல்வேந்திரன் said...

அணானி, கபீஷ் வருகைக்கு நன்றி. பெந்தாமின் கோட்பாட்டை விவரிக்கும் தனிப்பதிவு எழுத இருக்கிறேன்.

தருமி said...

//ஜெரிமி பெந்தாமின் "பெரும்பான்மையோரின் மட்டற்ற மகிழ்ச்சி" என்ற கோட்பாட்டிற்கு நாமும் வந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.//

???

//பெந்தாமின் கோட்பாட்டை விவரிக்கும் தனிப்பதிவு எழுத இருக்கிறேன்.//

நன்றி