தாயோளீ...
கல்பாத்தி குறித்தும் அதன் தனிச்சிறப்பிற்குக் காரணமான தேரோட்டம் குறித்தும் எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது என்றாலும் அதையெல்லாம் விட மிக முக்கியமானது இந்த பதிவு என்று நான் கருதுகிறேன்.
கல்பாத்தி திருவிழாவில் ஊசி, பாசி, மணி, சால்வை, மத்தளம், வளையல், கம்மல், மிட்டாய்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள், தின்பண்டங்கள், மூலிகைகள், பாட்டுப் புத்தகங்கள் இன்னும் எத்தனையோ விதமான சப்புச் சவறுகளையெல்லாம் விற்பதற்கென்று விதம் விதமான நாடோடி வியாபாரிகள் கல்பாத்தி எங்கும் நடைபாதைகளில் கடை பரப்பிக் காத்திருந்தார்கள். நானும் ஒரு கடை பரப்பி இருந்தேன் தேரடியில்.
என்னுடைய கடைக்கு நேர் எதிரே ஒரு வட இந்திய இளைஞி சாலையோரம் நின்றபடி வருவோர் போவோரிடம் சால்வைகளை விற்க முயற்சித்துக்கொண்டிருப்பாள். சுமார் பதினாறு அல்லது பதினெழு வயது இருக்கலாம். களையான முகம். வாட்டசாட்டமான உடல் வாகு. எண்ணெய் பார்த்தறியாத செம்பட்டை கேசம். பல ஊர்களின் புழுதியேறிய பழுப்பான உடை. ஒவ்வொரு நாளின் இரவிலும் தன் கூட்டத்தாரோடு சேர்ந்து என் கடைவாசலில்தான் உறங்குவாள். காலையில் கடை திறக்க வரும் நான், எனக்குத் தெரிந்த மொழியில் அவர்களை அப்புறப்படுத்துவேன்.
தேர் திருவிழா துவங்கிய முதல் நாள் மாலை, அந்தச் சிறுமியை மத்திய வயதைக் கடந்த ஒரு போலீஸ்காரர் விரட்டிக்கொண்டிருந்தார். அவள் நின்ற இடம் தேரடி என்பதால் ஒருவேளை பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அல்லது போக்குவரத்து இடைஞ்சல் என்றோ விரட்டுகிறார் என நினைத்தேன். அந்தப் பெண் மருண்ட விழிகளுடன் இடத்தை விட்டு அகன்ற போதும் அவளை துரத்துவது போலவே பின் தொடர்ந்தார். 'அதான் போறாளே அப்புறம் என்னத்துக்கு இந்த பாடு படுத்துறார்?!' என நினைத்துக்கொண்டேன். கூட்ட நெரிசலின் பரபரப்பு சாத்தியத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவளது புட்டத்தை தடவினார் போலீஸ்காரர். சர சரவென என்னுள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. என்னுடைய சிற்றாட்களில் ஒருவனை ஸ்டாலைக் கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வீதியில் இறங்கி அவர்களைப் பின் தொடர்ந்தேன். அந்தப் பெண் ஓட்டமும் நடையுமாக விரைய எத்தனித்தாள். போலீஸ்காரன் மீண்டும் அவளது புட்டத்தை தடவினான். நான் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட முடிவெடுத்தேன். அப்படியும் இப்படியுமாக போக்குக் காட்டி அவளை கோவிலின் பின்புறம் இருந்த கல்பாத்தி ஆற்றங்கரைப் பக்கமாக ஒதுக்கினான். இருள் கவியத் துவங்கி இருந்தது. வறண்ட கல்பாத்தி ஆற்றின் பெரிய பாறைகள் யானையின் முதுகுகளைப் போல காட்சியளித்துக் கொண்டிருந்தது. நான் ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டேன். அவன் அவளை அழைத்துக்கொண்டு பாறைகளின் மீது ஏறி, இறங்கி வசதியான இடம் நோக்கிச் சென்று இருளில் மறைந்தான். நான் பட படக்கும் இதயத்தோடு ஸ்டாலுக்குத் திரும்பினேன்.
மறுநாள் காலை அவள் வழக்கம்போல என் ஸ்டாலுக்கு எதிரே சால்வை விற்றுக்கொண்டிருந்தாள். நான் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்போதும் போல சலனமற்று இருந்தது அவள் முகம். கொஞ்ச நேரத்தில் அந்த போலீஸ்காரன் வந்தான். அவளிடம் ஏதோ பேசி ஒரு சால்வையை வாங்கிச் சென்றான். சற்று நேரத்தில் திரும்பி வந்து ஐந்து சால்வைகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தான். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு பேரைக் கூட்டி வந்து அவர்களுக்கும் சால்வைகளை விற்றுக் கொடுத்தான். நேற்றிரவு நிகழ்ந்து விட்ட சேதாரத்திற்கான செய்கூலி என்று நினைத்துக் கொண்டு வேலைகளில் மூழ்கினேன்.
மதிய வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. பாலக்காட்டு வெயில் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நச நசத்துக்கொண்டிருந்தது. 'சேட்டா' என்றபடி ஸ்டாலுக்கு வந்தான் ஒரு ஐந்து வயதுச் சிறுவன். அவன் உருவத்திற்கு சற்றும் பொருந்தாத நைந்து கிழிந்து போன சட்டையும், பேண்டும் அணிந்திருந்தான். கால்களில் செருப்பில்லை. ஒரு அட்டையில் க்ளிப்புகளை மாட்டி அதில் மூன்று நான்கு லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தான். அவன் கையில் ஏதோ ஒரு குழந்தை விளையாடி விட்டு தூக்கி எறிந்த பிளாஸ்டிக் வாட்சை கட்டி இருந்தான். பால் மணம் மாறாத பச்சிளம் பாலகன் என்ற உவமைக்கு மிகப் பொருத்தமான தோற்றம். என்னை லாட்டரி சீட்டுகளை வாங்கும்படிக் கேட்டுக்கொண்டான்.
நான் என் பக்கத்தில் இருந்த நண்பரிடம் 'அநியாயத்த பாத்தீங்களா, காசு வேணும்கிறதுக்காக பழைய லாட்டரியை எடுத்துட்டு வந்துருக்கான் பாருங்க...' என்றேன். 'தேதிய வேணும்னாலும் பாத்துக்க சேட்டா... ஆனால் லாட்டரி வாங்கிக்க சேட்டா...' கெஞ்சினான் சிறுவன். துணுக்குற்று தேதியைப் பார்த்தால் அது அடுத்த வாரத்தில் குலுக்கல் என்றது. ஐய்யோ அடக்கடவுளே... இந்தப் பச்சை பிஞ்சின் கரங்களில் லாட்டரியை திணித்தது யார்?! இந்தப் பிஞ்சு லாட்டரி விற்றுப் பிழைத்தாக வேண்டுமா?! இந்த மூன்று லாட்டரியை விற்று இவனுக்கு என்ன கிடைக்கும்?! பதறியபடி அந்தச் சிறுவனிடம் "தம்பி ஸ்கூலுக்குப் போகலியா?!" என்றேன். பதிலுக்கு அவன் என்னை மகாக் கேவலமான ஒரு பார்வை பார்த்தான். எந்த மொழியிலும் விவரித்து விட முடியாத பார்வை அது. லாட்டரியை நீட்டி "வாங்கிக்கோ சேட்டா... அதிர்ஷ்டம் உனக்குத்தான்..." என்றான் மழலை மொழியில். 'லாட்டரி வேண்டாம் இதை வச்சுக்கோ' என ஒரு பத்து ரூபாயை நீட்டினேன். அதை வாங்கி பையில் வைத்துக்கொண்டு கொழுத்தும் வெயிலில் வெற்றுக்காலோடு அடுத்த கடை நோக்கி நகர்ந்தான்.
'பத்து ரூபாய் கொடுத்ததன் மூலம் அவனைப் பிச்சையெடுக்கும்படியும் உழைக்காமல் பிழைக்கும்படியும் அவனை நீங்கள் கெடுக்கிறீர்கள்" என்றார் என் நண்பர். "அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்த நான் ஒரு தாயோளி... அதை விமர்சிக்கும் நீ ஒரு தாயோளி... இந்தப் பச்சைக் குழந்தை கொழுத்தும் வெயிலில் வெற்றுக்காலோடு திரிய... அதைக் கவனிக்கத் துப்பில்லாமல் திருவிழாக் கொண்டாட்டத்தில் இருக்கும் இந்தக் கல்பாத்தி முழுக்க தாயோளிகள்... "என்றேன் ஆத்திரத்தோடு. நண்பர் ரோஷத்துடன் எழுந்து சென்று விட்டார்.
அன்று முழுவதும் "நீங்கள் அணிந்திருக்கும் ரேபான் க்ளாஸூம், டெர்லின் சட்டையும் அவர்களின் வயிற்றில் இருப்பதை திருடி வாங்கியதுதான்..." என்ற புதுமைப்பித்தனின் வரிகளும், 'தேதிய வேணாலும் பாத்துக்க சேட்டா' என்ற பிஞ்சுக்குரலும், போலீஸ்காரன் அந்தப் பெண்ணின் புட்டத்தைத் தடவியதும் திரும்ப திரும்ப மனதில் தோன்றியடியே இருந்தது. ஊர் ஊராய் சுற்றித் திரியும் இந்தப் பெண்ணை இழுத்துப்போய் காமம் கழிக்கிறானே, அவள் கர்ப்பமுற்றாள் என்ன செய்வாள்?! எங்கு போய் பிள்ளையைப் பெறுவாள்?! அதை எப்படி வளர்ப்பாள்?! அவளது கூட்டம் அவளை வைத்துக்கொள்ளுமா?! பள்ளிக்கூடம் போகவில்லையா என்று கேட்டதற்கு அந்தப் பையன் ஏன் என்னை அவ்வளவு கேவலமாகப் பார்த்தான்?! அவனுக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொடுக்கக் கூட எனக்குத் தோன்றாதது ஏன்? பத்துரூபாயோடு எனது கடமை முடிந்து விட்டதா?! நான் அணிந்திருக்கும் ஸ்டோரி சட்டையும், ஆலன் பெய்னி பேண்டும் அவன் வயிற்றைக் கொள்ளையடித்ததா?! அந்தப் பாவத்தை மறைக்கத்தான் பத்து ரூபாயா?! முன்னிரவில் புணர்ந்தவளுக்கு சால்வை விற்றுக் கொடுப்பதற்கும், பத்து ரூபாய் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கிறதா?! ஒரு முழு இரவும் உறங்க முடியாத கேள்விகள்.
தேர் திருவிழாவின் இறுதி நாள் காலை. வழக்கம் போல அவள் என் கடைக்கு எதிரே நின்று கொண்டிருந்தாள். நான் சலனமற்ற அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். போலீஸ்காரன் திமிறும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த போராடிக்கொண்டிருந்தான். நான் அவளை அடிக்கடி பார்ப்பதை உணர்ந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து சிரித்தாள். நான் தலையை திருப்பிக் கொண்டேன். அவள் என் கடைக்கு வந்து என்னிடம் தண்ணீர் வேண்டும் என்று சைகையில் கேட்டாள். நான் எடுத்துக் கொடுத்தேன். குடித்தவள் என்னிடம் சால்வை வேண்டுமா என்றாள். நான் வேண்டாம் என்றேன். சிரித்துவிட்டு நகர்ந்தாள். கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. போலீஸ்காரன் தன்னுடைய பணியில் மும்முரமாய் இருந்தான். எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு, தேரடி வந்த லாட்டரிச் சிறுவன் அந்தப் போலீகாரனை நெருங்கி அவனது முழங்கையைத் தொட்டு லாட்டரி வேண்டுமா? என்றான். என்ன மூடில் இருந்தானோ அந்தப் போலீஸ்காரன் அந்தச் சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். "அடிக்காதடா தாயோளி... அவன் ஒன்ன மாதிரி ஒரு போலீஸ்காரனோட மகனாக்கூட இருக்கலாம்டா..." எனக்கு மட்டும் கேட்கும் குரலில் அரற்றிக்கொண்டு நான் விசித்து விசித்து அழத்தொடங்கினேன்.
Comments
யுனிகார்ன் நாகர்கோவிலில் உடனே கிடைப்பதாக தகவல்.
கட்டுரையில் நான் உபயோகப்படுத்தி இருக்கும் தாயோளீ என்கின்ற வார்த்தை பிரயோகத்தைத் தவிர்த்திருக்கலாமே என்று நண்பர்கள் அன்போடும், கண்டிப்போடும் தனிமடலிலும், பண்புடன் இழையிலும் கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்கான எனது பதில்:
அதிர்ச்சியையோ பரபரப்பையோ ஏற்படுத்தி உங்களைப் படிக்க வைப்பதற்காக இந்தத் தலைப்பை வைக்கவில்லை. உண்மையில் கெட்ட வார்த்தைகளின் நேர்மையில் எனக்கு பெருத்த சந்தேகம் உண்டு. உலக கெட்டவார்த்தைகளில் பெரும்பாண்மை மகளிரைக் கேவலப்படுத்துவதே. ஆனால், ஒருவன் எப்பேர்பட்ட சிந்தனையாளனாக, பண்பாளனாக இருந்தாலும் அலுவல்விட்டு வீடு திரும்புகையில், தன் மனைவி சோரம் போவதைக் கண்டால் எத்தகைய உணர்ச்சிக்கு ஆளாவான். தான் அதுவரை படித்த அத்தனை சித்தாந்தங்களையும் ஒழுக்க விதிகளையும் மறந்து அரிவாளைத் தேடுவானில்லையா?!
தாயோளீ என்ற வார்த்தை என்னளவில் கையாளாகாததனத்தின் குறியீடு. எனக்குத் தாயோளீ, நாகர்கோவில்காரணாய் இருந்தால் 'தொட்டி', சென்னைவாசியாக இருந்தால் 'முடிச்சவிக்கி'. வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டுதான் தொங்கிக் கொண்டிருக்கப் போகிறீர்களா?!
ஒரு மோசமான கெட்ட வார்த்தையை தலைப்பாக வைத்ததன் மூலம் பல பேர் அதை படிக்காமல் தாண்டிப்போகும் வாய்ப்பு உண்டு என்ற மஞ்சூராரின் கருத்தோடு முழுதாக உடன்படுகிறேன். ஆனால், இக்கட்டுரை நாட்கணக்கில் மனதிற்குள் உருவேற்றி தீட்டியதல்ல... சொல்லப்போனால் ஒரு வார்த்தையைக்கூட எடிட் செய்யவோ திருத்தி எழுதவோ அவசியம் இல்லாத அளவிற்கு உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழுதினேன். சம்பவம் நடந்த இடத்தையும் பெயர்களையும் மாற்றி, சிறுகதைக்கான நடையில் எழுதி, பண்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி ரெமுனரேஷன் பெறும் விஷயமாக இது எனக்குப் படவில்லை. மேலும் எந்த எழுத்தாளனும் தன் உணர்வுகளுக்கு பவுடர் பூச நினைக்க மாட்டான்.
என் மொத்த மரியாதையையும் சீர்குலைப்பதாக இருக்கிறது என்கிறார் நண்பர் சுபாஷ். நான் பார்த்த சம்பவம் நம் அனைவரின் மரியாதையையும் சீர்குலைக்கிறது என்பதை அவருக்கு புரியவைக்க முயற்சிக்கிறேன்.
ஹூ ஆர் யூ?
ஹா... கார்த்திகேயன்,
ஹூ ஆர் யூ? //
Fine Sir..
It reminded me of the Hindi movie "Traffic Signal" by Madhur Bandarkar.
வாங்க நடராஜன், ரமேஷ் வருகைக்கு நன்றி.
உங்கள் எண்ணத்துக்கும்,எழுத்துக்கும் வாழ்த்துக்கள்
நல்ல பதிவு
லதானந் அவர்களின் பதிவு இணைப்பிலிருந்து தான் வந்தேன்.
மனம் கனக்க வைத்த பதிவு
//கல்பாத்தி குறித்தும் அதன் தனிச்சிறப்பிற்குக் காரணமான தேரோட்டம் குறித்தும் எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது//
ஆம்
பாத்தியா என்னோட பிளாக் மூலம் எத்தனை பேரு படிக்க அரமிச்சிருக்கங்கனு. இதுக்காகத்தன் இந்த விளையட்டை கண்டினியூ பண்றேன்.
உனக்கு நல்ல தி
றமை இருக்கு. நெறையப் பெரு ஒன்னை ரீச்ச் அகணும்!
அதுக்கக ஒன்னோட எழுத்துப் பிழைகளைச் சகிச்சுக்குவேன்னு மட்டும் நெனைக்கதெ!
PREVIOUS COMMENT WAS PUBLISHED BEFORE EDITING. SPELLING MISTAKES, IF ANY, MAY KINDLY BE IGNORED
இவை எல்லாவற்றையும் பார்த்து, ஒரு பதிவு எழுத மட்டுமே முடிந்த நீ.
இது தான் இன்றைய சுயநல, சீர்குலைந்த வாழ்க்கை.
தாயோளி சமீபத்தில்தான் படித்தேன். செருப்பில் அடித்தது போலிருந்தது. தொடர்ந்து அடியுங்கள்...சக தாயோளி செ.ஆனந்த், சென்னை.