வேறொன்றுமில்லை

அன்புமணியை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஏனெனில் அவர் பூனைக்கு யார் மணி கட்டுவது என்றிருந்த ஐ.எம்.ஏவின் பழம் பெருச்சாளிகளை எதிர்த்தார் ஏனெனில் அவர் மருத்துவ வசதிகள் முற்றிலும் மறுக்கப்பட்ட கிராமத்து மக்களின் நிலை குறித்து கவலைப்பட்டார் ஏனெனில் அவர் பொது இடங்களில் புகைப் பிடிக்கும் ஆரோக்கியமற்ற போக்கை தடுக்க முயற்சித்தார் ஏனெனில் அவர் சினிமா நட்சத்திரங்கள் திரைப்படங்களில் புகைபிடிக்கப் போவதில்லை என அறிவிக்க வைத்தார் ஏனெனில் அவர் மது எனும் சாத்தானை அழிக்கத் துடிக்கிறார் ஏனெனில் அவர் புகையிலையின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க நினைக்கிறார் ஏனெனில் மிக அரிதாகவே சாத்தியப்படும் துறை சார்ந்த அறிவும் கல்வியும் அக்கறையும் உள்ள அமைச்சராக அவர் இருக்கிறார். (பிகு: இந்தியா டூடேயில் காலம்காலமாக இப்படி 'ஏனெனில்' போடுகிறார்களே... அதான் நானும் கொஞ்சம் முயற்சித்தேன்)
***
கவிஞர். வா. மணிகண்டன் (கண்ணாடியில் நகரும் வெயில்) திருமண அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். அழைப்பிதழ் வடிவமைப்பும் அதில் இடம் பெற்றிருந்த கவிதையும் பிரமாதமாக இருந்தது.

உன் ப்ரியம்
படர்ந்த
நாட்களின் நடனத்தில்
கரைகிறது
தீராத் தனிமை

சாரலில்
நிறமழியாமல் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின்
வாழ்த்துகளில் தொடங்கும்
நம்
மழைக்காலத்தில்
உன் கரங்களை
பற்றிக் கொள்கிறேன் -

ஆயிரம் ஆண்டுகளுக்கான
தீரா
ப்ரியங்களுடன்.

அவரது கல்யாணத்திற்கு போய்த்தான் தீரவேண்டும் என்கிறாள் கேண்டி. துணைக்கு சுராவையும் பிரமிளையும் கூட்டிப் போகலாமென்றிருக்கிறேன்.
***
இலவச இணைப்பு:

1) "உன்னை ஒருவன் ஏமாற்றினானென்றால், உனக்கு ஒரு தந்திரம் கற்றுக்கொடுத்தான் என நினைத்துக்கொள்" - யாரோ

2) "அதிர்கிற வீணையில் தூசு குந்தாது" - பிரமிள்

Comments

Unknown said…
செல்வேந்திரன்,
எழுத்தில் ஒரு துடிப்பு இருக்கிறது.

உஙகள் வலைப்பூவிற்கு முதல் முதலாக வருகிறேன்.நான் புதிய பதிவர். என் வலைக்கு வந்து கருத்து சொல்லலாம்.raviaditya.blogspot.com. ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை. சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்
selventhiran said…
அதற்கென்ன ரவிசங்கர் வந்துட்டாப் போச்சி...