Sunday, January 18, 2009

நாற்காலிக் கனவுகள்பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சின்னச்சின்ன சவால்களுள் ஒன்று விஜயின் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதும்தான். என்னுடைய அபிப்ராயத்தில் விஜய் படங்களின் பெயர்களும், இயக்குனர்களும், ஜிகிடிக்களும்தாம் மாறுவார்களே தவிர கதை என்கின்ற வஸ்து மாறியதில்லை.மாறப்போவதும் இல்லை. மாறாத கதைகளுக்கு தொடர்ந்து விமர்சனங்களை எப்படித்தான் எழுதுகிறார்களோ?! தெரியவில்லை.

மசாலாதான் என்றாலும் மொக்கை போடாமல் எடுத்திருக்கிறாரே என்று போக்கிரியில் பிரபுதேவாவை சிலாகித்தோம். சரக்கு தீர்ந்துவிட்டது என்று வில்லுவில் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். சினிமாவிற்கென்று பார்முலாவோ பாணியோ எதுவும் இல்லை. அப்படி இருந்தால் அது நல்ல சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளைக் கொடுத்த பல இயக்குனர்கள் இன்றைக்கு தொடர் தோல்விகளைத் தழுவுவது. இந்த சக்ஸஸ் பார்முலாவால்தான். டி.ராஜேந்தர் தலையை சிலுப்பி எதுகை மோனையில் பிளிரும்போது கைதட்டி ரசித்த காலம்போய் அவர் வாயைத் திறந்தாலே கைகொட்டி சிரிக்கிற காலம் வந்துவிட்டது. இது ஒரு உதாரணம்தான். இது எல்லோருக்கும் பொருந்தும்.

ரசிகனின் மட்டத்திற்கு இறங்குபவன் கலைஞனா?! ரசிகனைத் தன் மட்டத்திற்கு உயர்த்துபவன் கலைஞனா?! என்கின்ற கேள்வியைத்தான் இயக்குனர்களுக்கு முன் வைக்க வேண்டியிருக்கிறது. காலம் காலமாய் சினிமாத்துறையில் இருக்கிறார்கள். சினிமாக்கலையின் உச்சங்களைத் தொட்டுவிட்ட ஜாம்பவான்களோடு பழகுகிறார்கள். ஷகீலா படத்திலிருந்து ஈரானிய திரைப்படம் வரை டிவிடி பார்க்கிறார்கள். திரைப்பட விழாக்களில் கலந்துகொள்கிறார்கள். ஜனரஞ்சகப் பத்திரிகை துவங்கி தீவிர இலக்கிய இதழ்கள்வரை சினிமாக்களைப் பற்றி எழுதும் விமர்சனங்களைப் படிக்கிறார்கள். ப்ரிவியூ ஷோவில் மொக்கைப் படங்களைப் பார்த்துவிட்டு உதடு பிதுக்குகிறார்கள். ஆனாலும், கேவலப் படங்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்து தானும் கெட்டு, தாயாரிப்பாளனும் கெட்டு, சனங்களும் கெட்டு.... என்ன மாதிரியான புரிதல்கள் இவர்களுக்கு....?!


போக்கிரி என்கிற பேக்கரி கதை வெற்றியடைந்தபோதே உஷாராகி இருக்க வேண்டாமா இந்தப் பிரபுதேவா?! தேசம் புகழும் நாட்டியக் கலைஞன். மிகுந்த திறமைசாலி என எல்லார் வாயாலும் கேட்கப்பெற்றவர். இப்படி கதாநாயகனுக்காக கதை பின்னலாமா? சரி அதை விடலாம். அது என்னங்க பேக்கரி மாதிரியே பல காட்சிகள்?! சகிக்கலை.

விஜய் மாதிரி தளபதிகள் பெரும் தப்புக்கணக்கு போடுகிறார்கள். தம் முன்னோர்களைப் போலவே தொலைநோக்குப்பார்வையில் 'நாற்காலியை' வைக்கிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்து ரசிக முட்டாள்களில் பேர்பாதிதான் ரஜினி யுகத்தில் முட்டாள்களாக இருந்தார்கள். அதனால்தான் அவர் தன் நாற்காலிக் கனவை தற்காலிகமாக ஒத்திவைத்தார். தற்போது மலை முகடுகளில் கிடைத்த ஞானோதய உதவியாலோ என்னவோ அதை நிரந்தரமாக நிறுத்திவைத்துவிட்டார். ரஜினி யுக முட்டாள் ரசிகக்கண்மணிகளில் பாதிபேர்தான் இப்போது தங்களது கழகக்குஞ்சுமணிகளாக இருக்கிறார்கள். அவர்களது ரசனை மட்டமும் மாறி வருகிறது என்பது தங்களது மொக்கைப் படங்கள் போன வேகத்தில் பொட்டிக்கு திரும்புவதில் தெரியவில்லையா? புரிந்துகொண்டால் பிழைக்கலாம். இல்லையேல் திருமங்கலம் மாதிரி டெபாசிட் இல்லாமால் போய்விடும் அபாயம் இருக்கிறது.

சர்வ வல்லமை மிக்க தமிழ் சினிமா ரோகிணியை 'ஜல்சா...' எழுத வைத்ததில் ஆச்சர்யம் இல்லை. மாறாக வருத்தம் இருக்கிறது. தாமரை மாதிரி வருவார் என்று நினைத்தேன். செலவுக் கணக்கு எழுத ஆரம்பித்துவிட்டார்.

நயன்தாராவைப் பார்க்கும்போதெல்லாம் பாரிஸ் ஹில்டனின் நினைவு வருகிறது. மினுமினுப்பும், பளபளப்பும் உடையலங்காரங்களும் ஹில்டனை ஞாபகத்தில் நிறுத்துகிறது. நான் கொடுத்த எழுபத்தைந்து ரூபாய்க்கு அவர் காட்டியது அதிகம். அந்த வகையில் வில்லு.... பவர் புஃல்லு....

11 comments:

Raji said...

சரியா சொன்னீங்க. விஜய், அஜித், சிம்பு வகையறாக்களை ஒழித்துக்கட்டினால் தான் தமிழ் சினிமா உருப்படும்.

செந்தழல் ரவி said...

கடைசி பரா சூப்பர் !!!!!!!

தமிழன்-கறுப்பி... said...

பாரிஸ்கில்டனோடு பொருந்துகிற மாதிரி தான் இருக்கிறார் நயன்தாரா..
:)

பரிசல்காரன் said...

சூப்பர் அண்ணே..

படத்தைப் பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்லங்கறத படத்துல வர்றதைப் பத்தி ஒண்ணும் சொல்லாமலே இப்படி கலக்கலா விமர்சிக்க முடியுமா!!!! அருமைங்க!!

கும்க்கி said...

நல்ல விமர்சனம்..நயன பாக்க மட்டும் போவலாங்கிறீங்க....அதுதான் எனக்கும் பிடிச்சது...

செல்வேந்திரன் said...

ராஜி, செந்தழல், தமிழன், பரிசல், கும்க்கி வருகைக்கு நன்றி...


கும்க்கிக்கு இக்கண்ணா உண்டுமான்னு சந்திப்பிழை ஆய்வாளர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க....

கும்க்கி said...

இச்சன்னா...உச்ச்சன்னாதான தெரியும்...யோவ் உண்டுய்யா உமக்கு...நேர்ல...வந்து வச்சிக்கறேன்.

ஈர வெங்காயம் said...

தண்டத்துக்கு செலவு செய்து குப்பை சினிமாக்களைப் பார்ப்பதேன்...??

பார்த்துவிட்டு இப்படி புலம்புவதேன்..??

செல்வேந்திரன் said...

ஈரவெங்காயம் உங்களது வாதம் நியாயமானதுதான். ஆனால், ஒரு பத்திரிகையாளனாக இந்த உலகின் இயக்கத்தோடு ஒட்டிப்போக பிடிக்கிறதோ இல்லையோ அரசியல், சினிமா, இசை, விளையாட்டு என எல்லாவற்றிலும் அப்-டேட்டாக இருந்தாக வேண்டியது அவசியமாகிறது.

வில்லு படத்தில் எந்த ஒரு விசேஷத்தையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு நப்பாசையில் பிரபுதேவாவை எதிர்பார்த்தேன். எங்கேயும் தென்படவில்லை

மதன் said...

தல.. நல்லா எழுதறிங்க.. வாழ்த்துக்கள்..!

செல்வேந்திரன் said...

மதன் தங்கள் அன்பிற்கு நன்றி!