Monday, June 30, 2008

திணைப்புறத்து வள்ளியும் கேண்டியின் கனத்த பர்ஸூம்

அமெரிக்கரான ராகேஷ் கண்ணா (அப்பா பஞ்சாபி என்பதால் இந்தியப் பெயர்) தனது மனைவி ரேஷ்மியோடு இணைந்து 'ப்ளாஃப்ட்' எனும் பதிப்பகத்தைத் துவங்கியுள்ளார். முதல் முயற்சியாக சாருவின் ஜீரோ டிகிரி நாவலையும், தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். மேற்படி நூல்களின் அறிமுக விழா கோவை ரீடர்ஸ் பார்க்கில் நிகழ்ந்தது. விழாவிற்கு வந்திருந்த ராகேஷ் கண்ணா தமிழ் நூல்கள் மட்டுமல்லாமல் ஏனைய பிராந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டம் இருப்பதாகத் தெரியப்படுத்தினார். ராஜேஷ் குமார், ரமணிச்சந்திரன், சுபா, இந்திரா செளந்தர்ராஜன் போன்ற மாஸ் ரைட்டர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகள் ப்ரீதம் சக்கரவர்த்தியின் மொழிபெயர்ப்பில் ' தி ப்ளாஃப்ட் அந்தாலஜி ஆஃப் தமிழ் பல்ஃப் பிக்ஸன்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. அறிமுக விழா முடிந்ததும் பேசிய ராஜேஷ்குமார் தாம் 1250 நாவல்களை எழுதி உள்ளதாகவும், தம்முடைய கதைகளை வெறுமனே கற்பனை க்ரைம் கதைகள் என்று ஒதுக்கி விட முடியாது என்றும் தம்முடைய கதைகளில் ஆதாரப்பூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதால் அவை சமூகத்திற்கு பலனளிக்கின்ற வகையில்தான் இருக்கின்றன என்றும் பேசினார். அதனைத் தொடர்ந்த வாசக உரையாடலில் எவ்வளவு முயன்றும் என்னால் அடக்க முடியாமல் சபையில் நான் எழுப்பிய கேள்விகள்...

1) யாதொரு பயனுமின்றி வெறுமனே பொழுதை மட்டுமே போக்க உதவுகின்ற மர்ம, க்ரைம் நாவல்களினால் சமூகத்திற்கு என்ன பயன்?

2) கதைகளில் மிளிரும் குரூரமும், வன்முறையும், குற்றங்களும் பின் தொடரும் வாசகனின் மன நிலையிலும் வாழ்க்கை முறையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடாதா?

3) க்ரைம் எழுத்துக்களான தேவையும், சந்தை வாய்ப்பும் இன்றும் பிரமாதமாக இருக்கிறது என்ற உங்களது வாதத்தின் அடிப்படையில் யோசிக்கையில், ஏன் தற்போது க்ரைம் எழுத்தாளர்களின் வருகை அருகிவிட்டது? ஒரிரு பதிப்பகங்களைத் தவிர ஏனைய பதிப்பகங்கள் க்ரைம் நாவல்களை அச்சிடுவதை நிறுத்தி விட்டது ஏன்?

4) ஒரு படைப்பாளி நான் க்ரைம் கதைகள்தான் எழுதுவேன் என்று ஒரு வட்டத்திற்குள் அடைபட்டுக்கொள்வது சரியா? எந்தவிதமான போட்டியும் இல்லாத சூழலில் தொடர்ந்து இயங்குவது அயற்சி அளிப்பதாக இல்லையா?

எல்லாக் கேள்விகளுக்கும் சொதப்பலாகவே அவர் பதிலளித்தாலும் மூன்றாவது கேள்விக்கு... 'எழுத்து என்பது சாதாரணமாக எல்லாருக்கும் வாய்த்துவிடாது. நாவல் எழுதுவதெல்லாம் ஒருவனின் ரத்தத்திலேயே ஊறி இருந்தால் மட்டுமே எழுத இயலும்' என்ற அவரது பதில் எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. குவாண்டனமோ சிறையில் இருந்து 'என் குருதியை எடுத்துக்கொள்ளுங்கள்' என்று வெடித்துப் பிறக்கிறது கவிதை. விலைமாதாய் பலகாலம் இருந்த நளினி ஜமீலா சுயசரிதை எழுதுகிறார். அடியாளாய் இருந்தவர்கள், மளிகைக் கடையில் மூட்டை தூக்குபவர்கள், தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி இருப்பவர்கள் எனப் பல தளங்களில் இருந்து ரத்தமும், சதையுமாய் உண்மை இலக்கியங்கள் பீறிட்டு கிளம்பி வரும் சூழலில் 'எழுத்தாளன் உருவாவதில்லை. பிறக்கிறான்' போன்ற பித்தலாட்ட பதில்கள் பெரும் கோபத்தை ஏற்படுத்துகின்றன. அந்த விழாவின் போக்கை விவாதங்களின் மூலம் திசை திருப்ப வேண்டாமே என்று அமைதியாக இருந்து விட்டேன். தவிர 'கேண்டி' வேறு நான் கேள்விகளை எழுப்புகையில் எனக்கு மட்டும் கேட்கும் வகையில் சிரித்துக்கொண்டிருந்தாள்.

***
பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க இருப்பதை முன்னிட்டு 'கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆஃப் இந்தியா' கவுன்சிலிங்கை எதிர்கொள்வது குறித்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அண்ணா யூனிவர்சிட்டியில் இருந்து பொறியியல் துறை பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். சுமார் நானூறு பேர்தான் அமர முடிகிற அந்த அரங்கத்திற்குள் சுமார் ஆயிரம் பேர்களாவது வந்து திமிறிக் கொண்டிருந்தது கல்வி என்பது எத்தனை அத்தியாவசியமாகி விட்டது என்பதனையும் எப்படியாவது சீட் வாங்கி விட்டால் போதும் மற்றதெல்லாம் தானாகவே அமைந்துவிடும் என்ற நடுத்தர வர்க்கத்தின் ஏக்கங்களையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. கல்வி என்றாலே காத தூரம் ஓடும் நான் அலுவல் காரணங்களுக்காக சென்று இருந்தேன். சுமார் அறுநூறு பக்கங்கள் எழுதலாம் போலிருக்கிறது அவ்வளவு பிரச்சனைகளும் அறிவுரைகளும் இருக்கிறது கவுன்சிலிங் தொடர்பாக. அதில் பேராசிரியர் நாராயணசாமி சொன்ன ஒரு சம்பவம் ' சிலர் கல்லூரிப் பெயர்களை மட்டும் குறித்துவிட்டு கவுன்சிலிங்கிற்கு வருகிறார்கள். கல்லூரிகளுக்கெனத் தனியாக வழங்கி உள்ள குறியீட்டு எண்களை கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. கடந்த ஆண்டு ஒரு மாணவன் சி.ஐ.டி (கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) யின் சேர்வதாக நினைத்து சி.ஐ.இ.டி (கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இஞ்சீனியரிங் டெக்னாலஜி)-ல் பணம் கட்டி சேர்ந்துவிட்டான். கிட்டத்தட்ட ஓரே பெயரில் பல கல்வி நிலையங்கள் இருப்பதால் கவனம் தேவை' என்றார். கேப்பிடேஷன், தரச்சான்றிதழ் போன்ற பல கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்தார்கள். பக்கத்திலிருந்த பெரியவர் தனது மூத்தமகனுக்கு ஒரு முன்னனி பொறியியல் கல்லூரியில் பதினாறு லட்ச ரூபாய் கொடுத்து சீட் வாங்கியதாகவும், இந்த ஆண்டு மகளுக்காக சுமார் பதினைந்து லட்சம் வரை சேர்த்து வைத்திருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அத்தனைப் பணத்தையும் அவர் அற வழிகளிலேயே சேர்த்திருப்பார் என்று நம்புவோமாக....

***
கோவையின் புகழ் மிக்க கண் மருத்துவர்களில் ஒருவரான திரு.ராமமூர்த்தியின் (தி ஐ பவுண்டேஷன்) பதினான்கு வயது மகள் 'சிருஷ்டி'யின் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு வரும்படி 'கேண்டி' அழைத்தாள். கேண்டி போன்ற அழகிய பெண்கள் அழைத்தால் விஜய. டி. ராஜேந்தர் வீட்டிற்கே வரத் தயாராக இருப்பவன் நான். 'பரத நாட்டியம் என்பது ஆடுவதற்கு மட்டுமல்ல... பார்ப்பதற்கும் மிகவும் கடினமான கலைதான்...' என்பதுதான் இன்று வரை என்னுடைய அபிப்ராயம் என்றபோதும் கேண்டியின் அருகாமைக்கும் அவள் வாங்கித் தரும் காப்பிக்காவும் எத்தனைப் பெரிய ரிஸ்கையும் எடுக்க ஏகமனதாகத் தீர்மானித்து கிளம்பினேன்.

திருமணம் செய்ய வேண்டுமென்றால் எவ்வளவு செலவாகுமோ அதைப் போல சுமார் இருபது மடங்கு செலவு செய்தால்தான் அரங்கேற்றம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியும் போலிருக்கிறது. சிறப்பு விருந்தினர்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சுவாமி தயானந்த சரஸ்வதி, சித்ரா விஸ்வேஸ்வரன் போன்றோர் வந்திருந்தனர். நாட்டியத்தின் அரிச்சுவடிகூடத் தெரியாத என்னைப் போன்ற ஆட்களையும் ஈர்க்கும் விதமாக ஆடியது அக்குழந்தை. பிஞ்சு விரல்கள் நடு நடுங்க, உடலெங்கும் வியர்வையில் தெப்பமாக நனைய ' சிந்தை இறங்கி எனை ஆளவா... வேலவா' என்றழைக்கையில் 'மிஸ்டர் முருகன், ப்ளீஸ் எங்கிருந்தாலும் உடனே கிளம்பி வாங்க சார்' என கூவத் தோன்றியது. பிரமாதப்படுத்தி விட்டாள் சிருஷ்டி.

பரதம், கோல்ஃப், பார்முலா ஓன் போன்ற விஷயங்கள் எல்லாம் சாமான்யர்கள் வீட்டுப் பிள்ளைகள் எளிதில் பயின்று விட முடியாத விஷயங்கள். செல்வாக்கினால் பெரிய மனிதர்களையும், ஊடகங்களையும் அழைத்து பெரு மண்டபங்களில் அரங்கேற்றம் நிகழ்த்தி விடலாம். ஆனால் நாட்டிய உலகின் ஜெயிக்க பணம் மட்டும் போதாது. கடும் முயற்சியும் பயிற்சியும் தேவை என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக மீரா பஜன் ஆடினாள் சிருஷ்டி. பரதம் என்பதில் கிட்டத்தட்ட தனியாள் நடிப்பும் பெரும் பகுதியாக இருப்பதாக எனக்குப் பட்டது.

பாராட்டுரை வழங்குகையில் 'தம்புரா என்ற அற்புதமான இசைக்கருவியும் அதை வாசிப்போரும் அருகி வருகின்றனர். பரத நாட்டிய ஆசிரியர்கள் தம்புராக் கலைஞர்களை ஆதரிக்க வேண்டும்' என்றார் சித்ரா விஸ்வேஸ்வரன். இன்பிளேஷன், ஏபிசி கவலைகளை மறந்து சுத்தமான சங்கீதத்தையும், அற்புதமான நடனத்தையும், லக்ஸ் பெண்களையும் ரசிக்க உதவிய கேண்டியை பாராட்டும் விதமாக அவளுக்குத் தெரியாமல் ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை லவட்டிக்கொண்டேன்.4 comments:

வெயிலான் said...

// கடந்த ஆண்டு ஒரு மாணவன் சி.ஐ.டி (கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) யின் சேர்வதாக நினைத்து சி.ஐ.இ.டி (கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இஞ்சீனியரிங் டெக்னாலஜி)-ல் பணம் கட்டி சேர்ந்துவிட்டான்.//

அடப்பாவி :(

மொள்ளமா 'விடுபட்டவைகள்' ஆரம்பிச்ச மாதிரி இருக்குது.

பரிசல்காரன் said...

//பிஞ்சு விரல்கள் நடு நடுங்க, உடலெங்கும் வியர்வையில் தெப்பமாக நனைய ' சிந்தை இறங்கி எனை ஆளவா... வேலவா' என்றழைக்கையில் 'மிஸ்டர் முருகன், ப்ளீஸ் எங்கிருந்தாலும் உடனே கிளம்பி வாங்க சார்' என கூவத் தோன்றியது. பிரமாதப்படுத்தி விட்டாள் சிருஷ்டி//

கிரேட் செல்வா!

கலையை ரசிக்க அது தெரிந்திருக்க வேண்டியதில்லை. மனிதம் இருக்கும் மனது எந்தக் கலையையும் ரசிக்கும்!

செல்வேந்திரன் said...

'விடுபட்டவைகள்' // இதெல்லாம் இல்லைன்னா செல்வேந்திரனே இல்லைங்க வெயிலான்....

செல்வேந்திரன் said...

வாங்க பரிசல்காரன் வருகைக்கு நன்றி.