அவசியமற்றவை

சுயானுபவக்குறிப்புகளை எழுதித் தீர வேண்டிய அவசியமென்ன என்கிறார்கள். யார் யாருக்கு எது எது வருகிறதோ அதைச் செய்து விட்டுப் போக வேண்டியதுதானே?! வறுமை இல்லை; பசி இல்லை; வாசிப்பு இல்லை; யோசிப்பு இல்லை; அகச்சிக்கல் - புறச்சிக்கல் ஏதுமில்லை. பின்னே எங்கே இருந்து வரும் லிட்ரேச்சர்?!

***

சில பூனைகளுக்குத் திருட பயம். சில பூனைகளுக்குத் திருடத் தெரியவில்லை. சில பூனைகள் திருடி அகப்பட்டு சூடு கண்டவை. சில பூனைகளுக்குத் திருட சோம்பல். சில பூனைகள் திருட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கின்றன. சில பூனைகள் திருடி முடித்து விட்டன. யாதொரு ஐயமும் இல்லை. எல்லாப் பூனைகளும் திருட்டுப் பூனைகளே...

***

அலுவலகத்தில் ரொம்ப நெருக்கமான நண்பர். தமிழார்வமுள்ள மலையாளி. அவரது சின்னப்பெண் பள்ளியில் பாட்டுப் போட்டிக்குப் பெயர் கொடுத்திருந்தாள். பாரதியின் பாடலொன்றைத் தேர்வு செய்து அவளுக்குப் பயிற்சியும் நான் கொடுக்க வேண்டுமென்பது கோரிக்கை. இரண்டு ஞாயிறுகள் தவணை வாங்கியும் அடியேன் பாட்டைக் கூட தேரிவு செய்யவில்லை. நண்பர் என் முகத்திலேயே முழிப்பதில்லை.

நாங்கள் மூன்று சகோதரர்கள். விஜிபி பிரதர்ஸென ஊரார் செல்லமாக நக்கலடிக்கும் அளவிற்குச் சகோதர ஒற்றுமை. சின்ன அண்ணன் பயல் எல்.கே.ஜியில் இருபது திருக்குறளும், யூ.கே.ஜியில் அறுபது திருக்குறளும் ஒப்புவிக்கிற விசித்திர வீரியன். ‘சித்தப்பா பேச்சுப்போட்டிக்கு ‘விடுதலை வீரர்கள்’ தலைப்புல எழுதிக்கொடுங்க...’ என்றான். வேலைப்பளுவில் மறந்து விட்டேன். குடும்ப உறுப்பினர் பட்டியலில் இருந்தே நீக்கி விட்டார்கள்.

கோவையில் எனக்குக் கிடைத்த தோழியருள் முக்கியமானவர். ஆகப்பெரிய தொழிலபதிபர். சிங்கப்பூர் அரசு உதவியுடன் பெரிய தொழிற்சாலை அமைத்து சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். அவரது பிள்ளைகள் சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர்கள். மற்ற எல்லா பாடத்திலும் கலக்குகிறவர்களால் தமிழை மட்டும் சமாளிக்க இயலவில்லை. மொழிப் பயம் போக்கிக்கொடுங்கள் என்று மன்றாடினார். இதோ அதாவென ஆறெழு மாதங்கள் ஸ்வாஹா!. ‘ஹூ இஸ் செல்வேந்திரன்?’ என்கிறார்.

எதை விடவும் குழந்தைகளின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லா பெற்றோர்களும் வெரி சென்சிட்டிவ். கல்விக்குச் சிறு இடைஞ்சல் ஏற்பட்டாலும் பெரும் மனச்சோர்வு அடைகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இதை எழுதும் போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஊரில் பிரபலமான மருத்துவரின் மகன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். எல்லாப் பாடத்திலும் அடிபொளீ மதிப்பெண்கள். கணக்கில் மட்டும் பதினைந்தை தாண்ட முடியவில்லை. பல்வேறு டியூசன்களில் வைத்தியம் பார்த்தும் தேறவில்லை. வழக்கு என் கோர்ட்டுக்கு வந்தது. பயலுக்கும் வாய்ப்பாடுக்கும் வாய்க்கால் தகராறு இருக்கிறதென்பதைக் கண்டு பிடித்து, இரண்டு மாதங்கள் ஓசை நயத்தோடு வாய்ப்பாட்டைக் கத்த வைத்தேன். அரையாண்டில் 90 மதிப்பெண்கள் எடுத்தான். அந்த டாக்டர் இன்றளவும் என் குடும்பத்தாருக்கு வைத்தியம் பார்த்தால் காசு வாங்குவதில்லை.

எனவே, தோழர்களே....!

***

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தார் ‘கந்தர்வன் நினைவு சிறுகதை போட்டி’ அறிவித்திருக்கிறார்கள். கதைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 25. கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர். ரமா. ராமநாதன்,
மாவட்டச் செயலாளர் - தமுஎகச,
2/435, பாரதி நகர், ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் - 622 301

மேலதிக விபரங்களை 9865566151 என்ற எண்ணில் பெறலாம்.

***

திரைப்பட அபிப்ராயங்களைப் பலரும் திறம்பட எழுதுகிற காரணத்தால் நான் குறைத்துக் கொண்டேன்.

பெருநகரில் காதலர்கள் படும் இடர்பாடுகளைக் கவனித்திருக்கிறார் சுசீந்திரன். நா.ம.அல்ல - திரைப்படத்தின் முற்பாதி அசத்தலாகவும், பிற்பாதி அயற்சியாகவும் இருந்தது. பாஸ்கர் அண்ணா தன் வசனங்களால் படத்தைப் பாதி தாங்குகிறார். முற்பாதி முழுக்கத் தியேட்டர் அதிர அதிர சிரிக்கிறது.

துருத்திக்கொண்டு நிற்கிற சாதீயப் பெருமைகளையும், ஹீரோயிசத்தையும் சகித்துக்கொள்ளத் திராணி இருந்தால் வம்சம் அம்சமான படமே. ஓர் இனக்குழுவின் உச்சிக்குணங்களைச் சொல்லுகிற தருணத்தில் அதன் எச்சித்தனங்களையும் சித்தரித்த நேர்மைக்காகவும், சம்பவங்களினுடே காட்சிப்படிமமாய் மென்கவிதைகளைக் கோர்க்கிற கவித்துவ கதையாடலுக்காகவும் பாண்டிராஜ் எனக்கு முக்கியமாகப் படுகிறார்.இசையும் கைகொடுத்திருந்தால் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

***

ஏராளமானப் பரிசுப்பொருட்கள், வாழ்த்துக்கள், கை குலுக்கல்களோடு இருபத்தெட்டாவது வயதை இனிதே கடந்தேன். வாழ்நாள் முழுக்க அன்பின் ஈரச்சாரலில் நனைந்து கொண்டே இருப்பது இறையருள்.

***
மனதிற்குகந்தவர்களைப் பற்றி முடிந்தவரைக்கும் எழுதாமல் இருப்பது உசிதம். நாம் உருவாக்கும் சொற்சித்திரம் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் எவ்விதமானச் சங்கடங்களை உருவாக்கும் என்பதை யூகிக்கவே முடியாது. இனிப்பேயானாலும் சர்க்கரை நோயாளிக்குப் புகட்டினால் சங்கடம்தானே?!

Comments

எல்லாப் பூனைகளுமே திருட்டுப் பூனைகள் தான் ஒத்துக் கொள்கிறேன் வேறு வழியில்லை
//வறுமை இல்லை; பசி இல்லை; வாசிப்பு இல்லை; யோசிப்பு இல்லை; அகச்சிக்கல் - புறச்சிக்கல் ஏதுமில்லை. பின்னே எங்கே இருந்து வரும் லிட்ரேச்சர்?!//
இருக்கிற இலக்கியவாதிகளையே தாங்க முடியவில்லை.
ஆறுமுகம்
ஹைதராபாத்
Saravana kumar said…
மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//பயலுக்கும் வாய்ப்பாடுக்கும் வாய்க்கால் தகராறு இருக்கிறதென்பதைக் கண்டு பிடித்து,

இது தான் உங்க டச். அடிக்கடி வாங்க டச் கொடுக்கிறதுக்கு
muzhuthum padiththen arumai endra otrai vaarthaiyil mudikka manamillaiyeninum nitharsanam athuve......
இப்படி எதுனாலும் அடிக்கடி எழுதுங்க இதுவே பாதி லிட்ரேச்சர் படிச்ச மாதிரியிருக்கு..

சர்க்கரை நோயாளி, பூனை ம்ஹ்ஹும் நீங்க இலக்கியவாதிதான் ஒத்துகிடறோம்...
vaanmugil said…
\\இனிப்பேயானாலும் சர்க்கரை நோயாளிக்குப் புகட்டினால் சங்கடம்தானே?! \\

ம்.... சூப்பர்...
sakthi said…
சில பூனைகள் திருட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கின்றன. சில பூனைகள் திருடி முடித்து விட்டன. யாதொரு ஐயமும் இல்லை. எல்லாப் பூனைகளும் திருட்டுப் பூனைகளே...


சபாஷ் பாஸ்
தலைப்பு - அவசியமற்றவை.
ஆனால், அத்தனை வரிகளும் அவசியமானவை.
பாராட்ட வார்த்தைகள் இல்லை செல்வா.
உங்கள் நடை வசீகரிக்கிறது.
உச்சம் தொடுவீர்கள். சந்தேகமேயில்லை.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
கபிலன்.
Anonymous said…
//வறுமை இல்லை; பசி இல்லை; வாசிப்பு இல்லை; யோசிப்பு இல்லை; அகச்சிக்கல் - புறச்சிக்கல் ஏதுமில்லை. பின்னே எங்கே இருந்து வரும் லிட்ரேச்சர்?!//

happada na ezhuthinaal thappillai....
Unknown said…
உண்மை தாங்க எல்லாம் திருட்டுப் பூனைகள் தாங்க... நீங்க யாரச் சொன்னீங்களோ, அவங்களைத் தான் நானும் சொன்னேன்!
நல்ல நடையில் உண்மையான வார்த்தைகள்...!

வாழ்ந்துகாட்டுதலைவிட மிகச்சிறந்த பழிவாங்குதல் இல்லை! :)

நல்லா இருக்கு! தளம் முதல் கூரை வரை!! :)

வாழ்த்துக்கள் செல்வா!
உம்ம உரைநடை நல்லா இருக்குயா!
சாத்தான்குளத்துல வெள்ளரிக்காய்க்கு அடுத்து உம்ம எழுத்தைத்தான் சேர்க்கணும் ஐயா!
எல்லாமே அருமை....
Unknown said…
எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அடுத்த கதை எங்கே?
எல்லாமே அருமை....
:-((((((
செல்வா,

சுகமான வாசிப்பு அனுபவம்...
மென்மேலும் எழுதுங்கள்...

அன்புடன்,
மறத்தமிழன்.
அவசியமானவையே

Popular Posts