திரைச்சீலை - வாசக அபிப்ராயம்

சிறு பிராயத்தில் அம்மா என்னை சினிமா பார்க்க அனுமதிப்பதில்லை. சினிமாவே சகல பாவங்களுக்கும் ஊற்றுக்கண் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. அப்படித்தான் அன்றைக்கு சினிமாக்களும் வெளியாகிக்கொண்டிருந்தன என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. அம்மாவின் மரணத்திற்குப் பின் கோவைக்கு புலம் பெயர்ந்தேன். மேன்ஷன் வாழ்வின் உக்கிரமான தனிமையிலிருந்து விடுவித்துக்கொள்ள திரைப்படங்கள் பெரிதும் உதவின. அவ்வகையில், நீண்ட துறவுக்குப் பின் நான் பார்த்த முதல் திரைப்படம் ‘காதல்’. (அதற்கு முன் வீட்டிற்குத் தெரியாமல் ஒரு முறை ‘சீவலப்பேரி பாண்டி’ பார்த்ததாக ஞாபகம்) கொஞ்சம் பிரக்ஞையோடு சினிமா பார்க்க ஆரம்பித்து ஆறு ஆண்டுகள்தாம் ஆகின்றன.

இளம் சினிமா பார்வையாளனாக ஜீவாவின் திரைச்சீலை புத்தகம் என்னை பெரிதும் கவர்ந்தது. நவீன எழுத்தாளர்களுள் பலரும் திரை விமர்சனங்கள் எழுதுகிறார்கள். உலக சினிமா என்றதும் அவர்களது தோளில் தனி ரொமான்டிக் மொழி ஒன்று வந்து உட்கார்ந்து பிரச்சனை உண்டு பண்ணி விடுகிறது. இயக்குனரே கண்டறியாத பல்வேறு சப்-டெக்ஸ்டுகளையும், கேட்டறியாத பின் நவீனத்துவக் கூறுகளையும் தங்களது ஆய்வுச்சாலையில் கண்டறிந்து, சீவிச்சீவி கூரானதொர் ஓடங்கம்பால் சாத்தி எடுத்தி விடுகிறார்கள்.

வெகுஜன பத்திரிகைகள் சுஜாதா என்ன எழுதினாலும் வாசலில் காத்திருந்து வாங்கி பிரசுரித்த காலம் போல நவயுகத்தில் ஸ்டார் எழுத்தாளர்கள் என்ன பிதற்றினாலும் அவற்றை வாங்கி பிரசுரிக்க தீவிர இலக்கிய பத்திரிகைகள் சில தயாராக இருக்கின்றன. அவற்றின் பசிக்கு இரை போட எழுத்தாளர்களுக்கு ‘உலக சினிமா’ எளிமையானதொரு உபாயம். பாண்டி பஜாரில் ஒரு டிவிடியை வாங்கினால் ஆச்சு. படத்தின் திரைக்கதை எழுதப்பட்ட பக்கங்களைக் காட்டிலும் மிக அதிகமான பக்கங்கள் எழுதிக் குவித்து விடுவார்கள். அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு உலக சினிமாவும் திரை வரலாற்றில் மைல் கல்; பின் நவீனத்துவ கொண்டாட்டம்; வழமைக்கு எதிரான கலகம். இதுமாதிரி ஒரு சினிமா தமிழில் வருமா எனக்கேட்டு சமகால தமிழ் இயக்குனர்களுள் தங்களுக்குப் பிடிக்காத ஒருவருக்கு சரமாரி வசவு. அத்தோடு, எவருக்குத் தெரியப்போகிறது என தப்புத்தப்பான தரவுகளும் நிச்சயம் இருக்கும்.

இதுமாதிரியான பிரச்சனைகளினால் சிற்றிதழ்களில் வரும் சினிமா கட்டுரைகளை பதற்றத்தோடு கடந்து விடுவேன். ஆனால், ஜீவாவின் ‘திரைச்சீலை’ மிகையான உணர்ச்சிகளை, வார்த்தை ஜாலங்களை நம்பாமல், பாசாங்கற்ற எளிய மொழியில் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என எழுதப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதுகிறார் என்றால், அவ்வகைப்படங்களில் இதற்கு முன் வந்த முன்மாதிரி படங்களை, இயக்குனரின் பூர்வாசிரமத்தை, ஏனைய படங்களிலிருந்து வேறுபடும் இடங்களை மிக விரிவான தகவல்களோடு விளக்கிச் செல்லும் பாணி ஜீவாவினுடையது. தமிழ் சினிமாவின் பின்னடைவை, பைத்தியக்காரத் தனங்களை லேசான கிண்டலுடன் கடந்து விடுகிறார். இந்த மென் அங்கதம் நூல் முழுதும் தொடர்ந்து நம்மை புன்னகைக்க வைக்கிறது.


***

ஒவ்வொரு ஆண்டும் சினிமாவிற்கான தேசிய விருதுகளோடு சினிமா குறித்த புத்தகம் ஒன்றிற்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது என்கிற செய்தியே எனக்கு புதிது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு தேசிய விருது பெற்று தந்திருக்கிறது இந்நூல். இதற்கு முன் அறந்தை நாராயணன் எழுதிய புத்தகத்திற்கு 1982ல் விருது கிடைத்திருக்கிறதாம். இந்தச் செய்தியினால் உந்தப்பட்டே இரண்டு புத்தகங்கள் வாங்கி, ஒன்றினை பேச்சாளர் கோபிநாத்திற்குப் பரிசளித்தேன். அவர் அதை படித்திருக்க வாய்ப்பில்லை என்பதை ‘விஜய் விருதுகள்’ நிகழ்வின் ஒளிபரப்பின் மூலம் புரிந்துகொண்டேன். வருத்தப்பட்டேன்.

சினிமா விளம்பரங்கள் வரைவதை பரம்பரைத் தொழிலாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஜீவா. தமிழகத்தின் முதல் திரையரங்கமான லிபர்டியும் அவர் வீட்டு வாசலில்தான் இருக்கிறது. சிறுவயது முதலே சினிமா மீதான ஆர்வம் அவரை ஒரு கலைக்களஞ்சியமாகவே மாற்றி இருக்கிறது. நூல் முழுவதும் அரிய பல தகவல்களால் நிரவப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து ரசனை இதழில் அவர் சினிமா கட்டுரை தொடர்களை எழுதி வருகிறார். அனேகமாக மிக நீண்டகாலம் எழுதப்பட்டு வரும் சினிமா தொடர் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

***

நூலிலுள்ள 37 கட்டுரைகளில் 16 கட்டுரைகள் மட்டுமே இந்திய சினிமாக்கள் மற்றும் இந்திய திரை ஆளுமைகள் குறித்தவை. மீதமுள்ள கட்டுரைகள் சர்வதேச சினிமாக்கள் பற்றியவை. சிவாஜி கணேசன், ஸ்ரீதர், இளையராஜா, சத்யஜித் ரே, ஸ்ரீனிவாசன், குருதத் ஆகியோரைப் பற்றிய சொற்சித்திரங்கள் சிறப்பானவை.

சர்வதேச திரைப்படங்களைப் பொருத்தவரையில் என்னை தனிப்பட்ட முறையில் பெரிதும் கவர்ந்த ஷஷாங்க் ரிடெம்ப்ஷனும், ஹோட்டல் ருவாண்டோவும் தொகுப்பில் இடம்பிடித்திருந்தன. ‘ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’ சாக்கடையில் விழுந்து தன் வாழ்வை மணமாக்கிக்கொண்டவனின் கதை. கடின முயற்சியினால், ஒளிபுகா சிறையிலிருந்து தப்பிக்கிறான் கதைநாயகன். மிகுந்த உத்வேகம் அளிக்கக் கூடிய திரைப்படம்.

‘ஹோட்டல் ருவாண்டோ’வின் கதை நாயகன் கழுத்துப்பட்டையை கட்டி சரிபார்க்கும் காட்சி உருக்கமானது. சாலையெங்கும் மனித பிணங்கள் இரைந்து கிடக்கும் சமூகத்தில் நாகரீகமும், நளினமும் அர்த்தமிழக்கின்றன என்பதுணர்ந்து கதவை அடைத்துக்கொண்டு அழுகிற ஒரு காட்சி படத்தில் இருக்கிறது. படம் பார்க்கையில் எனக்கெழுந்த கேவல் இதை எழுதும்போது நினைவுக்கு வருகிறது. இது தவிர, உலக திரைப்பட வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த பல்வேறு திரைப்படங்கள் பற்றியும் ஜீவா அற்புதமாக எழுதியுள்ளார்.

***
இதுதான் ஜீவாவின் முதல் நூல் என்பதை நம்ப முடியாமல் செய்வது அவரது மொழி நடைதான். அவர் உருவாக்கும் சொற்றோடர்கள், பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன. ஒரு சின்ன உதாரணம் ‘தாத்தாவாக நடித்தவரின் முகத்தில் அவஸ்தை ஒரு மூக்குக்கண்ணாடி போல் பொருந்தியிருக்கிறது’; நூலின் மற்றொரு சிறப்பம்சம் அங்கதம். நிறைய கிண்டல்கள் நம்மை புன்னகைக்க வைக்கின்றன. சிறு உதாரணம் ‘சேனல்கள் வந்தபிறகு தூர்தர்ஷன் உருப்படாமல் போய்விட்டது. எப்போதாவது இரவு 12 மணிக்கு மேல் பிராந்திய படங்கள் காட்டப்படுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன’


***

‘மனிதனுக்கு சட்டையும், நூலுக்கு அட்டையும் முக்கியம்’ எனும் மகத்தான கொள்கை உடையவன் நான். ஜீவாவின் ஒவியங்கள் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் அட்டைகளை அலங்கரித்துள்ளன. குறிப்பாக நாஞ்சிலாரின் பல நூல்களின் அட்டையில் ஜீவாவின் ஒவியங்கள்தாம் இருக்கும். அப்பேர்பட்ட ஜீவாவின் புத்தகத்திற்கான அட்டை வடிவமைப்பு அத்தனை அழகாக இல்லை என்பது என் அபிப்ராயம். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

***

ஒரு எளிய வாசகனுக்கு சினிமா ரசனையுட்டி, உள்ளிழுக்க இச்சிறு நூல் போதுமானது என சொல்லத் துணிவேன்.

Comments

//ஓடங்கம்பால்//இது எந்த மரத்தின் கம்பு..?!(நகரத்தானின் கேள்வி)

//படத்தின் திரைக்கதை எழுதப்பட்ட பக்கங்களைக் காட்டிலும் மிக அதிகமான பக்கங்கள் எழுதிக் குவித்து விடுவார்கள்.//

//‘மனிதனுக்கு சட்டையும், நூலுக்கு அட்டையும் முக்கியம்’ எனும் மகத்தான கொள்கை உடையவன் நான்.//

ரசிக்கவைக்கும் வரிகள்...

//ஒரு எளிய வாசகனுக்கு சினிமா ரசனையுட்டி, உள்ளிழுக்க இச்சிறு நூல் போதுமானது என சொல்லத் துணிவேன்.//

உங்கள் அருமையான விமர்சனம் இந்த நூலைப்படிக்க தூண்டுகிறது. :)
vaanmugil said…
புத்தகம் எங்கு கிடைக்கும் என தெரிவித்து இருந்தால் தேவலை. விஜயா பதிப்பகத்தில் கிடைக்கவில்லை.

சரி AUG இல் கைத்தறி வளாகத்தில் போடும் புத்தக கண்காட்சியில் தேடி பார்ப்போம்.

Popular Posts