எங்கெங்கு காணினும்
முண்டாசுப்பட்டி சென்றிருந்தேன். பார்வையாளர்கள் நகைச்சுவை படத்திற்குப் போகிறோம் கொடுத்த காசுக்கு வாய்விட்டு சிரித்தால்தான் ஆயிற்று என முடிவு செய்து வந்திருப்பார்கள் போல. நொடிக்கு நொடி வெடித்துச் சிரித்தார்கள். ஒவ்வொரு முறை ஜனங்கள் சிரிக்கும் போதும் நானும் என் நண்பரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். தீவிரமான விஷயங்களையே வாசித்து விவாதித்து எழுதி ரொம்பவும் மரத்துப் போய்விட்டோமோ என எனக்கு அச்சமாக இருந்தது. நண்பரிடம் கேட்டேன். ’இதென்னங்க அநியாயமா இருக்கு.. சிரிப்பு வரலங்க.. சிரிக்கலைங்க.. இவனுக போடுற இந்த மொக்கையெல்லாம் இருவது வருஷத்துக்கு முன்னாடியே ஊர்ல திருவிழா நாடகத்துல போட்டுட்டம்ங்க...’ என்றார். எனக்கும் ஊரில் நாங்கள் எழுதி அரங்கேற்றிய நாடகங்களின் நகைச்சுவை கூட இதை விட கொஞ்சம் தரம்தான் எனப்பட்டது.
சிரிப்பு வரவில்லை. சினிமாவும் செம இழுவை. ஆனால், இத்தகு படங்கள் எப்படி ஊடகங்களில் கொண்டாடப்படுகின்றன. திரைக்கு வந்த மூன்றாவது நாளே அமோக வெற்றி; வசூல் சாதனை; ஹீரோவின் சம்பளம் இரட்டிப்பானது என பேச்சு கிளம்பி விடுவது ஆச்சர்யமாக இருக்கிறது. வெளியான ஏழாவது நாள் சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடும் படங்கள் ட்வீட்டரில் வந்து விடுகிறது.
குறும்படங்கள் பெரும்படங்களாக ஆவதில் சில பொதுவான சிக்கல்கள் இருக்கின்றன. இருபது நிமிடத்திற்கு எழுதப்பட்ட செறிவான திரைக்கதை; குறைவான ஆனால் கச்சிதமான வசனங்கள்; இயல்பான அழகான காட்சிக்கோணங்களில் செதுக்கிச் செதுக்கிச் செய்த படைப்புகள் புரொடியூசர் அட்வான்ஸ் வைத்ததும் இரண்டரை மணி நேரத்துச் சித்திரவதையாக உருக்கொள்கின்றன. காதலில் சொதப்புவதில் துவங்கி பத்மினி காரில் சுற்றி வந்து முண்டாசுப்பட்டியில் முட்டி நிற்கின்றது இந்த குறும்பட பஜனை.
இன்று குறும்படங்கள் வணிக சினிமாவுக்குள் நுழைய நினைப்பவர்களின் அறிமுகச் சீட்டாக மாறிவிட்டன. மாடுகளின் பல்லைப் பிடித்துப் பார்ப்பது போல எதிரே நின்று வாய்ப்பு கேட்கும் இளைஞனை நம்பி பணம் போட்டால், போட்ட பணம் எட்டு மடங்காக திரும்ப வருமாவென தயாரிப்பாளர்கள் முடிவெடுத்து முன்னகர உதவும் வில்லங்கச் சான்றிதழ்கள் போல ஆகிவிட்டன. பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும் பெரும்பாலான இளைஞர்களிடம் பேச்சுக் கொடுக்க முடியவில்லை. ‘படம் பண்ணனும் சார்..’ என்கிறார்கள் தலையை ஒரு
தினுசாக ஆட்டியபடி. இரண்டு நிமிடம் நின்று பேசினால், ரெண்டு சிடியை கையில் திணித்து விடுகிறார்கள். அவை எந்த தரம் எனச் சொல்லித் தெரிவதில்லை.
என் புரிதலில் குறும்படங்கள் என்பது சிற்றிதழ்கள் போல ஒரு மூவ்மெண்ட். எவ்விதமான வர்த்தக சமரசங்களுமின்றி கலையம்சம் கொண்ட படைப்புகளை உருவாக்க முடிகிற களம். எடிட்டர் லெனின் சொல்வது போல குறும்படங்களின் நோக்கம் பொழுதுபோக்கு அம்சம் அல்ல. வியாபாரமும் அல்ல. அது அதிகார மையங்களை உடைக்கிறது. எவரும் எங்கும் எப்பொருளையும் சினிமாவாக எடுக்க முடியுமென்கிற சாத்தியத்தை உருவாக்குகிறது. ஆனால், இன்று குறும்படங்கள் பெரிய முதலீட்டில், உயர்தர தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டு சோஷியல் மீடியா மார்க்கட்டிங் வல்லுனர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மிகைப்படுத்தப்பட்ட ஹிட்ஸூகள் பெறப்பட்டு தயாரிப்பாளர் முன் புள்ளி விபரங்கள் சகிதம் ஒப்படைக்கப்படுகின்றன.
தீவிர இலக்கிய இதழ்களில் கவிதை போன்ற தோற்றமளிக்கும் ஒன்றை எழுதிக்கொண்டு,தம்முடைய கவிதைகளுக்குத் தானே கூட்டம் ஏற்பாடு செய்துகொண்டு, இலக்கிய முயற்சிகளில் தோல்வியுற்று பிறகு ஊடகவியலாளராக மாறுவேடம் பூண்டிருக்கும் மாஜி தோழர்களின் கைங்கர்யத்தில் அவ்வப்போது ஊடகங்களில் தலையைக் காட்டிக்கொண்டிருக்கும் எண்ணற்ற ஃபேக் கவிஞர்களை நானறிவேன். கொஞ்சம் நெருங்கிப் பேசினால், ‘பாட்டெழுதனும் நண்பா.. நச்சுன்னு நாலு குத்துப்பாட்டு..’ ‘நாடுள்ளவரை.. காதுள்ளவரை காற்றில் நிலைத்திருக்கக் கூடிய பாடல்கள் எழுதனும் பாஸூ...’ என அடியாழத்து அபிலாஷைகளைச் சொல்வார்கள். பேரரசு, தனுஷ், சிம்பு போன்றவர்கள் பாட்டெழுதுவதை பாக்கு வாங்குவது போல எளிதாக்கியது இவர்களுக்கு மேலதிக தன்னம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. சினிமா வாய்ப்புகளைச் சடுதியில் பெற சல்லிசான வழி நவீன கவிஞனாவதுதான் என இவர்கள் முடிவெடுத்து ஜோதியில் இணைந்தார்கள். எப்படியாச்சும் மூணு கவிதை தொகுப்பு போட்டுரு.. பிறகு எப்படியும் சினிமாவுக்குள்ள
நுழைஞ்சிரலாம் எனும் யோசனை எனக்கும் ஒருமுறை அருளப்பட்டிருக்கிறது.
மாற்று இயக்கங்களான சிற்றிதழ்களுக்குள்ளும், குறும்படங்களுக்குள்ளும் கூட வியாபாரிகள் நுழைந்தாயிற்று. இவர்களை வெளியேற்றுவது இப்போதைக்கு சாத்தியமல்ல என்பது மட்டும் தெரிகிறது.
Comments