மதுரை
விகே அண்ணாச்சி எனத் தமிழிலக்கிய உலகம் அழைக்கும் தமிழினி வசந்தகுமார் அவர்களின் புதல்வர் சரவணன் - அலர்மேல்மங்கை திருமணம் மதுரையில். இரண்டு நாட்கள் முன்னதாகவே திருக்குறளரசி, இளவெயினி சகிதம் மதுரையில் ஆஜரானேன். திருமண ஏற்பாடுகளை அ.முத்துகிருஷ்ணன், இளங்கோ கல்லாணை உள்ளிட்ட நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர். ’உங்களுக்கு ஒண்ணும் வேல இல்ல. சும்மா ஊரைச் சுத்திப் பாருங்க..’ என்று விட்டார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு நல்ல மழையில் ஊறிப்போயிருந்தது மதுரை. மீனாட்சியம்மன் கோவில் சுற்றுப்பிரகாரம் முழுக்க ஈரம். இரவில் கோவில்கள் தனியழகு கொள்கின்றன. மிதமான குளிரை அனுபவித்துக்கொண்டே கோவிலை ரசித்து விட்டு அறைக்குத் திரும்பினோம். விடுதியில் எனது பக்கத்து அறையிலிருந்த ஸ்பெயின் காதலர்கள் பதினைந்து நாட்களாக கோவிலை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். முப்பத்துமூன்றாயிரம் சிற்பங்கள் கொண்ட மதுரை கோவிலை நாம் மூன்று மணி நேரத்தில் முடித்து விடுகிறோம்.
சனிக்கிழமை காலை நண்பர் சிவா கைங்கர்யத்தில் திருப்பரங்குன்றம் சென்றோம். மிக அழகிய புடைப்புச் சிற்பத்தில் முருகன் சிரித்துக்கொண்டிருக்கிறார். நல்ல அழகான பிரகாரங்களைக் கொண்ட கோவில். வாசலுக்கருகே ஒரு தூணில் எமதர்மராஜன் எருமை மேல் வீற்றிருக்கும் சிற்பம். அதன் கீழே நிறைய்ய தீபங்கள். நெடுநாள் கிடையில் கிடந்து சாவை எதிர்நோக்கும் முதியோர்களுக்காக தீபம் ஏற்றி வைத்தால் சீவன் உடனே பிரிந்து விடும் என்பது உள்ளூர் நம்பிக்கையாம்.
பல வருடங்களாக ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் ஏக்கமிருந்தது. இளவெயினியும் ஆண்டாளும் பூர நட்சத்திரத்தைச் சேர்ந்த பெண்பாற் புலவர்கள் வேறு. நல்ல தரிசனம். கோவில் யானை குறும்புக்கார குழந்தை. பல ஆண்டுகளுக்கு முன்னர் கோழிகமுத்தி முகாமில் நான் கொஞ்சி விளையாடிய பில்லு யானைக்குட்டியை நினைவுறுத்தியது அதன் சேட்டைகள். இளவெயினி பயமின்றி கொஞ்ச நேரம் அதனுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். கோவில் வாசலில் ஆத்ம நண்பர் விஜயன் காத்திருந்தார். சொற்களுக்குள் அடங்கி விடாத நட்பு எங்களுடையது. ஸ்ரீவில்லிப்புதூரிலேயே மிகவும் புகழ் பெற்ற புராதன பால்கோவா கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருட்டுக்கடை அல்வா அளவிற்கு கூட்டம் காத்திருந்தது. கடை உரிமையாளர் விஜய் மெர்ச்சண்ட் எனக்குத் தெரிந்தவர்தான் என அவரது வீட்டிற்கே அழைத்துச் சென்றார். அவர் சூடான பால்கோவாவும் உருளைக் கிழங்கு சிப்ஸூகளும் தந்து உபசரித்தார். அற்புதமான சுவை. போதிய அளவிற்கு சுடச்சுட பார்சல்கள் வாங்கிக்கொண்ட பிறகு திருவண்ணாமலை பெருமாள் கோவிலுக்குக் கிளம்பினோம்.
அழகான குளத்தங்கரையில் முக்குறுணி விநாயகர் அளவிற்கு பெரிய விநாயகர். குளம் வெட்டுகையில் கிடைத்த விநாயகர் என்று சொன்னார்கள். தரிசித்து விட்டு நூத்திச்சொச்சம் படிகள் ஏறினால் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கோவில் பிரகாரத்தில் ஒரு சிறிய தூண் நிறுவப்பட்டு அதைச் சுற்றிலும் அளவில் பெரிதான செருப்புகள் இறைந்து கிடந்தன. தோலில், மரத்தில், அட்டையில் செய்த விதம் விதமான செருப்புகள். வேண்டுதல் நிறைவேறினால் நேர்த்திக்கடனாக பெருமாளுக்கு பெரிய செருப்புகள் செய்து போடுவார்களாம். பக்தர்கள் அந்த செருப்பை எடுத்து தங்களை லேசாக அடித்துக்கொண்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பதும் இன்னொரு உள்ளூர் நம்பிக்கை. நான் இருப்பதிலேயே ஆகப்பெரிய செருப்பொன்றைக் கையிலெடுத்து திரும்பிப் பார்த்தேன். திருவும் இளவெயினியும் ஓடியே போய்விட்டார்கள்.
ஸ்ரீவில்லிப்புத்தூரின் இன்னொரு புகழ் கதிரவன் உணவகம். சுவையான மதிய உணவிற்காக அறியப்பட்டது. கூட்டம் அம்முகிறது. கடந்த வாரத்தில் சாருநிவேதிதா வந்திருந்தபோது இங்குதான் சாப்பிட்டார் என்றார்கள். சரவணபவனை நினைவூட்டும் மிக சுவையான உணவு. குறைவான விலை. வயிறார சாப்பிட்டுவிட்டு விஜயனிடம் விடைபெற்று மதுரை திரும்பினோம்.
இரவு நலுங்கு விஷேசம். மதுரை நண்பர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள், புத்தக விற்பனையாளர்களென தமிழகமெங்குமிருந்து நண்பர்கள் வரத்துவங்கியிருந்தார்கள். அ.முத்துகிருஷ்ணனின் மனைவி சோஃபியா முன்னின்று நிகழ்வுகளை நடத்தினார். அடை தோசை, பன் ஹல்வா, சில்லி பரோட்டா, பாதாம்பால் என சுவையான இரவு விருந்துடன் அந்த நாள் முடிவுக்கு வந்தது.
ஞாயிறு அதிகாலையில் கல்யாண சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் தமிழ் அறிவுலகம் புடைசூழ திருமணம் நிகழ்ந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் கரு.ஆறுமுகத்தமிழன், பாமயன், இராசேந்திர சோழன், ஆர். குப்புசாமி ஆகியோர் மணமக்களை வாழ்த்தினார்கள். முத்துகிருஷ்ணன் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி கூறினார். நாஞ்சில், ஜெயமோகன், தேவதேவன், சு.வேணுகோபால், கோபாலகிருஷ்ணன், அ.கா.பெருமாள், வேதசகாயகுமார், மகுடேஸ்வரன், பாதசாரி என திரும்பிய பக்கமெல்லாம் தமிழிலக்கிய தளகர்த்தர்கள். இலக்கியத்திருவிழாவில் இருப்பதான உணர்வை ஏற்படுத்தியது. பதிவுலக பிரபலஸ்தர் முரளிக்கண்ணனை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியளித்தது.
முந்தைய நாள் இரவில்தான் ஜெயன் நீலம் துவங்கியிருந்தார். முதல் அத்தியாயம் மிகச்சிறப்பாய் வந்த குதுகுலத்தில் அரங்கசாமி துள்ளிக்கொண்டிருந்தார். கோகுலாஷ்டமி வேறு. சரி வாருங்கள் கள்ளழகரைப் பார்த்து வருவோமென கிளம்பினோம். அழகர் கோவிலைச் சுற்றி திருவிழாக் கூட்டம். அங்கங்கே ஆடுகள் தோலூரித்து தொங்க விடப்பட்டிருந்தன. கிடா வெட்டு. கோகுலாஷ்டமியன்று கள்ளழகர் கோவிலில் சுற்றத்துடன் ஒன்று கூடி கிடா வெட்டி விருந்துண்ணும் வழக்கம் மதுரை சுற்றுவட்டாரங்களில் உண்டு என்பதைத் தெரிந்து கொண்டோம். சுற்றிலும் நூற்றுக்கணக்கான அடுப்புகளில் கறி வெந்துகொண்டிருக்கும் மணம் அரங்கசாமியை நிலைகுலையச் செய்தது. எடுறா வண்டிய... வுடுறா திண்டுக்கல்லுக்கு.. என்றார்.
அருண், அரங்கா, சிவக்குமார், இளவெயினி, திருக்குறளசி, செல்வேந்திரன் உள்ளிட்ட உண்மையறியும் குழு திண்டுக்கல் பிரியாணியின் தாத்பரியம் காண புறப்பட்டது. வேணு பிரியாணி கடைக்குள் நுழைய முடியாத கூட்டம்.பென்ஸ், ஆடி, ஜாக்குவார், பிஎம்டபியூ வகையாரா கார்களில் குடும்பம் குடும்பமாக வந்திறங்குகிறார்கள் ஜனங்கள். அன்னதானங்கள், அசனங்களில் அதிகக் கூட்டம் சாப்பிடும் இடத்திற்குள் நுழைந்து விடாமல் கேட் போட்டு தடுப்பார்களே அதைப்போல கடை வாசலில் ஊழியர்கள் கைகளைக் கோர்த்து ஆட்களைத் தடுத்துக்கொண்டிருந்தார்கள். மனம் வெதும்பி பொன்ராம் ஹோட்டல் போனோம். இந்த ஏமாற்றம் தந்த துயரினால் அரங்கா நான்கு பிளேட் பிரியாணியுடன் நிறுத்திக்கொண்டார்.
சாப்பாட்டிற்குப் பின்னான பயணத்தில் அரங்கா காஷ்மீர் பிரச்சனை முதல் காஸா பிரச்சனை வரை எனும் தலைப்பில் நெடிய உரையாற்ற துவங்கினார். நாங்கள் தூங்கி விழித்தபோது வீடு வந்திருந்தது.

Comments