Tuesday, September 9, 2014

ருவாண்டோ

ருவாண்டா அளவில் நம் ஹிமாச்சல பிரதேசத்தையொத்தது. மக்கள்தொகையோ ஹிமாச்சல பிரதேசத்தைப் போல இரு மடங்கு. நான்கு சக்கர வாகன பயன்பாடு ஒரு சதவீதம் மட்டுமே. 60 சதவீத மக்கள் இன்னமும் வானொலியைத்தான் பொழுதுபோக்கு சாதனமாகப் பயன்படுத்துகிறார்கள். கோயம்புத்தூரிலுள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை பத்தால் வகுத்தால் என்ன வருமோ அத்தனை எண்ணிக்கையில் கூட அந்த தேசத்தில் மருத்துவர்கள் இல்லை. சிறிய அறுவைச் சிகிழ்ச்சைகளுக்குக் கூட பக்கத்து நாடுகளிலிருந்து மருத்துவர்கள் வர காத்திருக்க வேண்டிய சூழல். தலைநகர் கிகாலியில் கூட மொத்தமே மூன்று பல் மருத்துவர்கள்தாம்.

முன்னாள் சர்வதேச சுழற்சங்கத் தலைவர் சாபூ. எண்பது வயதானவர். ரோட்டரி பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பின்னரும் மானுட சேவையினைத் தொடர்பவர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சிறிய மருத்துவக்குழு ஒன்றினைத் திரட்டி, கூடுமான மட்டும் மருந்துகளை உபகரணங்களை சேகரித்து ருவாண்டோவிற்குச் சென்று அங்குள்ள காத்திருக்கும் பட்டியலிலுள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிழ்ச்சையளிக்கும் பெருந்தொண்டினை நிகழ்த்தி வருகிறார்.

இந்த ஆண்டு ருவாண்டா அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஆர்த்தோபீடிக் மருத்துவர்கள், முகச்சீரமைப்பு நிபுணர்கள் உள்ளடங்கிய பத்து பேர் கொண்ட குழு ருவாண்டோவிற்குப் பயணமானது. அதில் ஒருவர் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கண்ணன் பலராமன். ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூரின் இளம் உறுப்பினர். அவரது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ருவாண்டோ செல்லும் விமானத்தில் இருபது கிலோவிற்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. முடிந்த மட்டும் மருந்துப்பொருட்களை எடுத்துச் செல்லவேண்டுமென்பதனால் சொந்த உபயோகத்திற்கான பொருட்களை கூடிய மட்டும் குறைத்துக்கொண்டனர் மருத்துவர்கள். தலைநகர் கிகாலியில் இந்திய மருத்துவக்குழுவிற்கு மிகப்பெரிய வரவேற்பு. அவர்களது வருகை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. நாளிதழ்கள் முதல் பக்கத்தில் மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்டன.

இந்திய மருத்துவக்குழு எட்டு நாட்கள் தினமும் பதினொரு மணி நேரங்கள் உழைத்து அறுவைச் சிகிழ்ச்சைகள் மேற்கொண்டன. நம் மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆபரேசன் தியேட்டர்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் இல்லை. மருந்தாளுனர்களோ, தகுதியான தாதிகளோ, டிராலிகளைத் தள்ள உதவியாளர்களோ கூட இல்லை. வயதான சாபூவும் அவரது மனைவியும் கூட டிராலிகளைத் தள்ளினார்கள். மருத்துவர்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்து 142 அறுவைச் சிகிழ்ச்சைகளை வெற்றிகரமாக முடித்தனர். அதில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் எயிட்ஸ் நோயாளிகள். எயிட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிழ்சையளிப்பது பரஸ்பரம் இருதரப்பினருக்கும் எவ்வளவு ஆபத்தான விஷயமென்பதை மருத்துவ துறை சார்ந்தவர்கள் அறிவர். மொத்த ருவாண்டோவிலும் எயிட்ஸ் நோயாளிகளுக்கு, மஞ்சள் காமாலை பாதிப்பு வந்தவர்களுக்கு சிகிழ்ச்சையளிக்கும் வழக்கமே கிடையாது. அறுவைச்சிகிழ்ச்சைகளின் போது கொஞ்சம் கவனப்பிசகாக கைகளை கீறிக்கொண்டால் மாபெரும் ஆபத்தாகிவிடும். ஒருவகையில் உயிரைப்பணயம் வைத்து அளிக்கப்படும் சிகிழ்ச்சை இது.

அறுவை சிகிழ்ச்சை செய்து உடலுக்குள் பொருத்தப்பட்ட உபகரணங்களின் விலை பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது. சிகிழ்ச்சைக்கான கட்டணங்களும் இந்திய மதிப்பில் பல லட்சங்கள் பெறுமானது. குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்து டாக்டர்களும் இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களின் பிரபல மருத்துவர்கள். பதினைந்து நாட்கள் அவர்களது தினசரி வாழ்விலிருந்து விலகி பைசா பெறாமல் சேவையளிக்க - அதுவும் உண்ண உகந்த எதுவும் கிடைக்காத ருவாண்டோவில் என்பது மகத்தான சேவை.

டாக்டர் கண்ணன் பலராமன் ருவாண்டாவில் எடுத்த புகைப்படங்களைக் காண்பித்தார். மருத்துவமனை வாசல்களில் ஆயிரக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகளின் படங்கள், சிகிழ்ச்சையளிக்கும் படங்கள், குணமானவர்கள் நன்றியோடு மருத்துவர்களை ஆரத்தழுவும் படங்கள், முகச்சீரமைப்பு பெற்ற குழந்தைகளின் புன்னகைகள், இரவுகளில் மருத்துவர்களுக்கு மக்கள் நிகழ்த்தி காட்டிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் - என் கண்கள் கலங்கி விட்டன. தொழுநோயாளிகளுக்குச் சிகிழ்ச்சையளிக்க கையுறைகள் தேவையில்லை என கழற்றி வீசிய எர்ணஸ்டோ சேகுவேராவையும், அல்பர்ட்டோ க்ரனாடாவையும் நினைவுபடுத்துகின்றன இந்தப் படங்கள் என்றேன் அவரிடம்.

படங்களில் ஒன்றைக் கவனித்தேன். தரமான சாலைகள். ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் மக்கள். நம் பெருநகரங்களை நினைவூட்டும் அடுக்குமாடி கட்டிடங்கள். ஆம் ருவாண்டா உலகின் மோசமான இனப்படுகொலையிலிருந்து மீண்டு விட்டது. இன்று அவர்கள் தங்களை ஹூட்டு என்று டூட்ஸி என்றோ அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. ருவாண்டோவியன் என்றே சொல்லிக்கொள்கிறார்கள். தொடர்ந்து மூன்றாண்டுகளாக அவர்களது பொருளாதாரம் 8% வளர்ச்சியடைந்து வருகிறது. தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது. அதை விட மிக முக்கியமாக தனிநபர் ஒழுங்கு. பொது இடங்களை அசிங்கப்படுத்துவதோ, விதி மீறல்களோ அறவே கிடையாது. தலைநகர் கிளாலி எந்த ஐரோப்பிய நகரங்களுக்கும் சவால் விடும் வகையில் நவீனமாகியுள்ளது. ருவாண்டோவின் தலைவர்களை ஐரோப்பிய நாடுகள் சொற்பொழிவாற்ற வரவேற்கின்றன. 2,50,000 பேர் படுகொலை செய்யப்பட்டதன் நினைவிடங்கள் நாடெங்கிலுமுள்ளன. அவை எங்களுக்கு வரலாற்றை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன. நாங்கள் கடக்க வேண்டிய தூரத்தையும் என்கிறார்கள் ருவாண்டோவியன்கள்.

பேசி விடைபெற்றுச் செல்கையில் கண்ணன் பலராமன் சொன்னார் ‘இந்தியா வல்லரசாக வேண்டுமென்கிற கனவு நாடெங்கிலுமுள்ளது. ஆனால், உலகின் ஏதோ ஒரு மூலையிலுள்ள சக மானுடர்களுக்கு உதவக்கூடிய நிலையில் நாம் இருப்பதே நல்லரசின் அடையாளம். வளரவேண்டியதன் அவசியமே உதவ வேண்டுமென்பதற்காகத்தான்’


(09-09-2014 தேதியிட்ட தி இந்து இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்) 

No comments: