Friday, July 10, 2015

ஹேமா, நீங்கள் வென்று விட்டீர்கள்..


அலிஸ் மன்றோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவரது மகள் நள்ளிரவில் தொலைபேசியில் அழைத்து ‘அம்மா நீ வென்று விட்டாய்’ என கத்தினார் என்று அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். திருமதி ஹேமா அண்ணாமலையின் ஆம்ஃபியர் நிறுவனத்தின் மீது ரத்தன் டாட்டா முதலீடு செய்ய இருக்கிறார் என்ற செய்தியை நாளிதழில் பார்த்த காலையில் நானும் அப்படித்தான் அலறினேன்.

திருமதி ஹேமா அண்ணாமலையுடனான முதல் சந்திப்பினை ஏற்பாடு செய்தவர் ஒரு சன்னியாசி. பரஸ்பர நண்பர். சும்மா போய் பார்த்துவிட்டு வாங்களேன் என்றார். அது ஒரு நேர்முகத்தேர்வு என்பதை நான் அறிந்திருக்கவில்லை. தன்னைப் பற்றியும் நிறுவனத்தைப் பற்றியும் மிக விரிவாகப் பேசினார். அவரது லட்சியத்தாலும் தன்முனைப்பினாலும் நான் கவரப்பட்டேன். தன் கால்களைப் புழுதியாக்கிக் கொள்பவர்களுக்காக என் நிறுவனம் காத்திருக்கிறது என்றார். இன்றளவும் நினைக்கும்தோறும் உத்வேகமும் கிளர்ச்சியும் கொள்ளச் செய்யும் வார்த்தை அது. வெளி வேலைகளை முடித்து விட்டு மாலையில் அலுவலகம் நுழைகையில் ‘ரயில்ல கரி அள்ளிப் போட்டவன் மாதிரிதான்யா’ இருக்க என சக ஊழியர்கள் / மேலாளர்கள் சொல்வதையே சான்றிதழாகக் கொள்கிறவனுக்கு மனமகிழ்ச்சி அளிக்கும் சொற்கள். அவர் என்னைப் பற்றி விசாரித்து வைத்திருந்தார். ஒரு பெரும்பதவியையும் கனத்த சம்பளத்தையும் எனக்களிக்க தயாராக இருந்தார். நான் அப்போதுதான் ஒரு புதிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்தேன். உடனடியாக நிறுவனம் மாறி என்னைத் தேர்ந்தெடுத்தவர்களின் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை. தவிர, அத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்கும் பக்குவம் அன்றெனக்கு இல்லை. அதை ஹேமாவிடம் தயங்கியபடியே சொன்னேன். வெளிப்படைத்தன்மை அவரைக் கவர்ந்திருக்க வேண்டும். அந்த நாளில் நாங்கள் நண்பர்களானோம்.

எங்களுக்குப் பொதுவான ஆர்வங்கள் இருந்தன. அவர் ஒரு நல்ல வாசகர். தமிழில் ஆர்வம் இருந்தது. மிகச்சிறந்த பேச்சாளர். நான் அவரை சில கல்லூரிகளுக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்று பேச வைத்திருக்கிறேன். பின்னாட்களில் அவர் கோவையின் மிக முக்கியமான பேச்சாளராக ஆளுமையாகத் திகழ்ந்தார். அனேகமாக எல்லா சுயமுன்னேற்ற இதழ்களிளும் அவரைப் பற்றிய அட்டைப்பட கட்டுரைகள் வெளியாகின. நான் அவரை எழுதச் சொல்லி வற்புறுத்திக்கொண்டிருந்தேன். ஒரு ஞாயிறு முழுக்க உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த சில சுயசரிதைகளைப் பற்றி அவரது வீட்டில் பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது.

அவருடைய தொழில் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்தது. நம்பிக்கைத் துரோகங்களும் அலட்சியங்களும் அவமானங்களும் ஏமாற்றங்களும் நிறைந்தது. அவருக்கு ஏற்பட்ட சிக்கல்களில் நூற்றில் ஒரு பங்கு எனக்கிருந்தாலும் நான் காணாமற் போயிருப்பேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சம்பாதித்த பணத்தோடு இந்தியாவில் தொழில் செய்ய வந்த அவருக்கு நேர்மறையான எதுவும் நடக்கவில்லை. மெத்தனம் அலட்சியம் காலதாமதம் போன்ற இத்தேசத்தின் பிரத்யேக குணங்களைத் தன் வென்றெடுக்கும் உத்வேகத்தால் எதிர்கொண்டார். பெரிய நிறுவனங்களே முயற்சித்து கைவிட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையை அவர் துணிந்து ஏற்றுக்கொண்டார். வாகனங்களைச் சந்தைப் படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள் சாமான்யமானவை அல்ல. வாகன விற்பனைக்காக அவர் எண்ணற்ற புதுமைகளைப் புகுத்திக்கொண்டே இருந்தார். பெரிய நிறுவனங்கள் நகரங்களைக் குறி வைக்க இவர் சிற்றூர்கள் கிராமங்களை நோக்கினார். பல ஊர்களில் விற்பனை/சர்வீஸ் நிலையங்களை அமைத்தார். இலவச சர்வீஸ், எளிய நேரடி இ.எம்.ஐ அறிமுகப்படுத்தினார். மின் வாகனங்களைப் பற்றிய புரிதல்களோ நாட்டமோ இல்லாத மாநிலத்தில் திடீரென பல வருடங்களாக அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு இருந்தது எத்தகைய சவால். எட்டு மணி நேரங்கள் கரண்ட் இல்லாத ஊரில் எலெக்ட்ரிக் வாகனமா என நானே கேலியாக நினைத்து சிரித்துக்கொண்டதுண்டு. ஆனால் அக்கால கட்டத்தில்தான் அவரது வாகனங்கள் மிக வேகமாக விற்றன.

நான் அவரது தொழிற்சாலைக்குச் சென்றிருக்கிறேன். எனது நண்பர்கள் சிலருக்கு ஆம்ஃபியர் வாகனங்களை வாங்கிக்கொடுத்திருக்கிறேன். அவரது தயாரிப்புகள் அழகுணர்ச்சியும் அக்கறையும் கொண்டவை. இளைஞர்கள், நடுத்தர வயது பெண்கள், பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், இதய நோயாளிகள்,  வியாபாரிகள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், பேப்பர் போடுபவர்கள் என ஒவ்வொருவருவரின் தேவைகளுக்காகவுமே வடிவமைக்கப்பட்ட வாகனங்கள். உடல் ஊனமுற்றவர்களுக்காக அவர் தயாரித்தளிக்கும் வாகனங்களுக்காகவே அவர் கொண்டாடப்பட வேண்டியவர்.

இன்று இந்தியா முழுக்க நாளிதழ்களில் அவரைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவர் டாட்டாவுடனான சந்திப்பை எப்படி உருவாக்கிக்கொண்டார். தனது தயாரிப்புகளை ஐடியாக்களை எப்படி முன்வைத்தார். வெற்றிகரமான ஒப்பந்தத்தை நோக்கி எப்படி முன்னகர்த்தினார் என்பதைப் பற்றியெல்லாம் இன்றைய பிஸினஸ் லைனில் செய்தி வந்திருக்கிறது. ஒவ்வொரு சிறிய தகவல்களையும் பொருட்படுத்துவது, முன் தீர்மானங்களற்று முழு மனதுடன் முயற்சிப்பது, எந்நிலையிலும் துவளாதிருப்பது போன்ற செய்திகள் அதில் பொதிந்துள்ளன.

“ஹேமா, நீங்கள் வென்று விட்டீர்கள்..!” 

No comments: