மொக்கை


அரங்கில் குழுமியிருக்கும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மொக்கை எனும் தூய தமிழ்ச்சொல்லுக்கு கூர்மையற்ற எனும் பொருளைக் காட்டுகிறது தமிழகராதி. மொக்கு அல்லது மொன்னை எனும் சொல்லிலிருந்து மொக்கை எனும் தமிழ்ச் சொல் உருவாகியிருக்கலாம். வடிவேலு மொக்கச்சாமியாக அரிதாரம் ஏற்றதன் வழியாக இந்தச் சொல் தமிழர்களால் மீள்கண்டுபிடிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று யூகிக்கிறேன்.

மொக்கை ஃபிகர், மொக்கை படம், மொக்கை ஜோக், மொக்கை சாப்பாடு என்று கல்லூரி மாணவர்கள் அன்றாடம் பலதடவை இந்தச் சொல்லை உபயோகிக்கிறார்கள். அவர்களின் உலகில் வாத்யார் மொக்கை, வகுப்புகள் மொக்கை, நூலகம் மொக்கை, புத்தகங்கள் மொக்கை, பேச்சாளன் மொக்கை, அரசியல் மொக்கை. காணும் யாவையும் மொக்கையென விளிக்கும் உங்களின் கூர்மைதான் என்ன என்பதை அறியும் பொருட்டே இந்த அரங்கில் பல வினாக்களை எழுப்பினேன்.

திராவிடம், இட ஒதுக்கீடு, ஹைட்ரோ கார்பன், கீழடி, போக்ஸோ, ஆர்ட்டிக்கிள் 370, தேசிய கல்விக்கொள்கை, ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், நீர் மேலாண்மை, ஆவாஸ் போஜனா, ஸ்மார்ட் சிட்டி திட்டம், பொருளாதார நெருக்கடி என இந்த அரங்கில் கேட்கப்பட்ட எந்த ஒரு  கேள்விக்கும் உங்களிடம் பதிலில்லை. தவறாக சொல்லும் பதிலைக் கூட கொண்டு கூட்டி ஒரு கோர்வையாக சொல்லத் தெரியவில்லை.  தமிழ்சினிமாவைப் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் மாய்ந்து பாய்ந்து பதில் சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய எந்தவொரு சமகாலவிஷயத்திலும் உங்களுக்குப் பிடிமானம் ஏதுமில்லை.

ஐநூறு ரூபாய்க்கு வரைவோலை எடுத்து வா என வங்கிக்கு அனுப்பி வைத்தால், இங்குள்ள பலர் திரும்ப வராமலேயே போய்விட வாய்ப்புள்ளது. ஐந்து செல்லான்களை எழுதி கிழிக்காமல் நம்மால் பஸ் பாஸ் எடுக்க முடியவில்லை. ஆதார் அட்டையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்த வழியுண்டா என பூங்கா ஜோசியனிடம் விசாரிக்கிறோம். எங்கும் எதிலும் திகைப்பும் தெளிவின்மையும்.

உங்களுடைய சிகையலங்காரம் டிரெண்டியாக இருக்கிறது. உடைகள் டிரெண்டியாக இருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், ஈருளிகள் டிரெண்டியாக இருக்கின்றன. ஆனால், அறிவு விஷயத்தில் நீங்கள் டிரெண்டியாக இல்லை. AI, IoT, Block Chain, Big Data, Disruptive Management, Bit Coin, Augmented Reality and Virtual Reality என அன்றாடம் மாறிவரும் எந்தத்துறைசார்ந்த தொழில்நுட்ப மாற்றங்களைப் பற்றியும் உங்களுக்குப் பேச ஒருவரி கைவசம் இல்லை.  படுமொக்கை, மொக்கை, சுமார், சூப்பர் என நான்கு தரப்பிரிவுகளாக உங்களைப் பிரித்தால் படுமொக்கை எனும் பிரிவின் கீழ்தான் வருவீர்களென நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய நேரடி பதில் கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு. ஒரு மொக்கைப் பீஸாகவே வாழ்ந்து முடிந்து போகாமல் இருப்பதற்கு.  ‘ஒரு எழவும் தெரியாது… வந்துட்டான்யா முடியை சிலுப்பிக்கிட்டு…’ என அவமானப்பட்டு கூசி நிற்காமல் இருப்பதற்கு. கலை சுரணை, பண்பாட்டுச் சுரணை, அரசியல் சுரணை, சூழியல் சுரணை என எதுவுமே இல்லாமல் வெறும் வாட்ஸாப் பைத்தியங்களாக உலவாமால் இருப்பதற்கு, ஆயுளையே அவிர்பாகமாக கேட்கும் கார்ப்பரேட் நெருக்கடிகளுக்குள் எவனோ ஒருவன் சிபாரிசில் உள்நுழைந்து எங்கள் தாலியறுக்காமல் இருப்பதற்கு.

நண்பர்களே, தமிழ் மேடைகளில் தவறாமல் நிகழும் கீழ்மைகளுள் ஒன்று பேச்சாளர்கள் பார்வையாளர்களை, பேச வந்த ஊரை, கல்லூரியை வானளாவ புகழ்வது. அமர்ந்திருப்போர் விழிகளில் ஒளிர்விடும் பாரதம் தெரிவதாக அளந்து விடுவது. அற்ப கைதட்டுதலுக்காக அல்லது அடுத்தமுறை கூப்பிட வேண்டுமென்பதற்காக மிகையான புகழ்மொழிகளை முன்வைப்பது. இவ்வகை தொழில்முறை பேச்சாளர்கள் பணத்தையும் பெற்றுக்கொண்டு அறத்தையும் மீறுகிறார்கள். உங்கள் ஆன்மாவை நோக்கி எவ்வித தயக்கமும் இன்றி நான் கேட்கும் தர்மசங்கடம் மூட்டும் வினாக்களால் நீங்கள் சீண்டப்பட்டால் நான் மகிழ்வேன். அரங்கை விட்டு வெளியேறும்போது தாக்கப்பட்டால் புளகாங்கிதம் அடைவேன்.

வாசிக்கும் இளைஞன் வழிகாட்டும் தலைவன் என்பேன் நான். நீங்கள் இண்டலெக்சுவலி ஃபிட்டாக இருந்தால் வகுப்பிலும் வீட்டிலும் நாட்டிலும் மதிப்பிற்குரிய நபராவீர்கள். ஒரு சமகாலப்பிரச்சனையைப் பற்றி உங்களது கருத்துகளை சொல்லுங்கள் என வகுப்பில் ஆசிரியர் உங்களைப் பேச பணித்தால் அது எவ்வளவு பெரிய கவுரவம்? முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் உங்கள் தந்தை உங்களைக் கலந்தாலோசித்தால் எவ்வளவு பெரிய ஆனந்தம்? உங்கள் நண்பர்கள் வட்டத்திலேயே விஷய ஞானமுள்ளவர் என அறியப்பட்டால் எவ்வளவு பெரிய மரியாதை? உங்கள் அண்ணன் தங்கைக்கு மச்சானுக்கு முறைப்பையனுக்கு வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவெடுக்க சிந்தனைத் தெளிவுடன் வழிகாட்ட முடியும் என்பது எவ்வளவு பெரிய முக்கியத்துவம்? கையில் புத்தகத்தையோ நாளிதழையோ வைத்திருக்கும் ஒருவனை காவல்துறை ‘யோவ்..’ என விளிப்பதில்லை. வாசிக்கும் பழக்கம் உள்ளவன் எந்த சபையிலும் தன் தலையை தொங்கவிட்டு அமர்ந்திருக்க வேண்டியதில்லை. இரண்டாயிரம் பேர் கூடியுள்ள சபைமுன் நின்று ‘கூமுட்டைகளே’ என்று நான் உங்களைக் கூவி அழைக்கும் அதிகாரத்தையும் துணிச்சலையும் எனக்கு எது தந்திருக்கிறது என்று நீங்கள் யோசித்துப்பாருங்கள்.

ஒத்துக்கொள்கிறேன். உங்கள் கையில் வைத்திருக்கும் டிவைஸ் அளவிற்கு நாளிதழ்கள் சுவாரஸ்யமானவை அல்ல. உங்கள் டைம்லைனின் வண்ணமிகு இனிய ஆச்சரியங்கள்,  உடனுக்குடன் வந்து குவியும் உங்கள் அபிமானஸ்தர்களின் வாழ்க்கைத் தருணங்கள், வேடிக்கை மீம்ஸ்கள், ஆச்சர்யமூட்டும் வீடியோக்கள், சிரிப்பாணி மூட்டும் டிக்டாக்குகள்  இவை எதற்கும் முன் நாளிதழ்கள் போட்டியிட்டு குதுகலப்படுத்த முடியவே முடியாது. தொழில்நுட்பத்தின் பகாசுர கரங்கள் உலகின் உச்ச இன்பங்களை உங்கள் கண் முன்னே கொட்டி ஆட்டுதி அமுதே என கொஞ்சுகிறது. தொழில்நுட்பத்துடன் போட்டியிட்டு வெல்லும் ஆற்றல் இந்த உலகில் எதற்கும் இல்லை. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் தவிர்த்து வாசிப்புக்குத் திரும்புங்கள் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. டைம்லைன் மூளைக்கு ஏற்றும் டோபோமைனுக்கு அடிமையாகதவர் என்று எவரும் இன்று புவியில் இருக்க முடியாது. ஆனால், நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விழைவது ஒன்றேதான் ‘உப்புமா, கிச்சடியை விட நிச்சயம் பீட்ஸா சுவையானதுதான். ஆனால் மூன்று வேளையும் பீட்ஸாவை மட்டுமே உண்டால் சீக்கிரத்தில் செத்துப் போய்விடுவோம். யங்கிஸ்தான் செல்லங்களாக நீங்கள் இருபத்துநாலு மணிநேரமும் இன்ஸ்டாவில் திளைப்பதும் ஜாயிண்ட் அடித்துவிட்டு சத்தமில்லாமல் இளித்துக்கொண்டிருப்பதும் ஒன்றேதான். வழி வேறாயினும் விளைவுகள் ஒன்றேதான். அச்சமூட்டுகிற வகையில் அறியாமை இருளுக்குள் இருப்பதற்குப் பதிலாக நாளொன்றுக்கு இருபது நிமிடங்கள் நாளிதழ்களை வாசிக்கலாம்.

            இன்னும் தங்கள் ஆன்மாவை விற்றுவிடாத தரமான நாளிதழ்கள் என்ன செய்கின்றன? அவை நிர்வாக அமைப்புகளை, அதிகாரமையங்களை, நிறுவனங்களை, தொழிற்சாலைகளை, வங்கிகளை, கல்விக்கூடங்களை, ஆன்மிக அமைப்புகளை, சி.ஈ.ஓக்களை, சி.ஓ.ஓக்களை, இயற்கை வளங்களை இன்னும் ஏராளமானவற்றை கண்ணுக்குத் தெரியாத கண்களாக கண்காணிக்கிறது. அதன் வழியாக மக்களைப் பாதுகாக்கிறது. வெளியே தெரிந்தால் பத்திரிகைகள் குடைந்தெடுத்து விடுவார்கள். அவமானம், மானம் போய்விடும், தண்டனை பெறுவோம் என்கிற அச்ச உணர்வு இன்றும் எஞ்சியிருக்கிறது. என்ன நடந்தது? என்ன நடக்கிறது? யார் முடிவெடுக்கிறார்கள்? யார் பலனடைகிறார்கள் என்பதை மக்களுக்குச் சொல்கிறது. எச்சரிக்கிறது. ஜனநாயகம், நீதி, பொது ஒழுங்கு, நிர்வாகம் போன்றவற்றை மட்டுறுத்தும் விசைகளுள் ஒன்றாக இருக்கிறது.

லட்சோப லட்சம் மாணவர்கள் பத்திரிகைகளைப் புறக்கணிப்பதன் வழியாக ஒருவகையில் ஜனநாயகத்தின் குரல்வளையை மிதிக்கிறார்கள் என்பேன். தன்னைச் சுற்றி நிகழும் எந்தவொன்றைப் பற்றியும் ஒரு எழவும் தெரியாத கூமுட்டைகளாக இந்தச் சமூகத்தை மேலும் பாதுகாப்பற்ற வாழ லாயக்கற்ற ஒன்றாக மாற்றுகிறார்கள். தன்னுடைய உரிமைகளை, தனக்கான சலுகைகளை, வாய்ப்புகளைப் பற்றிய அறிவில்லாதவர்களாகவும், தன் மீது நிகழும் சுரண்டலைப் பற்றிய தெளிவில்லாதவர்களுமாக இருக்கிறார்கள். தன்னை ஒரு ஆளுமையாக முன் வைக்காமல் ஆயிரக்கணக்கான ஆடுகளடங்கிய மந்தையில் நாயின் ஊளைக்கும் நரியின் ஊளைக்கும் வித்தியாசம் தெரியாமல் அஞ்சி நடுங்குபவர்களாக உள்ளனர்.   

            உலகிலேயே மிக அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள நாடு இந்தியா. சராசரி இந்தியர்கள் ஒரு வாரத்திற்கு பத்து மணி, 42 நிமிடங்கள் வாசிக்கிறார்கள். எந்த வளர்ந்த நாடும் இந்தப் பட்டியலில் நம்மை மிஞ்சி இல்லை என்பது பெருமிதம்தான். ஆனால், பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தாண்டி எதையேனும் வாசிக்கிறார்களா என நிகழ்த்திய ஆய்வில் வெறும் 30% மாணவர்கள்தான் என்று தெரியவந்தது. கல்லூரி அளவில் என்று சோதித்துப்பார்த்தால் 1% கூட இல்லை. இரண்டாயிரம் பேர் அமர்ந்திருக்கும் அரங்கில் கடந்த ஆறு மாதத்தில் ஏதேனும் ஒரு நூலைப்படித்தவர்கள் என இரண்டே பேர்கள்தான். ஹாரிபாட்டர். ஜேகே ரெளலிங்கின் புகழ் ஓங்குவதாகுக.

சுகாதாரத்துறை அமைச்சர் அரசுத்திட்டங்களைப் பற்றி கேள்வி கேட்டால் பிரின்ஸிபால் முதல் செவிலியர் மாணவிகள் வரை ஒருவருக்கும் ஒன்றாகிலும் தெரியவில்லை. நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கித்தருகிறேன் என இணையத்தில் பொய் சொல்பவனிடம் ஆறுநூறு பெண்கள் நிர்வாண வீடியோக்களை அனுப்பி வைக்கிறார்கள். ஓங்கிய வாளுடன் ஓடும் பேருந்தில் தீப்பொறி பறக்க விட்டு காவல்நிலையத்தில் வழுக்கி விழுகிறார்கள். ஓரொரு இந்தியனும் பூஜிக்கவேண்டிய பாபாசாகேப் அம்பேத்கரின் சிலையை நடுசாலையில் காலால் நசுக்கி உடைக்கிறார்கள். தஞ்சாவூர் அரண்மனை ஓவியங்களில் சிந்துஜா சீக்கிரம் வா என கிறுக்கி வைக்கிறார்கள். லட்சம் ஆண்டுகள் பழமை கொண்ட பிம்பேத்கா குகை ஓவியங்களை பைக் சாவியால் கீறிப்பார்க்கிறார்கள். ஆளரவமற்ற சமணப்பள்ளிகளில் சபையில் பேச முடியாதவற்றை செய்கிறார்கள். மலைமுகடுகளில் ஏறி நின்று மனம் பொங்க சூரியோதயம் பார்க்கும் ஆன்மிக தருணத்தில் கூச்சலிடுகிறார்கள். அருவிக்கரைகளை பீர் பாட்டில்களால் அலங்கரிக்கிறார்கள். எங்கெங்கு காணினும் சூரைமொக்கை இளைஞர் குழாம். ஓங்கரிக்க வைக்கும் ஈனத்தனங்கள்.

கொஞ்சமேனும் வாசிக்கிற வழக்கமுள்ள ஒரெயொருவன் இந்த அவையில் இருந்தால் கூட எழுந்து நின்று என்னோடு சமர் செய்வான். அடுத்த முறையேனும் அப்படி ஒருவனை சந்திக்க விழைகிறேன். நன்றி வணக்கம்.

Comments

//கொஞ்சமேனும் வாசிக்கிற வழக்கமுள்ள ஒரெயொருவன் இந்த அவையில் இருந்தால் கூட எழுந்து நின்று என்னோடு சமர் செய்வான்.// யாருமில்லை! நாங்கள் அனைவரும் மொக்கை தான் போல!!