5 புத்தகங்கள்


     ஆல் இண்டியா ரேடியோ நேயர்களுக்கு என் அன்பான வணக்கம். கடந்த 25 ஆண்டுகளாக புத்தகங்களை வாசித்து வருகிறவன் நான். ஆண்டொன்றுக்கு சுமார் 50 புத்தகங்கள் என கணக்கிட்டால் கூட குறைந்த பட்சம் 1000+ புத்தகங்கள். இரண்டு நாட்கள் அவகாசத்தில் மிகப் பிடித்த 5 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து உரையாற்றுவதென்பது ஆகக்கூடிய சிரமமான வேலை.

என்னுடைய சிந்தனையிலும், ஆளுமையிலும் கணிசமான பாதிப்புகளை நிகழ்த்திய, தன் மையக் கருத்தால் ஒரு மூல மந்திரம் போல தொடர்ந்து வழிநடத்துகிற ஏராளமான நூல்கள் என் வாழ்வில் உண்டு. பல தரப்பட்ட நேயர்களையும் மனதில் கொண்டு சில குறிப்பிடத் தகுந்த நூல்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை நிகழ்த்தலாம் என நினைக்கிறேன்.

1. ஜெயகாந்தன் சிறுகதைகள்

            15 வயது. கைக்குச் சிக்கியதை வாசித்துக்கொண்டிருந்த பருவம். நரைத்த முறுக்கு மீசையும் தோளில் புரளும் தலைமுடியும் நிமிர்ந்த தோள்களுமாக ஜெயகாந்தனின் தோற்றம் பார்த்த மாத்திரத்திலேயே என்னை ஈர்த்தது. சாத்தான்குளம் அரசு நூலகத்தில் இருந்து  சிறுகதைத் தொகுப்பு நூலை (கவிதா பிரசுரம்) வாசிக்கத் துவங்கினேன்.
திடுக்கிடும் திருப்பங்களும் சாகஸங்களும் கொண்ட துப்பறியும் நாவல்களையே விரும்பி வாசித்துக்கொண்டிருந்த காலம். ஜெயகாந்தனின் நீண்ட வர்ணனைகள் முதலில் ஆயாசத்தை உருவாக்கினாலும் அவரது வலுவான கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்கிறவர்களாக, பல்வேறு தருணங்களில் பல்வேறு விதமாக நடந்துகொள்கிற தனித்துவம் மிக்க குணச்சித்திரர்களாக இருந்தார்கள். அவரது கதைக்களன்கள் வாழ்க்கையின் சிறு துண்டை பிட்டு கண்ணுக்கு  மிக நெருக்கமாக வைத்து அலசுவதைப் போல இருந்தது. ஜெயகாந்தனின் ஒரெயொரு சிறுகதையை வாசிக்கும் முன்பு வரை நான் சிறுவன். வாசித்த மறுகணம் நான்  ‘மனிதன்’. அதிலும் சாமான்யன் அல்ல. உலக மனிதன்.

     குடும்பம் எனும் அலகிற்குள் வாழ்ந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்கமும் புனிதமானது.. எதன் பொருட்டும் இன்னொருவனின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே மிக உயர்ந்த மனிதப் பண்பு என்பதை மீச்சிறிய வயதிலேயே உணர்ந்துகொண்டேன். வளைந்து குழைந்து வசதியாக வாழ்வதை விடவும் அழகானது நிமிர்வும் நேர்மையும் உண்மையும் எளிமையும் என்பது அவர் முன் வைக்கும் வாழ்க்கை முறைமையாக இருந்தது.  

ஜெயகாந்தன் எனக்குத் தந்த எல்லாவற்றையும் விட மிக உயர்வானது என்னவென்றால் ‘உன் வாழ்வை நீயே தீர்மானித்துக்கொள்ள முடியும்; யாரோ செலுத்துகிற விசையில் விருப்பமில்லாத திசையில் வாழ்ந்து கழியவேண்டியதில்லை’ எனும் மகத்தான ரகசியத்தைத்தான்.

பதின்பருவத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என நான் ஜெயகாந்தனின் சிறுகதைகளைச் சொல்வேன்.

2. என் இளமைக்கால நினைவுகள்

என்பதுகளில் நவசன்யாச அலையை உருவாக்கிய ஓஷோ தன் பால்யத்தை குறித்து எழுதிய நூல் Glimpses of a Golden Childhood. அந்நூல் ஸ்வாமி ஆனந்த் பரமேஸ் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘என் இளமைக்கால நினைவுகள்’ எனும் பெயரில் 1995ல் கவிதா பதிப்பக வெளியிடாக வந்தது.

 இந்நூல் மத்தியப்பிரதேசத்தில் குச்வாடா கிராமத்தில் தன் தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்ததிலிருந்து உயர்கல்வி வரை ஓஷோவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ருசிகர நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாகச் சித்தரிக்கிறது. குறிப்பாக ஒஷோவின் தாத்தாவும் பாட்டியும் கொண்டிருந்த அன்யோன்யமும் வாழ்க்கை நோக்கும் தனிமனித தேர்வுகளில் தலையிடாத பண்பும் எனக்குப் பெரும் திறப்பாக இருந்தது.  தன் ஆரம்பப் பள்ளி வாழ்க்கை தொட்டே ஓஷோ எப்போதும் அமைப்புக்கு மீறியே நின்றதும், அமைப்புகளும் அதன் விதிகளும்  நம் சிந்தனைகளையும் சுதந்திர செயல்பாடுகளையும் எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்துகின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. இளமையிலேயே உயர் ரசனைகளை வளர்த்துக்கொண்டு அனுபவங்களைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் எனும் உத்வேகத்தை அந்நூல் எனக்களித்தது.

பாடத்திட்டம் என்பது எதைப்பற்றியும் மிக எளிய சிறிய ஒரு அறிமுகத்தை மட்டுமே வழங்கமுடியும் ஆர்வத்தினால் மேலதிகமாகத் தேடி தீவிரமாக வாசித்து சிந்திப்பவனே அத்துறையில் அறிஞனாக முடியும் என்பதை இளமைக்கால நினைவுகள் வாசித்த காலம் தொட்டு இன்று வரை முயன்று வருகிறேன். நான் ஓஷோவை பின்பற்றுகிறவன் இல்லை எனினும் இந்நூல் என்றும் என் மனதிற்கினியது.

3. புயலிலே ஒரு தோணி

     நாவல் எனும் கலைவடிவம் பற்றி இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரையறையும் எதிர்பார்ப்பும் இருக்கலாம். உள்ளடக்கம் சார்ந்தும், கூறுமுறை சார்ந்தும், வடிவம் சார்ந்தும் நாவல்கள் தன்னளவில் தொடர் உருமாற்றங்களைக் கொண்டுள்ளன என்றாலும் கூட நாவல் எனும் கலைச்சாதனத்தின் முதன்மையான சாத்தியம் என்பது பலகுரல் தன்மையுடன் ஒட்டுமொத்த வாழ்வைத் தொகுத்துக் காட்டி வாசகன் தனக்கான பார்வையையும் வாழ்க்கை நோக்கையும் உருவாக்கிக்கொள்ளச் செய்வதுதான். அந்தவகையில் தமிழின் மகத்தான இரு நாவல்களை உருவாக்கியவர் என்று ப.சிங்காரத்தைச் சொல்லலாம்.

பினாங்கு பகுதிகளில் வட்டித் தொழில் செய்துவந்த செட்டியார்களின் வாழ்க்கைப் பின்புலத்தில் உலகப்போரின் கொந்தளிப்பான நாட்களைச் சித்தரிக்கும் புயலிலே ஒரு தோணி தன் தனித்துவமான கூறுமுறையாலும் நுட்பமான சித்தரிப்பினாலும் கவித்துவத்தாலும் கூரிய அங்கதத்தாலும் தமிழின் முதன்மையான நாவல்களுள் ஒன்றாக நிலைப்பெற்றிருக்கிறது. கலைவிமர்சகர் சி.மோகன் சொல்வது போல சிங்காரத்தின் நாவல்கள் கடவுளின் சிரிப்பால் உருவானவை.

4. வியத்தலும் இலமே - . முத்துலிங்கம்

தமிழின் மிக சுவாரஸ்யமான எழுத்தாளர் அ. முத்துலிங்கம். கனடாவிலே வாழ்கின்றார்.  இலங்கையைச் சேர்ந்தவர். உலகளாவிய பின்புலத்தில் சிறுகதைகள் நாவல்கள் என தீவிரமாக இயங்கி வரும் படைப்பாளி. இவர் சமகாலத்தின் முக்கியமான எழுத்தாளர்களைப் பேட்டி கண்டு எழுதிய புத்தகம் வியத்தலும் இலமே.

இந்நூலில் உலகின் புகழ்மிக்க எழுத்தாளர்களான கனடிய எழுத்தாளர் டேவிட் செடாரிஸ், புக்கர் விருது வென்ற அலிஸ் மன்றோ, டேவிட் பெஸ்மாகிஸ், மார்கரெட் அட்வூட், ஆங்கிலோ இந்திய எழுத்தாளர் அகில் சர்மா, ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவா ஆச்சிபி உள்ளிட்ட பலரை சந்தித்து அவர்கள் எழுதும் முறை, எழுதும் கலை குறித்த அவர்களின் நம்பிக்கைகள், கடைப்பிடிக்கும் தொழில்நுட்பங்கள் என பலவற்றையும் பதிவு செய்கிறார்.

இளமைக்காலம் தொட்டே எழுதுவது என் கனவாக இருந்து வந்தது. ஒரு பைபிளைப் போல நான் இந்நூலினை அடிக்கடி எடுத்து வாசிப்பதுண்டு. எவ்வளவு பெரிய எழுத்தாளனுக்கும் சிருஷ்டிகரத்தின் ஊற்றென்பது என்பது இன்னமும் பிடிபடாத ரகசியம்தான்.

5. திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர். இந்துகோபன் - குளச்சல் மு. யூசுப்

      கேரளத்தின் புகழ்மிக்க திருடர்களின் ஒருவன் மணியன்பிள்ளை. வீட்டில் கன்னம் வைத்தோ கம்பி வளைத்தோ நுழைந்து திருடுவதில் நிபுணர். திருடி ஈட்டிய பொருளைக் கொண்டு தொழில்களைச் செய்து பெரும்பணக்காரராக உயர்ந்து தேர்தலில் போட்டியிட்டு மந்திரியாகும் தருணத்தில் கைது செய்யப்பட்டு எங்கிருந்து துவங்கினாரோ அதே புள்ளிக்கு அனைத்தையும் இழந்து திரும்பும் சித்திரம் இந்நூல். மணியன்பிள்ளையின் இளமைக்காலம், அன்றைய கேரளத்தின் சாதிப்பின்னல், உறவுகளின் சதிகள், சிறை வாழ்க்கை, சிறையில் சந்திக்கும் விசித்திர குற்றவாளிகளின் உறவு, திருடும் கலை, திருடர்களுக்கும் காவல்துறைக்குமான உறவு, திருடர்களுக்கும் சமூகத்தின் பெரும்புள்ளிகளுக்குமான உறவு, பெண்களின் பரிதாப வாழ்க்கை, பணம் என்பதன் இயல்பு என பலமுனைகளில் பல்கிப்பெருகும் உணர்ச்சிகரமான வாழ்க்கைச் சித்திரம் இந்நூல்.

 மணியன் பிள்ளையின் இயல்பான நக்கலும் கூர்மையான அவதானிப்பையும் மலையாள இதழாளரான ஜி.ஆர்.இந்துகோபன் கச்சிதமாக நூல்வடிவம் தந்துள்ளார். தமிழில் குளச்சல் மு.யூஸூப்பின் மொழிபெயர்ப்பில் அழியாத காவியமாக இந்நூல் உருவாகியுள்ளது. பணம், உறவின் ஆடல், வாழ்வில் நிலையாமையைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் இது.

நேயர்களே, இது ஒரு பட்டியல் அல்ல. பரிந்துரையும் அல்ல. இருபது நிமிட எல்லைக்குள் சொல்ல சாத்தியமானவை. முதன்மையான ஆளுமைகளின் பரிந்துரைப் பட்டியல்கள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றை முற்றாக வாசித்து ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொண்டு வாசிக்கலாம். உங்களது ஆர்வம் செல்லும் துறையின் குறிப்பிடத்தகுந்த நூல்களையும் வாசிக்கலாம். இலக்கற்ற வாசிப்பு ஒரு சுயமோசடி. அதிக பலனளிக்காதது. தீர்க்கமான சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ள உதவாதது. கண்டதும் வாசிக்க பண்டிதன் ஆவான் என உளறிக்கொண்டு எதைப்பற்றியும் நுட்பமான அவதானிப்புகளையோ கூர்மையான கருத்துக்களையோ உருவாக்கிக்கொள்ள முடியாத ஏராளமான சக்கை அறிவு ஜீவிகள் நம் சூழலில் உண்டு. அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உங்கள் முன்னோர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நன்றி வணக்கம்.

(ஆல் இந்தியா ரேடியோவிற்காக ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

Comments

Popular Posts