பிக்பாஸில் வாசிப்பது எப்படி நூல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நாளில் திரு.கமல்ஹாசன் 'வாசிப்பது எப்படி?' நூலைப் பரிந்துரைத்துள்ளார். இதற்கு முன்பும் அவர் இந்நூலைப் பற்றி பேசியதுண்டு.

கடந்த மாதம் தூத்துக்குடி பொன்.மாரியப்பனை அவரது சலூனில் சந்தித்து உரையாடிய போது இந்நூலைக் குறிப்பிட்டு அவர் பேசியது செய்திச் சானல்களில் ஒளிபரப்பானது.

பிக்பாஸ் பெரிய மேடை. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியைப் பின் தொடர்கிறார்கள்.  ஆகவே, பெரும்கொண்ட கவனம் குவிந்திருக்கிறது. அது நூலின் விற்பனையில் எதிரொலித்திருப்பதாக நண்பர் ராம்ஜி தெரிவித்திருக்கிறார். மகிழ்கிறேன்.

பிக்பாஸில் குறிப்பிடப்படும் பல நூல்கள் மறுபதிப்பு கண்டுள்ளன. அச்சில் இல்லாத நூல்கள் மீண்டும் அச்சேறியுள்ளன. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புத்தகங்களை, எழுத்தாளர்களைக் கவனப்படுத்துவதை கமல்ஹாசன் நாற்பதாண்டுகளுக்கும் மேலாகச் செய்து வருகிறார். தமிழிலக்கிய வாசகன் எனும் முறையில் நான் அவருக்கு வாழ்நாள் கடன்பட்டவன். அவருக்கு என் நன்றிகள்.

புகழ் எத்தனையாயினும் எவ்வழியில் வருவதாயினும் அவை என் ஆசிரியர்களுக்குரியவை. காரியம் யாவிலும் தீவிரமென்பதை வாழ்க்கைச் செய்தியாகக் கொண்ட அவர்களுக்கு இப்பெருமை சேர்வதாகுக!  

Comments

Siva said…
Love this book Mr. Selvandran. It will definetly transform many people. Good for soceity.

Thanks for resuming my reading again.