கிளிச் சீட்டு
உழைப்பை வழிபாடாகக் கொண்ட அப்பாவை பக்கவாதம் தாக்கிற்று. எவராலும் ஒப்புக்கொள்ள முடியாத நிதர்சனம். அவராலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இயல்பை மீட்டெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
நித்யசைதன்ய
யதியின் ‘நோயை எதிர்கொள்ளல்’ கட்டுரையை அவருக்கு வாசிக்கக் கொடுத்தேன். பக்கவாதத்திலிருந்து
மீண்ட அனுபவத்தைப் பற்றிய கட்டுரை அது. நம் மரபில் நோய் என்பது கடவுளின் தண்டனை அல்ல.
இறைவன் நம்மோடு கலந்து சிலவற்றை உணரவைக்கும் அதிர்ஷ்டத்தின் திடீர் வாய்ப்பு எனும்
அத்வைத தரிசன கட்டுரை. அதன் இறுதி வாக்கியம் அழகானது ‘நோய் கடவுளின் படைப்புமொழி’
வாதம்
தாக்கிய நாட்களில் நித்யா செயலிழந்த வலது கையில் துரிகையைச் சொருகி இடது கையால் வலது
கையை இயக்கி ஓவியம் வரையத் துவங்கினார். கனகமாலாவில் 29 சூரியோதயங்களை ஓவியமாக்கினார்.
அவ்வோவியங்களைக் காண்பவர்கள் அதிலிருக்கும் துல்லியமான உணர்வெழுச்சியும் வர்ணக்கலவையும்
கண்டு வியப்பார்களே அன்றி அதன் பின்னாலிருக்கும் கதையை அறிய மாட்டார்கள்.
அப்பா
மீண்டு விட்டார். ஏற்கனவே இருந்த கதிரேசன் இறந்து புதிய கதிரேசன் பிறந்துவிட்டார்.
புதிதாகப் பிறந்தவருக்கு சில ஆற்றல்கள் மட்டுறுத்தப்பட்டிருந்தன. சில புதிய சாத்தியங்கள்
உருவாகியிருந்தன. செயல்படாத இடது கை, வலது காலுடன் அவர் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து
வியாபாரத்தைத் தொடர்ந்தார்.
இந்தப்
பெருந்தொற்று காலத்தை நான் அப்படித்தான் நினைக்கிறேன். நாம் ஏற்கனவே வாழ்ந்த உலகம்
இறந்து விட்டது. இன்றிருப்பது புதிய உலகம். இந்த உலகத்தில் பயணங்கள், கூடுகைகள், விருந்துகள்,
ஆடம்பரங்கள், சொத்து வாங்குதல் போன்றவை மட்டுறுத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் டீசல் செலவில்லை.
உழைப்பு குறைவு ஆகவே உணவும் குறைவாக உண்டால் போதும். புத்தாடைகள் தேவையில்லை. அலுவலகங்கள்
இல்லை. ஆகவே கிசுகிசுக்கள், அவதூறுகள், சதிக்கோட்பாடுகள் இல்லை. காதல் செலவினங்கள்
இல்லை. கள்ள உறவுகள் மட்டுப்பட்டிருக்கின்றன. ஆடித்தள்ளுபடி, அமாவாசைத் தள்ளுபடி, அக்ஷயதிருதியை,
எக்சேஞ்ச் ஆஃபர்கள் இல்லை.
சிக்னல்களில்
காத்திருக்க வேண்டியதில்லை. அட, சிக்னலே தேவை இல்லை. தூசு புகை குப்பை இரைச்சல் மட்டுப்பட்டிருக்கின்றன.
விபத்துக்கள் குறைந்திருக்கின்றன. செவியடைக்க குயில்களின் ஓசை கேட்கிறது. காந்திபுரம்
பஸ்ஸ்டாண்டில் மயில் நட மருவு நிகழ்கிறது. மருதமலைக் கோவிலில் யானைகள் குடும்பத்துடன்
இளைப்பாறுகின்றன. ஊட்டி சாலைகளில் கரடி விளையாடுகிறது. மலைப்பிரதேசங்கள் மூச்சு விடுகின்றன.
கடற்கரைகள் தங்கள் சொந்த முகத்திற்குத் திரும்புகின்றன.
வெளியில்
தனிமனித இடைவெளி அதிகரித்திருந்தாலும் வீட்டிற்குள் தொடுகை கூடியிருக்கிறது. குடும்பமென
ஒன்றிருப்பதை உணர்ந்திருக்கிறோம். விளையாட அழைக்கும் பிள்ளைகளிடம் ‘அப்பா பயங்கர டயர்டா
இருக்கேன்மா’ எனும் நித்ய பதிலை சொல்வதை நிறுத்தி இருக்கிறோம். குடிச்சண்டைகள் குறைந்திருக்கின்றன.
குடிசை கொளுத்திகள் ஓய்ந்திருக்கிறார்கள். 11:05க்கு மண்ணள்ளியாக வேண்டிய தேவை குன்றியிருக்கிறது.
பிழைத்துக்கிடப்பதைத்
தவிர வேறு எந்த கவலையும் வேண்டியதில்லை. வேறு எதைக் கண்டும் அஞ்சவேண்டியதில்லை. எவனுக்கும்
எதையும் நிரூபிக்கவேண்டியதில்லை எனும் மாபெரும் விடுதலையுணர்வு ஒரு வரமென கிடைத்திருக்கிறது.
உங்களுக்கு எப்படியோ எனக்கு இதுதான் பொன்னொளிர் காலம். இங்கிருந்து திரும்பிச் செல்ல
ஒருபோதும் விரும்பேன்.
கடந்த
காலம் இனிமையானது என்பதொரு அபத்தக் கற்பனை. நம் தாத்தா காலத்தின் பெரும்பான்மை ஆண்கள்
கட்டித்தீனிகள். எடுப்புகளும் தொடுப்புகளும் அன்று பெருமித அடையாளங்கள். குடும்ப வன்முறை,
பாலியல் சுரண்டல், பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை, என துளுரெடுத்துத் திரிந்தார்கள்.
இன்று சமத்துவமும் சமூகநீதியும் தமிழகத்தின் முதன்மையான பேசு பொருளாகியிருக்கின்றன.
வேட்டை மன்னன்களெல்லாம் சேட்டைகளின் உறுபலனாய் ஏறிய படிகளின் வழியே இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்து போன காலம் எதுவும் திரும்பிவர வேண்டியதில்லை. காலம் முன்னகர வேண்டும்.
800
கோடி மக்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வரை நோய்த்தொற்றிலிருந்து மீள நிரந்தரத்
தீர்வு இல்லை. இக்கட்டுரை எழுதும் நிமிடம் வரை உலக மக்களில் 42 கோடி பேர்தான் முழுமையான
தடுப்பூசி கவசத்திற்குள் வந்துள்ளார்கள். இன்னமும் 20 மடங்கு சென்றாக வேண்டும். ஆகவே,
அடுத்த இரண்டாண்டுகளுக்குப் போதிய விளம்பர இடைவேளையுடன் வாழ்க்கை இங்கே இப்படித்தான்
இருக்கும். 56 இன்ச் அல்ல 506 இன்ச் அகல மார்பு இருந்தாலும் ஒரு புல்லையும் அசைக்கமுடியாது.
கல்லூரிக்குச்
செல்ல முடியவில்லை. வகுப்புகள் நடைபெறவில்லை. நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை என
அலுத்துக்கொள்கிறீர்கள். வீட்டிற்குள்ளேயே இருக்கும் உளச்சோர்வினை புலம்பலின் வழியே
மேலும் மேலும் பெருக்கிக்கொள்கிறீர்கள். தலைக்கு மேல் பறக்கும் கவலைப் பறவையை ‘வா…
வந்து என் தலையிலேயே குடியிரு… எச்சமிடு’ என கூவி அழைக்கிறீர்கள்.
ஓர்
இந்தியப் பெண் கருவுற்ற நாள் முதல் நிரந்தரமான லாக்டவுணுக்குள் சென்றுவிடுகிறாள். நாம்
பிறப்பதற்கு முன் நம் அம்மாக்களுக்கென்று கனவுகள் நிரம்பிய ஒரு உலகம் இருந்ததே?! கடந்த பதினெட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் உங்களுக்கு
உணவிடுபவளாக, வைத்தியம் பார்ப்பவளாக, டியூசன் எடுப்பவளாக, துணிகளைத் துவைப்பவளாக, கழிப்பறைகளைக்
கழுவுபவளாக, பணிவிடைகள் செய்பவளாக ஒரு நிரந்தர லாக்டவுணில் இருக்கிறாரே கவனித்திருக்கிறீர்களா?
அவரிடம் இந்த முணுமுணுப்புகள் ஏன் இல்லை என்று யோசித்துப்பாருங்கள்.
ஓர்
அசாதாரணமான சூழலில் சாதாரணமான வாழ்வைப் பற்றி கனவு கொண்டிருப்பதை விட இயற்கை நமக்கிட்டிருக்கும்
ஒரு கடமையைப் பற்றி யோசிக்கலாம். கிளி சீட்டு எடுப்பதைப் போல நம் சுற்றத்தார் இறந்துகொண்டிருக்கிறார்கள்.
இயற்கை அல்லது இறைவன் அல்லது விதி ஏன் என்னையும் உங்களையும் விட்டு வைத்திருக்கிறது?
எதைக் காக்கும் பொருட்டு? எதை உருவாக்கும் பொருட்டு?
தீநுண்மம்
வேகமெடுக்கும்போது யுவால் நோவா ஹராரி சொன்னார் ‘கொரோனாவைக் காட்டிலும் மானுடத்திற்கு
ஆபத்தானது நல்ல தலைவர்கள் இல்லாததுதான்’. திரும்பிய திசையெல்லாம் எதிர்மறைப்பண்பும்
குறுகல் நோக்கும் கொண்டவர்கள் வெறுப்பரசியல், சதிக்கோட்பாடுகள் வழியே அதிகாரத்தைக்
கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். மிதமிஞ்சிய நார்சிஸிஸ்டுகள். இவர்களுக்குள் ஒத்திசைவும்
ஒருங்கிணைப்பும் இருந்திருந்தால் கொரோனா என்றோ வெல்லப்பட்டிருக்கும். அரசியலிலும் நிர்வாகத்திலும்
காரியங்கள் பின் தள்ளி ஆப்டிக்ஸ் தோற்றமயக்கங்களே முன்நிற்கும் காலம் இது. ஊடகப்பெருக்க
வெளியில் இனி ‘படம் காட்டல்’ மட்டுமே நிகழும்.
மீண்டும்
முந்தைய பாராவிற்கு வருகிறேன். தாமஸ் கெனலி எழுதிய ‘ஷிண்ட்லர்’ஸ் ஆர்க்’ நாவலில் வரும்
“ஓர் உயிரைக் காப்பாற்றியவன், மொத்த உலகத்தையும் காப்பாற்றியவன்” எனும் வரிகள்தான்
இயற்கை நமக்கிட்டிருக்கும் கடமை. உயிரோடிருப்பவர்கள் உதவி கோருபவர்கள் அல்ல. உதவ வேண்டியவர்கள்.
உலகைக் காக்கவேண்டியவர்கள். அந்தப் பொறுப்பினை மனமுவந்து ஏற்றுக்கொள்வதினாலேயே தலைவர்கள்.
இந்த நூற்றாண்டில் மானுடத்தை அழிவிலிருந்து காத்த பெருமைக்குரியவர்கள்.
வேலை
இல்லை. வருவாய் இல்லை. உணவு இல்லை. படுக்கை இல்லை. தடுப்பூசி இல்லை. ஆக்சிஜன் இல்லை.
வெண்டிலேட்டர் இல்லை. ரெம்டேசிவர் இல்லை. ஆம்புலன்ஸ் இல்லை. மார்ச்சுவரியில் இடம் இல்லை.
பிணமெரிக்க விறகுகள் இல்லை என நாற்புறமும் இல்லை இல்லை எனும் அழுகுரல்கள் ஒலிக்கையில்
வீட்டிற்குள் இருந்துகொண்டு ஸ்மார்ட்போனில் சிணுங்கிக்கொண்டிருப்பது அநீதி. உயிர்,
பசி இந்த இரண்டைத் தவிர வேறெதுவும் இன்று இத்தருணத்தில் முதன்மையானது அல்ல.
நீங்கள்
செய்யும் உதவி மணல் சுமக்கும் அணிலோ, மலை பிடுங்கும் அனுமனோ என்னவாக வேண்டுமானாலும்
இருக்கட்டும். ஆனால், செய்யுங்கள். உதவி தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் உதவுங்கள். அவர்கள்
உயிர் பிழைக்க தீவிரமாகப் போராடுங்கள். எல்லா கதவுகளையும் தட்டுங்கள். கைகள் ஓய்ந்தால்
காலால் உதையுங்கள். கால்களும் ஓய்ந்தால் தலையால் முட்டுங்கள். இதுவே நாம் ஓர் அறிவுச்
சமூகமாக செய்ய வேண்டிய கர்ம யோகம்.
நீங்களும்
நானும் எஞ்சியிருப்பது அதன் பொருட்டே, நன்றி.
-
© செல்வேந்திரன்
(30-05-2021
அன்று அகரம் பவுண்டேசன் மாணவர்களுடன் ஆற்றிய உரையின் சுருக்கமான வடிவம்)
Comments