நான்தான் உலகத்தை வரைந்தேன்
அஜிதன் பிறந்தபோது ‘உன் வீட்டில் ஒரு குரு பிறந்திருக்கிறார். பெற்றுக்கொள்ள நீ திறந்திருக்க வேண்டும்!’ என நித்ய சைதன்ய யதி சொன்னதாக ஜெயமோகன் ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
அதே முன்னுரையில்,
நாம்சாம்ஸ்கி போன்ற அறிஞர்களின் ஆய்வுமுடிவுகளைச் சுட்டி “ குழந்தையின் சிந்தனையின்
அமைப்பு நரம்புக்கட்டமைப்பாக அதன் மூளைக்குள் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும்
படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின்
புதிய சாத்தியங்கள், கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான்” என்கிறார் ஜெயமோகன்.
கவிஞர் ஆசையின்
மூத்த மகன் மகிழ் ஆதன். ஒன்பது வயதாகிறது. கூடுவாஞ்சேரி அரசுப்பள்ளியின் நான்காவது
வகுப்புப் படிக்கிறான். அவ்வப்போது பெற்றோரிடம் கவிதை சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான்.
அதில் தேர்ந்தெடுத்த சில கவிதைகள் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ எனும் பெயரில் நூலாக
வெளியாகியுள்ளது.
தூய்மையான மனம்
இயற்கையை எதிர்கொள்ளும்போது மொழி அழகிய படிமங்களாகி விடுகிறது. ஆகவேதான் பழங்குடியினரின்
மொழிகள் கவிதையாக இருக்கின்றன என்கிறார் ஜெயமோகன். மகிழின் கவிதைகளைப் படிக்கும்போது
அவை எத்தனை சத்தியமான அவதானிப்பு என்பதைப் புரிந்துகொண்டேன்.
’பயல்.. டிவில
லவ்சாங்ஸ் பார்த்துட்டு ஒளறுகான்’ என்று பெடதியில் அடித்து விரட்டிவிடவே சாத்தியமுள்ள
தந்தையர் நிறைந்த உலகில் ஆசை அவற்றைக் கவனமாகச் சேமித்து பதிப்பித்துள்ளார். சின்னப்பையனின்
கவிதைக்கு மேல் தத்துவப்பொதிகளை ஏற்றிப் பார்ப்பதென் நோக்கம் இல்லையெனினும் இக்கவிதைகள்
கபீர் ஆராதகனான என்னை அசைத்துப் பார்த்துவிட்டன என்பதாலே நள்ளிரவில் எழுந்தமர்ந்து
இந்தக் குறிப்புகளை எழுதுகிறேன்.
மகிழின் கவிதைக்குள்
மழை, இசை, பறவைகள், வானம், ஒளி, தண்ணீர், சூரியன் என புறக்காட்சிகள் மாறி மாறி இடம்பிடிக்கின்றன.
காட்சிப்பழம், தேவகதை, மஞ்சள் வெளிச்சம், ஊதாநிலம் என அவன் உருவாக்கும் வினோத சொற்சேர்க்கைகள்
விழிவிரிவு கொள்ளச் செய்கின்றன.
கச்சிதமான தூய
சொல்லடுக்குகளுக்கு இடையே திடீரென குழந்தை நடையும் பாய்ந்து வினோதமான வாக்கியங்களை
உருவாக்குகின்றன “பூக்கள் நம்மளை / வாசனை ஏத்த வைக்கும் / நம்மள் / புல்லாங்குழல் வைச்சு
/ வாசனை ஏத்த வைப்போம்”
இன்னொரு கவிதை
“என் கால்தடங்களை / என் கால்தடங்களை / என்னைப் பெத்த / அம்மாவாகப் பார்க்கிறேன்” இசை
போன்ற சேட்டைக்கார கவிகள் எழுதியிருக்கச் சாத்தியமுள்ள வரிகள்.
இளவெயினி மூன்று
வயதாக இருக்கையில் நடனம் கற்றுக்கொள்ள அடம்பிடித்தாள். இரண்டு நாட்கள் வகுப்பிற்குப்
பின் ஒருநாள் கீழ்வீட்டு கனத்த பெண்மணியைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தாள். கூர்ந்து
செவிகொடுத்தவன் அதிர்ந்து போனேன் ‘எக்கச்சக்க ஜகன்மாதா…’
இளம்பிறை இரண்டு
நாட்களுக்கு முன் சொன்னாள் ‘அப்பா உன்னய இந்த உலகத்த விட எனக்கு ரொம்பப் பிடிக்கும்பா’.
‘அச்சோ என்
கண்ணே… உலகம்னா என்னம்மா?’
‘இதுகூட தெரியாதா
சிவன்கூட சண்ட போட்டுட்டு பார்வதி அடிக்கடி வந்து ஒளிஞ்சுக்கற இடம்’
குழந்தைகளாலும்,
குழந்தைகளை விடவும் மழலைகளான தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி போன்ற கவிஞர்களாலும் நிறைந்ததென்
உலகு என்பதால் இக்கவிதைகளோடு என்னால் இன்னமும் நெருக்கம் கொள்ள முடிந்தது.
”மழைச் சொட்டுக்கள்
என் கண்ணில்
விழுந்து
என் கண்
பழச்சொட்டுக்களாக
மாறும்”
*
“காலத்தைத்
தாண்டி வரும் ஒருவன்
காலத்தில் பறப்பான்
காலத்தை நேரில்
பார்ப்பான்
காலத்தைக் கற்பனை
பண்ணிப்பான்”
*
”என் ஏணி
ஏறும் ஏணி
ஆத்திலே ஏறும்
ஏணி
என் மழையிலே
நான் ஏறுவேன்”
மழலை மேதைமை
ஒரு சுமை என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. மலினமான ரசனைகள் காட்டி வளர்க்கப்படாத
குழந்தைகளுக்கு கவிதையும், இலக்கியமும் அறிமுகமாகும்போது புற உலகம் படைப்பூக்கம் மிக்கதாக
ஆகிவிடுகிறது. அவர்கள் அகத்துக்குள் சிறுமை நுழைவதே இல்லை. தங்களுக்கு அறிமுகமாகும்
சொற்களை வைத்துக்கொண்டு மேலும் மேலும் நுட்பமான வெளிப்பாடுகளைக் கொண்டவர்களாகிறார்கள்.
என் கெட்டிதட்டிப் போன மனம் ஒருபோதும் சென்றடைய முடியாத பல நுண்ணிய தருணங்களைத் தன் தூய்மையான குழந்தை மனதால் தொட்டு ஒளி துலங்கச் செய்ததால், என் பிரியத்துக்குரிய கவிஞர்களின் பட்டியலில் மகிழ் ஆதனை மகிழ்ச்சியுடன் சேர்த்துக்கொள்கிறேன்.
Comments