யார் நீங்கள்

 அனைவருக்கும் வணக்கம்.

 

நான் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சில இலக்கிய அன்பர்களுடன் கர்நாடகத்தின் வனப்பகுதிகளில் ‘பருவ மழைப் பயணம்’ மேற்கொண்டு இன்று காலையில்தான் திரும்பி வந்தேன். தென்மேற்குப் பருவமழையை துரத்திச் செல்வதும் வனத்தில் நனைவதும் இந்தப் பயணத்தின் சிறப்பம்சங்கள்.

 

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஹேமாவதி ஆற்றுப்படுகையில் சக்லேஷ்புரா எனும் சிற்றூரில் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட மஞ்சாராபாத் எனும் கோட்டைக்குச் சென்றோம். அந்தக் கோட்டை இந்தியாவில் காணக்கிடைக்கிற எட்டு முனைகளைக் கொண்ட நட்சத்திர வடிவிலான பாஸ்டியன் கோட்டைகளுள் ஒன்று. ஃபிரெஞ்ச் வடிவமைப்பாளர்களால் கட்டப்பட்டது. அடர்ந்த வனத்தின் நடுவே கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கோட்டை.

 

கோட்டையின் நுழைவாயிலில் திருமணத்திற்கு முன்னும் பின்னுமான புகைப்படங்களை இங்கே எடுக்க அனுமதி இல்லை எனும் அறிவிப்பு இருந்தது. எனக்கு அது வினோதமாகப் பட்டது. குவாலியர் தொடங்கி கன்னியாகுமரியில் இருக்கும் வட்டக்கோட்டைவரை சினிமாவிற்கு இணையாக தன் திருமண ஆல்பம் இருக்க வேண்டும் என யத்தனிக்கிறவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும்.

 

இந்தக் கோட்டை உள்ளூர் மக்களின் சுற்றுலாக் கவர்ச்சிகளுள் ஒன்று. நாங்கள் சென்றிருந்தபோது ஏராளமான மக்கள் குரங்குச் சேட்டைகளும், டிக்டாக் வீடியோக்களும் எடுத்துக்கொண்டிருந்தார்கள். எங்களுடன் வந்த சுபஸ்ரீயும், வழக்கறிஞர் கிருஷ்ணனும் அந்தக் கோட்டையின் வடிவமைப்புச் சிறப்பையும், அறிவியல் எப்படி கோட்டைகளின் வடிவமைப்பையும், கட்டுமானப் பொருட்களையும் தீர்மானித்தது என்பதையும் விளக்கினார்கள்.

 

பீரங்கியின் வருகைக்கு முன் வரை மண் அல்லது மரத்தால் கோட்டைகள் கட்டப்பட்டன. பெரும்பாலும் வட்ட வடிவம். பீரங்கி வந்தபின் வட்ட வடிவக் கோட்டையைத் துளைப்பது சுலபம் ஆனது. பிறகு கற்களால் சதுர வடிவில் கோட்டைகள் கட்டப்பட்டன. 18 அவுன்ஸ் பீரங்கி வந்த பின் சம தள சுவர்களைத் துளைப்பது எளிதாய் ஆனது. கோட்டைகளின் வடிவங்கள் மாறலாயின. முக்கோண வடிவம், ஸ்டார் வடிவம் என மாறின. முனைகளில் குண்டு துளைப்பது கடினம் என்பதால் அறுங்கோண வடிவில் கோட்டைகள் கட்டப்பட்டன. கொரில்லாப் போர் முறையும், சூதும் உள்ளே வந்ததால், ஃப்ரெஞ்சு வடிவமைப்பாளர்கள் ஸ்டார் போன்ற எண்கோண பாஸ்டியன் கோட்டைகளை வடிவமைத்தார்கள். பின்னர் விமானம் கண்டுபிடிக்கப்பட்டு ஆகாய மார்க்கமாக குண்டுகளைப் போட முடியும் எனும் சூழல் வந்ததும் கோட்டைகளின் தேவை இல்லாமல் ஆயின.

 

ஃப்ரெஞ்சு கட்டிட நிபுணர்கள் இந்த எண்கோண வடிவமைப்பைக் கொண்டு போய் உலகெங்கும் ள்ள சமஸ்தானங்களிடம் இதுதான் எந்தப் பீரங்கியையும் தாங்கி நிற்பது, வெற்றிகரமானது என்றார்கள். மன்னர்கள் தங்களுக்குத் தேவை இருந்ததோ இல்லையோ அந்தக் கோட்டைகளைக் கட்டத் தொடங்கினார்கள். இந்தக் கட்டுமானம் செலவேறியது. மிகப்பெரும் உழைப்பையும் நெடிய காலத்தையும் கோருவது. அதற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் சில அரசுகள் திவாலாகின. சில அரசுகள் முக்கால் வாசி பணியில் கோட்டை கட்டும் பணியைக் கைவிட்டன. திப்புவின் இந்தக் கோட்டைகூட, கட்டி முடிக்க பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. திப்புவின் செல்வத்தின் பெரும்பகுதி இந்தக் கோட்டை கட்டுமானத்தில் கரைந்தது.

 

பிறகு பேச்சு தமிழக கோட்டைகளைப் பற்றி திரும்பியது. நான் 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இருந்த அரசியல் சூழலையும், நிகழ்ந்த போர்களையும் பற்றி வாசித்தறிந்திருந்தேன். என்னால் அந்த உரையாடலில் ஆர்வமாகப் பங்கெடுக்க முடிந்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 200-க்கும் அதிகமான கோட்டைகள் இருந்ததைப் பற்றி, அவற்றின் கட்டுமானம் பற்றி, அவற்றில் நிகழ்ந்த முற்றுகையைப் பற்றி பேச்சு விரிந்துகொண்டே இருந்தது.

 

கோட்டைகளின் வரலாறு வழியாக தமிழக, பாண்டிச்சேரி வரலாறு அதனைத் தொட்டு இந்திய வரலாறு அதனைத் தொட்டடுத்து காலனியாதிக்கத்தில் இங்கிலாந்தும் ஃப்ரெஞ்சும் மாறி மாறி மோதிக்கொண்டது, கான்சாகிபு, சந்தாசாகிபு போன்ற குழப்பமான கதாபாத்திரங்கள் வரலாற்றில் தோன்றியது என வரலாறு எங்கள் கால்களுக்குக் கீழே ஆறாக ஓடிது.

 

பெரிய விவாதம் முடிந்ததும் சுற்றிலும் பார்த்தேன். ஒருவன் பொது இடம் என்றும் பாராமல் ஒரு பெண்ணை தழுவிக்கொண்டிருந்தான். ஒருவன் கேவலமான சினிமா பாட்டிற்கு டிக்டாக் செய்துகொண்டிருந்தான்.  ஒருவன் 400 ஆண்டுகள் பழமையான கோட்டைச் சுவரில் கல்லைக் கொண்டு தன் பெயரைக் கொத்திக்கொண்டு இருந்தான். ஒரு குடும்பம் அமர்ந்து தின்று சென்றதன் அடையாளமாக சிப்ஸ் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் கிடந்தன. இவர்கள் எல்லாருமே படித்தவர்கள். கையில் சுளகு சைஸூக்கு செல்போன் வைத்திருப்பவர்கள். ஆனால், பண்பட்டவர்கள் அல்ல. இவர்கள் ‘சராசரி’ எனும் மந்தையின் சிறு சாம்பிள்கள். பண்பாட்டிற்கும், வரலாற்றிற்கும், கலைகளுக்கும், இலக்கியத்திற்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரம் செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்குமானது.

 

நண்பர்களே, ஏன் வாசிக்க வேண்டும். ஏன் தன் சொந்தப் பண்பாட்டுடன் பரிச்சயம் கொள்ள வேண்டும் என்கிற பெரிய கேள்விகளுக்கான சிறிய எளிய உதாரணமாக நான் இதைச் சுட்ட விரும்புகிறேன்.

 

இந்த உரையில் பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என மூன்று வகையான பங்கேற்பாளர்களிடம் நான் உரையாற்றுகிறேன். இந்த உரை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம், சிலருக்கு வறட்சியானதாகத் தோன்றலாம். சிலருக்கு நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகத் தோன்றலாம். இங்கே நான் வந்திருப்பது உங்கள் மனம் மகிழும்படியான புகழுரைகளை, நகைச்சுவைத் தோரணங்களைத் தெளித்துச் செல்வதற்காக அல்ல. நாம் விவாதிப்பதற்கும் யோசிப்பதற்குமான சில சிந்தனைப் புள்ளிகளை உங்கள் முன் வைப்பது என் நோக்கம். இங்கே நான் குறிப்பிடும் உதாரணங்கள் பெரும்பான்மை அமெரிக்கத் தமிழர்களை முன்வைத்துத்தான். இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்.

 

*

 

அமெரிக்காவின் பாடத் திட்டத்தில் புத்தக வாசிப்பு ஒரு தவிர்க்க முடியாத அம்சம் என்பதை நானறிவேன். உங்கள் குழந்தைகளில் பலர் அந்த சிலபஸூக்கு வெளியே எதையுமே வாசிப்பதில்லை. பெரும்பாலான குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்வதில், தமிழ் நூல்களை வாசிப்பதில் துளியும் ஆர்வம் காட்டுவதில்லை.

 

நான் அமெரிக்காவில் பிறந்தவன். நான் தமிழ் கற்று, தமிழ் நூல்களை ஏன் வாசிக்க வேண்டும் என்றுதான் எந்த அறிவுள்ள ஒரு குழந்தையும் கேட்கும். அதற்கு என்னுடைய பதில் ‘உங்கள் அப்பாவைப் போல நீங்கள் ஆகாமல் இருக்க வாசிக்க வேண்டும். உங்கள் அப்பாவைப் போல ஒரு போலியான நடிப்பை வாழ்நாள் எல்லாம் நிகழ்த்தாமல் இருக்க நீங்கள் வாசிக்க வேண்டும் என்பேன்’.

 

அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? உங்கள் அப்பா என்ன செய்கிறார்? நாளொன்றுக்குப் 12 மணி நேரங்களுக்கும் மேல் உழைக்கிறார். அவருக்கு உங்கள் வீட்டைப் பற்றி, காரைப் பற்றி, உங்கள் எதிர்காலத்தைப் பற்றி, கோடைகால விடுமுறையைப் பற்றி, சொந்த ஊரில் வாங்க வேண்டிய சொத்துக்களைப் பற்றி, ஓய்வுகாலத்தைப் பற்றி எல்லாம் நிறைய ஆசைகள் இருக்கின்றன. அதன் பொருட்டு விழித்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் பொருள் சேர்ப்பதைப் பற்றியே சிந்திக்கிறார்.

 

அவரது நேரத்தை அவரே தீர்மானிக்க முடியாது. அவரது நாளை மனம் விரும்பியபடி அவரால் வாழ முடியாது. தனது ரசனைக்காக, சிந்தனைக்காக எதையும் அவரால் செய்துகொள்ள இயலாது. அவர் தனது அக்கறையையெல்லாம் பக்கத்து வீட்டுக்காரன் பார்வையில் நாம் என்னவாகத் தெரியவேண்டும் என்பதற்காகவும், ஒரு தேர்ந்த வித்தியாசமில்லாத அமெரிக்கனாகத் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காகவும் செலவிடுகிறார். அதாவது ஒரு சராசரியான வெற்றிகரமான தந்தை. அதற்கு அப்பால் ஒன்றும் இல்லை.

 

நுகர்வுக் கலாச்சாரத்தில் இருந்து விடுபட முடியாத லட்சக்கணக்கான சராசரிகளால் ஆனது அமெரிக்கா. நுகர்வு வெறி இருக்கும் மட்டும் உங்கள் அப்பா சதா உழைத்துக்கொண்டே இருக்கிற ஒரு மெஷின் மட்டும்தான். நான் ஒரு மெஷின் மட்டுமல்ல. என் அடையாளம் என்பது அமெரிக்கன் மட்டும் அல்ல. எனக்கென்று ஒரு நெடிய பாரம்பரியமும், பண்பாடும், கலைகளும், ரசனைகளும், தேர்வும் இருக்கிறது. என்னை நீ மொத்தமாக விலைகொடுத்து வாங்கி விட முடியாது என்று இந்த நுகர்வுக்கு எதிர்நின்று எவனால் கூவ முடியுமோ அவன் சராசரிகளில் இருந்து விலகுகிறான். மந்தையிலிருந்து விலகி கல் மேல் ஏறி நின்று பிரசங்கிக்கும் சாத்தியம் உள்ள தலைவன் ஆகிறான். நீங்கள் தலைவன் ஆகவேண்டுமெனில், வாசிப்பும் பண்பாட்டுப் பயிற்சியும் அவசியம் ஆகிறது.

*

 

தன்னுடைய பண்பாட்டு அடையாளத்தை வெறும் பிழைப்பிற்காகத் துறந்தவனுக்கு எந்தச் சபையிலும் இடம் இராது. மரியாதை இருக்காது. இன்று யூதர்கள் உலகம் முழுக்க சகல துறைகளிலும் பல்கிப் பெருகி வென்றெடுக்க முக்கிய காரணமே அவர்கள் தங்கள் மொழியையும், பண்பாட்டையும் ஒரு துளி கூட விட்டுக்கொடுக்கவில்லை என்பதே. அமெரிக்காவிலேயே வாழ்ந்த ஐசக் பாஷ்விக் சிங்கர் தனது மொத்த படைப்புகளையும் ஹீப்ரு மொழியிலேயே எழுதி நோபல் பரிசினை வென்றார். அவரது நோபல் ஏற்புரை இணையத்திலேயே கிடைக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் அவசியம் அதைக் கேட்க வேண்டும்.

 

*

உங்கள் குழந்தை இன்னொருவனின் ஆணைக்கு அடிபணிந்து அதை நிறைவேற்றும்பொருட்டே வாழ்நாள் முழுக்க கழிக்க வேண்டுமா அல்லது ஆணையிடும் இடத்திற்குச் செல்ல வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மொழியும் பண்பாடும் வெவ்வேறான விஷயங்கள் அல்ல. ஒரு பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி, சாதனைகள், பெருமிதங்கள், கலைகள், வீழ்ச்சி, இழிவுகள் என அத்தனையும் மொழிக்குள்தான் சேர்மானம் ஆகியிருக்கின்றன. மொழியைக் கற்பதன் வழியாக இவையனைத்தையும் கற்றவர்களாகிறார்கள்.

 

எழுத்து மொழியாகிறது. மொழி அர்த்தமாகிறது. அர்த்தம் காட்சியாக மாறுகிறது. கற்பனையாக விரிகிறது. காட்சி அனுபவமாகிறது. வாசிப்பதில் உங்கள் பங்கேற்பு நேரடியானது என்பதால் இவ்வனுபவம் மிக நெருக்கமாக, வாழ்நாள் முழுக்க உடன் வரப்போகிற ஒன்றாக மாறிவிடுகிறது. அறிவை, ஞானத்தை, ரசனையை வளர்த்துக்கொள்ள இது ஒன்றுதான் வழி. இதற்கு மாற்றான ஒன்று இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை.

*

 

தமிழகத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகளே இன்று தமிழில் வாசிப்பதில்லை. ஆங்கிலமே உகந்ததாகவும், சிறந்ததாகவும் நினைக்கிறார்கள். இது இழிவான ஒரு மனப்பாங்கின் விளைவு. தாய்மொழியைக் கற்றுக்கொள்வது மிக எளிதானது. ஆனால் பல்வேறு பாவனைகள் வழியாக அதைக் கடினமான ஒன்றாக கற்பிதம் செய்துகொள்கிறோம்.

 

அந்நிய நாட்டில் வாழும் குழந்தைகள் தாய்மொழியோடு உறவு கொள்ள சில டிப்ஸூகளை மொழிவல்லுனர்கள் அளிக்கிறார்கள்.

 

1.      முன்னுதாரணமாக தாய்மொழி நூல்களைப் பெற்றோர் வாசிப்பது. பெற்றோர் வாசிக்கவில்லையென்றால் பிள்ளை ஒருபோதும் வாசிக்காது.

2.      தாய்மொழியில் தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பது

3.      தாய்மொழியில் நிகழ்ச்சிகளை வழங்கும் ரேடியோக்களைக் கேட்பது

4.      தாய்மொழியில் புத்தகங்களை வாசிப்பது

5.       ‘இல்ல மொழி’ என தாய்மொழியை மட்டுமே வீட்டில் பேசுவது

6.      ஓராண்டுக்கு ஒருமுறை சொந்த ஊருக்குச் சென்று உறவினர்களோடு குழந்தைகளை உறவாட விடுவது.

7.      தாய்மொழி செய்யுள்களை / கவிதைகளை / பாடல்களை புரிகிறதோ இல்லையோ மனப்பாடம் செய்ய வைப்பது. அவர்கள் வளரும்போது அதுவும் வளரும். அர்த்தம் விரியும்.

8.      வழிபாடுகளின் போது பாடல்களைத் தாய்மொழியில் பாட வைப்பது.

9.      பண்பாட்டின் முக்கியமான கலைஞர்களை அறிஞர்களை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வது. பண்பாட்டு நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வது.

10.   மிகையான பண்டை நாள் பெருமைகளைப் பிள்ளைகளின் முன் பேசாமல் இருப்பது முக்கியம். போலவே, தாய் நாட்டை, தாய் மொழியை, பண்பாட்டை பிள்ளைகளின் முன் இழிவாகப் பேசாதிருப்பதும் அவசியம்.

 

நண்பர்களே, நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஒற்றை அடையாளம் கொண்டவர்கள் அல்ல. இலக்கியமும் வாசிப்பும் ரசனையும் உங்களுக்குப் பல்வேறு அடையாளங்களைத் தரவல்லது. எந்தச் சபையிலும் அறிவால் நிமிர வைப்பது. எந்த இனத்தைச் சேர்ந்தவனோடும் ஒப்புநோக்க நான் குறைந்தவனில்லை எனும் நிமிர்வைத் தருவது. மிகச்சிறந்த தகவல் தொடர்பாளனாகவும் தலைமைப் பண்பு மிக்கவனாகவும், ஆணையிடும் வல்லமை கொண்டவனாகவும் மாற்றக் கூடியது. நீங்கள் வாழும் ஒற்றை வாழ்க்கைக்குள் ஓராயிரம் நிகர்வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தையும் நிறைவையும் தரவல்லது.

 

மொழிதான் விழி. நூல்கள்தான் வழி.

நன்றி, வணக்கம்.

(01-08-2021 அன்று மில்வாக்கி தமிழ்ச் சங்க உறுப்பினர்களிடையே ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

ரம்யா said…
மழைப்பயணம் பற்றி விரைவில் முழுவதுமாக எழுதவும். அருமையான உரை

Popular Posts