சகலகலாய் வல்லவன்

சகலகலாய் வல்லவன் அலெக்ஸாண்டர் பாபுவை எனக்குப் பிடிக்கும். அவரது டெஸ்டர் ஷோவுக்கு ஆப்தர் அழைத்திருந்தார். முக்கால் மணி நேரம் ஆகும் என கணக்கிடும் இடத்திற்குப் பத்து நிமிடங்களிலும், பத்து நிமிட தொலைவிற்கு மூன்று மணி நேரமும் ஆகும் சென்னையின் பயண வினோதங்கள் இன்னமும் பிடிபடவில்லை. ஏழு மணி நிகழ்ச்சிக்கு ஆறு மணிக்கே சவேரா வந்துவிட்டேன்.


நேரத்தைப் போக்க ப்ரூ கஃபேவுக்குச் சென்றேன். பொன்னியின் செல்வன் செட் அது. மானுடரெல்லாம் மாயைக்குள் ஆழ்ந்திருந்தனர். நம் ‘ஜி’ இதற்கும் வரி போட்டால் கலெக்‌ஷன் பிச்சுக்குமே என நினைத்தபடி ஒரு ஃபில்டர் காபி ஆர்டர் செய்தேன்.

சீனி போடாமல் கொடுத்துவிட்டார் பரிசாரகர். என் மேஜையில் சர்க்கரைப் பாக்கெட்டுகள் இல்லை. பாம்பு கொத்திவிட்ட தன் தோழியின் இதழில் இருந்து விஷத்தை உறிஞ்சு எடுக்கும் மும்முரத்தில் இருந்த பக்கத்து டேபிளில் இருந்து ‘என்னது வந்ததும் மறக்காம திருப்பிக் கொடுத்துடறேன்’ என சொல்லிவிட்டு ஒரு சர்க்கரை பாக்கெட்டை எடுத்துக்கொண்டேன். ஓர் உயிரைக்காக்கும் முயற்சியில் இருந்த அந்த இளைஞன், தன் தலையை சற்றே விடுவித்துக்கொண்டு என்னைப் பார்த்து ‘இடியட்’ என்றான்.

அமர்ந்து எழுத அற்புதமான இடம் என்று இயக்குன நண்பர்கள் ப்ரூ கஃபேயை முன்னமே பரிந்துரைத்திருக்கிறார்கள். அங்கே எழுதப்பட்ட திரைக்கதைகள் ஏன் விளங்கவில்லை என்பது உடனே புரிந்தது. ஜீன்ஸைத் துளைத்து கடிக்கும் கொசுக்கள் ஜீயைவிட பயங்கரமானவை.
*
ஆப்தர் வரும்வரை ரிசப்ஷனில் வாய் பார்க்கலாமென சவேராவுக்குள் நுழைந்தேன். நண்பர் புதுகை அப்துல்லா, திருச்சி சிவாவை சந்திப்பதற்காக அங்கே காத்திருந்தார். கொரியன் மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்துகிறாரென நினைக்கிறேன். தொன்மங்களை மறுஆக்கம் செய்கையில் இன்றைய அரசியல் சித்தாந்தங்களைச் சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தலாமா என்றெல்லாம் பேசிக்கொள்ளாமல் பரஸ்பரம் அன்பு பாராட்டிக்கொண்டோம். சமீபத்தில் புதுக்கோட்டையில் ஒரு தொண்டருக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்றவர் அந்தக் குழந்தையை ‘அண்ணே’ என்று அழைத்ததாக உலவும் வதந்தியை நான் உறுதிப்படுத்திக்கொள்ளவில்லை.
*
காமெடிக்கு சிரிக்கலைன்னா எட்டி நெஞ்சுலயே மிதிச்சுரலாம் என்கிற அளவிற்கு மேடைக்கு நெருக்கமான இருக்கைகள். அரங்கு விழிதிகழ் அழகியரால் நிறைந்திருந்தது. யோவ் அலெக்ஸு, வாழ்ற மேன் நீ!

ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதன் நுட்பங்களை நகைச்சுவையாக அலெக்சும் நிகழ்ச்சி. ’மயிலே மயிலே உன் தோகை எங்கே’ பாடலில் மயிலின் மொத்த பீலியையும் பீராய்ந்துவிட்ட அலெக்ஸ் அன்றைய நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுத்த பாடல் ‘தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி’. ஏதோ எங்கள் ஆசான் இசையிலும் போர்ப்பயிற்சி அளித்திருப்பதால் இதுவும் ஹம்சத்மோத்வானி ராகம் என கரெக்டாகக் கண்டுபிடித்தேன். என்னையும் ஜமுனா ஆண்டியையும் தவிர அரங்கத்தில் எவருக்கும் அந்தப் பாடல் தெரிந்திருக்கவில்லை. அனேகமாக அடுத்த ஷோவுக்கு ‘ஜலபுலஜங்குதான்’அலெக்ஸின் தேர்வாக இருக்கக் கூடும்.

ரோவன் அட்கின்ஸனும் சந்திரபாபுவும் சேர்த்துப் பிசைந்த உடலில் இருந்து எல்லா ரேஞ்சிலும் வெளிப்படும் வளமான குரல் அலெக்ஸினுடையது. முழுக்க எழுதிய ஸ்கிரிப்டை மேடையில் நடித்துக்காட்டுகிற பாணியிலிருந்து விலகி மனோதர்மத்தின் வழி செல்லும் நகைச்சுவை அவருடையது. நின்று ரசிக்க இடம்கொடாமல் அடுத்தடுத்து ஜோக்குகளின் சரம் தொடுப்பார். நுட்பமான அவதானிப்புகளும் உள்மடிப்புகளும் கொண்ட நகைச்சுவை. இந்த ஷோவில், ரஜினி ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி ‘யோஜனை’ பண்ணுவாரென அலெக்ஸ் செய்து காட்டியது வெறும் மிமிக் அல்ல.

நிகழ்ச்சி எனக்கு மிகப்பிடித்திருந்தது. இண்டர்லூட் எனும் சொல்லுக்கு இடையிசை எனும் பதத்தைப் பயன்படுத்துகிறார். எதைச் சொன்னாலும் புருவம் சுருக்கும் yet to come எளந்தாரிஸூக்குச் சில இலக்கிய நுட்பங்களை, ராகங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறார். அன்றைய நிகழ்ச்சியில் மீடூ இயக்கத்தைப் பற்றி அலெக்ஸ் சீரியசாகப் பேசியது ஒருவகை துணிச்சல். தன் நட்பு வட்டத்தில் எந்த ஆணும் பாலியல் சுரண்டல்களைச் சந்தித்ததில்லை; ஆனால், ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒருவகையில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானவர்கள்தான். ஜெண்டில்மேன் என நம்மை அழைத்துக்கொள்கிறோமே நாம் உண்மையில் ஜெண்டில்தானா என அவர் கேட்டபோது அரங்கம் மிக ஆழமான அமைதிக்குள் சென்றது.

தபேலா வாசித்துக்கொண்டே பாடுவதும் எளிதானதல்ல. கலை இலக்கிய இரவுகளில் கரிசல் குயில் திருவுடையான் தபேலா வாசித்துக்கொண்டே பாடுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இப்போது அலெக்ஸர்யப்படுகிறேன். ஈராயிர உடுக்கண்ணிகளின் வரலாற்று ஆர்வம் மிக நொய்மையானது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், இதயம் முரளி, கரண், சிஐடி சகுந்தலா, பேபி ஷாலினி, நாட்டாமை டீச்சர், மந்த்ரா, ஒளியும் ஒலியும், பேவாட்ச், சீமான், ஸ்டோன் கோல்டு, தர்மயுத்தம், எதுவுமே அறியாத அப்பாவிகள். அவர்களும் உய்த்துணரும் வகையில் ‘என் பேரு இளநி இல்ல சார்... பழனி’ வகை காமெடிகளையும் உதிர்ப்பதே ஜனநாயகப்பூர்வமானது.

- செல்வேந்திரன்

மில்லினியல் நோட்ஸ்:

ஆப்தர் - நண்பர்
பரிசாரகர் - பரிமாறுபவர்
ஆசான் - ஆசிரியர்
பீலி - மயில் தோகை
தொன்மம் மறுஆக்கம் - உங்களுக்குத் தேவைப்படாது, விட்ருங்க.

M.m. Abdulla Alexander Babu #AlexanderBabu

Comments

இதை வாட்சாப் குழுவொன்றில் பகிர்ந்து சிறிது நேரத்தில், பதிலே வராத மாமணிகளிடமிருந்து கூட, இது எந்த லிபியில் எழுதப்பட்டது என கேள்விக் கணைகள் வந்துகொண்டேயிருந்தன, எனத் தெரியப்படுத்திக்கொண்டு.......................