பம்பாய் ஐஐடி - தமிழ்த் திருவிழா சிறப்புரை
பம்பாய் ஐஐடியில் பயில்கிற, பணியாற்றுகிற தமிழர்களின் அமைப்பு ‘தமிழ் மரபு மன்றம்’. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி ‘தமிழ்த் திருவிழா’ நடத்தி வருகிறார்கள். அதன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். கடந்த ஆண்டுகளில் ஜோ டி குரூஸ், பவா செல்லதுரை ஆகியோர் பேசிய மேடை.
வளாக நேர்முகங்களில் கனத்த சம்பளம் வென்ற இறுதியாண்டு மாணவர்கள், அங்கேயே பிறந்து ஐஐடி வளாகத்திலுள்ள பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களது கலை நிகழ்ச்சிகளைக் காண வந்த பெற்றோர் என கலவையான பார்வையாளர்கள்.
என்னுடைய உரையை மூன்று அம்சங்களாகக் கட்டமைத்தேன். நாம் எந்த நெடிய மரபின் தொடர்ச்சி எனும் போதமும், அதைத் தாண்டிச் செல்வதற்குரிய வீரமும் இருக்க வேண்டும் என்பதை சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர், கீழடி துவங்கி சமீபத்தில் குத்துக்கல்பாளையத்தில் கிடைத்த இரும்பொறை மண்பாண்டம், சிகைக் கொற்றனின் குகைக் கிறுக்கல்கள், அத்திகோசத்தார் இனக்குழு, பழந்தமிழரின் வணிக விரிவு ஆகியவற்றைக் கொண்டு ஒரு சித்திரத்தை தீட்ட முயன்றேன்.
நமக்குக் கிடைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றுகள், பானைக் கிறுக்கல்கள் மூலம் வேத காலத்துக்கு முன்பே தமிழ் நிலத்தில் mass literacy இருந்திருப்பதை உணர்கிறேன். அரசர்கள், வணிகர்கள், துறவிகள், கைவினைஞர்கள் என சமூகத்தின் பலதரப்புக்கும் கல்வி இருந்திருக்கிறது. பல்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டிருந்த பல சமுதாயத்தினர் புனைந்த பாடல்கள் நம்மிடம் இருக்கின்றன.
புதையுண்ட நகரங்களின் எச்சங்கள் நமது கட்டுமானத் தொழில்நுட்பங்களை, நீர் மேலாண்மையை உணர்த்துகிறது. அனைவரையும் உள்ளடக்கிய இயற்கையைச் சீரழிக்காத ஓர் உயர்வாழ்வை தமிழ்ச்சமூகம் வாழ்ந்திருக்கிறது. திசையெட்டும் பல்கிப்படர்ந்திருக்கிறது. இன்றிருக்கும் நாம் அறிவியல் தொழில்நுட்ப சாத்தியங்களோடு இன்னும் எவ்வளவு தூரம் நகரப்போகிறோம் என்பதே நம் மூப்பர்கள் விடுக்கும் வரலாற்றுச் சவால். அதை உணரவும், ஏற்று முன்னகர்வதற்கும் உளத்துணிவு தேவை. பண்டைநாள் பெருமிதங்களை மிகையாக அள்ளிப் பூசி நம் நிகழ்காலச் சிறுமைகளை அதில் மறைக்க முயலக்கூடாது. எதிர்கால வரலாற்றுக்கு இன்றைய தமிழர்களாகிய நாம் விடுக்கும் சவால் என்ன?
உரையின் இரண்டாவது அம்சம். இலக்கியத்தின் வழியாக, கலையின் மூலமாக அறிவதிகாரத்தைக் கைப்பற்றுவதன் அவசியம் குறித்தது. தமிழ்நிலத்தின் பேரரசர்களோடும், சிற்றரசர்களோடும் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த ஒளவையார்கள் செலுத்திய செல்வாக்கை யோசித்துப்பாருங்கள். எந்த கோட்டைக் கதவுகளும் அவர்களுக்காகத் திறந்திருக்கிறது. எந்த சபையிலும் நுழைந்து அவர்களால் கண்டிக்கவும் எச்சரிக்கவும் முடிந்திருக்கிறது. போரை நிறுத்தி இருக்கிறார்கள். கைவிடப்பட்ட இளவரசிகளுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஒரு முதுகிழவிக்கு இத்தனை செல்வாக்கு எப்படி வந்தது? அது அறிவினாலும் புலமையினாலும் உருவான ஆத்மபலம்.
நியூயார்க் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாழும் தமிழ் இலக்கியத் திருவிழாவுக்காக திரு. கமல்ஹாசன் ஒரு வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தார். அதில் இலக்கியத்தின் வழியாக சர்வதேச அறிவதிகாரத்தை பெறுவது குறித்தும், சுற்றுலாப் பொருளியலையும் உருவாக்குவது பற்றியும் பேசி இருந்தார். கோவிட் காலகட்டத்தில் யுவால் நோவா ஹராரி எழுதிய ‘உலகிற்குத் தேவை தலைவர்கள்’ கட்டுரை எனக்கு மிகப்பிரியமான ஒன்று. என் உரைகளில் மீண்டும் மீண்டும் சலிக்காமல் குறிப்பிடுவேன். திரும்பிய திசையெல்லாம் கிறுக்கன்களின் ஆட்சி நிரம்பியிருக்கிறது. அடிப்படை அறிவோ மானுடப் பண்போ சிறிதுமற்றவர்கள் நம் அன்றாடத்தை ஆயுளைத் தீர்மானித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு சூழலில், உலகிற்குத் தலைமையேற்கும் மரபின் அடித்தளமும், பண்பாட்டுத் தகுதியும் தொழில்நுட்பக் கல்வியும் தமிழ்ச்சமூகத்துக்கு நிறையவே இருப்பதாக நான் நம்புகிறேன்.
உரையின் மூன்றாவது அம்சம். தொழில்நுட்பத்துடன் கலையும் கற்பனையும் இணைய வேண்டியதன் அவசியம் பற்றியது. சென்ற ஆண்டு சென்னை ஐஐடியில் போற்றுதலுக்குரிய ஆசிரியர் திரு. ஹேமச்சந்திர ஹாரா ஒருங்கிணைத்த நிகழ்வில் ‘அனைத்து உயிர்களையும் உள்ளடக்கிய தொழில்நுட்ப வளர்ச்சி’ குறித்து சிற்றுரையாற்றினேன். விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்க அகழி வெட்டுவது, மின்வேலி அமைப்பது, கூரான முள்ளுச்செடிகளை வேலியோரத்தில் நட்டு வைப்பது, வேட்டு வெடிப்பது, டயரைக் கொளுத்தி வீசுவது என எத்தனையோ வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அத்தனையுமே கொடூரமானவை. தேனீக்களின் ரீங்காரம், தேனீக்களின் சிறகசைப்பு கேட்டு காட்டு யானைகள் மிரள்வதைப் போல எனும் உவமை சங்க இலக்கியங்களில் வருகிறது. தேனீக்களின் ரீங்காரத்தை ஒலிப்பதிவு செய்து ஸ்பீக்கர்கள் மூலம் இரவுகளில் ஒலிபரப்பும் கருவியை சில விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். எவ்வுயிருக்கும் இதனால் கேடில்லை. பூச்சிகொல்லிக்கும் பூச்சி விரட்டிக்கும் இருக்கும் ஒரே வேறுபாடு கருணைதான்.
STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் ஆகிய துறைகளில் கடந்த 75 ஆண்டுகளில் தேர்ச்சியடைந்து, எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என நாம் வாழக்கற்றுக்கொண்டுவிட்டோம். அத்துடன் ART எனும் கலை இலக்கியத்தை இணைத்துக்கொண்டால் ஆளவும் துவங்குவோம். கல்வியும் திறமையும் நம்மை வாழ வைக்கும். இலக்கியமும் கலையும் கற்பனையும் நம்மை முடிவெடுக்கிறவர்களாக மாற்றும்.
நம்முடைய பண்பாட்டைப் பற்றி நமக்கு எவ்வளவு தூரம் தெரியும்? தொழில்நுட்பக் கல்வியைத் தாண்டிய தேடல் நமக்கு உண்டா? கனவு காணவும் கற்பனை செய்யவும் நமக்குத் தெரியுமா? நமது கனவுகளுக்காக எவற்றையெல்லாம் இழக்கத் துணிவோம்? நமது செயல்பாடுகளில் இன்க்ளூசிவிட்டி இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நெஞ்சுயர்த்தி ஆம் எனும் பதில் சொல்கிறவன் வையத் தலைமை கொள்வான்.
நன்றி, வணக்கம்.
*

Comments