புகழோங்கித் திகழ்தல்
உலகின் பிரபலமான அச்சங்களுள் ஒன்று மேடை பயம். ஆனால், இந்நூலை நீங்கள் வாசிக்கத் தேர்ந்ததில், உங்களுக்குப் பேச்சில் பிரியம் உண்டு என்பதைப் புரிந்துகொள்கிறேன். சில தயக்கங்கள், மெல்லிய குழப்பங்கள், ஆரம்ப கட்ட தடுமாற்றங்கள் இருக்கலாம். அவை எளிதான பயிற்சிகளின் வழியாக சுலபமாகத் தாண்டக் கூடியவையே. சற்று சவாலான சில தடைகள் இருக்கின்றன. அவற்றைத்தான் இந்நூல் அதிகமும் பேசுகிறது. ஓர் அறிவியக்கமாகத் திகழ்ந்த தமிழ் மேடைகளின் தரம் இன்று பெருமளவில் தாழ்த்தப்பட்டுள்ளது. விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே சிறந்த உரைகளை நல்குகிறார்கள். பாமரர்களையும் சிந்திக்கத் தூண்டும் பொறுப்புடைய அறிஞர்களெல்லாம், ஒரு கோமாளியின் அளவிற்குக் கீழிறங்கி கூத்தடிக்கிறார்கள். ஆழமான உரையாளர்களுக்குரிய இடத்தைத் தங்கள் கேளிக்கைச் செயல்பாடுகளால் இல்லாமல் ஆக்குகிறார்கள். நமது மேடைகளைக் கவனிக்கிற வெளியாள் நமது சமூகத்தின் அறிவுத்தரம் மீதான நம்பிக்கையை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொ...