தேவி விலாஸம்
எண்ணெய் வணிகம் செய்து வந்த பெரிய நாச்சி , வீரிய பெருமாள் தம்பதியருக்காக எழுப்பப்பட்ட ஆலயம். குழந்தைகள் இல்லாத இத்தம்பதியருக்கு இறுதிச்சடங்கு செய்த வீரப்பசாமி என்பவரும் இங்கே வழிபடப்படுகிறார். அது செய்தி இல்லை.
அதே ஆலயத்தில் மதுரையை ஆண்ட விசுவப்ப நாயக்கரும், தளவாய் அரியநாத முதலியாரும் சிறு தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள். மன்னரான விசுவப்ப நாயக்கர் எப்படி தெய்வமானார்? கல்வெட்டுச் சான்றுகள், வாய்மொழி வழக்காறுகள் வழியாக சில செய்திகள் கிடைக்கின்றன.
1595 முதல் 1601 வரை ஐந்தாண்டுகள் மதுரை இரட்டைத்தலைமையின் கீழ் இருந்தது. உறையூர், மதுரை என்று தலைநகரை அடிக்கடி மாற்றிக்கொள்வதுண்டு. விசுவப்பநாயக்கர் உறையூரைத் தலைமையிடமாகக் கொண்டும், இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை தலைமையிடமாகக் கொண்டும் ஆண்டிருப்பார்கள் என யூகிக்க இடம் உண்டு.
விசுவப்பநாயக்கரின் செல்ல மகள் அகால மரணமடைந்து விட்டாள். மிகுந்த வேதனையில் இருந்த நாயக்கர் நகர்வலம் செல்கையில் அசப்பில் தன் மகள் போல இருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். விசாரித்ததில் அவர் எண்ணெய் வியாபாரம் செய்யும் வீரிய பெருமாள் செட்டியாரின் மனைவி பெரிய நாச்சி என்றறிகிறார்.
மன்னர் தம்பதியரை அரண்மனைக்கு வரவழைத்து பரிசுகள் அளிக்கிறார். இருவரும் தன்னோடு வசிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். தம்பதியருக்கு அரண்மனை வாழ்க்கை ஒத்துக்கொள்ளவில்லை. அரசரே நீங்கள் எப்போது பார்க்க விரும்பினாலும், செய்தி அனுப்புங்கள். வந்து பார்க்கிறோம் என விடைபெற்றுக் கிளம்புகிறார்கள்.
வேட்டைக்குச் சென்ற விசுவப்பநாயக்கர் ஒரு பெரிய மானை அடிக்கிறார். அரண்மனைச் சேவகன் மூலமாக மகளுக்குக் கறி கொடுத்து அனுப்புகிறார்.
எண்ணெய் வியாபாரம் முடிந்து தலைச்சுமடுடன் வரும் வீரிய பெருமாளை சேவகன் வழியில் சந்திக்கிறான். உங்க வீட்டுக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறேன் என சேவகன் தெரிவிக்க, என் தலைச்சுமடில் வை. நானே கொடுத்துவிடுகிறேன் என இறைச்சியை குனிந்து வாங்கிக்கொள்கிறான் எண்ணெய்ச் செட்டி. இறைச்சிக்காகக் கோட்டை முனி அவனை அடித்துக் கொன்றுவிடுகிறது.
கணவனை இழந்த பெரிய நாச்சி உடன்கட்டை ஏறிவிடுகிறார். விசுவப்பநாயக்கரின் கனவில் வந்து தனக்கொரு ஆலயம் எழுப்பும்படி பெரியநாச்சி கேட்டுக்கொண்டதால் ஆலயம் கட்டப்படுகிறது.
செட்டியைக் கொன்றது கோட்டை முனியா? அந்தக் காலத்தில் பதில் சொல்ல முடியாத, விரும்பாத பல கொலைகளுக்கு முனி, யட்சி, நீலி, காட்டேரிகளின் மீது பழியைப் போட்டு விடுவார்கள்.
மன்னர் அடிக்கடி பரிசுகள் கொடுத்தனுப்புவதால், உறையூர்க் கொள்ளையர்கள் கொன்றிருக்கலாம் என்பது ஒரு யூகம். அதையெல்லாம் விட யூகிக்கக் கூடிய எளிதான காரணம். பொறாமை அல்லது அதிகாரப்போட்டி. பெரியநாச்சிக்கு ஒரு குழந்தை பிறந்து அதை மதுரை மன்னர் ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டால் அதிகாரப்பங்கில் கூடுதலாக ஒரு போட்டி வந்துவிடும். கணவனைக் கொன்றாலே போதும். செட்டி குல வழக்கப்படி மனைவி சிதை பாய்ந்து சதிமாதா ஆகிவிடுவார். பிறகு ஒரு கோவில் கட்டி கும்பிட்டால், பழியும் பாவமும் தீர்ந்தது.
அரண்மனைச் சோறு ஆபத்தானது.
அரண்மனை சகவாசம் படு ஆபத்தானது.
அரண்மனை போன்ற வீடுகள் இவையெல்லாவற்றையும் விட ஆபத்தானவை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பெரிய வீடு, சிறிய வீடு என்றொரு புதிய கான்ஸெப்டை அறிமுகம் செய்தோம். பெரிய வீட்டில் சகல வசதிகளும் நிறைந்திருக்கும். ஏராளமான சலுகைகள் உண்டு. விருப்பம் போல இருக்கலாம். எந்த வேலையையும் செய்ய வேண்டியதில்லை. சின்ன வீட்டிலோ அடிப்படை வசதிகள் கிடையாது. கெடுபிடிகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக பெரிய வீட்டில் வசிப்பவர்களுக்கு இவர்கள்தான் சேவகம் செய்ய வேண்டும். கிட்டத்தட்ட உழைப்பு முகாம்.
ஆனால் நடந்தது வேறு. பெரிய வீட்டில் இருந்தவர்கள் எப்போதும் பூசலிட்டார்கள். தொட்டதெற்கெல்லாம் சீறினார்கள். ஒருவருக்கொருவர் முகம் கொடுப்பதில்லை. தனித்தனித் தீவாக இருந்தார்கள். எந்நேரமும் கண்ணீர். மாறாக சிறிய வீட்டிலோ எப்போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். கட்டற்ற களியாட்டம்.
என்ன பிரச்னை? அரண்மனை போன்ற பெரிய வீடுகளில் யார் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ன நினைக்கிறார்கள் என்றே எவருக்கும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் சந்தேகமும் அச்சமும் கண்காணிப்பும் உண்டு. அதன் விளைவாக பூசலும் நிம்மதியின்மையும் இருந்துகொண்டே இருக்கும். இந்திய வரலாறென்பதே அரண்மனைச் சதிகளின் தொகுப்புதான்.
சிறு வீட்டில் என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்கும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் நெருக்கமும், உழைப்பதனால் உண்டாகும் உற்சாகமும் அதன் காரணிகள். ஏற்றப்பாடல்களும், கானா பாடல்களும், ஹிப் ஹாப், ராப் பாடல்கள் போன்ற கலைவடிவங்களும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகி வந்ததைக் கவனிக்கலாம்.
இதனால்தான், நம் மரபு ‘சிறுகக்கட்டி பெருக வாழ்’ என்று போதிக்கிறது. கையகல நிலம் பல லட்சத்துக்கு விற்பனையாகும் இந்தச் சென்னை மாநகரில் திநகர், ஆழ்வார்ப்பேட்டை பகுதிகளில் இடிந்து பாழடைந்து கிடக்கும் பல பங்களாக்களைப் பார்க்கிறேன். பிரமாண்டமான வீடுகள் பொலிவிழந்து கிடக்கின்றன. அங்கு வாழ்ந்தவர்கள் யார்? அரண்மனை போல வீடு கட்டி வாழ்ந்த எங்கே போனார்கள்? செட்டிநாட்டில் திறக்கவே படாத கதவுகளுடன் எத்தனை மேன்சன்கள் இருக்கின்றன? மணப்பாட்டில் மட்டும் எத்தனை கடலோர பங்களாக்கள் கவனிக்க ஆளில்லாமல் துருவேறிக்கிடக்கின்றன?
என்னுடைய தோழியும், ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவருமான பிரியா தம்பியின் தேவி விலாசம் சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்.
அரண்மனைச் சகவாசத்தால் திரட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு 1840 ஆம் ஆண்டில் எட்டு கண்ணும் விட்டெறிய ‘தேவி விலாசம்’ எனும் பிரமாண்டமான வீடு கட்டப்படுகிறது. பாவத்தின் விதை அப்போதே ஊன்றப்பட்டு விடுகிறது. மரியா பூஸோவின் காட் ஃபாதர் நாவலின் வரி நினைவுக்கு வருகிறது ‘மிகுதியாக திரட்டப்பட்ட செல்வங்களின் பின்னால் நிச்சயம் ஒரு பெரும் குற்றம் ஒளிந்திருக்கிறது’
தேவி விலாசத்தில் எட்டு ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணாக வளர்கிறாள் ஶ்ரீதேவி. அந்தக் குடும்பத்தின் ஐஸ்வர்யமாகக் கொண்டாடப்படுகிறாள். அந்த வீட்டிற்கே அவளது பெயர்தான் போடப்படுகிறது. ஒரு மாற்றானுடன் அவளுக்குப் பிரியம் ஏற்படுகிறது. அந்த வீட்டின் ஆண்கள் ஶ்ரீதேவிக்கு மாபெரும் கொடுமையை இழைக்கிறார்கள். அதன்பிறகு அந்த வீட்டின் விருத்தி அழிகிறது. அடுத்த 200 ஆண்டுகளில் தேவி விலாஸத்தில் என்னவெல்லாம் சம்பவிக்கிறது என்பதே இந்நாவல்.
பெரும் இழப்புகளுக்கும் வேதனைகளுக்கும் பிறகும் கூட தங்களது அதிகாரத்தையோ, சாதியுணர்வையோ கைவிடத் தயாராக இல்லாத ஆண்களுக்கும், புரட்சிகரமான சிந்தனையும், ஆற்றலும் இருந்தாலும் மரபின் எல்லைகளை மீற முடியாத பெண்களுக்குமான முரணியக்கம் என தேவி விலாஸத்தைச் சொல்லலாம்.
குமரி நிலமும், நீலிக்கதைகளும் தமிழிலக்கிய வாசகர்களுக்குப் புதிதல்ல. ஆனால், நீலியின் கதையை நீலியே எழுதுவது புதியது. சாவு மட்டுமே சாஸ்வதம் என்றான சூழலில் விதியின் விளங்கிக்கொள்ள முடியாத மர்மங்களை நாவல் தேங்காய்ப் புட்டும், தெரளி அப்பமும் சாப்பிட்டுக்கொண்டே அலசுகிறது. தேவி விலாஸத்துப் பெண்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைவேறாதவற்றின் நெருப்பும், மறுக்கப்பட்டவற்றின் அனலும் கனன்றுகொண்டே இருக்கின்றன. சிறு சிறு நீலிகள் தங்களின் நினைவுகளைச் சேமிப்பதன் மூலம் பெருநீலி ஒருத்தியைக் கண்டுகொள்ளும் கதை இது.
ஃபிடல் காஸ்டிரோவின் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ எனும் வரி நினைவுக்கு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் தமிழில் எத்தனை நீலிக்கதைகள் எழுதப்பட்டு விட்டன? நீலி எனும் பெயரில் மின்னிதழ் நடத்தப்படுகிறது. பதிப்பகம் உருவாகியிருக்கிறது. உயிரோடு புதைக்கப்பட்ட, தீயிட்டு கொளுத்தப்பட்ட, அடித்து ஆற்றில் வீசப்பட்ட, விஷம் புகட்டப்பட்ட, கழுத்தை நெறித்து கயிற்றில் தொங்க விடப்பட்ட நீலிகள் எல்லாம் தமிழ் மண்ணில் உயிர்ப்பெற்று உலவத் துவங்கி விட்டார்கள்.
பிரியா தம்பி தமிழ்நாட்டின் வெற்றிகரமான உரைநடைக்காரர். அந்தச் செய்நேர்த்தி இந்நாவலில் நன்றாகத் தொழில்பட்டிருக்கிறது. குமரி நிலத்தின் சேட்டத்திகளோடு நாமும் சில நாட்கள் வாழ்ந்த நிகர் அனுபவத்தை பிரியா கடத்தி இருக்கிறார். மீனாட்சி, கிருஷ்ணன், பாபு, மெர்ஸி என நம்மோடு நெடுநாட்கள் உடன்வரப்போகிற வலுவான கதைமாந்தர்களை உருவாக்கியுள்ளார். நுட்பமான எழுத்தாளர்களால் மட்டுமே சென்றடைய முடிகிற ஆழமான தருணங்கள் நாவலெங்கும் விரவிக்கிடக்கின்றன.
ஏராளமான கதாபாத்திரங்கள் வருவதும், அவர்கள் யாருக்கு என்ன உறவு என்பதை நினைவில் வைத்துக்கொள்வதும் எனக்குக் கொஞ்சம் சவாலாக இருந்தன. அதற்கு என்னுடைய ரீல்ஸ் அழுகல் மூளையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை. அமானுஷ்யத்தோடு தர்க்கம் சந்திக்கும் புள்ளிகளில் ஆசிரியருக்கு ஏற்படும் சிறு தடுமாற்றத்தை ஒரு கலைக்குறைபாடு எனச் சொல்லலாம்.
உலகமெங்கிலும் வலதுசாரிகளும் பாப்புலிஸ்டுகளும் மக்களின் பேராதரவுடன் வென்றுகொண்டே இருக்கிறார்கள். மக்களை உணர்ச்சிகரமாக அணி திரட்ட தேசியவாத அடையாளங்களுக்குள் கொண்டு வர தொன்மங்களில் படைக்கப்பட்ட வீர நாயகர்களை முன்வைத்து பரப்பியலை மேற்கொள்கிறார்கள். பங்கேற்பு ஜனநாயகம் எனும் மாயத்தோற்றத்தின் கீழ் ‘பங்கு பிரிக்கும் ஜனநாயகத்தை’ உருவாக்க தொன்மங்கள் ஒரு பெரும்கருவியாகப் பயன்படுகின்றன.
மறுபக்கம் இலக்கியத்தில் தொன்மங்களை ஒரு மீள்பார்வையுடன் reinterprets செய்வது தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக சமகால இந்திய எழுத்தில். அது அரசதிகாரத்தை நோக்கிச் செல்பவர்கள் கட்டமைக்கின்ற single narration-க்கு மாற்றான குரலை முன்வைக்கிறது. புறக்கணிக்கப்பட்ட குரல்களுக்கு அதிகாரமளிக்க முயல்கிறது, what if எனும் கேள்வியை எழுப்பிக்கொள்கிறது. வாழ்வின் அடிப்படையான கேள்விகளுக்குத் தொன்மங்களை மறுவரையறை செய்வதன் வழியாக விடை தேடுகிறது. மரபு உருவாக்கிய conditioning-ஐ கலைத்து அடுக்கும் முயற்சியில் எங்கெல்லாம் யதார்த்தவாதம் தயங்கி நிற்கிறதோ அங்கெல்லாம் நவீன இலக்கியம் மாந்த்ரீக யதார்த்தத்தைப் பற்றிக்கொள்கிறது.
காலம்காலமாக நமது தொல்கலைகள் பேரதிகாரத்திற்கும் பெரும்போக்குக்கும் முரண்பட்டே இயங்கி வந்திருக்கின்றன. தொன்மங்களை மீளுருவாக்கம் செய்வதன் வழியாக நவீன படைப்பாளியும் தன் முன்னோடியின் தொல்மனதுடன் இணைந்துகொள்கிறார். தன் வேருக்குள் ஆழமாக ஊடுருவும்தோறும் காலை சாஸ்வதத்தை நோக்கி முன்னகர்கிறது. அதன்பொருட்டே அதற்கு என்றுமுள சர்வத்தன்மை வந்துவிடுகிறது.
பெரும்பான்மை நாவலாசிரியர்கள் தங்களை உள்ளிருந்து உழட்டிக்கொண்டிருக்கும் சொந்த அனுபவத்திலிருந்துதான் தங்கள் கணக்கைத் துவங்குவார்கள். அதை இறக்கி வைத்தாலொழிய அவர்களால் மேற்கொண்டு புனைவெழுத முடியாது. பிரியா தம்பி தனது தாயாரின் நினைவுகளை நாவலாக்கி இருக்கிறார். காணாமல் போன கிருஷ்ணன் என்னவானான், மீனாட்சிக்கும் மெர்சிக்குமான ஒரு பூர்வச்சரடு என இந்த நாவலின் தொடர்ச்சியை எழுதிச்செல்ல முடியும்.
பிரியா தம்பியை நான் Queen என்றழைப்பது வழக்கம். நீதிக்கட்சி துவங்கப்பட்ட, முதன்முதலில் சினிமா திரையிடப்பட்ட, இந்திய அரசியலின் பல்வேறு நகர்வுகள் நிகழ்ந்த சரித்திரப் புகழ்மிக்க விக்டோரியா ஹால் புணரமைக்கப்பட்ட பிறகு நிகழும் முதல் இலக்கிய விழா இது. இந்த நாவலின் மையமான பேசு பொருளுக்கு இந்த அரங்கம் மேலதிக அர்த்தங்களை அளிக்கிறது.
ஒரு வெள்ளந்தியான வாசகர், இந்தக் கட்டிடத்தை பிரியா தம்பி வாங்கி விட்டாரா என்று கேட்டார். விற்றால் வாங்கிக்கொள்வார்.
பிரியா தம்பிக்கு என் வாழ்த்துகள்.
(11-01-2026 அன்று சென்னை விக்டோரியா ஹாலில் நடந்த ‘தேவி விலாஸம்’ நாவல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)

Comments