புதிய உலகம்

நண்பர்களே, 


புத்தாண்டின் அதிகாலையை ஓர் உரைக்குச் செவிமடுக்க ஒப்புக்கொடுத்திருக்கிறீர்கள், என் பாராட்டுகள். 


எனக்களிக்கப்பட்டுள்ள தலைப்பு ‘புதிய உலகம்’


அர்த்தமண்டபத்தின் நிறுவனராகவும், சில தொழில்நிறுவனங்களின் ஆலோசகராகவும் புதிய உலகம் யாருக்கானது? என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 


செருப்பு கம்பெனி துவங்கலாமா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒருவரறியாமல் மற்றொருவரை பல ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிய அமெரிக்க நிறுவனம் குறித்த கேஸ் ஸ்டடி வாசித்திருப்பீர்கள். பெரும்பான்மை கறுப்பினத்தவர்களுக்கு காலணி அணியும் வழக்கம் இல்லை. ஆகவே, அங்கு துவங்க வேண்டாமெனும் அறிக்கையை ஒருவரும், அதே காரணத்தால் ஆப்பிரிக்கா மிகப்பெரும் வாய்ப்புள்ள சந்தை எனும் அறிக்கையை மற்றொருவரும் கொடுத்தார்கள். இரண்டுமே உண்மைகள்தான். ஒருவர் சவாலைப் பார்த்தார். மற்றொருவர் அதிலிருக்கும் புதிய சாத்தியங்களைப் பார்த்தார். புதிய உலகம் ஒவ்வொரு பிரச்னையிலும் ஒளிந்திருக்கும் வாய்ப்புகளைக் காண்பவர்களுக்கானது. ஒரு மளிகைக்கடை பையனாக வேலைக்குச் சேர்ந்து டவுண் ஹாலையே வென்றெடுத்த விஜயா வேலாயுதம் அவர்களின் ஒரு மேற்கோள் என் வாழ்நாள் முழுக்க உடன் வருவது ‘சந்தர்ப்பங்கள் காற்றில் மிதக்கின்றன; சாமர்த்தியசாலி மட்டுமே அதை சுவாசிக்கிறான்’ 


இரண்டாம் உலகப்போரின் விளைவாக அமெரிக்காவில் பல புதிய பணக்காரர்கள் உருவானார்கள். பெரிய வீடும், தோட்டமும், காரும் கூடவே வளர்ப்பு நாயும் அவர்களின் அடையாளங்களாகின. வளர்ப்பு நாய்களுக்கான உணவுச் சந்தையைக் கைப்பற்ற ஒரு பெரிய நிறுவனம் தன்னுடைய தயாரிப்பை பெரும்பொருட் செலவில் சந்தைப்படுத்தியது. முதல் மாதம் மீப்பெரும் விற்பனை. இரண்டாவது மாதம் விற்பனை பாதியானது. மூன்றாவது மாதம்  பத்தில் ஒரு பங்கானது. பதறியடித்து விற்பன்னர்களின் உதவியை நாடினார்கள். வீழ்ச்சிக்கான காரணம் எளிதானது. நாய்களுக்கு அந்த உணவு பிடிக்கவில்லை. 


தொழில்முனைவர்களாகிய நாம் சதா சர்வ காலமும் நமது தயாரிப்பை அல்லது சேவையைப் பயன்படுத்தும்படி கூச்சலிட்டுக்கொண்டே இருக்கிறோம். மனிதர்கள் அடிப்படையில் விற்கப்படுவதை விரும்புவதில்லை. வாங்கவே விரும்புகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டிலோ, ஜவுளிக்கடையிலோ சேல்ஸ்மேன்கள் சூழ்ந்துகொண்டு அதை வாங்கு, இதை வாங்கு என நச்சரித்தால், நமக்கு ‘ஷாப்பிங்’ செய்த அனுபவம் கிட்டாது. விற்பனை என்பது ஒன்றை வாங்கும்படி வற்புறுத்துவதல்ல. வாடிக்கையாளரின் தேவையைத் தெரிந்துகொண்டு, அவரது பிரச்னையைப் புரிந்து கொண்டு, அவர் சரியான முடிவை எட்டுவதற்குரிய தகவலைக் கொடுத்து சரியான தீர்வைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவுவதே இந்த நூற்றாண்டின் வணிகம். விற்க முயல்பவர்களை விட ‘வாங்கச் செய்கிறவர்களே’ புதிய உலகில் வெல்ல முடியும். 


நூறாண்டுகளைத் தாண்டிய இந்திய நிறுவனங்களின் பட்டியலைப் பாருங்கள். அவற்றின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக ‘பிஸினஸ் வித் எத்திக்ஸ்’ இருக்கும். இலாபத்தை மட்டுமே  நோக்கமாகக் கொண்டு இயங்குகிறவர்கள் ஓர் எல்லைக்கு மேல் வெல்ல முடியாது. உலக வணிகத்தில் கோலோச்சிய பிரிட்டனும், கிரேக்கமும், ரோமாபுரியும் இருந்த இடமும் நடந்த தடமும் இல்லாமல் போய்விட்டன. அரேபியர்களும், யூதர்களும், சமணர்களும், தமிழர்களும் இன்றும் தொழிலில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள். இதன் அடிப்படை யாவை என்று யோசித்துப்பாருங்கள். இவற்றுக்கும் தோராவுக்கும், ஆயிரத்தொரு அரேபியக் கதைகளுக்கும், பிறவுந்தமபோற் செயின் என போதிக்கும் நமது நீதி இலக்கியங்களுக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதைக் காணமுடியும். வணிகத்துக்கு எல்லை உண்டு. வணிக அறத்துக்கு எல்லையே கிடையாது. 


பிழைப்பதற்காக மட்டுமே ஒரு தொழிலைச் செய்யவேண்டியதில்லை. அப்படி எண்ணம் கொண்டவர்கள் வேலைக்குச் சென்று ஒன்றாம் தேதி சம்பளத்தை வாங்கலாம். வாழையடி வாழையென வளரப்போகும் நிறுவனத்தை உருவாக்குவதே தொழில்முனைவன் செய்ய வேண்டியது. விழித்திருக்கும் நேரமெல்லாம் நம் சிந்தனையில் தொழில் உட்கார்ந்துகொண்டிருக்கிறது. பல்வேறு அழுத்தங்களும், சவால்களும் அலையலையாக அடித்துக்கொண்டே இருக்கின்றன. சைஸ் எதுவானாலும் பிரச்னைகள் உண்டு. அப்படியிருக்க ‘குட்டி நாயை ஏன் வேட்டைக்கு அனுப்ப வேண்டும்?’


திருப்பூரில் பல இடங்களில் என்னுடைய நண்பர்கள் செல்போன் கடை நடத்தினார்கள். அந்தத் தொழிலில் அவர்கள்தான் Pioneer. எங்களுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்போன் தொழிலுக்கு வந்த ஒரு நிறுவனம் தமிழ்நாடு முழுக்க கடைகளைப் பரப்பி இன்று மாபெரும் ஆலமரமாகி விட்டார்கள். மனிதவளத்திலும், தொழில்நுட்பத்திலும், மார்க்கெட்டிங்கிலும் அவர்கள் செய்த முதலீடு அவர்களை வளர்த்தெடுத்தது. ஸ்கேலிங் எண்ணம் இல்லாததும், சொக்காரன்களை மட்டுமே கல்லாவில் உட்கார வைத்ததும், காலத்துக்கேற்ப மாறாததும் நண்பர்களின் தொழிலைக் கிட்டத்தட்ட அழித்துவிட்டது. இது போதும் எனும் எண்ணம் தொழிலில் உருவாகும் போது நம் நிறுவனத்துக்கான ஒரு பூட்டை நாமே தயார் செய்ய ஆரம்பிக்கிறோம் என்பதே உண்மை. 


Power of compounding பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அதற்கு அடிப்படையாக அமைந்த இன்னொரு அறிவியல் பரிசோதனை Power of paper folding. உங்கள் வீட்டில் இருக்கும் செய்தித்தாளை இரண்டாக, நான்காக, எட்டாக மடித்துப் பாருங்கள். 42 தடவை அந்தக் காகிதத்தை உங்களால் மடிக்க முடிந்தால் அதன் உயரம் ‘பூமிக்கும் நிலவுக்குமான தூரம்’. மனிதவளத்தையும் முதலீட்டையும் பெருக்கிக்கொண்டே சென்றால் அதன் சாத்தியம் என்னவென்பதை உணர ஹாட் பிரட்ஸ், நேச்சுரல்ஸ், அடையாறு ஆனந்த்பவன், எஸ்.எஸ்.வி.எம், ஆலடிப்பட்டியான் என்று நமது கண் முன்னே எத்தனை உதாரணங்கள் என்று பாருங்கள். இறைக்கிற கிணறுதான் ஊறும், இறைக்காத கிணறு நாறும். 


எனக்குக் கிடைக்காத வசதிகளையெல்லாம் என் பிள்ளையாகிய உனக்குச் செய்து கொடுத்திருக்கிறேன். என்னால் அடைய முடியாத உயரத்தையெல்லாம் நீ அடைய வேண்டும். என் தோள் மீது ஏறி நின்று நீ உலகத்தை வெல். இவையெல்லாம் நம் பிள்ளைகள் மீது நமக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள். இதில் பாதியாவது நம் மீது நமக்கு இருக்கிறதா?


நமது முன்னோர்கள் வாழ்ந்தது லைஸென்ஸ் ராஜ்யம். நாம் வாழ்வது ஸ்டார்ட் அப் யுகம். ஜாதியும் குடிப்பிறப்பும் தொழில் செய்வதைத் தீர்மானித்த யுகத்திலிருந்து வெகுவாக முன்நகர்ந்து வந்திருக்கிறோம். அனைவருக்குமான நீதி, அனைவருக்குமான கல்வி, அனைவருக்குமான தொழில்நுட்பம் என நமது முன்னோர்களுக்கு அருளப்படாத பல விஷயங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. ஸ்மார்ட் போன்களும், இணையமும், தொழில்கட்டமைப்பும், போக்குவரத்து வசதிகளும் கொண்ட நாம் நமது முன்னோர்களின் சாதனைகளில் பாதியைக் கூட எட்டவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யானை வணிகம் செய்த அத்திகோசத்தார் இனக்குழுவைப் பற்றி வாசிக்கிறோம். சுட்ட பானைகளைக் கலத்தில் ஏற்றி உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்தவர்களை வாசிக்கிறோம். யவனோரோடும், சீனரோடும், அரேபியரோடும் சந்தையில் சமர் செய்த விரிவான வரலாற்றுப் பின்புலம் நமக்குண்டு. எங்களது தோள் மீது ஏறி எத்தனைத் தொலைவு நீங்கள் செல்லப்போகிறீர்கள் என்று நமது மூதாதையர்கள் நம்மை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறார்கள். 


ஒவ்வொருநாளும் உலகம் புதிதாகிக்கொண்டே இருக்கிறது. அது எதை ஏற்கிறது எதை வெளித்தள்ளுகிறது என வரலாற்று நோக்கில் ஆராய்ந்தால் கிடைக்கும் விடை ஒன்றுதான் ‘Excellence’ காரியம் யாவிலும் தீவிரம் என தனது ஒவ்வொரு அலகிலும் எக்ஸலன்ஸை நோக்கிச் செல்கிற தயாரிப்புகளும், நிறுவனங்களும் நீடு வாழ்கின்றன. உலகின் துயர்களுக்குத் தீர்வாகின்றன. அரைகுறைகளும், ஏனோதானோக்களும் எஞ்சிய கசடாகி சுமையாகின்றன. தனக்கிணை இல்லாத தரம் என்பதை ஒவ்வொரு அங்குலத்திலும் உறுதி செய்தே ஆகவேண்டும். ‘உயர்ந்த பொருள் - சிறந்த விலை’ என்பதே இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த செயல்திட்டம். 


ஒவ்வொரு சவாலையும் வாய்ப்பாகப் பார்க்கிறவர்கள், வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்துகொள்கிறவர்கள், தொழிலை அறத்துடன் மேற்கொள்கிறவர்கள், விரிவடையும் விசாலம் கொண்டவர்கள், செய்யும் ஒவ்வொன்றிலும் எக்ஸலன்ஸ் எனும் மேன்மையான தரத்தைக் கைக்கொள்கிறவர்களுக்கே ‘புதிய உலகம்’ தன் வாசலைத் திறந்து வைத்திருக்கிறது. 


என்னுடைய அன்றாட பிரார்த்தனை இது. “இறைவா, யதார்த்தத்தைக் காணும் கண்ணும், அதை உள்வாங்கிக் கொள்ளும் அறிவும், யதார்த்தத்தை உடைத்து புது சரித்திரத்தைப் படைக்கும் ஆற்றலையும் எமக்கு அருளப் பண்ணுவாயாக.” 


அந்த ஆற்றலை இறைவன் உங்களுக்கும் வழங்கட்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. 


(01-01-2026 அன்று காலையில் ‘Action Takers Community’ தொழில் முனைவர்களுக்காக செல்வேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கமான வடிவம்) 





Comments