Monday, April 30, 2007

எழுத்தாசை

ழுதியோ, பேசியோ புகழ் பெற்று பெரும்பணக்காரனாகிவிட முடியும் என்று என் இளமைக்காலத்தில் உறுதியாக நம்பியிருந்தேன். எழுத்துச்சிரங்கு பிடித்து எந்நேரமும் பேனாவால் சொறிந்து கொண்டிருந்தேன். ஆனால் எனது படைப்புகளை கையெழுத்துப் பத்திரிக்கைகள்கூட அங்கீகரிக்க மறுத்தது. நான் எதை எழுதினாழும் அது ஏற்கனவே எழுதப்பட்டதாகவும், எங்கோ படித்த ஞாபகம் என்றும் எனது அறிவுஜுவி நட்பு வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழில் எல்லா கதைகளும், கவிதைகளும் எழுதப்பட்டு விட்டது. இனி புதிதாக ஒன்றை எழுதவும் முடியாது. அதற்கான அவசியமும் இல்லையென்றே தோன்றியது. எனது உப்புமா சொற்பொழிவுகளில் ஈயாடியதும், எனது எழுத்துக்கள் கேலிக்குள்ளானபோதும் உறுதியாக முடிவெடுத்தேன். எழுதுவதில்லை என்று. ஆனாலும், ஆனாலும் மானுடனம் எங்காவது மூர்க்கத்தனமாகத் தாக்கப்படும்போது என்னையும் அறியாமல் கிறுக்குவது வாடிக்கையானது. அப்படிக் கிறுக்கிய " அமைதிப்புறாவின் அலறல்கள்" கவிதை முதன் முதலில் என்னைத் திரும்பிப்பார்க்கவைத்தது (விரைவில் பதிவேற்றப்படும்) அதன்பிறகு இலக்கிய கூட்டத்தில் நானும் பேச தகுதியுள்ளவனானேன்.

" புதுமைப்பித்தன் - வாழ்வும் வரிகளும்" , "மரபின் மரணம்" போன்ற எனது இலக்கிய சொற்பொழிவுகள் பெரிதும் கவனத்திற்குள்ளானது. சித்திரம் இதழில் தொடர்ந்து வெளியான "காற்றும் கவிஞனும் மரிப்பதில்லை" கவிதை விமர்சனங்கள் பரவலான வாசகர்களை பெற்றுத்தந்தது. அந்த மயக்கத்தில் அமைத்த அமெச்சூர் பட்டிமன்றக்குழுவின் சூப்பர் ஸ்டாராக பட்டி, தொட்டி எங்கும் பேசித்திரிந்த காலம் இன்பமயமானது. பட்டிமன்றம் முடியும்வரை கூட்டம் கலையாமல் சிரித்து சிரித்து மயங்கி கிடப்பதும், அந்த "செல்வேந்திரன் தம்பிய மறுக்கா பேச சொல்லுங்கப்பா.."ன்னு பெரிசுகள் பட்டிமன்ற ஒன்ஸ்மோர் கேட்பார்கள். பணமா? குணமா? பழைய பாடலா? புதிய பாடலா? என அரைத்த மாவில் சுடும் புளித்த தோசைகளுக்கு மட்டுமே அதுவரை அனுமதி இருந்த பட்டிமன்ற உலகத்தில் புதுமைகளைப் புகுத்தலாம் என நாங்கள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்விகளைத் தழுவியதால் அவசரமாக குழுவைக் கலைத்தோம்.

இதனிடையே தாமரைமணாளன், சுகுமாரன், ஈஸ்வர சுப்பையா, பொன்னீலன் என அடுத்தடுத்து இலக்கியவாதிகளைச் சந்தித்தது தீவிர எழுத்தாசைக்கு எண்ணெய் ஆனது. செய்தொழிலையும் இழந்து, கைப்பொருளும் கரைகிறது என்ற உண்மை, குமுதவிகடகுங்குமதேவிராணிகள் படைப்புகளை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டபோதுதான் தெரிந்தது. கு.ப.ராவின் கடிதங்களும், புதுமைப்பித்தன் வறுமையின் வாசற்படியில் இருந்து எழுதிய கடிதங்களும், எழுதிப்பிழைக்க நிணைப்பவர்களுக்கு சுஜாதாவின் அறிவுரைகளையும் படித்து திருந்தியபோது தொழில் காணாமல் போயிருந்தது. (தொடரும்...)

No comments: