விஷ்ணுபுரம்



இடையறாத வாசிப்பு, அறிவார்த்தமான விவாதங்கள், தொடர்ந்த பயணங்கள் ஆகியவற்றின் மூலம் இலக்கிய வாசகன் எனும் அந்தஸ்தினை அடையத் துடிக்கும் நல்லிலக்கிய ஆர்வலர்கள் நாங்கள். சமகால எழுத்தாளர்களில் முதன்மையானவரும், இருபதாண்டுகளுக்கும் மேலாக தரமான படைப்பாளிகளைத் திறந்த மனதுடன் தமிழ் வாசகப் பரப்பிற்குச் சிபாரிசு செய்பவரும், தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இரண்டாம் தர எழுத்துக்களை துணிச்சலுடன் விமர்சனம் செய்து வருபவரும், வேறெந்த எழுத்தாளர்களைக் காட்டிலும் வாசக உரையாடலை அதிகம் ஊக்குவிப்பவருமான ஜெயமோகன் எங்களின் ஆதர்ஸமாய் இருப்பதில் ஆச்சர்யமில்லை. நாங்கள் ஜெயமோகனின் வழியாகவே இம்மொழியின் உன்னதச் செயல்பாட்டாளர்களைக் கண்டடடைந்தோம் எனச் சொல்வதில் எங்களுக்கு கூச்சம் இல்லை.

தகுதியானவர்களுக்கு உரிய மற்றும் உயரிய மரியாதை என்பதில் கறாரானாவர் ஜெயன். அதன்படியே தமிழின் சிறந்த ஆளுமைகள் பலருக்கும் தன் சொந்தச் செலவில் விழாக்கள் பல எடுத்தவர் அவர். ஜெயமோகன் துவக்கிய அவ்வறப்பணியை அவரது தீவிர வாசகர்களாக நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.

மனதிற்குள் புகுந்து மாயம் பண்ணுகிற மகத்தான கதைசொல்லி ஆ.மாதவன். சிறுகதைகளாலும், நாவல்களாலும் இம்மொழிக்கு அழகு செய்த மூத்த படைப்பாளி. இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெற்றதில்லை. விருது லாபிக்களில் விருப்பம் கொள்ளாத ஆத்மா. இத்தகைய புறக்கணிப்புகள் எது குறித்தும் அலட்டிக்கொள்ளாத ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டிற்கான விருதை வழங்கி தனக்கான கவுரவத்தை தேடிக்கொள்கிறது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’

இவ்விருது வழங்கும் விழா வருகிற டிசம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை - பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வேதசகாயகுமார், புனத்தில் குஞ்ஞப்துல்லா, எம்.ஏ.சுசீலா, இயக்குனர் மணிரத்னம் ஆகிய ஆளுமைகள் கலந்துகொள்கிறார்கள். இவ்விழாவில் ஆ.மாதவனைப் பற்றி ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூல் வெளியிடப்பட இருக்கிறது.

நம் காலத்தின் மகத்தான எழுத்தாளர் ஒருவரை வாழ்த்த வாருங்களென இலக்கிய அன்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

***

நண்பர்களுள் பலரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகள், செலவினங்கள் குறித்து அக்கறையான விசாரணைகளை மேற்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இலக்கிய வாசிப்பை ஊக்குவிப்பது; எழுத்தாளர் - வாசகர் உரையாடலைச் சாத்தியப்படுத்துவது; தகுதியான ஆளுமைகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், மரியாதையையும் செய்வது; ஆகிய குறைந்த பட்ச செயல் திட்டங்களுடன் செயல்பட்டு வரும் இலக்கிய அமைப்பே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

நல்லிலக்கியத்தின் மீது பிடிப்பும் துடிப்பும் இருக்கிற எவரையும் விஷ்ணுபுரம் இருகரம் நீட்டி வரவேற்கிறது. திருகலான மனப்போக்கும், இலக்கிய வம்புகளுக்கு அலையும் மனோபாவமும் எப்பேர்ப்பட்ட குழுமத்தையும் செயலிழக்கச் செய்து விடும். அப்படிப்பட்டவர்கள் வழக்கம்போல யாரும் வராத டீக்கடைக்குள் பத்திரமாக இருந்துகொண்டு எங்களை விமர்சிக்கலாம்.

Comments

விஷ்ணுபுரம் குழுவில் இணைந்த பிறகுதான் உங்கள் தளத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.இத்தனை நாள் இப்பதிவுகளைத் தவற விட்டமைக்கு வருந்துகிறேன்.
ஜெ.எம் பதிவு வழி திருமணச்செய்தியையும் அறிந்தேன்.வாழ்த்துக்கள்.
விரைவில் கோவை கூட்டத்தில் காண்போம்.
Thamira said…
ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டிற்கான விருதை வழங்கி தனக்கான கவுரவத்தை தேடிக்கொள்கிறது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’// அடக்கம் மிகுந்த வரிகள்.

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒரு பெரும் வரலாறாக தடம் பதிக்கவும், இவ்விழா சிறப்புடன் நிகழவும் என் வாழ்த்துகள்.

மகிழ்ச்சியைத் தரும் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து 'விஷ்ணுபுரம்' முன்னெடுத்துச் செல்லட்டும்.

(விஷ்ணுபுரத்துடன் இணைந்துகொள்ள ஆசைதான். ஆனால் அதற்கு முதலில் வாசிக்கத் துவங்கவேண்டுமே.. நாம்தான் ஆல்ரெடி எழுத்தாளனாகிவிட்டோமே.? பின்னே எப்படி? ஹிஹி..)

Popular Posts