டான் என்பவர்...
டான்
வேகமாக கணக்கிட்டு
காரியங்கள் நிகழ்த்துபவர்
ஆயினும் கணக்குப் பாடத்தில் வல்லுனர்
அல்ல!
டான்
பகல் வேளைகளில்
சீட்டாடிக்கொண்டோ
சதுரங்கக் காய்களை நகர்த்திக்கொண்டோ
இருப்பார்
ஒழிந்த வேளைகளில்
புகை விட்டுக்கொண்டும்
குடித்துக்கொண்டும் இருப்பார்
ஆயினும் அவர் ஓர் ஊதாரி அல்ல!
டான்
ஒரு பெண் பித்தர் அல்ல
ஆயினும் பெண்களை
மோந்து பார்த்துக்கொண்டே கிடப்பார்.
டான்
ஒரு சிம்மக்குரலோன்
ஆயினும் ஹஸ்கி வாய்ஸில்தான் பேசுவார்!
டான்
பாஸ்போர்ட் அற்றவர்
ஆயினும் எல்லா நாடுகளின்
விசாவும் அவரிடத்தில் உண்டு!
டான்
ஒரு டாம் டாம் டானிக் போல
பார்வைக்கு குளிர்பானம் போலத்தான்
இருப்பார்
ஆயினும் கசப்பானவர்!
டான்
யாரும் துரத்தாத போதும்
சுரங்க ரயில் பாதையில்
பாதாள சாக்கடைக் குழாயினுள்
பாலங்களுக்கு அடியில் ஓடிக்கொண்டிருப்பார்
ஆயினும் அவர் ஓர் ஓட்டப்பந்தய வீரர்
அல்லர்!
டான்
தன்னுடலில் பாய்ந்த தோட்டாவினை
தானே நோண்டி எடுத்துக்கொள்வார்
ஆயினும் அவர் ஒரு டாக்டர் அல்ல!
டான்
ஆழநெடுங்கடலிலோ
ஆளரவமற்ற தீவுகளிலோ
ஆலம்சூழ் வனாந்தரங்களிலோ
அனாதரவாய் சிக்கிக்கொண்டாலும்
தப்பித்து வந்துவிடுவார்
ஆயினும் அவர் ஒரு சர்வைவல் நிபுணர்
அல்ல!
டான் தன் தொழில் ரகசியங்களை
சிகரெட் அட்டையிலோ
எல்.ஐ.சி ஏஜென்ட் கொடுத்த டைரியிலோ
2 ஜிபி பென் டிரைவிலோ
வைத்திருப்பார்
அதை அவரே வேண்டுமென்று தொலைத்து
விடுவார்
டான்
தன்னைக் காட்டிக்கொடுப்பவர்களை
விட்டு வைக்க மாட்டார்.
அது முகம் பார்க்கும் கண்ணாடியாக
இருந்தாலும் கூட
டான்
சபையில் தோன்றி ஆடவேண்டுமெனில்
உலகெங்கிலுமுள்ள
கொள்ளைக்கூட்டத் தலைவர்கள்
உச்சி மாநாடு நடத்தியாக வேண்டும்.
டான்
அமிதாப்பை போல உயரமாகவோ
ரஜினியைப் போல பரட்டைத்தலையுடனோ
அஜீத் போல பேழை வயிறுடனோ
அல்லது ஒரு நிஜமான டானைப் போலவோ
இருக்கலாம்
டான்களைப் பார்த்தே
கோபிநாத் கோர்ட் அணியக் கற்றுக்கொண்டார்
டான்களைப் பார்த்தே
மிஷ்கின் கண்ணாடி அணியத் துவங்கினார்
டான்களைப் பார்த்தே
நித்தி தப்பித்து ஓடவும், தலைமறைவாகவும் கற்றுக்கொண்டார்
டான்களைப் பார்த்தே
மணிரத்னம் தந்தி வசனங்கள் எழுத
ஆரம்பித்தார்
டானால்
தப்பிக்க முடியாத சிறை
இதுவரை
கட்டப்படவில்லை.
டானின்
உயிர் பறிக்கும் தோட்டா
உருவாக்கப்படவில்லை
டான்
மோகம் கொள்ளும்
விழிதிகழ் அழகி பிறக்கவில்லை
டான்
தன்னிலை மறக்கும்
’தண்ணி’ எந்த டாஸ்மாக்கிலும் இல்லை.
டான் ஒரு காந்தி
டான் ஒரு புத்தன்
டான் ஒரு பித்தன்
டான் ஒரு ஜித்தன்
ஆனால் பாருங்கள்
டைரக்டர் ‘பேக்-அப்’ சொன்னதும்
‘டானென்று’ அவர் வீட்டிற்கு வந்தாகவேண்டும்.
Comments
அற்புதம் செல்வேந்திரன்.
இந்த நேரத்தில் இந்தக் கவிதை எழுதியதற்கு கண்டனம்.
சும்மா டான் டான்னு பிச்சிட்டீங்க!
வலைச்சரம் மூலம் (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_17.html) உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
இனி தொடர்வேன்...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
splendid
கதை எழுவதில் சிறு முயற்சியாக ஒன்றை துவங்கியுள்ளேன்.
நேரமிருப்பின் படித்து பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்
http://www.ibbuonline.com/2012/07/blog-post_24.html
அந்த முடியலத்துவம் எழுதி எல்லோரையும் ஒரு வழியாக்கியப்பின் கொஞ்ச நாள் ஓய்விலிருந்து இப்ப மீண்டும் வந்திருக்கும் டானை வருக வருகவென வரவேற்கிறேன்.