நானும் புத்தகங்களும்

அப்பாவிற்கு வாசிக்கிற பழக்கம் இருந்தது. முழு விலை கொடுத்து புத்தகங்கள் வாங்கிப் படிக்க அவர் வளர்ந்த சூழலும், பொருளாதாரமும் இடமளிக்கவில்லை. புத்தகங்களை எடை போட்டு விற்கிற பழைய புத்தகக் கடைகளை ஒவ்வொரு ஊரிலும் கண்டுபிடித்து வைத்திருந்தார். குறிப்பாக பெங்களூர், மைசூரிலுள்ள பழம் புத்தகக்கடைகளில் தமிழ்ப் புத்தகங்களுக்குப் பெரிய மரியாதை இல்லையென்பதால் ரொம்பவும் சல்லிசான விலைக்கு அள்ளி வருவார். பலதரப்பட்ட புத்தகங்களும் அதில் இருக்கும். புனைவெழுத்தாளர்களில் அப்பாவிற்கு மு.வ பிடிக்கும். வேறு யாரையும் அவர் சிலாகித்து பார்த்ததில்லை.

இளைய அண்ணன் ராஜா பள்ளி நாட்களிலேயே புகழ்மிக்க பேச்சாளனாக இருந்தார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசைத் தவிர வேறு எதையும் அவர் வென்றதாக சரித்திரம் இருந்ததில்லை. அவர் பரிசுகளாக வாங்கிக் குவித்த புத்தகங்கள் வீட்டை நிறைத்தன. அப்படித்தான் அண்ணாத்துரை, பாரதிதாசன், விவேகானந்தர், பரமஹம்சர் எல்லாம் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

பிற்பாடு நானும் நண்பன் விஸ்வராஜனும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து புத்தகங்களை வாங்கி வாசிப்பில் திளைத்த காலகட்டத்தில் கொஞ்சம் புத்தகங்கள் சேர்ந்தன. எனது தோழனும், ஆக்கிரமிப்பிற்கும் போருக்கும் எதிரான இளையோர் அமைப்பை கனடாவில் தோற்றுவித்தவனுமான ஆரோன் பரிசளித்த அரசியல் புத்தகங்களும், தோழி கிரா டேலி இந்தியாவை விட்டுக் கிளம்புகையில் அன்பளித்த ஏராளமான ஆங்கிலப்புத்தகங்களும் எங்கள் வீட்டு நூலகத்தைச் செறிவாக்கின. கிரா கொடுத்த புத்தகங்களில் முக்கியமானது கர்ட் வான்கர்ட்-ன் நூல்கள். சொல்லப்போனால் ஆங்கிலத்தில் நான் முற்று முழுசாக ஊன்றி வாசித்த ஒரே எழுத்தாளர் வான்கர்ட்தான். லோலிதாவை மட்டும் வேண்டி கேட்டுக்கொண்டாள் என்பதற்காக கனடாவிற்கே திருப்பி அனுப்பினேன். பிரான்ஸை சேர்ந்த தோழி வெரோனிக் மெனோ ஏராளமான லோன்லி பிளானட் புத்தகங்களைப் பரிசளித்து உலகின் சாளரங்களைத் திறந்து விட்டாள். பிற்பாடு அவளே லோன்லி பிளானட்டில் ஊழியராகி உலகம் சுற்றி வந்தாள்.

ஊரை விட்டு வெளியேறி கோவையில் திருவேங்கடம் மென்சனில் வாழ்ந்தது வாசிப்பின் பொற்காலம். ஹிண்டுவின் பிரிண்டிங் செக்‌ஷனில் (நான் அப்போது விகடன் ஊழியன்) பணியாற்றும் ஆரூயிர் நண்பர் கணபதியும், பழனிவாசனும் தீவிர புத்தக ஆர்வலர்கள். அறையை புத்தகங்களால் நிரப்பி வைத்திருப்பார்கள். வாரம் இருமுறை, மாதாமாதம் சம்பளம் வாங்கியதும் ஒருமுறை, எங்கே என்ன புத்தகக்கண்காட்சி நடந்தாலும் அங்கும் ஒருமுறை என புத்தகங்களை வாங்கி குவிப்பார்கள். அவர்களிடமிருந்தே நான் அதிக அளவில் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கவும், சினிமா பார்க்கவும், சிக்கன் சாப்பிடவும் கற்றுக்கொண்டேன்.

பதிவுலக தொடர்புக்குப் பின் அறிமுகமானவர்களில் முக்கியமானவர் வடகரை அண்ணாச்சி. வெர்ஸடைல் ரீடர். அவர் நிறைய்ய எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார். கொஞ்சம் பொருளாதார ஸ்திரத்தன்மை வந்த பின் நானே புத்தகங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தேன். வருடத்திற்கு சுமார் பத்தாயிரம் ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை புத்தகங்களுக்காகச் செலவழிக்க ஆரம்பித்தேன். பிற்பாடு விஜயா வேலாயுதம் சாரும், அரங்கசாமியும் எப்போதும் புத்தகங்களால் என்னை ஆசீர்வதிப்பவர்கள் ஆனார்கள். கண்டதும் கழியதுமாக வாசித்துக்கொண்டிருந்த என்னை நெறிப்படுத்தியது வசந்தகுமார் அண்ணாச்சி. அவர் அள்ளி அள்ளி கொடுத்த புத்தகங்கள்தாம் இன்றென் நூலகத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. அரிய சிற்றிதழ் சேமிப்புகளை அள்ளி அள்ளி கொடுத்த ஜல்லிப்பட்டி பழனிச்சாமியும் நன்றிக்குரியவர். என்னிடம் இருக்கும் பாஸ்கர்சக்தி எழுதிய நூல்கள் அனைத்தும் அவர் அன்பளித்தவை.

ஒரு கட்டத்தில் இரண்டாயிரம் புத்தகங்களுக்கு மேல் சேர்ந்து விட்டன. பரண், பீரோ, கட்டிலுக்குக் கீழே, கட்டிலுக்கு மேலே என மேன்சன் அறை முழுக்க புத்தகங்கள். ஓர் ஆள் விரைத்தபடி படுத்திருக்க (புரண்டு படுக்க முடியாது) மட்டுமே இடம். மழை வந்தால் ரூமுக்குள் தண்ணீர் வந்து விடும். புத்தகங்களை நனையாமல் பாதுகாப்பது மரண அவஸ்தையாகி விடும். அவ்வப்போது அறைக்கு வடகரை வேலன் அண்ணாச்சி முதலில் இந்த கோழிக்கூண்டிலிருந்து வெளியே வா என இழுத்துப் போய் அவரது அச்சகம் அருகே ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்தினார். புத்தகங்களை அடுக்கி வைக்க ஹாலில் மிகப்பெரிய ஷெல்ஃப் இருந்த வீடு. தனி மனிதனாக அந்த 1500 சதுர அடி வீட்டில் புத்தகங்களோடும், டிவிடிக்களோடும் மூன்று வருடங்கள் அங்கு வாழ்ந்தேன். வீடு மாறுவதாக இருந்தால் பெரிய ஷெஃல்புகளும், வாசிக்கத் தனியறையும் உள்ள வீட்டிற்கே மாற முடியும் என்கிற அளவிற்கு நிலைமை உண்டானது. பாப்பா பிறந்த பிறகு ரேவதி நகரில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டிற்கு மாறி ஒரு படுக்கையறையை நூலகமாக மாற்றினோம்.

நண்பர்கள் மீனாட்சி சுந்தரம், ராஜன் ராமசாமி, கபிலமாறன் மற்றும் ராம் சிவபிரகாஷ் ஆகியோரது பேருதவியால் மதுக்கரை மலையடிவாரத்தில் அடுக்ககம் வாங்கி குடியேறிய போது இந்தப் புத்தகங்களை என்ன செய்வது என மலைப்பாக இருந்தது. புத்தகங்களின் எண்ணிக்கையை பாதியாக்குவதென்றும் இரண்டு படுக்கையறைகளுள் ஒன்றை நூலகமாக்கி விடுவது என்றும்  முடிவெடுத்தோம். பாக்கித் தொகை கொடுத்து வீட்டை கையகப்படுத்த முடியாத நிலையிலும், பெருந்தொகையினை வட்டிக்கு வாங்கி அலமாரிகள் அமைத்தோம். நண்பர் செந்தில் கலையுணர்வோடு அவற்றை செய்து கொடுத்தார்.

புத்தகங்களின் எண்ணிக்கையை குறைப்பது உடலின் ஒரு பாகத்தை வெட்டிக் கொடுப்பதைப் போன்ற அனுபவமாக இருந்தது. கூடவே அருமை தெரியாதவர்களிடம் நம் சேமிப்பு போய்ச் சேர்ந்து விடக்கூடாதே என்கிற கவலையுடன் தக்காரைத் தேடி அலைந்தோம். சாண்டில்யன், கல்கி போன்றவர்கள் எழுதிய விகடன் தொடர்களின் பைண்ட் வால்யூம் நிறைய்ய இருந்தன. வடவள்ளியில் ஒரு சாண்டில்யன் பக்தையைக் கண்டுபிடித்து திருப்பித் தரக்கூடாதென்கிற கண்டிஷனோடு அளித்தோம். அச்சுப்பிச்சு கவிதைத்தொகுப்புகளை சமகால அச்சுப்பிச்சுக் கவிதைகளை இணையத்தில் எழுதி வந்த எங்களூர் தோழி ஒருத்திக்கும் பெங்களூர் தோழி ஒருத்திக்கும் ‘நோ ரிட்டர்ன்’ பேஸிலில் ஒப்படைத்தோம். சிற்றிதழ்களை புத்தகங்களின் மீது பெருமதிப்பு கொண்ட கவிஞர் சக்தி செல்வியிடம் ஒப்படைத்தோம் (அதற்குப் பின் சேர்ந்த இரண்டு கட்டு இதழ்கள் அவருக்காக காத்திருக்கின்றன). பயன்மதிப்பென்று ஒன்று இல்லாத வணிக எழுத்தாளர்களின் படைப்புகள், சுயமுன்னேற்ற நூல்கள், கார்ப்பரேட் சாமியார்களின் நூல்களையெல்லாம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் தலையில் கட்டினோம். கல்யாணம், கிரகப்பிரவேசங்களுக்கு அதைச் செய்வது எப்படி? இதைச் செய்வது எப்படி வகையரா லைஃப் ஸ்கில் புத்தகங்களை கலர் தாளில் பொதிந்து எடுத்துச் சென்று போட்டோவிற்குச் சிரித்தபடியே மணமக்களை ஆசீர்வதித்தோம். சில ஆங்கிலப் புத்தகங்களை என் தங்கை ஜீவிகாவிற்கு அனுப்பினேன்.

மிச்ச புத்தகங்களை அட்டைப்பெட்டிகள் வாங்கி அடுக்கி கட்டி தனி ஆட்டோவில் புது வீட்டிற்கு எடுத்து வந்தோம். பால் காய்ச்சிய சமயத்தில்  நிறைய்ய வேலைகள் இருந்ததால், புத்தகங்களை அலமாரியில் வகை பிரிக்காமல் அப்படியே அடுக்கிவைத்து விட்டேன். மிஷ்கின் புத்தகங்களுடன் இருக்கும் படம் வெளியானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். புத்தகங்கள் மீது பெருமதிப்பும் விருப்பும் கொண்ட (இவரது புத்தக ஆர்வம் என் காதலில் விளையாடி இருக்கிறது; அதைப்பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்) இவர் ஏன் புத்தகங்களை இப்படி அலட்சியமாக குவித்து வைத்திருக்கிறார் என ட்வீட்டினேன். ஜ்யோவ்ராம் வீட்டில் இடம் இல்லாத தன் பிரச்சனையை சொன்னார். புத்தகங்களை இன்னும் வகைப் பிரித்து அடுக்காமல் இருக்கிறோமே என புத்திக்கு உறைத்தது. இந்த ஞாயிறை அதற்காக ஒதுக்கினேன்.

அனைத்து புத்தகங்களையும் ஹாலுக்கு கொண்டு வந்து எளிதாக தேடி எடுக்கும்படி கீழ்க்கண்ட தலைப்புகளில் பிரித்தேன்.

* அடிக்கடி ரெஃபரென்ஸ் (திருக்குறள், பைபிள், சங்க இலக்கியங்கள், பாரதியார், பட்டினத்தார் வகையரா)

* மொழிபெயர்ப்புகள் (ரஷ்ய இலக்கியம், பிற இந்திய மொழி படைப்புகளின் தமிழாக்கம் வகையரா)

* தமிழ் கிளாசிக் (என்னுடைய அபிப்ராயத்தில் க்ளாசிக் என கருதும் தமிழ் நாவல்கள் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால், புளியமரத்தின் கதை, மணல்கடிகை, ஆழிசூழ் உலகு, கன்னி, ரத்த உறவுகள் வகையரா)

* ஜெயமோகன் (ஜெயன் எழுதிய அனைத்து நூல்களும்)

* நவீன தமிழிலக்கியம் (பிற நவீனத்துவர்களின் எல்லா படைப்புகளும்)

* தத்துவம் மற்றும் ஆன்மிகம் (ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்தர் வகையரா)

* கவிதைகள் 

* வணிக எழுத்தாளர்கள் (சுஜாதா, பாலகுமாரன், தேவன், சாவி இன்னபிற)

* முக்கியமில்லாதது ஆனால் நினைவுகளைச் சுமந்திருப்பது (வாழ்க்கையில் முக்கியமானவர்களால் பரிசளிக்கப்பட்டவை. உ.ம்: மாமன் மகள் பரிசளித்த தண்ணீர் தேசம் வகையரா)

* முக்கியமில்லாதது ஆனால் நண்பர்களால் எழுதப்பட்டது

* ஆங்கில நூல்கள்

* பொது (வரலாறு, சூழலியல், மருத்துவம், காந்தி, நகைச்சுவை வகையரா)

ஏன் இந்த வேலையைத் துவக்கினேன் என எண்ணும்படி ஆகிவிட்டது. பெரும்பாலான புத்தகங்களைக் காணவில்லை என்பது இனம் வாரியாக பிரித்ததும் புத்திக்கு உரைத்தது. சுமார் 200 புத்தகங்கள் வரை இருக்கலாம். எல்லாமே வாசித்து விட்டுத் தந்து விடுகிறேனென இரவல் போனவை. சில புத்தகங்கள் மிக முக்கியமானவை. அவற்றை வாங்கியதும், வாசித்ததும் நினைவை விட்டு அகலாமல் இருந்ததாலேயே இந்த இழப்பை சட்டென்று உணர முடிந்தது.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு நூல் கூட இல்லை. ஜேஜே சில குறிப்புகள், கொங்குதேர் வாழ்க்கை முதல் பாகம், சங்க சித்திரங்கள், ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் முதல் பாகம், சேகுவேரா புத்தகங்கள், லா.ச.ராவின் நூல்கள், நாஞ்சில் நாடனுடைய முதல் மூன்று நாவல்கள், தியோடர் பாஸ்கரனின் மூன்று நூல்கள், சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலை மற்றும் ஏன் எதற்கு எப்படி, மதனின் மனிதனுக்குள் ஒரு மிருகம், பாலாவின் தன் வரலாற்று நூல், ராகுல் சாங்கிருத்யாயனின் பயண நூல், ஓஷோவின் புதியகுழந்தை மற்றும் நான் உனக்குச் சொல்கிறேன், ஜீவாவின் திரைச்சீலை, க.சீ.சிவக்குமாரின் புத்தகங்கள், ராஜூவ்காந்தி கொலைவழக்கு - ஏதோ ஒரு வகையில் புகழ் பெற்ற நூல்கள். வாசித்து விட்டு தருகிறேனென வாங்கிச் சென்றவர்களில் யாரிடம் எதைக் கொடுத்தேன் என்று கூட ஞாபகம் இல்லை. ஒரு சில ஞாபகம் இருந்தாலும் கேட்டுப் பெற கூச்சமும் தயக்கமும் உண்டு.

இப்படி இரவல் வாங்கிச் சென்றவர்களில் பல நண்பர்கள் முகநூலிலேயே இருக்கிறார்கள். நான் அவர்கள் மனம் புண்படுவதற்காக எழுதுகிறேனென தயவு செய்து நினைத்து விட வேண்டாம். உங்கள் எவரிடமும் எனக்கெந்த வருத்தமும் இல்லை. என்னுடைய பிரச்சனையெல்லாம் எதையாவது ரெஃபர் செய்ய அலமாரிகளைக் குடையும்போது குறிப்பிட்ட புத்தகம் கிடைக்காமல் போய் விடுவது என்னை அயற்சியடைய வைக்கிறது. ஏற்கனவே காசு கொடுத்து வாங்கி வாசித்த புத்தகத்தை திரும்பவும் காசு கொடுத்து வாங்க என் பொருளாதாரமும் இடம் கொடுப்பதில்லை.

ஒரு முறை புகழ் மிக்க இயக்குனர் நண்பர் கேட்டுக்கொண்டாரென நாஞ்சில் நாடனின் மொத்தப் புத்தகங்களையும் வாசிக்க கொடுத்தேன்.  அவர் அவற்றைப் படித்த கூறு ஒன்றும் அவரது படைப்புகளில் தட்டுப்படவில்லை. திருப்பியும் தரவில்லை. ஒரு பதிப்பாள நண்பரிடம் இதைச் சொன்னபோது கோபித்துக்கொண்டார். ஒரு படத்திற்குப் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறவருக்கு புத்தகங்கள் வாங்க முடியாதா என்றார். அத்தோடு, பிரபலங்களிடமிருந்து புத்தகங்களைக் கேட்டு வரும் அழைப்புகளுக்கு செவி சாய்ப்பதே இல்லை.

இது ஒரு வகை என்றால் புத்தகங்களை வாங்கி சீரழித்து தருவது இன்னொரு வகை. கன்னியும் புத்தகமும் கடனாய்ப் போனால் கசங்காமல் வீடு திரும்பாது என்பார் சுரதா. சாத்தான்குளத்தில் இருந்தபோது ஹிம்சாகர் எழுதிய கோட்ஸே எனும் நூலை வைத்திருந்தேன். ஒரு பழைய புத்தகக்கடையில் கிடைத்த அருமையான நூல் அது. ஊரில் பலரும் இரவல் வாங்கிப் படித்தார்கள். ஒரு இந்துத்துவர் ஆர்.எஸ்.எஸ் எதிரான கருத்துக்கள் இருக்கிறது என பல பக்கங்களைக் கத்தரித்து விட்டு திரும்ப கொடுத்தார். 1965ல் வாசகர் வட்டம் பதிப்பித்த ’இன்றைய தமிழ் இலக்கியம்’ இரவல் வாங்கிய சூழலியல் ஆர்வலர் ஒருவர் மா.கிருஷ்ணன் எடுத்திருந்த யானை படங்களை நைசாக கத்தரித்து எடுத்திருப்பதை வெகு நாட்கள் கழித்துதான் கண்டுபிடித்தேன். ஊரில் இரவல் வாங்கிய புத்தகத்திற்கு நேர்ந்த அனுபவத்தை முப்பெருந்தேவியர் என குறுங்கதையாக்கி இருக்கிறேன்.

இரவல் விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் ஓரளவுக்கு நாணயமானவர்கள் என்பதென் சுயகண்டுபிடிப்பு. இன்னும் டிவிடி வட்டுக்களை இனம் பிரிக்கவில்லை. அதைச் செய்தால் மாரடைப்பே வந்து விடுமோ என்னவோ?!

- செல்வேந்திரன்

பின்குறிப்பு: கட்டுரையாளர் கவிஞர் சக்திசெல்வியிடமிருந்து அபகரித்த காவல் கோட்டத்தையும், உள்ளூர் நூலகத்தில் எடுத்த முத்துலிங்கத்தின் இரு புத்தகங்களையும், கவிஞர் உமாசக்தியிடமிருந்து வாங்கிய சுமார் 30 உலகசினிமா டிவிடிக்களையும் இரண்டு வருடங்களாகத் திருப்பித் தரவில்லை என்பதை பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்கிறார்.


Comments

அட...! இத்தனையா...! வாழ்த்துக்கள்...

செலவு அல்ல... சேமிப்பு...

அடிக்கடி ரெஃபரென்ஸ் : பாராட்டுக்கள்...

Popular Posts