யேசு கதைகள்
பால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது.
யேசுவை ஒரு கடவுளாக அன்றி தத்துவஞானியாகப் புரிந்துகொள்ள இளமையில் வாசிக்கக் கிடைத்த ஓஷோவின் நூல்கள் உதவின. அவை ஒரு புதிய புரிதலை உருவாக்கின. ஸக்காரியாவின் யேசு திருச்சபைகளின் வேதப்புத்தகங்களின் வழியாக உருவாகி வந்த யேசு அல்ல. முற்றிலும் மதத்திற்கு அப்பாற்பட்ட, பரிதாபத்திற்குரிய, மீட்கப்பட வேண்டிய, அன்பும் கருணையும் காட்டப்பட வேண்டிய ஒரு சக நண்பனான யேசு.
'இத்தனை ஆயிரம் குழந்தைகளுடைய குருதியுனூடேதான் ஒரு ரட்சகன் வருகிறானா?!' என்ற படைவீரனின் கேள்வியில் உச்சம் பெறுகிறது 'யாருக்குத் தெரியும்?' எனும் முதல் கதை (இக்கதையினை ஏற்கெனவே எம்.எஸ் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்)
அன்னம்மா டீச்சரின் நினைவுக்குறிப்புகள் கதையில் யேசு மீது தீவிர பிடிப்பு கொண்ட முதிர்கன்னி அன்னம்மா டீச்சர் தன் முப்பத்து மூன்றாம் பிறந்த நாளுக்குப் பிறகு 'இன்று முதல் நீ எனக்கு தம்பிதான்; என் வயதில் நீ இறந்து விட்டாய். இனி எனக்குத்தான் வயது கூடும். இனி நான் உன் அக்கா' என்கிறாள்.
கண்ணாடி பார்க்கும் வரை கதையில் தினமும் குளிக்க வாய்ப்பற்ற பாலஸ்தீன வாழ்வில் வேர்வையினாலும், தூசியினாலும் யேசுவின் தாடியில் பேன் பற்றிக்கொள்கிறது. கசகசப்பும் அரிப்பும் தாளவில்லை. முகச்சவரம் செய்து கொள்ள நினைக்கிறார். சல்லிக்காசு இல்லை. கூடவே, நீண்ட நாட்களாக ஒரு அடையாளமாக நிலைப்பெற்று விட்ட தாடியும், மீசையும் எடுத்து விட்டால் தான் எப்படி தோற்றமளிப்பேன் என்கிற மனக்கிலேசமும். ஒருவழியாக நாவிதரின் கடைக்குச் சென்ற யேசு முதன்முதலாகக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து பதட்டமடைந்து கடையை விட்டு குழப்பத்துடன் வெளியேறி மரியத்தின் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
அந்தோணியஸூக்கு போந்தியஸ் பிலாத்து கடிதம் எழுதுவதாக வரும் கதையில் 'வரலாறு யாரிடமும் கருணை காட்டுவதில்லை. அதன் ஒரு பாகமாக வரும் ரட்சகர்களையும் நம்ப வேண்டாம். ஏனெனில், அவர்களும் சரித்திரத்தின் தூண்டிலில் சிக்கிக்கொண்டவர்கள்தாம்' என ஆரம்பித்து 'தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியாதவர் ஒரு மீட்பரா?! ஒரு கணம் மீட்பவராகவும், மறுகணம் மீட்கப்பட வேண்டியவனாகவும் ஒருவனே எப்படி இருக்க முடியும்?!' என கேள்வி எழுப்புகிறார்.
செயலாளர் நினைவிழக்கிறார் கதையில் உயிர்த்தெழுந்து வரும் யேசுவை வழியில் சந்திக்கும் மரியம் 'உங்களுடைய தந்தையின் வீட்டில் உங்கள் ஆடைகளைத் துவைத்துத் தர ஒருவரும் இல்லையா?' என பரிதாபத்தோடு கேட்கிறாள்.
மதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்கச் செய்கிறது இச்சிறிய நூல். ஸக்காரியாவின் பாய்ச்சல் மொழியும், இயல்பான சித்தரிப்புகளும், கூரிய அங்கதமும் நல்ல வாசிப்பனுபவத்தை தருகின்றன. 'குருத்தோலை நுனிகள் நிறைந்த தேவாலயத்தின் உட்புறம் கதிர் முற்றிய வயல்வெளி போலிருந்தது' போன்ற கொட்டிக்கிடக்கிற உவமைகளுக்காகவும், 'அவருடைய மூக்கின் நுனியிலிருந்து அவர் எதைப் பார்க்கிறாரோ அதுதான் அவருக்கு வாழ்க்கை' போன்ற சிரிப்பை வரவழைக்கும் வரிகளுக்காகவும் பிரதியை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.
மூலமொழியில் வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது கே.வி. ஜெயஸ்ரீ-ன் மொழிபெயர்ப்பு. ஸக்காரியாவுக்கு இணையாக தமிழில் அதிகமும் யேசு பற்றிய கதையாடல்களை உருவாக்குகிற இன்னொருவர் ஜெயமோகன். அவரது யேசு கதைகளும் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டிய ஒன்றே.
நூல்: யேசு கதைகள்
மலையாள மூலம்: பால் ஸக்காரியா
தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ
விலை: ரூ.150/-
வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை
Comments