விஜயின் கதை

விஜயையும் ஆவேசத்தையும் பிரிக்க முடியாதுதான். ஆனாலும் ஒரு இரண்டரை வயது புலிக்குட்டிக்கு இத்தனை ஆவேசமா? நினைக்கையில் ராஜேந்திரனுக்கு ஆயாசமாக இருந்தது. பத்து நாட்களில் எத்தனை களேபரங்கள். மனித மாமிசம் சுவைக்கப் பழகி விட்ட புலியை விட்டு வைத்திருப்பது மானுட  விரோதமென அப்போதே சிலர் சமூக ஊடகங்களில் திருவாய் மலர்ந்திருந்தார்கள். இப்போது பிரச்சனை இன்னும் முற்றிப்போய் விட்டது.

சம்பவத்திற்குப் பின் விஜயை நெருங்க முடியவில்லை. வழக்கமாக உணவு கொடுக்கச் செல்லும் குட்டைய்யன், கூண்டை சுத்தம் செய்பவர், பற்களையும் நகங்களையும் அவ்வப்போது பரிசோதிக்கிற மருத்துவ உதவியாளர், உடல் எடை அதிகரித்து விடாமலும், செரிமானப் பிரச்சனைகள் உருவாகி விடாமலும் இருக்க உடற்பயிற்சி அளிக்கிற நிபுணர் என எவரையும் நெருங்க விடுவதில்லை. இவ்வளவு ஏன் அவனைப் பெற்றெடுத்த பெண்புலி பெரியநாயகியாலே கூட விஜயை சமாதானப்படுத்த முடியவில்லை. பாசத்தோடு அருகில் சென்று நாவால் நக்கிய பெரிய நாயகியின் முகரையில் படாரென்று ஒரு போடு. வலது கண்ணில் நகம் கீறி ஒரு வாரமாக கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது. சரி ஒருவேளை துணை தேவைப்படுகிறதோ என கல்கத்தாவில் இருந்து சில பெண்புலிகளை வரவழைத்து கூண்டிற்குள் விட்டார்கள். இரவுக்குள் ரத்தக்களரி ஆகிவிட்டது. கிழிந்த தாடைகளை தைப்பதற்கு நரம்புகள் மிச்சமில்லாத அளவிற்கு ருத்ர தாண்டவம்.

ராஜேந்திரன் தேசம் அறிந்த அனிமல் பிகேவியரிஸ்ட். பல காடுகளில் இந்திய அரசுக்காக உழைத்து விட்டு ஓய்வு பெற சில வருடங்கள் இருந்த போது இந்த மிருகக்காட்சி சாலையின் இயக்குனராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது நெடிய அனுபவத்தில் இத்தனை முரண்டு பிடிக்கிற ஒரு காணுயிரை அவர் கண்டதேயில்லை. சர்வதேச அளவில் புகழ்மிக்க உயிரியலாளர்கள் பலர் வந்து முயற்சித்துப்பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினர். அதற்குள் விஷயம் வெளியே கசிந்து விட்டது. எவனோ ஒரு ரிப்போர்ட்டர் மிருககாட்சி சாலை பராமரிப்பாளன் ஒருவனின் மண்டையைத் தடவி விஷயத்தை வாங்கி விட்டான். இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்கப் போகிறது கொலைகாரப் புலி? என கொட்டையெழுத்தில் கேனத்தனமான கவர் ஸ்டோரி. ஒரு புலியின் வாயில் ரத்தம் வழிந்து ஓடுகிறது. சுற்றிலும் மானுட உடல்கள். லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருந்தார். பத்திரிகை செய்தியை அப்படியே லவட்டி சேனல்கள் ஸ்க்ரோலிங் ஓட்டிக்கொண்டிருக்கின்றன. புதியதலைமுறையில் சாயங்காலம் மனுஷ்யபுத்திரன் நேரலையில் இது குறித்துப் பேச இருக்கிறாராம். நினைத்தாலே வயிறு கலங்குகிறது.

காலையிலேயே மனிதவளத்துறை அமைச்சகத்திடம் இருந்து அழைத்து விளக்கம் கேட்டார்கள். பேசிய உயரதிகாரி அமைச்சர் கடும் கோபத்தில் இருக்கிறார். மனித உயிர்களுடன் விளையாட வேண்டாமென எச்சரிக்கச் சொன்னார் என்றார். இந்த அமைச்சருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் உட்கட்சிப்பூசல். அந்த வாய்க்கால் தகராறினை வெள்ளைப்புலி விவகாரத்தில் பைசல் செய்யப் பார்க்கிறார். ஏற்கனவே சூழல் அமைச்சர் இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. காணுயிரின் உயிரைப் பறிக்கும் உரிமை எவனுக்கும் இல்லை. சொல்லப்போனால் புலி நிச்சயம் மானுடனை விட மகத்தானது. கூண்டிற்குள் விழுந்தவனைத்தான் அது தின்றது. கூடு விட்டு கூடு பாய்ந்தல்ல.. என மனிதவள அமைச்சர் அடிக்கடி பதவிக்காக கட்சி மாறுவதை சூசகமாக வைத்து ஒரு பொது விழாவில் பேசி விட்டார்.

வழக்கம்போல மிருகக்காட்சி சாலை மருத்துவர்கள் மீட்டிங் போட்டு பேசினார்கள். முந்திரி பக்கோடாக்கள் பல தட்டுகள் காலியாகியும் உருப்படியான யோசனை பெயரவில்லை. தூங்கிக்கொண்டிருந்த ஒரு சீனியர் திடீரென விழித்து நாம் ஏன் பாங்காங் புலிக்கோவிலில் இருந்து யாரையாவது வரவழைக்கக்கூடாது? புலிகளை பூனைகளாக்கும் வித்தை தெரிந்தவர்கள் அவர்கள் என சொல்லி விட்டு இருப்பதிலேயே பெரிய பக்கோடாத்துண்டைப் பெருமிதத்துடன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.

***


ஏர்போர்ட்.

சில்க் விமானத்தில் வந்திறங்கிய பிட்சு சங்லீங் பார்ப்பதற்கு முழுதாக வேக வைத்து உரித்த உருளைக்கிழங்கு போல இருந்தார்.  கிராமத்து கிழவிகள் ஜாக்கெட் போடாமல் புடவையைச் சுற்றியிருப்பது போல காவி உடுத்தியிருந்தார் பிட்சு. ராஜேந்திரன் இதற்கு முன்பு பார்த்த பிட்சுகளெல்லாம் பிசைந்த பரோட்டா மாவு நிறத்தில் இருப்பார்கள். இவர் மாநிறமாக இருந்தார். இலங்கைக்காரராகக் கூட இருக்கலாம். உதடுகளைப் பிரித்து பல மாதங்களாகியிருக்குமோ என ராஜேந்திரனுக்கு சந்தேகம் வரும் அளவிற்கு பிட்சு மெளனமாக இருந்தார். எதையும் பார்வையாலே கேட்டார். அவரது முகபாவத்தைப் புரிந்து கொண்டுதான் சிசுருஷைகள் செய்யவேண்டியிருந்தது.  கருவிழிகள் எப்போதும் மேல் நோக்கியே இருந்தன. இன்னதென்று பிரித்தரிய முடியாத மெள்ளிய மணம் அவரிடமிருந்து வீசிக்கொண்டிருந்தது.

முதல் இரண்டு நாட்கள் பிட்சு அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அறை வாசலில் புளித்த மணம் மட்டும் உலவிக்கொண்டிருந்தது. மூன்றாவது நாள் படாரென கதவைத் திறந்து தலையை ஒரு உதறு உதறினார். கண்கள் சிவந்திருந்தன. புலி எங்கே என்பதைத்தான் அப்படிக் கேட்கிறார் என்பதை உணர்ந்து விஜய் இருக்கும் கூண்டருகே அழைத்துப் போனான் குட்டைய்யன். சில நிமிடங்கள் விஜயை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். விஜயும் சங்லீங்கை உற்றுப்பார்த்தது. பிறகு உடம்பை ஒரு முறை உதறி சிலிர்த்தது. சர்ரென்று சிறுநீரைப் பீய்ச்சி விட்டு கூண்டுக்குள் இருந்த குகை போன்ற அமைப்புக்குள் சென்று விட்டது. சங்லீங் முழந்தாளிட்டு அமர்ந்து இரண்டடி நீளமுள்ள சில பத்திகளை எடுத்துப் பற்றவைத்தார். கண்களை மூடி தியானித்தார். பிறகு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதை இரண்டு நடுவிரல்களுக்கு மத்தியில் வைத்து வான்நோக்கி வணங்கினார். மீண்டும் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். ராஜேந்திரனுக்குக் கடுப்பாக இருந்தது. இத்தனை வருடங்கள் படித்து காட்டில் அல்லாடி தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் தன்னைக் கைவிட்டதை நினைத்து ஆற்றாமை பொங்கியது. எங்கிருந்தோ வந்த ஒரு சன்னியாசி இங்கே வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார். பிட்சுவின் உடல் குலுங்கியதைப் பார்த்ததும் ராஜேந்திரனின் சிந்தனை தடைபட்டது. கண்களை மெள்ளப் பிரித்த பிட்சு கிணத்துக்கடவு எங்கே இருக்கிறது? நான் தனியாக அங்கே செல்ல உடனே ஏற்பாடு செய்யுங்களென அழகான தமிழில் சொன்னார்.

ராஜேந்திரனுக்கு வியப்புத்  தாளாவில்லை. ஸ்வாமீ தங்களுக்குத் தமிழ் தெரியுமா?

காற்றிலசையும் சருகுகளின் மொழியைக் கூட கவனிப்பவனே ஞானியாகிறான். பதிலுக்குக் காத்திராமல் காரில் ஏறி கிளம்பிவிட்டார் சங்லீங். ஃப்ளிப்கார்ட்டில் ஸென் தத்துவங்களை ஆர்டர் செய்து வாசிக்க வேண்டுமென நினைத்துக்கொண்டார் ராஜேந்திரன். கார் சென்று மறையும் வரை காத்திருந்த கூண்டு பராமரிப்பாளன் குட்டைய்யன்  'சார் ஒண்ணு கவனீச்சிங்களா சார்.. என்னிக்கும் இல்லாம இன்னிக்கு நம்ம விஜய் ஒரு காலை லேசா தூக்கி ஒண்ணுக்கு அடிச்சாப்பல..'

***

சங்லீங் சென்று நான்கைந்து நாட்களாகியும் அணக்கம் ஏதும் இல்லை. அவரது அறையை கூட்டிப் பெருக்கச் சென்ற குட்டைய்யன் உள்ளே கோடு போட்ட அன்டிராயர்கள் கிடப்பதாகச் சொன்னபோதுதான் ஏதோ வில்லங்கமென கிணத்துக்கடவிற்கு ஆளனுப்பினார் ராஜேந்திரன். டாஸ்மாக் பார் ஒன்றில் அலங்கோலமாகக் கிடந்த சங்லீங்கை அள்ளி வந்தார்கள். விட்ட அறையில் மப்பு தெளிந்த பிட்சு தன் கொசுவர்த்தியை கொளுத்தினான்.

எம் பேரு சங்கரலிங்கமுங்க. கிணத்துக்கடவுதானுங்க ஊரு. தாய்லாந்துல வேலைன்னு காட்டை வித்துப் போட்டு  போனேனுங்க. கூட்டிட்டுப் போனவன் ஒரு எளநீ கடையில சேத்து விட்டுட்டு ஓடிட்டானுங். ஒருநா ஒருத்தரு வந்து புங்கட்டுல ஒரு ஸூவுல வேலை இருக்கு. புலிக்கு கறி போடறது. ஆனா, மொட்டையடிச்சு காவி கட்டிக்கணும்னாரு. மூணு வேள சோறு. நல்ல சம்பளம். சரின்னு போயிட்டேனுங்க. கொஞ்ச நாள்ல புலிக்கு எப்படி டோப்பு கொடுக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேனுங்க. புலிக்கு அறுவது நமக்கு நாப்பதுங்க.. எந்நேரமும் கெரகம் மப்புதானுங்க.. இந்தாங்க இந்த மருந்தை நெதமும் அவிச்ச கோழிக்கறியில கலந்து கொடுத்தீங்கன்னா.. செல்லம் போல உங்க கூட வருமுங்க.. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் அரைத்தூக்கத்துலயே கும்பகர்ணனாட்டம் கெடக்குமுங்க.. என்னய விட்ருங்க நான் தாய்லாந்துக்கே ஓடிப்போயிடறனுங்க...

***

அடுத்த மீட்டிங். சிலர் வற்புறுத்தி சொன்னதால் இந்த முறை வெங்காய பக்கோடா. பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைப் பற்றி ராஜேந்திரன் கவலையோடு பேசிக்கொண்டிருந்தார். பூனம் பாண்டே புலியை கொல்லாதீர்கள் என கோரிக்கை விடுக்கும் விதமாக உடம்பில் மஞ்சள் வர்ணம் (மட்டும்) பூசி ட்வீட்டரில் போஸ் தட்டியிருந்ததை ஒருவருக்கொருவர் ரகசியமாக வாட்ஸப்பில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். கடுப்பான ராஜேந்திரன் 'இத விட ஒரு சூப்பரான பூனம் பாண்டே வீடியோ என்கிட்ட இருக்கு. உருப்படியான ஐடியா சொல்றவங்களுக்கு மட்டும் அதை ஷேர் பண்ணுவேன்..' என அறிவித்தார். சடாரென ஆளாளுக்கு ஐடியாக்களை அள்ளித் தெளித்தனர்.

வயதில் இளையவனான ரஞ்சித் ஒரு புது யோசனையை சொன்னான். நாம் ஏன் துறைசார் நிபுணர்களையே இதற்காகத் தேடுகிறோம். பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிற ஒரு கார்ப்பரேட் கன்சல்டண்டினை அணுகினால் என்ன? அவர் புதிய கோணத்தில் பிரச்சனையை அணுகலாம் இல்லையா என்றான். சபாஷ்..அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஐடியா.. என ராஜேந்திரன் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். இளைஞன் அவரது பாக்கெட்டைப் பார்த்து அதிர்ந்தான். ராஜேந்திரன் வைத்திருந்தது நோக்கியா 1100.

***
பீட்டர் டிரக்கரின் கலையுலக வாரிசான திரு.மீட்டர் டிராக்டர் வரவழைக்கப்பட்டார். விஜய் சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தையும் மீட்டர் ஊன்றி வாசித்தார். சம்பவம் நடப்பதற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட வீடியோக்களை பெரிய எல்சிடி திரையில் ஓடவிட்டு ஓடவிட்டுப் பார்த்தார். அவ்வப்போது தனது லேப்டாப்பில் குறிப்புகள் எடுத்துக்கொண்டார். பல்வேறு எக்ஸெல் ஷீட்டுகளை உருவாக்கினார். சில அகலத்தில் மூன்று மைல் தூரம் வரை வந்தன. விஜய் பிறந்த போது பிரசவம் பார்த்த குட்டைய்யனை சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எழுதச் சொன்னார். விஜயின் தாயார் பெரியநாயகி மற்றும் தந்தையார் டேமியன் மார்ட்டீன் ஆகிய இருவரது பெர்பார்மன்ஸ் அப்பரைசல் இருக்கிறதா எனக் கேட்டார். ராஜேந்திரன் முளித்தார். அப்படி ஒரு வழக்கம் இதுவரை இருந்ததில்லை இனிமேல் ஃபைல் செய்து வைக்கிறேன் என பம்மினார். மார்ட்டீன் பெரிய காதல் மன்னனாக பூங்காவில் வலம் வந்ததையும் லேடீஸ் மிருகங்கள் மத்தியில் 'புலிகேசி' எனும் செல்லப்பெயர் அவருக்கிருந்ததையும் மீட்டர் கண்டுபிடித்தார். பூங்கா ஊழியர்கள் வாயடைத்துப் போயினர்.

ஏ.சி.நீல்சனில் இருந்து சில விற்பன்னர்களை மீட்டர் டிராக்டர் வரவழைத்தார். அவர்கள் இந்தியா முழுக்க புலிகளிடம் கடி வாங்கியவர்களைத் தேடிப்பிடித்து சில தகவல்களைத் திரட்டி வந்தனர். இன்போஷிஸ்-ல் இருந்து சில மென்பொருள் வல்லுனர்கள் வந்து தோள்களைக் குலுக்கி கீழுதட்டைப் பிதுக்கி என்னென்னவோ பேசினார்கள். இவரு ஏதோ சொந்த வேலையும் சேர்த்துப் பார்க்கிறார் என குட்டைய்யன் சந்தேகப்பட்டான். ராஜேந்திரனிடம் சொன்னபோது குட்டையனை அவர் கடிந்து கொண்டார். ஏற்கனவே, நீ டோட்டல் நெகட்டிவ் அப்ரோச் என சைக்கோமெட்ரிக் டெஸ்டில் தெரியவந்துள்ளது என்றார். குட்டைய்யன் நமக்கெதுக்குடா வம்பு என ஒதுங்கிக்கொண்டான்.

மீட்டர் டிராக்டர் புலியுடனான தன் சவாலுக்கு நாள் குறித்தார். ஒரு பிரம்மாண்டமான மீட்டிங் ஹால் செட் போடப்பட்டது. விஜய் கழுத்தில் ஒரு பெரிய டை கட்டி இழுத்து வந்தார்கள். எல்சிடி ஸ்கிரீன் உயிர்பெற்றது. மீட்டர் தொண்டையை கனைத்துக்கொண்டு பவர்பாயிண்ட் பிரசண்டேசனை ஓட விட்டார்.. 'No one can in this world cannot live with past laurell.. ஒருத்தனைப் போட்டுத் தள்ளிட்டோம்.. ஒரே நாள்ல பெரிய மீடியா ஸ்டாராயிட்டோம்கிற இறுமாப்பு is just unacceptable. நான் சில தகவல்களை உனக்கு போட்டுக்காட்ட விரும்புறேன். உன் தாய்வழிப் பாட்டி  மிஸஸ் சம்பாவதி குமாவுன் ஏரியாவுல மிகப் பெரிய சொர்ணாக்கா. 436 பேரை பொடனியிலயே போட்டவர். 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மான்னு' கேட்டுக் கதறாத ஆட்களே கிடையாது. ஆனா என்னாச்சி.. சீமையிலருந்து வந்த ஜிம் கார்பெட் அண்ணாச்சி சிம்பிளா ஸ்கேச்சு போட்டுட்டார். அவ்ளோ பெரிய அக்காடக்கராலேயே சர்வைவ் ஆக முடியல.


பாப்புலாரிட்டி ஆஸ்பெக்ட்லயும் சில டேட்டாஸ் உனக்கு காட்ட விரும்பறேன். நீ பஞ்சத்துக்குப் பாப்புலர் ஆன புலி. ஆனா பரம்பரை பரம்பரையா சோஷியல் மீடியாவுல பாப்புலர் ஆன புலிகள் நிறைய்ய பேரு இருக்கிறாங்க. தென்னாப்பிரிக்காவுல ஜான் வார்டியை கடிச்சு வச்ச கல்கத்தாக்காரன், லூசியான ஸ்டேட் யுனிவர்சிட்டி சின்னத்துல பரம்பரை பரம்பரையா நாட்டாமையா இருக்கிற மைக் & சன்ஸ் குடும்பத்தார், டேவ் சல்மோனியின் வளர்ப்பு பிள்ளைகள், கெவின் ரிச்சர்ட்ஸன் தோட்டத்துல வளர்ற நம்ம செவளை இவங்கள்லாம் தினமும் லட்சக்கணக்குல லைக்ஸ் வாங்குறவங்க. அவங்களே அமைதியா இருக்கும் போது யூ ப்ளடி Non Performing culprit... ஸ்லைடுகள் ஒளிர்ந்து கொண்டே இருந்தன. மீட்டர் பேசிக்கொண்டே இருந்தார். விஜயிடமிருந்து வல்லிசாக சத்தம் வரவில்லை. அவனது கனவில் சைபீரிய அழகிப்புலி ஐரீனாவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தான்.

***
இதற்கு மேல் செய்வதற்கொன்றுமில்லை. விதி விட்ட வழியென அனைத்து முயற்சிகளையும் கைவிட்ட நாளொன்றில் ராஜேந்திரனுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. தன்னால் புலியை சரி செய்து விட முடியுமென்றும் அதற்குத் தேவையானதெல்லாம் ஒரு மைக்கும் இரண்டு ஸ்பீக்கர்களும்தான் என ஒரு இளைஞன் எழுதியிருந்தான். தன்னுடைய முயற்சியினால் புலி பழைய நிலைக்குத் திரும்புவதுடன் இனி வாழ்நாளில் எந்த உயிரினையும் கொல்லத் துணியாது என்பதையும் உறுதி பட தெரிவித்திருந்தான். சல்லிப் பைசா செலவில்லை என்பதால் முயற்சித்துப் பார்க்கலாமென குட்டைய்யனும் எடுத்துச் சொல்ல ராஜேந்திரன் அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்டார்.

புலி இருந்த இடத்தில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு ஒரு தனியறையில் இருந்த மைக்குடன் இணைக்கப்பட்டது. தான் பேசும்போது யாரும் உடனிருக்க வேண்டாமென இளைஞன் கேட்டுக்கொண்டதால் அனைவரும் அறையை விட்டு வெளியேறினர். சிசி கேமரா மூலம் புலியின் செயல்பாடுகளை தனது மேஜையில் உள்ள கணிணி திரையில் ராஜேந்திரன் கண்காணித்துக்கொண்டிருந்தார்.

இளைஞன் கையில் சில வெள்ளைத்தாள்கள் இருந்தன. மைக்கை லேசாக விரலால் தட்டி விட்டு மெள்ள பேசத் துவங்கினான். வலது முன்னங்காலை தலை மீது வைத்து ஒருக்களித்துப் படுத்திருந்த விஜய் லேசாக தலை தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு, சடாரென்று உதறி எழுந்து நின்று உடலை ஒருமுறை சிலிர்த்துக்கொண்டான். குரல் வரும் திசை எது என தேடினான். ராஜேந்திரன் பரவசமடைந்தார். ஸ்பீக்கரை நோக்கி விஜய் மெள்ள நடந்தான். அறைக்குள் இளைஞன் விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். ஸ்பீக்கரை இரண்டு மூன்று முறை சுற்றி வந்தான் விஜய். மெள்ள சீறினான். விஜயின் உடல்மொழியில் ஏற்பட்ட மாற்றத்தினை ராஜேந்திரன் உணர்ந்தார். அவன் பதட்டமாய் இருக்கிறான். விஜயின் உடல் லேசாக அதிர்ந்தது. கண்கள் கலங்கின. அறைக்குள் இளைஞன் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு பக்கங்களாக வாசித்துக்கொண்டிருந்தான். புலியின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. திடீரென நிகழ்ந்தது அந்த மாற்றம். விஜய் தன் பின்னங்கால்களை நிலத்தில் ஊன்றி முன்னங்கால்கள் இரண்டையும் மேல் நோக்கி தூக்கியபடி எழுந்து நின்றான். ராஜேந்திரன் தன் வீட்டு டாமியைப் போல விஜய் நிற்கிறானே என ஆச்சர்யம் கொண்டார். பசித்தாலும் புல்லைத் திங்காத சம்பாவதி வழி வந்த விஜய் உலகப்புலிகள் வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தான். தன் முன்னங்கால்களால் நெஞ்சில் அடித்துக்கொண்டு கேவிக்கேவி அழுதான். ராஜேந்திரனும் குட்டைய்யனும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களது காணுயிர் வாழ்வில் தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் ஒரு மிருகத்தை இப்போதுதான் பார்க்கிறார்கள். அதன் அழுகை அதிகரித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் மூச்சுத்திணறி சுருண்டு விழுந்து விட்டது. அதன் உடல் வெட்டி வெட்டி இழுத்தது. புலிக்கு ஏதேனும் ஆகிவிடும் எனப் பயந்து கதவைத் தட்டி இளைஞனை நிறுத்தச் சொன்னார்கள்.

குட்டைய்யன் அலறியபடி ஓடி வந்தான் 'ஐயா… இந்த *&$%$#$% புலியக் கொன்னே புட்டான்யா..'

***
விசாரணையில் அந்த இளைஞன் தமிழிலக்கிய வாசகனென்றும், டில்லி வெள்ளைப்புலி சம்பவத்தின் போது தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய குறிப்புகள் - கவிதைகள் - அபிப்ராயங்களை வாசித்துக்காட்டியிருக்கிறான் என்றும் தெரியவந்தது. தாங்கவியலாத குற்றவுணர்ச்சி தந்த மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு புலி மரணித்திருக்கிறது என பிரேத பரிசோதனையில் ராஜேந்திரன் தெரிவித்தார். ஜெயமோகன் வெண்புலி-விவாதங்கள் எனும் தலைப்பில் புதிய இணையதளம் ஒன்றைத் துவங்கினார்.

***

முற்றிற்று (எனக்கு) 

Comments

Unknown said…
'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா'

முற்றிற்று (எனக்கு)
Unknown said…
எனக்கு முற்றிற்று
m.g. bala said…
தமிழ் சினிமாவுல கார்த்திக் சுப்பராஜ் பெரிய மாற்றத்த ஏற்படுத்திய மாதிரி தமிழ் எழுத்துலகத்துல ஒரு பெரிய நையாண்டி புரட்சியே பண்ணிட்டீங்க! வாழ்த்துக்கள்
அருமை செல்வா, வாய் விட்டு சிரித்தேன் பல இடங்களில்.

உங்கள் எழுத்துக்கள் விஷுவலாக எடுக்க நன்றாக இருக்கும். புலி போண்ற விஷயங்கள் இல்லாமல், எளிதாக காட்சிப்படுத்த கூடிய (இப்போதைக்கு) கதையோ அல்லது சம்பவங்களோ எழுதவும், அதை விஷுவலாக்க முயற்சிக்கவும்.


செல்வேந்திரன் டச்
முற்றிற்று (எனக்கு)
சூப்பர்! வாய்ப்பே இல்லை! சிரித்து சிரித்து வயிறே வலிக்கத்தொடங்கிவிட்டது.

Popular Posts