கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
கவிப்பெரும் சபை. புத்திளங்கவி ஒருவர் கவிதை வாசிக்க எழுந்தார். ஆடையும் தோற்றமும் ஐடி ஆட்களுக்குரியது. இலக்கியப் பால்வாடிகளுக்கேயுரிய களை முகத்திலிருந்தது. முதல் வரியைக் கூட வாசித்திருக்க மாட்டார். கூட்டத்தின் நடுவே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியபடி எழுந்தது. விக்கிரமாதித்யன்!
‘எந்த ஜாதிடா நீ..’ திகைத்த இளவலை அவையோர் பார்வையாலே சாந்தப்படுத்தி தொடரச் செய்தனர். வெளிறிய முகத்துடனும் மெல்லிய நடுக்கத்துடனும் இரண்டாவது வரியை வாசிக்கத் துவங்கிய போது ‘டேய் நீ சாணானா இருந்தா மளிகைக் கடை வை.. தேவனா இருந்தா வட்டிக்கு விடு.. வன்னியனா இருந்தா ஜாதிச்சண்டை போடுறா.. தாயளீ..’ அந்தப் பையன் அமர்ந்தே விட்டான். வாகையடி முக்கைத் தாண்டும் ஆனித்தேர் போல வலமும் இடமும் தள்ளாடியபடி கூட்டத்தார் தலைகளின் மீது கால்பதித்து சபை நடுவே குதித்தார் நம்பி ‘கவித மயிறு எழுதறானாமாம்.. மொதல்ல வேலையை விட்டுட்டு வாங்கடா..’ என கூவினார். வேட்டி ஒரு பக்கமாய் விலகிக்கிடந்தது. அல்லது கவிஞரெனில் அப்படித்தான் வேட்டி கட்ட வேண்டுமா என நான் அருகிலிருந்த ஜெயமோகனிடம் மிருதுவாகக் கேட்டேன். சன்னதம் கொண்டாடும் சாமியை ஆற்றுப்படுத்த பிரான்சிஸ் கிருபா எழுந்தார்.. இல்லை எழ முயற்சித்தார். அறைகையில் வளைந்த ஆணியை திருப்புளியில் பெயர்த்தெடுப்பது போல தன்னைத் தானே தரையிலிருந்து கிளப்பிக்கொண்டிருந்தார். படம் காட்டல் தொடர்ந்தது.
அன்றைய நிகழ்ச்சிக்கு நான் சில பல்கலை மாணவிகளை வேறு வரவழைத்திருந்தேன். பூனையைக் கண்ட புறாக்குஞ்சுகளைப் போல அவர்கள் வெடவெடத்துப் போயிருந்தார்கள். சிறுபத்திரிகை நீரோட்டத்தில் நாறவெள்ளம் பாயும் கிளைநதிகளும் உண்டு என்பதை அவர்களுக்கு விளக்கியபடி வெளியேறினேன்.
தெலுங்கானாவில் சில கோவில்களைப் பார்வையிட்டு விட்டு ஜெயமோகனுடன் அகோபிலம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விக்கியைப் பற்றி பேச்சு வந்தது. நான் அன்றைய தினத்தில் நம்பி நடந்து கொண்டது உச்சகட்ட அநாகரீகம் என பொறுமினேன். ஜெயமோகன் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் என்ன சொல்ல வர்றாருன்னு புரியலையா செல்வேந்திரன்.. வேலையை விட்டுட்டு வாடான்னா.. வேலையை விடுன்னு மட்டும் அர்த்தமில்லை.. வேலை, வருவாய், பதவிஉயர்வு, வெளிநாட்டுப்பயணம் எனும் லெளகீக அபிலாஷைகளின் இன்னொரு பகுதியாக கவிதை இருக்கிறதா அல்லது கவிதைச் செயல்பாட்டின் முன் இவை எதுவுமே எனக்கு ஒரு பொருட்டில்லை.. அதன் பொருட்டு எதையும் நான் இழக்கத் துணிவேன் எனும் கலை அர்ப்பணிப்பு இருக்கிறதா என்பதை அவர் கேட்கிறார். உனக்கு எது முதன்மையானது என்பதுதான் அந்தக் கேள்வியின் பொருள் என்றார். நான் நிமிர்ந்து உட்கார்ந்து பேச்சை கவனிக்கலானேன்.
லெளகீகமான எதையும் பின் தொடர்பவன் வெறுமையையே சென்றடைவான். காந்தியே கூட இந்திய விடுதலைக்குப் பின் வெறுமைக்குள்தான் சென்றார். வாழ்வு மிகச்சிறியது. உண்மையான அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் செய்யாத எதுவும் முழுமையடைவதில்லை. நான் எழுதும் நாவல்களின் வழியாக நான் மகிழ்வடையனும். அதுவொன்றே என் நியதி. சலிப்பில்லாத செறிவான முழுமையான வாழ்க்கையை வாழ தடையாக இருக்கும் எதையும் உதற தயாராக இருக்க வேண்டும். செத்துச் சொர்க்கம் புகுகையில் மேலே இருப்பவனிடம் ‘நீ கொடுத்த வாழ்க்கையை நான் நல்லாத்தான் வாழ்ந்திருக்கேன்னு’ சொல்ல முடியணும். உயிரின் இயல்பு ஆனந்தம். உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியதுதான் உன்னுடைய முழுமுதற் கடமை. நாம் எப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறோம் என திரும்பிப் பார்க்கையில் நமக்குச் சில ஞாபகங்கள் வெற்றிகள் இருக்கணும்.
ஒருவன் ஒன்றைச் செய்ய முடிவெடுத்து இறங்குகையில் அவனது தீவிரத்தை இயற்கையே சோதிக்கும். விதம் விதமான துயரங்கள் அணிவகுக்கும். நம் மரபில் இதை ஆதி தெய்வீகம், ஆதி பெளதீகம், அதியாத்மீகம் என்பர். அதாவது தெய்வம் தரும் துயரம், புற விஷயங்களால் துயரம், தனக்குத்தானே துயரம் என விதி நம் கரங்களைத் தடுத்து நிறுத்தும். ஒருவன் எதை இழந்தாலும் தான் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களை நோக்கி முன்நகர்கிறானா என்பதே முக்கியம்.
பேச்சு தீக்குண்ணிக்கு மாறியது. பவித்ரன் தீக்குண்ணி கேரளத்தின் முக்கியமான கவிக்குரல்களுள் ஒருவர். தீக்குண்ணி ஒரு மீன் வியாபாரி. தலைச்சுமையாய் மீன் கூடையை ஏந்தி தெருத்தெருவாக கூவி விற்பவர். நாளொன்றுக்கு நூற்றைம்பதைத் தாண்டாத வருவாய். இளமையில் இதை விட மோசமான தொழில்களைச் செய்திருக்கிறார். கேபிள் பதிக்க குழி எடுப்பது, ஹோட்டல்களில் பெஞ்சு துடைப்பது, சலூனில் முகச்சவரம் செய்பவராக, கல்லுடைப்பவராக ஏன் சமயங்களில் பிச்சை கூட எடுத்திருக்கிறார். ஆனால், இவற்றின் மத்தியில் கவிதைகள் எழுதியிருக்கிறார். தன் கவிதைச் செயல்பாட்டை தடை செய்யக்கூடிய எந்தவொரு வருவாயும் அவருக்கு முதன்மையானதல்ல.
ஓணத்திற்கு முந்தைய ஒரு மழை இரவு. வறுமையின் கோரம் தாங்காமால் தீக்குண்ணி தன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்து குடும்பத்துடன் திருச்சூரில் தண்டவாளத்தில் தலை வைத்து விட்டார். திடீரென விழித்துக்கொண்ட மூன்று வயது மகள் தண்ணீர் கேட்டு அழுகிறாள். மற்றொரு குழந்தையும் எழுந்துகொண்டது. இருவரும் தண்டவாளத்தில் படுக்க மறுக்கவே தற்கொலை செய்துகொள்ள முடியாமல் திரும்புகிறார். அதனையடுத்த நாட்களில் சோற்றுக்கு வழியில்லாமல் மகளுடன் தெருக்களில் பிச்சையெடுக்கிறார். அந்நாட்களிலும் கூட தனது கிழிந்த நோட்டில் தீக்குண்ணி கவிதைகள் எழுதாமலிருந்ததில்லை. மனைவியின் ஒரே தோட்டை விற்று முதல் தொகுப்பைக் கொணர்ந்தார். இரண்டாவது தொகுப்பு 500 பேரிடம் தலா இருபது ரூபாய் நன்கொடை பெற்று கொண்டு வரப்பட்டது. விதி என்னில் நிகழ்த்திய கருணையற்ற போரில் நான் கவிதையை ஆயுதமாய் ஏந்தினேன் என அறிவித்தார் தீக்குண்ணி. கேரள சாஹித்யம் உள்ளிட்ட பல விருதுகளும் எட்டு தொகுப்புகளும் வந்தபின்னரும் மீன் வியாபாரத்தை தவிர வேறொன்றையும் செய்வதற்கில்லை எனும் தீக்குண்ணியின் வாழ்வு நேரடியாக சொல்வது ‘முதன்மைபடுத்தலை’தான்.
சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் அரசு விடுதியில் தங்கிப்பயிலும் நூற்றுக்கணக்கான மாணவிகளுடன் எனக்கொரு உரையாடலுக்கு ஏற்பாடாகியிருந்தது. தங்கல் திரைப்படம் ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டியது என்றார் ஒரு மாணவி. இல்லையில்லை பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் பார்க்க வேண்டிய படம் என்றார் இன்னொரு மாணவி. பெண்களை இளக்காரமாகப் பார்க்கும் ஆண் வர்க்கம்தாம் இந்தப் படத்தை முதலில் பார்க்க வேண்டும் என்றார் மற்றொரு மாணவி. இது ஒரு ஆணாதிக்கப் படம். தன் அபிலாஷைகளைத் தன் பிள்ளைகள் மீது திணித்து அவர்களது பால்யத்தை வீணடித்த ஆணாதிக்கவாதி இந்தக் கதையின் நாயகன் என்றார் இன்னொரு பெண். ஒரு சினிமாவை இத்தனைக் கோணத்தில் விவாதிக்கத் துவங்கியிருப்பதே மகிழ்ச்சிதான்.
மஹாவீர் சிங் ஒரு ஆணாதிக்கவாதியா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தன் பிள்ளைகள் ஆடையலங்காரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையோ, குடும்ப விருந்துகளில் அரட்டையடிப்பதையோ, டிவியில் அபத்தக்களஞ்சியங்களைப் பார்ப்பதையோ, ஷாப்பிங் மால்களில் திரிவதையோ, தேடித் தேடித் தின்பதையோ தடை செய்தது இந்த முதன்மையாக்கலை முன்னிறுத்தித்தான் என்பதில் எனக்கு ஐயமில்லை. நுகர்வைப் போல வாழ்வை அழிக்கக்கூடிய பிறிதொன்றில்லை என்றேன். இதுவே அதியாத்மிகம். ஒருவன் தன் ஆன்மாவிற்கு விடுக்கும் சுயசவால். தனக்குத்தானே கட்டிக்கொள்ளும் கல் சமாதி.
வி.வி.எஸ். லெஷ்மணனை சந்தித்து உரையாடும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. மருத்துவர்கள் சூழ் குடும்பத்தில் பிறந்து மெடிக்கல் படிக்க சீட் கிடைத்தும் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தபோது இரண்டு வருடங்களுக்கு தினமும் எட்டு மணி நேர பயிற்சியைத் தவிர வேறெதையும் செய்ததில்லை. அரைக்கால் நிமிடம் கூட வீட்டை விட்டு வெளியேறி ஒரு நண்பனைத் தேடிச் சென்றதில்லை என்றார். இந்தியாவின் மிகச்சிறந்த பியானிஸ்ட் ஸ்டீபன் தேவஸி தொடர்ந்து பல வருடங்கள் பூட்டிய அறைக்குள்ளே கிடந்து பயிற்சி செய்தவர். கதவைத் திறந்து பார்த்தபோது உலகமே சின்னதாகத் தெரிந்தது என்றார் கண்கள் ஒளிர. லண்டன் இசைக்கல்லூரியில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆசியர் எனும் இவரது சாதனை பல வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருக்கிறது. ஜோஸ்னா சின்னப்பா தேசிய பட்டத்தை தன் பதினேழு வயதில் வென்றபோது ‘Entertainment can wait' என ஒரு பேட்டியில் சொன்னதை அவர்களிடம் நினைவு கூர்ந்தேன்.
கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்.. சதிரிள மடவார் தாழ்ச்சி மதியாது.. பயனல்ல செய்து பயனில்லை எனச் சொன்ன என் பக்கத்து ஊர்க்காரரை வீடு திரும்புகையில் நினைத்துக்கொண்டேன்..
- செல்வேந்திரன்
Comments