மறவோம்
நண்பர்களே,
லண்டனில்
வசிக்கும் சிவா கிருஷ்ணமூர்த்தி
எனும் இளம் எழுத்தாளர் ஒரு
சிறுகதை
எழுதியுள்ளார்.
மறவோம்
என்பது தலைப்பு.
பகுதி
நேரமாக பீட்ஸா டெலிவரி செய்யும்
இந்திய மாணவனும்
உலகப் போர்க்கால
கவிதைகள்
கடிதங்கள் மீது ஆர்வம் கொண்ட
முதியவரும் உரையாடும்
ஒரு சிறந்த கதை.
முதன்
முதலில் பெரியவரின்
வீட்டுக்கு
பீட்ஸா டெலிவரி செய்யவரும்
இளைஞன் சுவரில் எழுதப்பட்டிருக்கும்
புகழ்மிக்க போர்க்கவிதையொன்றின்
சில வரிகளை வாசிக்கிறான்
“அவர்களுக்கு என்றும்
வயதாவதில்லை.
எஞ்சி/மிஞ்சிய
நமக்குத்தான் வயதாகப் போகிறது”
என்கிற லாரண்ஸ் பினாயின்
(
For the fallen)
வரிகள்.
‘அடடே
கவிதைகள் வாசிக்கிற தம்பியா
நீ’ என வியந்து
பாராட்டுகிறார்
அந்தப் பெரியவர்.
அவர்களுக்குள்
நட்பும் கவிதை சார்ந்த
உரையாடலும் உருவாகிறது.
சுற்றிலும்
கொத்து கொத்தாக
மரணங்கள்,
உடல்
உறுப்புகளை இழந்து படிப்படியாக
உயிரிழந்து கொண்டிருக்கும்
ஆத்மாக்களின் கதறல்கள்,
கொடிய
பருவநிலை,
வீடு
திரும்புதலின் சாத்தியங்களே
தட்டுப்படாத திகைப்பு,
நாற்புறமும்
பசியும் நோய்களும் -
இப்படியான
சூழலில் எப்படி
கவிதைகள்
எழுதுகிற மனநிலை வாய்த்தது?
இயற்கையைப்
பற்றிய துல்லிய
அவதானங்கள்
சாத்தியமானது எப்படி?
போன்ற
கேள்விகள் இளைஞனுக்குள்
எழுகின்றன.
இதற்கு
மேல் சொன்னால் ஸ்பாயிலர்.
சொல்வனத்தில்
கதையை வாசித்துக்கொள்ளலாம்.
‘அடடே
கவிதைகள் வாசிக்கிற தம்பியா
நீ’ எனும் வரிகளை
வாசிக்கையில் நான் அடைந்த
உளக்கிளர்ச்சிக்கும்
மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை.
அந்தப்
பெரியவர் எனைப் பார்த்து
கேட்டதைப் போலவே நான் உணர்ந்தேன்.
16
லட்சம்
பேர் வாழ்கிற கோவையில் கவிதைகள்
வாசிக்கிற தம்பிகள் என ஒரு
ஐம்பது பேரைத்தான் திரட்டமுடியும்.
தமிழகம்
என்று விரித்துக்கொண்டால்
ஒரு ஆயிரம் கவிதைகள் வாசிக்கிற
தம்பிகள்.
அந்தத்
தம்பிகளுள் ஒருவராக என்
பிரியத்திற்குரிய சில கவிதைகளை,
அதன்
அனுபவங்களை,
என்
தடுமாற்றங்களை உங்களோடு
பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த
மேடையில் இளமையில் என்னை
ஆகர்சித்த பெரும் படைப்பாளி
சோ.தர்மன்
இருக்கிறார்.
என்
தந்தை சொல்வார் ‘டேய் நாம
திடீர்னு செத்துப் போயிட்டா
பிரேதப் பரிசோதனையில் குடலில்
கொஞ்சம் கந்தகமும் பொட்டாசியம்
குளோரைட்டும் இருந்திச்சுன்னு
ரிப்போர்ட்ல வந்தாதான் நாம
ஒழைச்சிருக்கோம்னு அர்த்தம்’
என்பார்.
தீப்பெட்டியை
தின்று தின்று தீயெரிந்த
வாழ்வு எங்களுடையது.
கால்
நூற்றாண்டுகளாக கோவில்பட்டியின்
கருமருந்தை தின்று வாழும்
தீப்பெட்டித் தொழிலாளர்களையும்,
கரிசல்
கீதாரிகளையும் நரிக்குறவர்களையும்
எழுத்தில் சித்தரித்தவர்.
கொஞ்சம்
விட்டால் எழுத்தாளர்களின்
மடியேறி கன்னச் சதையை
கிள்ளிப்பார்க்கும் இயல்புள்ளவன்
நான்.
சோ.
தர்மனிடம்
மட்டும் விதிவிலக்கு.
காரணம்
அந்த மீசை.
அவரை
வணங்குகிறேன்.
இக்கால
வாசகன் சில எழுத்தாளர்களை
மட்டும்தான் ஒரெழுத்து விடாமல்
படித்து விட சாத்தியம்.
அப்படி
நான் வாசிக்கிற எழுத்தாளர்களுள்
ஒருவர் சு.வேணுகோபால்
இந்த அவையில் இருக்கிறார்.
அவரை
வணங்குகிறேன்.
2004-ஆம்
ஆண்டு ஆகஸ்டு மாதம் என் சிற்றூரை
விட்டு இந்த தருமமிகு கோவைக்கு
ஓடிவந்தேன்.
என்
கையில் மிச்சம் இருந்த இருபது
ரூபாயில் இரண்டு புத்தகங்கள்
விஜயா பதிப்பகத்தில் வாங்கினேன்.
ஒன்று
கோவை டைரி.
இன்னொன்று
வண்ணதாசன் எழுதிய சிறுகதைகளின்
தொகுப்பு சமவெளி.
தமிழின்
அழியாச்சுடர்களில் ஒன்றான
நிலை எனும் கதையுள்ள தொகுப்பு.
இரண்டு
புத்தகங்களுமே என் வாழ்வை
தீர்மானித்தன.
பதினைந்தாண்டுகளாக
என் அறிவுப்பசி போக்கும்
விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர்
வேலாயுதம் அவர்களை வணங்குகிறேன்.
நண்பர்களே,
கவிதை
ரசனை மிகுந்த அந்தரங்கமானது.
அவற்றைத்
தெரிந்துகொள்வதன் மூலம்
ஒருவனின் ஆளுமையையும் மனம்
செயல்படும் விதத்தையும் கூட
யூகித்துக்கொள்ள முடியுமென
நான் நினைக்கிறேன்.
வாசிக்கையில்
கவிதைகள் உருவாக்கும்
அந்தரவெளியும்,
அக்கணத்து
தன்னழிவும்,
அகத்தில்
நிகழும் உணர்வு மாற்றங்களும்
தொடர்ந்து கவிதைகள் மீது
பெருவியப்பை உருவாக்கிக்கொண்டே
இருக்கின்றன.
உண்மையில்
கவிதைகள் நத்தையின் உணர்கொம்புடன்
அணுகுபவர்களுக்கானது.
அந்தோ
பரிதாபம் நான் காண்டாமிருகத்தின்
தோல் கொண்ட வணிகன்.
திரிந்த
பாலிலும் பயன்மதிப்பு துளாவும்
தன்மையுடையவன்.
என்
போன்ற ஒருவனையும் கவிதை ஏதோ
செய்கிறதென்பதே ஈராயிரம்
ஆண்டுகளாய் நிகழும் சாகஸம்.
தீபாவளி
போனஸை சிட்டைக்கு விடும்
கெட்டிக்காரர்கள் கூட கவிதைகளைப்
பற்றி பேசுகையில் பூடகமான
மொழிக்குத் தாவிவிடுவதை
கவனித்திருக்கிறேன்.
ஜிப்பரீஸில்
கவிதைகள் எழுதப்படாதபோது
கவிப்ராயங்கள் மட்டும் ஏன்
மாயமொழியில் நிகழ்கின்றன
எனும் கேள்வி இடக்கானதல்ல.
ஜீவாத்மாக்கள்
உவமை,
உருவகம்,
படிமம்,
இமேஜ்
போன்ற திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட
சொற்களையே கவிதை உரையாடல்களில்
பயன்படுத்த வேண்டும் எனும்
கட்சியை சேர்ந்தவன் நான்.
தனிப்பட்ட
முறையில் கவிதைகளை சங்ககால
கவிதை,
மரபுக்கவிதை,
புதுக்கவிதை,
நவீன
கவிதை,
பின்நவீனத்துவ
கவிதை,
மொழிபெயர்ப்பு
கவிதை,
பெண்ணிய
கவிதை என்றெல்லாம் பிரித்துப்
பார்ப்பதில்லை.
வாசிக்கையில்
என்னை ஏதோ செய்கிற,
நான்
வளர்கையில் கூடவே வளர்கிற,
வாழ்வின்
உச்ச தருணங்களில் நினைவில்
வந்து குதிக்கின்ற கவிதைகளைத்
தேடி தேடி சேகரித்து என் பிரிய
கவிதைகளாகக் கோர்த்துவைத்துக்கொள்ளும்
வழக்கமுடையவன்.
ஆகவே
இந்த மேடையில் நான் கவிதை
என்று உத்தேசிப்பது பிறிதொன்றிலாத
தன்மையுடைய,
எக்காலத்திற்குமான,
மூளையால்
எழுதப்படாத,
ஆத்மாவின்
அந்தரங்க விகசிப்பாக,
சொற்களால்
எத்தனை விளக்கினாலும் கைநழுவிச்
சென்று இன்னொரு கிளையில்
அமர்ந்து கொள்ளக்கூடிய
கவித்துவம் எனும் அம்சமுடைய
கவிதைகளைத்தான்.
ஆங்காரமான
சொற்பெருக்குகளும் கூட அதன்
தூய உணர்ச்சிக்காக சமயங்களில்
என்னை வாரிக்கொள்வதுண்டு.
பள்ளி
நாட்களில் திருநெல்வேலிக்கு
அந்தப் பக்கம் ஊரில்லை.
பாரதி
தவிர வேறு கவிஞரில்லை என்று
நிம்மதியாக வாழ்ந்து வந்தேன்.
திடீரென
எங்கோ‘பூமிப்பந்தைப்
புரட்டிப்போடும் நெம்புகோல்
கவிதையை எழுதப்போவது உங்களில்
யார்?’
எனும்
சவாலைக் கேட்டேன்.
எத்தனையோ
போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறோம்.
பூமியைப்
புரட்டுவதிலும் கலந்துகொள்வோமே
என்று நான் புதுக்கவிதைக்கும்
புகுந்தேன்.
அப்புறமென்ன..
-
கந்தையானாலும்
கசக்கிக் கட்டு..
சரிதான்
அது காயும்வரை எதைக்கட்டுவது;
அவன்
ஒரு பட்டுவேட்டி பற்றிய
கனாவில் இருந்தபோது கட்டியிருந்த
கோவணம் கழவாடப்பட்டது;
இரவினில்
வாங்கினோம் விடியவே இல்லை;
ராமருக்கு
கோவில் வேண்டும்,
பாபருக்கு
மசூதி வேண்டும்,
ஜனங்களுக்கு
நல்ல கழிப்பறைகள் வேண்டும்.
சினிமாவை
சின்ன தீக்குச்சிக்கு
உண்ணக்கொடுப்போம் -
புதுக்கவிதைகளின்
வழியாக நிகழப்போகும் புரட்சிக்குக்
காத்திருந்தேன்.
ஏய்
இளைஞனே,
எழுக
தேசமே,
என்னுயிரே,
ஏழைகளே,
என்னவளே,
ஏமாந்த
சோனகிரியே.
அறைகூவல்களின்
மதுரநாட்கள்.
ஒரு
பதினைந்து வயதிருக்கும்;
வனம்
புகுதல் என்றொரு தொகுப்பை
பற்றிய இந்தியா டுடேயில்
சிறுகுறிப்பும் அதிலிருந்து
ஒரு கவிதையும் பிரசுரமாகியிருந்தது.
அந்திக்கருக்கலில்
இந்த
திசை தவறிய
பெண்
பறவை
தன்
கூட்டுக்காய்
தன்
குஞ்சுக்காய்
அலைமோதிக்கரைகிறது.
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும்
தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை
புரியவில்லை.
கலாப்ரியா
எழுதியது.
நவீன
கவிதைகளுக்கான என் ஜன்னல்
திறந்து கிரணத்தின் முதல்
வெளிச்சம் உள்ளே பாய்ந்து
விட்டது.
ஒரு
திட்டவட்டமான கருத்தைச்
சொல்வது மட்டுமல்ல கவிதையின்
நோக்கம் என்பது புரிந்தது.
கவிதை
என்பது திறக்கக்கூடிய ஜன்னல்
என கானாடுகாத்தான் ஆயிரம்
ஜன்னல் வீட்டைச் சுட்டி
ஒருமுறை தேவதச்சன் சொன்னதுபோல
என் கவிதை வாசிப்பின் ஜன்னல்கள்
ஒவ்வொன்றாய் திறக்கத் துவங்கின.
இன்று
இந்த மேடையில் இளமையில் என்னை
ஆரத்தழுவிய வரிகள் ஒவ்வொன்றாய்
நினைவில் முட்டி நிற்கின்றன.
வாழ்ந்து
கெட்டவனின் பரம்பரை வீடு,
நினைவில்
காடுள்ள மிருகம்,
சிறகிலிருந்து
உதிர்ந்த இறகு,
காலில்
காட்டைத் தூக்கிக்கொண்டு
அலையும் வண்ணத்துப்பூச்சிகள்,
யாரோ
ஒருவனென எப்படிச் சொல்வேன்,
கல்வெள்ளிக்கொலுசு
கற்பனையில் வரைந்த பொற்பாத
சித்திரம்,
எனக்கும்
தமிழ்தான் மூச்சு -
இதுகாறும்
வாசித்த கவிதைகளின் அகவலோசை
இல்லை.
கூச்சல்
இல்லை.
பிடதியில்
அடித்து கழுத்தைத் திருப்பி
கவனிடா நாயே எனும் மிரட்டல்
இல்லை.
ஒரு
மீச்சிறிய கணத்தை,
அசட்டையாக
விட்டுவிட சாத்தியமுள்ள
உணர்ச்சியை,
சாமான்யத்தின்
அசாதாரணத்தை நோக்கி பார்வையை
திருப்புகிறதே இக்கவிதைகள்.
இப்படியாக
என் வாசிப்புப் பிரவேசம்
ஆரம்பமாகியது.
எனக்குப்
பிரியப்பட்ட கவிதைகளின்
பொதுமையைகளை யோசிக்கும்போது
ஜெயமோகனின் தமிழாசான் கூற்று
நினைவுக்கு வருகிறது.
ஒரு
செய்யுளை அசை பிரித்து அதன்
கவித்துவ தருணங்களை விளக்கி
ஒருவர் பாடம் சொன்னபின்னும்
மனனம் செய்ய வேண்டியிருந்தால்
அந்த கவிதை பொதுமான அளவிற்கு
அனுபவிக்கப்படவில்லையென்று
பொருள்.
நான்
மீண்டும் மீண்டும் அனுபவிக்கிற
கவிதைகள் வாழ்வின் தருணங்களிலெல்லாம்
உடன் வரும் மூலமந்திரமாகி
இருப்பதைக் கவனிக்கிறேன்.
பிரத்யேக
கூறுமுறைகள் கொண்ட நவீனத்துவ
கவிதைகள் கூட எப்படி மனதிற்குள்
புகுந்து சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கின்றன என்பதை
நினைத்துப்பார்க்கையில்
ஆச்சர்யமாக இருக்கிறது.
நாம்
வளரும்போதெல்லாம் இந்தக்
கவிதைகளும் நம்மோடு சேர்ந்து
வளர்கின்றன.
அந்நேரத்தைய
மன நிலைகளுக்கேற்ப புத்துருவம்
கொள்கின்றன.
பிறிதொன்றிலாத
தன்மை,
கூறுமுறையில்
கைக்கொள்ளும் சந்தம்,
வாழ்க்கை
நோக்கு,
கட்டற்ற
வெளிப்பாடு,
உள்ளிறைச்சியாக
உறையும் ஆன்மீகம்,
கள்ளமற்ற
தன்மை,
மிக
நுண்ணிய தருணங்களின் சித்தரிப்பு,
அபத்தங்களின்
மீதான மென்பகடி,
மூலமந்திரம்
போல வாழ்வு முழுக்க உடன் வரும்
சாஸ்வதம் இவையெல்லாம்தான்
என்னை கவிதைக்குள் இன்றும்
கட்டி வைத்திருக்கும் ஒன்று
என நான் கருதுகிறேன்.
நண்பர்களே,
சோவியத்
வீழ்ச்சிக்குப் பிறகு
தமிழ்க்கவிதைகளில் பெரும்
மாற்றங்கள் நிகழ்ந்ததாக
விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.
உலகமயமாக்கலுப்பின்
உண்டான லெளகீக நெருக்கடிகள்,
அமெரிக்க
நிர்வாகமுறை அத்தனை துறைகளிலும்
நுழைந்த பின் மனிதன் ஒரு
கருவியாக கருதப்படுவதால்
உண்டாகும் ஆன்மீக நெருக்கடிகள்,
தொழில்நுட்பம்
மனிதரில் உண்டாக்கியிருக்கும்
வெறுமை அல்லது இரைச்சல்கள்,
தனிமை,
கழிவிரக்கம்,
பேரினவாதம்,
ஒற்றைப்பண்பாட்டு
முயற்சி இவையெல்லாம் சமகால
கவிதைகளில் தொடர்ந்து
பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன.
ஒருமுறை
புழல் சிறையை தனது காவல்துறை
நண்பர்களோடு பார்வையிட்டார்
ஜெயமோகன்.
சிறைச்சுவரெங்கும்
ஏராளமான கிறுக்கல்கள்.
விதம்
விதமான உணர்ச்சிகளின்
வெளிப்பாடுகள்.
ஒரு
சுவற்றில் ஓத்தா..
ஓத்தா..
ஓத்தா..
ஓத்தா
என வரிசையாக எழுதி கீழே
சாகமாட்டேன்டா என்று
முடிந்திருந்தது அந்த வாக்கியம்.
ஏன்
இதையெல்லாம் அழிக்காமல்
வைத்திருக்கிறீர்கள் என்று
ஜெயமோகன் கேட்டபோது ‘ஒரு
ஆன்மாவின் ஆங்காரம் சார்
இது..
இதை
எப்படி சார் நாம அழிக்கறது..’
என்றாராம்
உடனிருந்த நண்பர்.
சிறையோ,
போர்முனையோ,
வதை
முகாமோ,
மரணத்
தருவாயோ மனிதர்கள் உள்ளிருந்து
உழற்றும் குரலைப் பதிவு
செய்யத் தயங்குவதே இல்லை.
போரில்
மாண்டவர்களின் நினைவிடங்கள்
இல்லாத நாடில்லை.
எந்நாடாயினும்
முன்நின்று கல்நின்றவர்களின்
கல்லறை வாசகமாக ‘மறவோம்’
என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.
இன்றைய
வாழ்வின் இரக்கமற்ற தன்மை
முதல் உலகப்போரின் காட்சிகளை
விடவும்
கொடுமையானவை.
ஒரு
சாம்பார் பொடி பாக்கெட்டுக்காக
ஆதிவாசி அடித்துக் கொல்லப்படுகிறான்.
கோஷமிடுபவர்களின்
வாயில் குறிபார்த்து
சுடப்படுகிறது.
ஒரு
சிறுமியை இருபது கிழவர்கள்
கூடி கற்பழிக்கிறார்கள்.
டவுண்
பஸ்ஸூக்காகக் காத்திருக்கும்
எளிய மனிதர்கள் மீது ஆடிகார்
ஏறுகிறது.
மானுட
இரத்தத்தால் கழிப்பறைகள்
கழுவப்படுகின்றன.
மறவோமில்
வரும் தம்பியைப் போலவே எனக்கும்
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..
இந்த
நிலையிலும் நம் கவிஞர்கள்
எழுதுகிறார்களே என்று..
மொழிக்குள்
மொழிக்குள் மொழிக்குள்
மொழிக்குள் நிகழும் நுண்ணகங்காரச்
செயல்பாடாக ‘மறவோம்..
மறவோம்..
மறவோம்..’
என்றுதான்
இசையும்,
மனுஷ்யபுத்திரனும்,
கரிகாலனும்,
யவனிகாவும்,
வெயிலும்,
இளங்கோவும்,
போகனும்,
பெருந்தேவியும்
இன்ன பிற நூற்றுக்கணக்கான
பாணர்களும் எழுதி வைக்கிறார்களோ?
நன்றி.
வணக்கம்.
(04-08-2018
அன்று
விஜயா பதிப்பகம் நடத்திய
வாசகர் திருவிழாவில் ஆற்றிய
உரையின் சுருக்கமான வடிவம்)
Comments