வெள்ளி நிலம்

     உங்களைப் போலவே நானும் இளமையில் சாகஸங்கள் நிறைந்த அறிவியல் புனைகதைகளை வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன். அப்படி வாசித்த கதையொன்றில் வில்லன் தனது எதிரிகளின் தலையணைக்கு அடியில் ஒரு கருவியை மறைத்து வைப்பான். கொடூர கனவுகளை உருவாக்கும் கருவி அது. மிதமிஞ்சிய ரத்த அழுத்தம் ஏற்பட்டு மரணித்து விடுவார்கள். நாவல் படு சுவாரஸ்யமாக இருந்தது. எழுத்தாளர் அந்த டிரீம் மேக்கிங் டிவைஸ் குறித்து துல்லியமான தகவல்களைத் தந்திருந்தார். பிராண்ட் நேம், மாற்ற வேண்டிய பேட்டரியின் அளவு உள்பட. ஓர் அப்பாவி வாசகனாக நான் அப்படியொரு கருவி இருந்ததாக உண்மையில் நம்பிக்கொண்டேன். ஓர் அறிவார்ந்த சபை உரையாடலில் அந்த கருவியின் சாத்தியத்தைப் பற்றி நான் ஏதோ பேச மொத்த அவையோரும் சிரித்து விட்டார்கள். மிகுந்த அவமானமாகப் போய்விட்டது. பிறகுதான் தெரிந்தது அந்த எழுத்தாளர் உண்மையிலேயே ‘கதை’ விட்டிருக்கிறார் என. தமிழில் பெரும்பாலான துப்பறியும் அல்லது அறிவியல் புனைகதைகள் மிகை புரூடாக்களால் ஆனவை. ஆனால், உண்மையில் அறிவியல் புனைகதைகள் என்பவை நிஜமான அறிவியல் தகவல்களுடன் அல்லது அறிவியல் கேள்விகளுடன் சிறிது கற்பனை கலந்து புதிய தேடலை அல்லது சாத்தியத்தை எழுத்தின் வழி ஆராய்வது. அதன் வழியாக அறிவியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றின் மீது ஒரு பேரார்வத்தை வாசகனுக்கு உருவாக்குவது. இந்தப் புரிதல் இல்லாததால் தொடர்ந்து ‘வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வந்து அமெரிக்காவை கைப்பற்ற நினைக்கும்’ கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

‘டிரீம் மேக்கிங் டிவைஸ்’ ஆழமான அவமானத்தையும் வாசிப்பின் மீது மெல்லிய வெறுப்பையும் எனக்கு உருவாக்கியிருந்த சூழலில் தினமணியில் ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் என்றொரு தொடர் வரத்துவங்கியது. அத்தொடர், சிறார்களுக்கான ‘ஜிஜ்ஜிலிப்பா’ மொழியில் எழுதப்படவில்லை. எளிய செறிவான உரைநடையில் இருந்தது. கதையில் குறிப்பிடப்படும் அறிவியல் தகவல்களுக்கு விரிவான பெட்டிச் செய்திகளும் இருந்தன. துல்லியமான சித்தரிப்புகள் மனதில் நிலக்காட்சிகளை விரிவடையச் செய்தன. நான் வாராவாரம் பரவசத்துடன் வாசித்து வாசகர் கடிதங்கள் எழுதி அனுப்பினேன். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து வெள்ளி நிலம் வாசிக்கிறேன். அதே மாறாத பரவசம். எந்த சிறந்த குழந்தைகள் இலக்கியமும் வளர்ந்தவர்களுக்கான தேடல்களுக்கான விடையையும் தரிசனத்தையும் உள்ளடக்கி இருக்கும். வெள்ளி நிலமும் விதிவிலக்கல்ல.

ஜூவனேலி எனும் வரையறைக்குள் (தோராயமாக 14 வயது முதல் 17 வயது வரை) வரும் வாசகர்களுக்காக எழுதப்பட்டுள்ளது வெள்ளி நிலம். பனிமனிதனின் ஆக்சன் ஹீரோவான பாண்டியன்தான் இதிலும் கதாநாயகன். சாகஸங்களும் சமயோசித முடிவுகளும் எடுப்பதில் கெட்டிக்காரர். நரேந்திர பிஸ்வாஸ் எனும் ஆராய்ச்சியாளரும் நார்போ எனும் மலைக்கிராம சிறுவனும் அவருக்கு உதவுகிறார்கள். இந்நாவலின் இரண்டாவது ஹீரோ அல்லது காமெடியன் ‘நாக்போ’ எனும் சிந்திக்கும் திறனுள்ள நாய்தான். நாவலில் நார்போவுக்கும் நாக்போவுக்குமான உரையாடல்கள் வெடிச்சிரிப்பை உருவாக்குகின்றன. நாக்போவுக்கென தனி ரசிகர்வட்டமே சிறுவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

வெள்ளிநிலம் சுவாரஸ்யமான துப்பறியும் பின்புலத்தில் மதம் எனும் கருத்துப்படிவம், தெய்வங்கள் உருவான விதம், சிறிய மதங்களைப் பெரிய மதங்கள் உள்ளடக்கிக்கொள்வது, மானுடம் இயற்கையைப் புரிந்துகொண்ட விதம் குறித்த தெளிவான சித்திரத்தை அளிக்கிறது. ஸ்பிட்டி வெளியில் துவங்கும் கதை பூடான், லடாக் என விரிந்து இறுதியில் திபெத்தில் நிறைவடைகிறது. தமிழ் வாசகர்களுக்கு அதிக பரிச்சயம் இல்லாத நிலப்பரப்பில், பான் மற்றும் பெளத்த மதங்களின் பின்னணியில் கதை நிகழ்வது மேலதிக சுவாரஸ்யத்தை அளிக்கிறது.

மனித குல வரலாற்றில் அனைத்தும் வேகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன. மாறாமல் இருப்பவை நமது தெய்வங்களும் வழிபாடுகளும்தான். மானுட வரலாற்றை அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் மதங்களின் வரலாற்றையும் தெய்வங்களின் உருவாக்கத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். வெள்ளிநிலம் அதைச் செய்கிறது. படுசுவாரஸ்யமான புனைகதை வாசிப்பின் வழியாக பண்பாடுகள், மதங்களின் தோற்றம், தெய்வங்கள் உருவான விதம், சடங்குகள் ஆகியவற்றை ஆராய்கிறது. போலவே புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள், சீதோஷ்ணம், திபெத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களின் பின்னணி ஆகியவற்றையும் இளம் வாசகர்கள் அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக முன்பனிக்காலம் முதல் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு வரை வரலாற்றை புனைகதையின் வழியாகவே தொகுத்துக்கொள்ள முடியும்.

5000 வருடங்களுக்கு முந்தைய யாங்த்ஸே நதி தீரத்தில் தோன்றிய முதல்  நாகரீகத்திற்கும், ஷென்ரப் மிவாச்சேவுக்கும், நம் மதுரைநகர் கொற்றவைக்குமான உறவை பாண்டியனுடன் சேர்ந்து துப்பறிய வெள்ளிநிலத்திற்கு உங்களை மகிழ்ச்சியுடனும் பரவசத்துடனும் வரவேற்கிறேன்.

Comments

Popular Posts