வடகரை வேலன்


பத்தாண்டுகளுக்கு முன்பு எனது மேன்ஷன் அறைக்கு வடகரை வேலன் வந்தார். நான் வெறிபிடித்து வாசித்துக்கொண்டிருந்த காலமது. கட்டிலுக்கு மேல் கீழ் என காணும் இடங்களெல்லாம் புத்தகங்கள் இண்டு இடுக்கில்லாமல் இறைந்து கிடக்கும். மழை நாட்களில் கதவிடுக்கு வழியாக புகும் நீர் புத்தகங்களை நனைத்து விடும். படாதபாடு படுவேன். இப்படி சப்பும் சவருமான ரூமுக்குள்ள இருக்கீங்களே என்று விசனப்பட்டார்.

ஒரே வாரத்தில் வடவள்ளியில் தனது அச்சுக்கூடம் அருகே விஸ்தாரமான வீடு பார்த்து என்னை குடியமர்த்தினார். தெருமுனையில் கொக்கரக்கோ என்றொரு அசைவ உணவகம் இருந்தது. தினசரி இரவு உணவுக்கு சந்தித்துக்கொள்வோம். அப்போது நான் விகடனிலிருந்து தி ஹிண்டு குழுமத்திற்கு மாறியிருந்த சமயம். புதிய நிறுவனம் புதிய சூழல். அச்சூழலில் என்னைப் பொருத்திக் கொள்வதற்கு நான் படாத பாடு பட்டேன். கொஞ்சம் தெளிவானதும் சில நாட்கள் காணாமல் போயிருந்த அகந்தையும் ஆணவமும் மீண்டும் என்னிரு தோள்களில் வந்தமர்ந்தன. அன்றாட வெற்றிகள் என்னை மேலும் கொக்கரிக்க வைத்தன. என் ‘திறமை’ கண்டு மாபெரும் சதிகள் நடப்பதாகவும், என்னை அழித்து விட மேலாளர்கள் துடிப்பதாகவும் கற்பனை எதிரிகளை உருவகப்படுத்திக்கொண்டு தினமும் வடகரை வேலனிடம் அரற்றுவேன். அவர் நிதானமாக அனைத்தையும் கேட்பார். பல நிறுவனங்களில் பல பொறுப்புகளை நிர்வகித்த அனுபவத்தில் இருந்து உதாரணங்களைச் சொல்வார். எனக்கு இப்படித் தோணுது.. நீங்க யோசிச்சுப் பாருங்க என்பார். ஒரு திருநெல்வேலி தெருக்காட்டுப் பையன் சிறந்த அதிகாரியாக மாற அவர் அன்றாடம் வகுப்பெடுத்தார்.

வலையுலகைப் பொறுத்தவரை அண்ணாச்சி எனும் விளி சாத்தான்குளம் ஆசிப் மீரான், வடகரை வேலன் ஆகிய இருவரைத்தான் குறிக்கும். அண்ணாச்சியின் இயற்பெயர் இராஜேந்திரன். மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுள் ஒருவரின் நினைவாக அவரது ஆசிரியரால் சூட்டப்பட்ட பெயர் அது. 2008-ல் வலையெழுதலானார். இடையில் சில காலம் தடைப்பட்டாலும் கடந்த மாதம் வரை பதிவெழுதிய ஆக்டிவ் பதிவர் அவர்.
சுஜாதாவின் பாதிப்பில் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களைக் கோர்த்து அவர் எழுதிய கதம்பம் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கவிதைகள் எழுதினார். இந்த வாழ்க்கை இன்னும் கொஞ்சம் கருணையாக இருக்கலாமே எனும் லெளகீக அழுத்தத்தின் அங்கலாய்ப்புகளைக் கொண்ட கவிதைகள். என் தனிப்பட்ட பிரியமான கவிதைகளுள் அவருடையதும் உண்டு. சினிமா, புத்தகங்கள், கவிதைகள் என தன் எல்லைகளை வகுத்துக்கொண்டு தனது அபிப்ராயத்தை தொடர்ந்து எழுதி வந்தார். புதிதாக எழுதுபவர்களை உற்சாகமூட்டியும் உடனுக்குடன் கவனப்படுத்தியும் வந்தது அவரது முக்கியமான பங்களிப்பு.

சச்சரவுகளை விரும்பாத இயல்புடையவர். எப்போதும் தெருச்சண்டைகள் நிகழ்ந்த – அதிலும் ஆக்ரோசமாக கிளம்பிப்போய் அடிக்கடி சண்டை கிழிந்து வரும் கைப்புள்ளையாக நான் சிலகாலம் கேவலப்பட்டேன்; அவர்தான் மருந்திடுவார் - தமிழிணையத்தின் கலாச்சாரம் அவரையும் கீறிப்போட்டது. உங்க தரப்பு உண்மைக்கும் எதிர் தரப்பு உண்மைக்கும் மத்தியில உண்மையான உண்மைன்னு ஒண்ணு இருக்குங்க என சச்சரவுகளுக்கு சமாதானம் பேசுவார். அதன் பொருட்டே நாட்டாமை, சொம்பு என்றெல்லாம் நகையாடப்பட்டார். உச்சகட்டமாக அவருக்கு சிறிதும் சம்பந்தமில்லாத விவகாரங்களில் அவரது பெயரை இழுத்து விட்டனர். ஆணாதிக்கவாதி என்றனர். அது அவரது தொழில் வாழ்க்கையையும் நிம்மதியையும் குலைத்ததால், தீவிர செயல்பாட்டில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

எனக்கு திடீர் திடீரென்று ஞானோதயம் வரும். “அண்ணாச்சி எனக்கு இருக்கும் திறமைக்கும் உழைப்புக்கும் நான் தொழில்தான் செய்யணும்” என வீறு கொண்டெழுவேன். அண்ணாச்சி எங்கிருந்தாலும் உடனே கிளம்பி வந்து வகுப்பெடுப்பார். என் காதுகளில் நுழையும் சாத்தியமுள்ள ஓரிருவரின் சொற்களில் அவருடையது பிரதானமானது. என்னுடைய இயல்பில் தொழிலுக்கான அம்சம் கிஞ்சித்தும் இல்லை என்பதை மிக நாசூக்காக உணர்த்தி விட்டு கிளம்பி விடுவார்.

மெக்கானிக்கல் எஞ்சீனியரிங் கற்று அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியது முதல் கடைசியாக நடத்திய வேலன் வேலைவாய்ப்பு நிறுவனம் வரை அவரது வாழ்க்கை சாகஸங்களும், தோல்விகளும் நிறைந்தது. கம்ப்யூட்டர் பயன்பாடு அறிமுகமான காலத்தில் ஸெனித் நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக அவர் பிரம்மாண்டமான சாதனைகளைப் படைத்தவர். வாடிக்கையாளர் அதிருப்தியை சரி செய்து மீட்டெடுப்பதில் நிபுணர். நானறிந்து நாஞ்சிலுக்கு அடுத்து இந்தியா முழுக்க அலைந்து திரிந்தவர். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் தொழில்தேவி அவருக்கு கண் திறக்கவே இல்லை. அச்சுத்தொழிலில் சம்பாதித்தார். பலமடங்கு விடவும் செய்தார். அச்சகத்தை மூடிய பின் பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு பதவிகள் என மாறியபடியே இருந்தார். அவரது ஒவ்வொரு அழைப்பும் புதிய நிறுவனத்தில் அவரது புதிய பணியைப் பற்றிய அறிவிப்பாகவே இருந்தது.

அண்ணாச்சி பிள்ளைகள் வளர்ப்பிற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ‘ஏம்மா நீ யாரையாச்சும் காதலிச்சா.. அதை அவன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லிடும்மா.. நீ எப்படி சொன்னா அவன் ஒத்துக்குவான்னு உனக்காக நான் ரிசர்ஜ் பண்ணி ஐடியா தர்றேன்’ என தன் பெண் பிள்ளையிடம் சொல்லும் ஒரு அப்பாவாகத் திகழ்ந்தார். பிள்ளைகளுக்கு நம்ம மேல பயம் இருக்கவே கூடாது என்பார். பாரதிக்கும் கிருத்திகாவுக்கும் ஒரு ‘ப்ரோ’வாகவே இருந்தார்.

அண்ணாச்சியின் மரணச் செய்தி கேட்டதும் மருத்துவமனைக்கு ஓடினேன். அவரது உடலைப் பெற்று உடுமலைப்பேட்டைக்கு அனுப்பும் காரியத்தில் நண்பர்கள் இருந்தனர். அனைவரும் இலக்கியத்தின் மூலமாக அவருக்கு அறிமுகமான நண்பர்கள். இளையவள் கிருத்திகா கலங்கி ஒடிந்து விடாமல் அப்பாவின் வளர்ப்பிற்கேற்ப காரியங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தாள். நான் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் அருகே நின்று கொண்டிருந்தேன். அவரோடு மேற்கொண்ட பயணங்கள், கலந்து கொண்ட இசை நிகழ்ச்சிகள், அன்றாடம் மாலை சந்தித்து விவாதித்த விஷயங்கள், பகிர்ந்து கொண்ட கனவுகள் மனதில் மோதிக்கொண்டே இருந்தன.

அண்ணாச்சிக்குப் பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. தொழில் வாழ்க்கை அமைந்து வரவில்லை. வீடு கட்டிய நாட்களில் பல்வேறு சிக்கல்களில் பாடாய் பட்டார். அவர் மிகுந்த ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இணைய உலகமும் இலக்கியத் தொடர்புகளும் அவருக்கு அயற்சியைத்தான் உண்டு பண்ணின. எது வந்த போதும் அண்ணாச்சி இடை விடாமல் வாசித்துக்கொண்டிருந்தார். எந்தத் துயரத்தையும் புத்தக வாசிப்பின் வழியாக கடந்து விடுவாரென நினைத்துக்கொண்டேன்.

ஆம்புலன்ஸ் புறப்படத் தயாராயிற்று. என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் உடனிருந்த, ஆற்றுப்படுத்திய ஒரு மூத்த சகோதரனின் இறுதிப் பயணம். தூரத்தில் அழுது அரற்றி தொய்ந்து போன அண்ணாச்சியின் மனைவியை கைத்தாங்கலாக கூட்டி வந்துகொண்டிருந்தனர். கிருத்திகாவை நெருங்கி அம்மாவுக்கு ஏதாவது கொடுத்து கூட்டிட்டுப் போங்க என்றேன். க்ளூக்கோஸ் கரைச்சு வச்சிருக்கேண்ணா.. பாத்துக்கறேன் என்றாள் உணர்ச்சியற்ற குரலில். அண்ணாச்சிக்கு நான் செலுத்தும் அஞ்சலி என்பது அவரைப் போலவே மீச்சிறந்த தந்தையாக நடந்துகொள்வதுதான் எனத் தோன்றிற்று.

வடகரை வேலனுக்கு என் அஞ்சலிகள்.


Comments

Popular Posts