எங்கும் புகழ் மணக்க...


சந்தேரி குவாலியரிலிருந்து சுமார் இருநூற்றிசொச்சம் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சிறிய புராதன நகரம். அழகிய ஏரிக்களால் சூழப்பட்ட சந்தேரி கோட்டையும், கந்தகிரி எனும் சமணத்தலத்தில் 56 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் ஆதிநாதரும் இவ்வூரினை நாடி பயணிகள் நாளும் வருவதற்கான காரணங்கள். கடந்த ஆண்டு ஆசான் ஜெயமோகனுடன் சென்ற மையநிலப் பயணத்தில் இந்த சிற்றூரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சந்தேரி என்றதும் என் ஆயிரக்கணக்கான வாசகியர் மனதில் டிங்கென ஒரு மணியடித்திருக்க சாத்தியமுண்டு. பல நூற்றாண்டு சரித்திரப் புகழ்கொண்ட சந்தேரி இந்தியாவெங்கும் பெரிதும் அறியப்படுவது சேலைகளுக்காக. குறிப்பாக பட்டுச் சேலைகள். அடர்வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சந்தேரிப் பட்டு மிக மிக எடை குறைவானவை. பராமரிப்பு சிரமங்கள் இல்லாதவை.

நாங்கள் சந்தேரியை அடைந்து விடுதி துளாவி ‘ஏழை எழுத்தாளர்கள்’ பிலாக்கணம் வைத்து சல்லிசாக அறையெடுத்து சிரமப்பரிகாரம் செய்து வெளிக்கிடையில் மணி ஏழு. நான் என் மானினன்விழியாளுக்கு ஒரு சேலை வாங்க விரும்பினேன். மத்திய, உத்திர பிரதேச சிற்றூர்களில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், இரவு ஆறரை மணிக்கு மேல் ரோட்டில் ஒரு சுடுகுஞ்சு இருக்காது. சம்பல் கொள்ளைகள் கொடி கட்டிப் பறந்த காலகட்டங்களில் உருவான பய பழக்கம் இது. வியாபாரிகள் ஆறு மணிக்கு கடையெடுத்து வைத்து விட்டு ஏழு மணிக்கு வீட்டில் ‘எந்தோ சின்னடி ஜீவிதம்..’ பாடிக்கொண்டிருப்பார்கள். மைய நிலங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை எம்போன்ற கருவிலே திருவுடையவர்கள் எளிதாக யூகிப்பார்கள்.

சந்தேரி கடைத்தெருவில் அனேகமாக எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தெருவிளக்கு அதிகபட்ச ஆடம்பரம் என சிவராஜ் சவுகான் நினைத்திருக்கலாம். ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்க வேண்டும். கழிவு நீரை பூமிக்குக் கீழே சிமெண்ட் குழாய்களின் வழியாக அனுப்ப முடியும் என்பது பாஜகவின் எந்த முதல்வர்களும் அறியாதது. இந்த இடத்தில் சிறிய அனுபவ அரசியல் பேசியாக வேண்டிய நிலையில் உள்ளேன். அது கிராமப் பஞ்சாயத்தோ மெட்ரோ பாலிடனோ நிர்வகிக்கும் பொறுப்பில் ஒரு பாஜக ஆட்சியாளன் இருந்தால் பொது சுகாதாரத்தை நீங்கள் மறந்து விட வேண்டும். நாகர்கோவில் முதல் இந்தூர் வரை என் தனிப்பட்ட சுச்சா பாரத் அனுபவம் இது.

கடைசிப் பலகையை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ஒரேயொரு சேலை கடையை தெருநாய்களின் அணிவகுப்பு மரியாதைகளுக்கு நடுவே கண்டுபிடித்தேன். ஓடிச் சென்று சேலைகளை காட்டச் சொன்னேன். விற்பனை நேரம் முடிந்தது. காலையில் வா என்றான். காலையில் சீலை வாங்கிட்டுப் போகலாம் எனச் சொன்னால், ஆசான் உயிருடன் தின்று அஞ்சலி கட்டுரை எழுதி விடுவார்.பயணப் புனிதர் ஈரோடு அப்போஸ்தலர் வரையறுத்த விதிகளில் முக்கியமானது பயணிக்கும் ஊர்களில் தீவனமன்றி வேறொன்றும் வாங்கக் கூடாதென்பது. வேறு வழியின்றி வீட்டம்மன் விபரீதங்களை நான் உடைந்த ஹிந்தியில் ‘மேரா பீவி ஹே..’ என கடைக்காரனிடம் கதறினேன். சிரித்துக்கொண்டே கடையை திறந்து கொடுத்தான்.

சிறிய பத்துக்குப் பதினாறு அறையில் உலகின் வண்ணங்கள் அடைத்தும் இண்டு இடுக்கில்லாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குறைந்தது சில கோடிகளுக்காவது அந்த குறுகிய அறையில் சேலைகள் இருக்கும் என்பது என் அனுமானம். சிறிய இடங்களையும் மிக நேர்த்தியாகப் பயன்படுத்துவது சந்தேரி வியாபாரிகளின் கலைவெளிப்பாடுகளுல் ஒன்று. நான் செந்தூர வண்ணத்தில் பொன் ஜரிகை வேய்ந்த ஒரு பட்டுப்புடவையை எடுத்தேன். ஒரு ஈரிழை துண்டை விட எடை குறைவான புடவை. ஐயாயிரம் ரூபாய் சொன்ன புடவையை ராஜமாணிக்கனார் ஐநூறு ரூபாய்க்கு கேட்டு பேரத்தினைத் துவங்கினார். வியாபாரி ஒரு மீச்சிறந்த ஹிந்தி கெட்ட வார்த்தையை மென்மையாக உச்சரித்து வெளியேறும்படி எச்சரித்தார்.

கடைசிக்கு ‘ஏழை எழுத்தாளர்’ மன்றாடுதான் கைகொடுத்தது. ஐநூறு ரூபாய் குறைத்தார். பில் போடுவதற்கு முன், எங்கிருந்து வருகிறீர்கள் என வினவினார் வியாபாரி. கோயம்புத்தூர் என்றேன். ரங்கசாமி செட்டியார் தெரியுமா என்றார். கோவையின் பிரபல ஜவுளி நிறுவனம் பி.எஸ்.ஆர் சில்க்ஸின் உரிமையாளர் அவர். எளிய கதராடையில் காமராஜரைப் போல இருப்பார். சாயிபாபா காலனியில் நடை பயில்கையில் அவரை அவ்வப்போது சந்தித்து வணக்கம் சொல்லியிருக்கிறேன். அவரைத் தெரியும் என்றேன். ‘பஹூத் அச்சா மெர்ச்சண்ட்.. எங்கள் தயாரிப்புகள் அவரது கடையில் கிடைக்கும். அவரைத் தெரிந்ததற்காகவே உனக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட்’

நான் நெக்குருகிப் போனேன். கோவையிலிருந்து சந்தேரி மிகச்சரியாக ஈராயிரம் கிலோமீட்டர்கள். மத்திய இந்தியாவின் சிறிய கிராமத்தின் இருளடைந்த வேளையில் ஒரு கொங்கு தொழிலதிபரின் நேர்மைக்கான பரிசை நான் பெற்றுக்கொண்டேன். எனக்குப் பெருமையாக இருந்தது. இந்தப் புளகாங்கிதத்தை என் பாரியாளை போனில் அழைத்து கூவினேன். விடியலில் டிரைவர் சொன்னார் ‘நீங்கள் சேலை வாங்கிய கடைதான் சந்தேரியிலேயே பாரம்பரியமான கடை’

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் கொங்குநாட்டு பிராண்ட் கண்ணில் பட்டால் பரவசமடைந்து விடுவேன். சிங்கப்பூரில் சக்தி மசாலாவை ஒரு மலாய்ப்பெண்மணி கேட்டு வாங்கியதை கண்டபோதும், குவாலியர் கடைவீதிகளில் டெக்ஸ்மோ நிறுவனத்தின் பெயர்ப்பலகைகளைப் பார்த்தபோதும், செகந்தராபாத் ரயில் நிலையத்தில் ஒரு பஞ்சாபி அரைக்கிலோ ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவை தானே தின்று தண்ணீர் குடித்ததைப் பார்த்தபோதும் நானடைந்த உற்சாகம் எனக்கே ஆச்சர்யமளிப்பது. காரணம் எளிதுதான். கோயம்புத்தூர் தொழிலதிபர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் தாழக்கிடப்பவர்களைத் தற்காப்பதற்கான பங்களிப்பு, நீர்நிலைகளைப் பராமரிப்பதற்கான பங்களிப்பு, உள்ளூர் வளர்ச்சிக்கான பங்களிப்பு, கலைகளை ஆதரிப்பதற்கான பங்களிப்பு எத்தனை வீதம் என்பதை நானறிவேன். சொந்த ஊரான சாத்தான்குளத்தின் வள்ளல்களாகிய புலமாடன் செட்டியார், கோபாலகிருஷ்ண பிள்ளை போன்றவர்களைப் பற்றி கண்ணில் ஈரம் ததும்ப மூத்தோர்களிடம் கதை கேட்டிருக்கிறேன். கோவையிலோ குறைந்த பட்சம் நூறு வள்ளல்களுடன் வாழ்ந்து வருகிறேன். அகம் மகிழ்ந்து பாராட்டினால் கூசி அஞ்சி விலகி பதுங்கிக்கொள்ளும் வள்ளல்கள். என் பிரார்த்தனையில் இவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இவர்கள் செழிக்க வேண்டும். உலகை வெல்ல வேண்டும். கர்த்தருக்குச் சித்தமானால், நானும் சம்பாதித்து இந்தப் பட்டியலில் இணைய வேண்டும்.

தீபிகா படுகோனே, ரன்வீர் தம்பதிகள் தங்களது திருமணத்திற்கு வருகை தந்த நண்பர்கள் நலம் விரும்பிகளுக்கு கைப்பட எழுதிய கடிதத்துடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவினை இணைத்து அனுப்பிவைத்துள்ளார்கள். பெற்றுக்கொண்ட பிரபலஸ்தர்கள் இனிப்புப் பெட்டகத்தினை படம் பிடித்து ட்வீட்டரில் மைசூர்பா சுவையினை சிலாகித்து எழுதிய ட்வீட்டுகளைக் கண்டேன். உடனே பரவசம் தொற்றிக்கொண்டது. நான் பதினைந்து ஆண்டுகளாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் வாடிக்கையாளன். பத்தாயிரம் ரூபாய்க்கு மைசூர்பா வாங்காமல் நான் ஊருக்கு பஸ் ஏற முடியாது. விலை கருதி அப்பா எப்போதும் திட்டுவார். அந்நாட்களில் நான் திரு. கிருஷ்ணனை அறிந்திருக்கவில்லை. நான் அப்பாவிடம் சொல்வேன் ‘முதன்மையாக இது வெறும் பலகாரம் அல்ல. அனுபவம். தரமும் சுவையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. இயந்திரங்களால் அல்ல கரங்களினால் தயாரிக்கப்படுபவை. பல நூறு ஊழியர்கள் சேர்ந்து ஒருமித்த சுவையை உண்டு பண்ணும் அதிசயம். நம் வீட்டுப் பெண்களுக்கு இந்த ப்ளாஸ்டிக் டப்பாவை வீட்டில் வைத்திருப்பதே பெருமிதம். தவிர, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நிகழும் கலை பண்பாட்டு ஆன்மிக நிகழ்ச்சிகள் வருடத்திற்கு ஐம்பது நடக்கின்றன. நான் அனைத்திற்கும் செல்கிறவன். ஒரு நிகழ்ச்சிக்கு ஐநூறு கட்டணம் வைத்தால் கூட, நான் காலமெல்லாம் இனிப்பு வாங்கினாலும் கழியாத கடன் அப்பா’

கோவையில் இந்தியாவின் அடையாளமென முன்னிறுத்தப்பட வேண்டிய முதன்மையான தொழில்முனைவோர்கள், பெருங்கனவாளிகள், நிர்வாக முறைகள், சிறந்த தொழிலாளர் நலத் திட்டங்கள் உண்டு. சாவ்ஜி டோலக்கியா ஒவ்வொரு தீபாவளிக்கும் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறார். பவுன் தங்கம் மூவாயிரம் ரூபாய்க்கு விற்ற காலத்திலேயே அறுபதினாயிரம் ரூபாய் போனஸ் கொடுத்த கோயம்புத்தூர் நிறுவனங்கள் முன்னிறுத்தப்பட்டதில்லை. நம் மனங்களில் முதலாளித்துவம் ஒரு கெட்டவார்த்தையாக வெற்றிகரமாக விதைக்கப்பட்டுள்ளது. தொழில் செய்பவர்களையும் சம்பாதிப்பவர்களையும் குற்றவாளிகளாகப் பார்க்கப் பழகிவிட்டோம். தொழில் முனைவோனின் வீழ்ச்சிக்காக ஊடகங்கள் ரத்த வெறியுடன் காத்திருக்கின்றன. பெருங்கனவோடு தொழில் தொடங்கி நொடித்துப் போனவர்களை வங்கிப்பணத்தை கொள்ளையடித்த திருடர்கள் போல சித்தரிப்பதில் இவர்களுக்கு எந்த வெட்கமுமில்லை. மீம்ஸ் போட்டு கலாய்த்து மகிழும் நமக்கும் யோசனை இல்லை. இந்நகரில் வாழும் பதினாறு லட்சம் பேர் வாழ்க்கையிலும் இந்தத் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு நிச்சயம் உள்ளது. அரசு இயந்திரத்தை சீராக சொடுக்கும் விசையாக, கண்காணிக்கும் கண்ணாக, கண்டிக்கும் அரணாக இவர்கள் உள்ளார்கள். நான் சாகாமல் வீடு திரும்புவதை, என் வீட்டு குழாயில் நீர் வருவதை, தெருவில் குப்பை குவிந்து நாறாமல், மதக்கலவரங்கள் மூளாமல் பார்த்துக்கொள்வதில் இவர்களின் உண்மையான அக்கறையை என்னால் உணர முடிகிறது.

எங்கும் புகழ்பரப்பும் கொங்குத் தொழிலதிபர்களை உடனிருந்து வியப்பவர்கள்தான் எழுதியாக வேண்டும். ஆகவேதான் எழுதுகிறேன். சென்றிடுவீர் எட்டுத் திக்கும். புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருங்கள்.

(பாகம்-1)

Comments

Popular Posts