வியாசரின் கொடி மரபு

அருட்செல்வபேரரசனுக்குப் பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக திட்டமிட நண்பர்கள் அவ்வப்போது கூடினோம். ஒவ்வொருமுறையும் டைனமிக் நடராஜன்  பேரரசனின் இம்முயற்சி எத்தகையது, இந்நிகழ்ச்சி எதற்காக என்பதை ஒருவர் ‘தெளிவாகப்’ பேசி நிகழ்வைத் துவக்க வேண்டும் என வலியுறுத்திக்கொண்டே இருந்தார். வாழ்த்துரைப்பவர்கள் எப்படியும் இதைப் பேசப் போகிறார்கள். தனியாக ஒரு முன்னுரை தேவையற்றது என்பது என் எண்ணமாக இருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அடுத்து இன்னார் பேசுகிறார் என்பதைத் தவிர்த்து வேறென்ன பேசினாலும் அது குற்றம்தான்.

அரசன் பாரதம் நிறைவு விழா குறித்து உள்ளூர் இதழாளர்களிடம் பேசி அழைத்தபோதுதான் நடராஜன் சொன்னதன் முக்கியத்துவம் புரிந்தது. ஒருவருக்குக் கூட இந்தப் பணியின் முக்கியத்துவம் குறித்து புரியவைக்க ஏழவில்லை. ஃப்பூ.. இதென்ன சமாச்சாரம் எங்க வீட்டுலயே கீதாப்ரஸ் மகாபாரதம் இரண்டு காப்பி இருக்கு. நானே வியாசர் விருந்து, மகாபாரதம் பேசுகிறது ஏழெட்டு வாட்டி படிச்சிருக்கேன். ஸ்கூல் டேஸ்லயே ஐ ஹாவ் கம்ப்ளீட்டட் மஹாபார்தா ஸ்டோரீஸ். விதம் விதமான பதில்கள். பகவத்கீதையின் இன்னொரு பெயர்தான் முழுமகாபாரதம் என்று நம்பிக்கை கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியர் பெயரை நாகரீகம் கருதி தவிர்க்கிறேன். இதில் பாரதம், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களால் எழுதப்பட்டிருக்கிறது எனும் நம்பிக்கையுடையவர்கள் பேர் பாதியினர்.

1876-ல் பிரதாப் சந்திரராய் வங்கமொழியில் முழுமகாபாரதத்தை பதிப்பித்தார். மகாபாரதம் உலகிற்கு இந்தியா அளித்த கொடை எனும் ஓர்மை கொண்டதால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகத்தின் கவனத்திற்கு அதை கொண்டு செல்ல விரும்பினார். அவரது முயற்சிக்கு முன்னரே பாரதம் ஆங்கிலத்தில் அறிமுகமாகி இருந்தாலும் எதுவும் முழுமையானவை அல்ல.

வங்கமொழியிலும் ஆங்கிலப்புலமையிலும் அறிஞராகத் திகழ்ந்த கிசாரி மோகன் கங்குலியை அணுகுகிறார். பெரும் தயக்கத்திற்குப் பிறகே கிசாரி ஒப்புக்கொள்கிறார். இது முழுவாழ்நாளைக் கோரும் பெரும்பணி. மொழிபெயர்ப்பு முயற்சி முடிவதற்குள் ஒருவேளை மரணமடையவும் நேர்ந்துவிடலாம் ஆகவே தன்னுடைய பெயரை மொழிபெயர்ப்பாளர் என குறிப்பிடவேண்டாம் என வலியுறுத்துகிறார். 1883 முதல் 1896 வரை 13 ஆண்டுகள் செலவிட்டு முழுமகாபாரதத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். சமஸ்கிருத ஸ்லோகங்களை அடிப்படையாகக் கொண்டு பாடபேதங்கள் நீக்கப்பட்ட முழுமையான மகாபாரதமாகவும், பொதுப்பயன்பாட்டிற்கு இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதும் கிசாரியுனுடையதே.

கிசாரியின் முயற்சிக்கு அன்றைய ஆங்கிலேய ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் அறிவு ரீதியாக உதவியுள்ளார்கள். பதிப்பாளருக்கு உலகின் பல கரங்களிலிருந்தும் உதவிகள் நீண்டிருக்கின்றன. அன்றைய ஆங்கிலேய அரசு, சமஸ்தானங்கள், வணிகர்கள், அமெரிக்க ஐரோப்பிய அறிஞர்கள், உலகளாவிய புரவலர்கள் பலரும் நிதிகளை அள்ளிக்கொடுத்திருக்கின்றனர். ஆயினும் கூட போதவில்லை. ராய் நிதிச்சுமையால் வாடினார். சொத்துக்களை விற்றார். பலருக்கும் கடிதம் எழுதினார். எட்டு திக்கும்  கையேந்தினார். ரத்தம் கக்கித்தான் ஒவ்வொரு பர்வத்தையும் பதிப்பித்தார். நூல்களில் வரும் பதிப்பாளர் உரையும், சந்திரராய் மனைவி எழுதிய சரிதையும் வாசிக்கிற எவனும் நெஞ்சம் உடைந்து அழுவான். வங்கத்தின் திசை நோக்கி கைதொழுவான்.

கிட்டத்தட்ட அதே கதைதான் தமிழிலிலும். நல்லாப்பிள்ளை பாரதமும் கும்பகோணம் பதிப்பும்  அல்லற்பட்டே வெளியாகின. பாடபேதங்கள் களையப்பட்ட கும்பகோணம் பதிப்பு வெளிவர ம.வீ.ரா இருபத்தைந்தாண்டுகள் உழைப்பையும், கைப்பணத்தில் பதினைந்தாயிரமும் செலவிட்டார். அன்றைய தங்கத்தின் மதிப்போடு ஒப்பீட்டால் அப்பணத்தின் இன்றைய மதிப்பு ஆறரை கோடி என பொருளாதார நிபுணர் டி.பாலசுந்தரம் கணக்கிடுகிறார்.

கிசாரிக்காவது நெஞ்சுரம் கொண்ட பதிப்பாளர், உதவியாளர்கள், அறிஞர்களின் வழிகாட்டல்கள், நிதிநல்கைகள் ஆகிய வசதிகள் இருந்தன. மொழிபெயர்ப்பதுதான் முதன்மையானப் பணியாகவும் இருந்தது. ஆனால் பேரரசனுக்கு இந்த வசதிகளுள் யாதொன்றும் கிடையாது. திருவொற்றியூரில் பிறந்து வளர்ந்த பேரரசனின் தொழில் கணிணி வரைகலை. அன்றாட வாழ்வினை நகர்த்த பன்னிரெண்டு மணி நேரம் உழைத்தாக வேண்டிய வாழ்க்கைச் சூழல். 2013 ஜனவரியில் துவங்கி 2020 ஜனவரி வரை, 7 வருடங்கள் 12 நாட்கள் தொடர்ச்சியாக தினமும் இரவு 11 மணி முதல் 2:30 மணி வரை உழைத்து ஒவ்வொரு நாளும் மகாபாரத்தை தமிழ் செய்துள்ளார். அச்சுவடிவத்தில் 15,000 பக்கங்கள்.

பேரரசனின் பெற்றோர்களின் பூர்விகம் ஸ்ரீவில்லிப்புத்தூரும் நாகர்கோவிலும். இருவரும் ஆசிரியர்கள். அப்பா திராவிட நம்பிக்கையாளர். வீட்டில் உள்ள பெரியவர்களுக்குப் பாரத வாசிப்பு இருந்திருக்கிறது. பழந்தமிழ் இலக்கியம் சரளமாகப் புழங்கியிருக்கிறது. வரைகலை தொழிலுக்கு வடிவமைக்க வரும் புத்தகங்களில் பாரதக் கதைகள் தப்பும் தவறுமாக இருப்பதைக் கண்டு மனம் கசந்து முழுமகாபாரதத்தையும் மொழிபெயர்க்க துவங்கியிருக்கிறார். ஒரு வலைதளத்தை துவங்கி தினமும் ஓர் அத்தியாயமாக வெளிட்டார்.

கிசாரியுனுடையது பிரிட்டிஷ் ஆங்கிலம். அரைப்பக்கம் நீளமுள்ள நீண்ட வாக்கியங்களை சமகால தமிழிலில் மொழிபெயர்ப்பது சவாலானது. தத்துவப்பகுதிகள் வேறுவிதமான சவால்களை உள்ளடக்கியவை. அறிஞர்களின் வழிகாட்டலைக் கோருபவை. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் நூல்கள், ம.வீ.ராமானுஜாச்சாரியின் கும்பகோணம் பதிப்பு ஆகியவைதான் வழிகாட்டும் நூல்கள். ஊக்குவிப்பார் இல்லாத பணி. கூடவே இணையத்தில் தமிழ் டைப்படிக்கத் தெரிவதொன்றே தகுதியாகக் கொண்டவர்களின் நக்கல் நையாண்டிகள் வேறு.

ஜெயவேலன் எனும் நண்பர் பேரரசனை ஊக்கப்படுத்த ஒரு அத்தியாயத்துக்கு 100 ரூபாய் வீதம் கொடையளித்தார். மொத்தம் 2116 அத்தியாயங்கள். ரூ.2,11,600/-. ஜெயமோகன் முதலில் கமெண்ட் பாக்ஸை மூடுங்கள். பதில் சொல்லிக்கொண்டிருந்தால் ஆற்றலும் காலமும் அதிலேயே வீணாகிவிடும் எனும் ஆலோசனையை அளித்திருக்கிறார். கூடவே தொடர்ச்சியாக பேரரசனை தமிழ் வாசகர்களுக்கு கவனப்படுத்தியும் வந்தார். சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன், பி.ஏ.கிருஷ்ணன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் இந்தப் பணியைப் பற்றி தங்களது தளங்களில் எழுதி ஊக்குவித்தார்கள்.

ஏற்கனவே கும்பகோணம் பதிப்பு தமிழில் இருக்கும்போது இத்தகைய முயற்சி ஏன் என்றொரு கேள்வி எழலாம். மவீராவுனுடையது 1920-ல் பதிப்பிக்கப்பட்டது. இன்றைய இளம் வாசகனுக்கு அதன் மொழிநடை சற்று சவாலானது. பேரரசனுடைய மொழி சமகாலத்தன்மையுடன் விளங்குகிறது. இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்படும் நாளில் அரசனின் தளத்தில் 52 லட்சம் பார்வைகள் (ஹிட்டுகள்) உள்ளன.  உபபர்வங்களும் அத்தியாயங்களும் தெளிவாக தலைப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அழகிய ஓவியங்களும் பொருத்தமான சொல்லடைவு (tag) கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கதாபாத்திரத்தை தமிழில் கூகிளிலிட்டு தேடினால் பாரதம் முழுக்க அந்த கதாபாத்திரம் வரும் இடங்களை மட்டும் வாசித்து அறிந்துகொள்ள முடியும். தெளிவான அடிக்குறிப்புகள் உள்ளன. மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்களுக்கு பலனளிக்கக் கூடிய உரலிகள் இணைக்கப்பட்டுள்ளன. வம்ச விளக்க வரைபடங்கள், மகாபாரத நிலப்பரப்பு, கால அட்டவணை, அருஞ்சொற்பொருட்கள், பதிப்பாளர் உரைகள் என ஒரு முழுமகாபாரத களஞ்சியமாக பேரரசனின் தளம் (https://mahabharatham.arasan.info/) விளங்குகிறது. எழுத்தாளர் ஜா. ராஜகோபாலனின் சொற்களில் சொல்வதானால் இது வெறும் மொழிபெயர்ப்பு மட்டுமல்ல. மிகப்பெரிய ஆய்வுதளமாகவும் திகழ்கிறது.

தமிழில் தொடர்ச்சியாக சொல்லப்பட்ட தேய்வழக்குத்தான் எனினும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. அரசாங்கமோ, பல்கலைக்கழகமோ, நிதிச்செழிப்பு கொண்ட நிறுவனமோ செய்திருக்கச் சாத்தியமுள்ள ஒரு பெரும்பணியை ஒருவர் தீவிரத்துடனும் அளவற்ற தன்முனைப்புடனும் தன் லெளகீக சவால்கள் அனைத்தையும் மீறி செய்து முடித்துவிட்டு ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கிறார். மகாபாரதத்தை ஒரு பண்பாட்டுச் சுரங்கமாகவோ, மகத்தான காவியமாகவோ, பேரிலக்கியமாகவோ, கலைக்களஞ்சியமாகவோ பார்க்கும் திராணியற்றவர்கள் நிறைந்து கிடக்கும் ஒரு சூழலில் இருநூறு பேர் கூடி அவருக்கு விழா எடுப்பதென்பது தத்தம் ஆன்மாவிற்குச் செய்யும் அழகு.

வியாசர் கொடிமரபின் வாரிசான அருட்செல்வபேரரசனுக்கு வணக்கங்கள்.

பிற்சேர்க்கை:

இந்த மகத்தான மொழிபெயர்ப்பு ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் ராம்ஜி மற்றும் காயத்ரியின் முயற்சியில் 14 தொகுதிகளாக வெளிவர இருக்கிறது. ரூ.12,999/- மதிப்புள்ள இந்நூல் முன் வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.9,999/-க்குக் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். முன்பதிவு செய்துகொள்வதற்கான இணைப்பு: https://bit.ly/zdparasan

Comments