பாலை நிலப் பயணம்
நான் பயண நூல்களின் ரசிகன்.
மார்கோ போலோ பயணக்குறிப்புகள் துவங்கி நிலவு தேயாத தேசம் வரை வாசித்திருக்கிறேன். ராகுலசாங்கிருத்தியாயன்,
நரசிம்மலு நாயுடு, ஏகே செட்டியார், அரு. சோமசுந்தரன், ஜெயமோகன் ஆகியோரின் ஆக்கங்கள்
எனக்குப் பிடித்தமானவை. எந்த ஒரு பயணத் திட்டத்தின் போதும் முன்சென்றவர்கள் எழுதியதை
வாசிக்காமல் இருந்ததில்லை. அவை என் பயண அனுபவத்தைப் பெருக்கிக்கொள்ள உதவியிருக்கின்றன.
2019 நவம்பர் முதல் வாரத்தில்
ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடன் ஜெய்ப்பூரிலிருந்து அகமதாபாத் வரை சாலை வழியாகச் சென்ற
பயணத்தின் நினைவுகள் துரத்திக்கொண்டே இருந்தன. மூன்று மாதங்கள் கழித்து நினைவிலிருந்து
எழுத ஆரம்பித்தேன். பெருகிப் பெருகி 10,000 வார்த்தைகளைத் தாண்டி விட்டது. கிண்டிலில்
வெளியிடலாம் எனத் தோன்றியது. இணையத்திலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதாமல் வரும்
எனது முதல் நேரடி நூல்.
பயண நூல்களில் மீப்பெரும்
வீச்சையும் பாய்ச்சலையும் நிகழ்த்தியவர் ஜெயமோகன். பயண கட்டுரைகளின் இலக்கணமாக அவர்
கோடிட்டுக் காட்டியவற்றை என் ஏழ்வைக்குத் தக்கபடி எட்ட முயற்சித்திருக்கிறேன். கற்று
முன் நகர்ந்து தொடர்ச்சியாக பயண நூல்களை எழுத உத்தேசம் உண்டு.
எதைக்காட்டிலும் முக்கியமானவை
பயணத்தின் போது ஜெயமோகனுடன் நிகழ்த்திய உரையாடல்கள். அவற்றை முற்றாக எழுதினால் நூல்
மும்மடங்கு பெருகி விடும். போலவே அவரது பார்வைகளை மொழியில் கடத்துவதும் சவலான ஒன்று.
நூலுக்கு வலு சேர்க்கும்
அழகிய புகைப்படங்கள் என் பயணத் துணைவரும் ஆருயிர் நண்பருமாகிய மொழிபெயர்ப்பாளர் நரேன்
எடுத்தவை. அற்புதமான அட்டைப்படத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் சந்தோஷ் நாராயணன். வாழைப்பழச்
சோம்பேறியான என்னை இடித்து எழுத வைத்தவள் திருக்குறளரசி. பயணத்தின் போது உதவியர் மொழிபெயர்ப்பாளர்
செங்கதிர். இந்நூலை அமேஸானில் வெளியிட விமலாதித்த மாமல்லனின் வழிகாட்டி நூல் உதவிற்று.
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
நூலில் தகவல் பிழைகள்
அல்லது எழுத்துப்பிழைகள் ஏதேனும் இருப்பின் வாசிப்பவர்கள் தயவுகூர்ந்து மின்னஞ்சலில்
தெரிவிக்கவும். அடுத்தடுத்த பதிப்புகளில் சரி செய்துகொள்ள உதவியாக இருக்கும்.
எனது ஆசிரியரும், என்
பிள்ளைகளுக்குத் தாத்தாவுமாக இருக்கிற நாஞ்சில் நாடனுக்கு இச்சிறு நூலை சமர்ப்பிக்கிறேன்.
- பாலை நிலப் பயணம் நூலுக்கான முன்னுரை
நூலை வாங்க: https://www.amazon.in/dp/B0855GH66F
நூலைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்: https://m.jeyamohan.in/129985#.Xl8YgVNX4wA
Comments