மேடைப் பேச்சு - ஒரு கேள்வியும் பதிலும்

 


ஆர்கே:

பொதுவாக எழுத்தாளர்கள் மேடையில் பேசுவதைத் தவிர்ப்பார்கள். சுஜாதா முதல் பா.ராகவன் வரை உதாரணமாகச் சொல்லலாம். உரைகளில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள் ஏன்? மேடையில் அதிகம் பேசுகிறவன் நுட்பத்தை இழப்பானென்று சுந்தரராமசாமி கருதினார் இல்லையா?

செல்வேந்திரன்:

நல்ல எழுத்தாளர் நல்ல பேச்சாளராக இருக்கமுடியாது அல்லது இருக்கக் கூடாது என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை. மிக அதிகம் பக்கம் எழுதிய இந்திய எழுத்தாளர் மகாத்மா காந்தி. அவர் பேசியது இந்தியாவெங்கும் எதிரொலித்தது. தாகூர் உலகமெங்கும் பயணித்து உரையாற்றியவர். டால்ஸ்டாய் பைபிள் குறித்து சிறப்பாக உரையாற்றக்கூடியவர். தமிழிலும் பாரதி, ஜெயகாந்தன், பாலகுமாரன் தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் வரை ஒரு நிரை உண்டு.

என்னுடைய வாழ்க்கையை ஒரு பேச்சாளராக அமைத்துக்கொள்ளவேண்டுமென்பது என் சிறுவயது கனவுகளில் ஒன்று. அந்நாட்களில் நான் கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். ஆன்மீக சொற்பொழிவுகளில் புரட்சியை நிகழ்த்திய இளம்பிறை மணிமாறன் எனது ஊரைச் சேர்ந்தவர். என் இளைய மகளுக்கு அவரது பெயரைத்தான் சூட்டியுள்ளேன்.

தமிழின் இலக்கியச் செழுமையை, காப்பியங்களை, பக்தி இலக்கியத்தை, அறிவியக்கத்தை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வலிமை மிக்க ஊடகமாக மேடைகள் விளங்கின. அறிஞர்கள் அதைச் செய்தார்கள். இன்றிருக்கும் பேச்சாளர்கள் மேடையை ஒரு மலினமான ஊடகமாக மாற்றிவிட்டார்கள். இருபதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு உரையாற்றும் தொழில்முறை பேச்சாளர்கள் சுமார் 116 பேர் இங்கே இருக்கிறார்கள். அதில் 6 பேர்தான் அசலான பேச்சாளர்கள். மீத நபர்களெல்லாம் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்பவர்கள்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஜோக்குகளை உதிர்ப்பார்கள். மிகையான பெருமிதங்களைப் பேசுவார்கள். ஆதாரமற்ற தவறான வரலாற்றை சொல்வார்கள். மொத்த உரையிலும் ஒரு புதிய சிந்தனையை சொல்லமாட்டார்கள், ஒரு எழுத்தாளனையோ புத்தகத்தையோ அறிஞனையோ குறிப்பிட்டு பேசமாட்டார்கள். அதிகபட்சம் 50 பழந்தமிழ்ப் பாடல்களை மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். இங்குதான் இவர்கள் பேச்சாளர்கள் எனும் அந்தஸ்தில் வலம் வருகிறார்கள். இன்னொரு பண்பாட்டுச் சூழலில் இவர்களுக்கு ஸ்டாண்டப் காமெடியன் என்றுதான் பெயர்.

மேடைகள் அறிஞர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, அன்றாடம் வாசிப்பவர்களுக்கு, தொடர்ந்து மொழியில் புழங்குபவர்களுக்கு உரியவை. அல்லது குறைந்தபட்சம் தன் துறையில் எதையெனும் செய்து காண்பித்தவர்களுக்குரியவை. இந்தக் கோமாளிகளிடமிருந்து தமிழ் மேடைகள் மீட்கப்படவேண்டும்.

#selventhiran #Writer #speaker #PublicSpeaking #speech #guestlecture #howtoread #reading #books #bookstagram #tamil #tamilspeech #readinghabits #booklovers #tamil #tamilwriters #essays #literature #writing #KindleUnlimited #reading #kindle #travel #history #management #business #Adityatv #interview

Comments