மகராஜா ஆதல்
ஓர் எழுத்தாளன் எப்படி கொண்டாடப்பட வேண்டுமோ அப்படி நிகழ்ந்தது ஜெ-60. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 1200 வாசகர்களும், மூத்த படைப்பாளுமைகளும், கோவையின் முகங்களாகத் திகழும் தொழிலதிபர்களும், பேரதிகாரிகளும் வெம்மை தகிக்கும் அரங்கில் ஐந்தரை மணி நேரங்கள் அமர்ந்திருந்து தன் பிரியத்துக்குரிய எழுத்துக்கலைஞனைக் கொண்டாடினார்கள்.
பேரூர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், நண்பர்களின் வாழ்த்து மழை, வாசகர்களின் பரிசு மழை, வெண்முரசு ஆவணப் படம் திரையிடல், நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய சியமந்தகம் நூல் வெளியீடு, ஆத்மார்த்தமான வாழ்த்துரைகள் என அத்தனையும் நிறைவாக அமைந்தன. தமிழில் வேறெந்த எழுத்தாளருக்கும் இப்படியொரு கொண்டாட்டம் நிகழ்ந்திருக்குமா என எண்ணும்படியான பூரண நிறைவு. ஜெ தன் குருமரபுப்படி அனைத்தையும் சிறு விலகலோடே ஏற்றுக்கொண்டார், ஆசிரியர்களுக்கே அர்ப்பணித்தார். முந்தையச் சாதனைகளின் பெருமிதங்களை முதுகில் ஏற்றிக்கொள்ளாதிருப்பவர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் வெண்முரசு ஆவணப்படத்தைப் பார்க்க வாய்த்தது. தன் படைப்பிற்கு இப்படியொரு ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டுமென உலகின் எந்த படைப்பாளியும் விரும்பும் தரத்தில் அது இருந்தது. ராஜன் சோமசுந்தரம் இசையமைப்பில் உருவான வெண்முரசு பாடல் ‘கண்ணானாய், காண்பதுமானாய், கருநீலத் தழல்மணியே!’நான் அடிக்கடி கேட்டு ரசிப்பது. வாசகனாக ஆசானுடன் சற்றேறக்குறைய 25 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விழா முழுக்க அவ்வப்போது கண்கள் கலங்கியபடி நெகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தேன்.
நண்பர்கள் சிறுசிறு உதவிகள் செய்தாலும், ஜெ60 விழா டைனமிக் நடராஜனின் முன்னெடுப்பு, முழுதளிப்பு. கல்பற்றா சொன்னார், ‘இப்படியொரு விழாவை திருவிதாங்கூர் மகாராஜாதான் நடத்தியிருக்க முடியுமென்று’நடராஜனும் ஒரு மகாராஜா ஆகிவிட்டார்.
#Jeyamohan #vishnupuram #writer #tamilwriters #literature #novel #shortstories #nonfiction #writing
Comments