இலக்கிய விழாவில்

சென்னை இலக்கியத் திருவிழாவில் ‘இலக்கியத்தைக் கண்டடைவது எப்படி?’ எனும் தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். 


தீவிரமற்ற உரைகளை நிகழ்த்தக் கூடாது, ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசக்கூடாது என்பன நான் விதித்துக்கொண்டவை. ஆகவே செவ்வியல் நாவல்களை ஏன் வாசிக்கவேண்டும் எனும் தலைப்பில் பேசினேன். 


பார்வையாளர்கள் கல்லூரி மாணவர்கள் ஆகவே முடிந்த மட்டும் எளிமைப்படுத்த முயற்சித்தேன். தீவிர உரைகளில் ஓர் எல்லைக்கு மேல் தண்ணீர் கலக்க முடியாது. ஆச்சர்யகரமாக திரள் செவி கொடுத்தது. அவையோரால் உரை முழுக்கவனத்துடன் ஏற்கப் பட்டது. சீக்கிரம் முடித்தாகவேண்டிய கட்டாயத்தில் நான் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசி முடித்தேன். அரங்கில் இருக்கும் பார்வையாளர்களை விட அதிக எண்ணிக்கையில் சுருதி டிவியில் பார்ப்பார்கள். அதையும் உத்தேசித்த உரையை அமைத்திருந்தேன். முழு உரையையும் கபிலர் விரைவில் வலையேற்றுவார். 


ஒருங்கிணைப்பு, வரவேற்பு, உபசரிப்பு சிறப்பாக இருந்தது. சன்மானம் ‘non insulting payment' ஆக மாறியிருப்பது வரவேற்புக்குரியது. திரு சந்தோசப்பட்டாள்.  


என் அழைப்பை ஏற்று நண்பர்கள் வந்திருந்தார்கள். குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகுபவர்கள், இலக்கியம் பயிலும் மாணவர்கள் என வாசிப்பது எப்படியை வாசித்தவர்கள் உரைக்குப் பின் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். உரையின் தொடர்ச்சியாக நல்ல விவாதங்கள் அரங்கிற்கு வெளியே அமைந்தன. வாசிப்பிற்கு அதிக நேரம் ஒதுக்கினால் உருப்படாமல் போய்விடுவோமோ எனும் அச்சம் இளம்தலைமுறையிடம் இருப்பதை உணரமுடிந்தது. அது தேவையற்ற அச்சம் என்பதை உதாரணங்களுடன் விளக்கினேன். 


பெயர்களாகவும், படைப்புகளாகவும் மட்டுமே அறிந்திருந்த தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்கள் பலரை அரங்கில் பார்த்தது மகிழ்ச்சி அளித்தது. இனிய நாள். 


Comments