நேர்கோணல்

'எழுத்துச் சுனாமி' எனும் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு அப்போதுதான் நாடு திரும்பி இருந்தார் எழுத்து இயந்திரம் பிரதியங்கார மாசானமுத்து. அவர் பொதுவாக யாருக்கும் பேட்டிகள் அளிப்பதில்லை. யாரும் கேட்பதில்லை என்பது ஒரு காரணம் என்றாலும் இலக்கிய உலகில் தனித்து ஒலிக்கும் அவரது பலகீனமான குரலை வாசகர்களின் பார்வைக்கு பந்தி வைத்தாக வேண்டியது 'புளியேப்பம்' இலக்கிய இதழின் பிரதான கடமையாகவே கருதுகிறோம்.

புளியேப்பம்: மாஸ் ரைட்டர்ஸ் எனப்படும் வெகு ஜன எழுத்தாளர்களுக்கும், சிற்றிதழ்களில் இயங்கும் தீவிர இலக்கியவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

மாசானமுத்து: வெகுஜன எழுத்தாளர்கள் முழுக்க முழுக்க முட்டாள்களுக்காக எழுதுபவர்கள்; தீவிர இலக்கியவாதிகளோ தங்களைப் புத்திசாலிகள் என நம்பிக் கொண்டிருப்பவர்களுக்காக எழுதுபவர்கள்.

புளியேப்பம்: நல்ல எழுத்திற்கான அடையாளம் எது?

மாசானமுத்து: ரெமுனரேஷன்! எது வருமானத்தைத் தருகிறதோ அதுதான் நல்ல எழுத்து.

புளியேப்பம்: உங்களுடைய எழுத்து வாழ்க்கை இத்தனை வெற்றிகரமாக அமையக் காரணம் எது? எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவது எது?

மாசானமுத்து: நான் பிற தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிப்பதில்லை. அதனால் எனக்கு ரத்தக் கொதிப்போ, மூளைக் காய்ச்சலோ மலச்சிக்கலோ ஏற்பட்டதே இல்லை. தவிரவும் எனது எல்லா அயோக்கியத்தனங்களையும், அசிங்கங்களையும் எழுத்தில் பதிவு செய்யத் தவறுவதில்லை. அயோக்கியத்தனத்திற்கான சந்தை சர்வதேச அளவிலானது. உங்களது மூளை இடுப்புக்குக் கீழே மட்டும் சிந்திக்கத் துவங்குகையில் உங்களது எழுத்துக்கு மேற்கத்திய அந்தஸ்து ஏற்பட்டு விடுகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கை குறித்த உங்களது கேள்விக்கு எனது ஓரே பதில் 'புரவலர்கள்' என்பதுதான். எழுத்துக்களை ரசிப்பது, அது குறித்த எதிர்வினைகளை, விமர்சனங்களை முன் வைப்பது போன்ற ஈனத்தனங்களில் ஒருபோதும் ஈடுபடாதவர்கள் புரவலர்கள். பெரும் பணக்காரர்களான அவர்களது மூட்டுப்பசியைப் போக்க எம்போன்ற எழுத்தாளர்களோடு திரிவதும், செலவு செய்வதும் அவசியமானது.

புளியேப்பம்: ஓரே கருப்பொருளை மையமாகக் கொண்டு வெகுஜன நாளிதழில் வெளியாகும் கட்டுரைக்கும் சிற்றிதழில் வெளியாகும் கட்டுரைக்கும் என்ன வித்தியாசம் ?

மாசானமுத்து: வார்த்தைகள்தான். உண்மையில் கட்டுரைகளை எழுதுவதை விட சுலபமான காரியம் ஒன்று உலகில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற இரண்டே ஆப்ஷன்கள்தான் கட்டுரையில் இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை உங்களது சொந்த நடையிலேயே முதலில் எழுதிக்கொள்ளுங்கள்.யாதொரு, கூர்மையான, பொதுப்புத்தி, அவதானிப்பு, முன்னெப்போதும், கருத்தியல், அழகியல், தீராத, நுண்ணரசியல் போன்ற வார்த்தைகளை பொறுத்தமான இடங்களில் இட்டு நிரப்புனீர்களெயானால் முடிந்தது வேலை.

புளியேப்பம்: தங்களை ‘தமிழக முதல்வரின் தூக்கு தூக்கி’ என்று சகபடைப்பாளிகள் தங்களது விமர்சனக் கட்டுரைகளில் கேலி செய்து வருவது தாங்கள் அறியாதது அல்ல... அது குறித்து...

மாசானமுத்து: அப்படிச் சொல்வதை விட ‘தமிழக முதல்வரின் தொண்டரடிப்பொடி’ என்று அழைத்தால் இன்னும் அகம் மகிழ்வேன். நானறிந்தவரை அவர் ‘ஒரு’ குறள் காட்டும் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தந்தை மகற்காற்றும் நன்றியாக தம்பிள்ளைகளை அவையத்து முந்தி இருக்கச் செய்ய அவர் செய்யும் முயற்சிகளில் ஈர்க்கப்பட்டுத்தான் நான் திருக்குறள் புத்தகத்தையே வாங்கினேன். நானும் கூட ப்ளேயிங் ஸ்கூலில் படிக்கும் எனது மூன்று வயது மகளை ஆசிரியராகக் கொண்டு ‘ஜிங்கிலி புங்கிலி’ எனும் சிறுவர் இதழை துவங்கி இருக்கிறேன். இதன் மூலம் உலகின் இளவயது பத்திரிகை ஆசிரியர் என்ற புகழை எனது மகள் ‘திரவியவதனி’ பெற்றிருக்கிறாள். நாளைய தமிழிலக்கிய உலகை ஆளப்போவது அவள்தான்.

புளியேப்பம்: மலையாளிகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்களே ஏன்? மலையாளிகளுக்கெதிரான கலகக்குரல் உங்களது படைப்புகளில் ஓங்கி ஒலிக்கிறதே...

மாசானமுத்து: ஒர் இனத்திற்கென்று பொதுவான குணங்கள் இருத்தல் என்பது மூடத்தனமானது என்பதே எனது உறுதியான நம்பிக்கையாய் இருந்து வந்தது. அப்படியே இருப்பதாகக் கொண்டாலும் அதை அடிப்படையாகக் கொண்டு சகமனிதனை அணுகக்கூடாது என்பதை அறமாகக் கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய கருத்து ஒரு கற்பிதம் என்றாக்கியவர்கள் மலையாளிகளே. ‘ஒருத்தன் கூட நல்லவன் இல்லடா...’ என்ற எனது புகழ்மிக்க சிறுகதைக்கு (கையெழுத்து பிரதியில் வெளியானது) அடிநாதமாக இருந்தது மலையாளிகளின் அழிச்சாட்டியமே.

புளியேப்பம்: ஆனால் ஸ்ரீசாந்த் விவகாரத்தில் ஹர்பஜன்சிங்கை கடுமையாக சாடினீர்களே...

மாசானமுத்து: ஆம். நான் விசாரித்தவரையில் ஹர்பஜன் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்திருக்கிறார். இதிலென்ன கஞ்சத்தனம்?! ஒரு கஞ்சி கிடைத்தானென்றால் கூட நாலு சாத்து சாத்த வேண்டியதுதானே... அப்படிச் செய்யத் தவறியதன் மூலம் இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கி விட்டார் பாஜி...

புளியேப்பம்: தமிழிலக்கிய உலகில் நீண்டகாலமாக ஜல்லியடித்து வருபவர் என்ற முறையில் தற்போதைய எழுத்தாழுமைகளான ஜெயமோகன், சாருநிவேதிதா இருவரையும் ஓப்பிடுங்களேன்...

மாசானமுத்து: ஒருவர் மலையாளக்கரையோரம் பிறந்து தமிழிலக்கிய உலகில் கோலோச்சுகிறார். மற்றொருவர் தமிழ்நாட்டில் பிறந்து மலையாளத்திலும் புகழடைந்திருக்கிறார். இருவருமே என் எழுத்துக்களைப் படிப்பதில்லை என்பதைத் தவிர வேறெந்த பெரிய ஓற்றுமையும் இல்லை.


புளியேப்பம்: அடுத்தவர்கள் எழுதிய கதைகளைத் திருடி மாட்டிக்கொள்பவர்கள் உண்டு. ஆனால் அடுத்தவனின் கதையையே எழுதி உதைபட்டீர்களாமே...

மாசானமுத்து: கதைகள் வாழ்க்கையிலிருந்தே சுரண்டப்படுகின்றன என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவன் நான். எழுத்து உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருக்க வேண்டும் என்பதால் எனது ஹவுஸ் ஓனரின் மனைவியின் கள்ளத்தொடர்பை ‘கமலாவின் காதலன்’ என்ற சிறுகதையில் எழுதி இருந்தேன். உண்மையான பெயர்களோடு கதவிலக்கம், முகவரி என அனைத்தையும் குறிப்பிட்டு எழுதி இருந்ததால் என்னை வீட்டிற்குள் பூட்டி வைத்து மூன்று நாட்கள் இரக்கம் இல்லாமல் அடித்ததோடு வீட்டையும் காலி செய்யச் சொல்லி விட்டார். ரியலிஸத்திற்காக உயிரை விடவோ, எடுக்கவோ நான் தயங்கமாட்டேன் என்பதை இந்த நேர்காணலின் மூலம் எனது பெரும் வாசகப்பரப்பிற்குத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

புளியேப்பம்: பேரரசுவை ‘தமிழ் சினிமாவின் ஆகிருதி’ என்கிறீர்கள். ஜே.கே. ரித்தீஷை குறிப்பிடுகையில் ‘நவசினிமாவின் உதயம் ரித்தீஷின் கரங்களில் இருக்கிறது’ என்கிறீர்கள். தமிழ் சினிமாவின் ‘ஓரே உன்னத படைப்பு ‘வீராச்சாமிதான்’ என வாதிடுகிறீர்கள். தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை குறித்த உங்கள் அபிப்ராயம்தான் என்ன?

மாசானமுத்து: நடிப்பு, வசனம், இயக்கம், பாடல்கள் என சினிமாவின் அத்தனை துறைகளிலும் கலையின் உச்ச வடிவத்தை அடைந்தவர் பேரரசு. சங்கப்பாடல்கள் கூட சித்தரிக்கத் தவறிய காதலின் மேன்மையை தன் பாடல்களின் மூலம் தூக்கிச் சுமந்தவர். கட்டு கட்டு கீரைக்கட்டு, கய்யா முய்யா கய்யா முய்யா, அம்மாடி ஆத்தாடி, அப்பன் பண்ண தப்புல, லோக்கு லோக்கு லோக்கலு ஆகிய அவரது சாகாவரம் பெற்ற பாடல்களை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுக்குறியதாக எடுத்துக்கொண்டால் மட்டுமே தமிழ் பிழைக்கும்.

அடுத்து வீராச்சாமி, எதற்கும் பயப்படாத தமிழர்களை முதன் முதலில் பயம் கொள்ளச் செய்த சினிமா வீராச்சாமிதான். இன்றும் எனது வீட்டிற்கு விடுமுறைக்கு வரும் விருந்தாளிகளை விரட்டுவதாக இருப்பது வீராச்சாமி படத்தின் டிவிடிதான். ரிஷப்சனிலேயே வைத்திருப்பேன் என்பதால் எவரும் வருவதில்லை.

ஜே.கே. ரித்தீஷ் மட்டும்தான் புகழ்ந்தால் பணம் தருகிறாராம். வேறு எந்த நடிகன்யா பணம் கொடுக்கிறான்? அதனால்தான் சொல்கிறேன். அவர் தென் தமிழகத்தின் மூன்றாம் ராஜ ராஜ சோழன்... நாயகன் ஆஸ்கரை அள்ளி வரும்.

புளியேப்பம்: அறமே எனது கடவுள் என்கிறீர்கள். அறச்சார்பு இல்லாத எழுத்தாளன் அவுட் கோயிங் இல்லாத செல்போனுக்கு சமம் என்று கடும் விமர்சனத்தை முன் வைக்கிறீர்கள் ஆனால், உங்களுக்கு பிடிக்காத எழுத்தாளர்களது வீட்டிற்கு தாங்கள் எழுதியதிலேயே படுமட்டம் என்று கருதப்படுகிற “ஹாரிபார்ட்டரும் கார்ப்பரேசன் லாரியும்” என்ற நாவலை வி.பி.பியில் அனுப்பி இம்சிக்கிறீர்களாமே... இது எந்த வகை நியாயம்? ஏன் இந்த திணிப்பு?

மாசானமுத்து: இதற்கு முழுக்காரணம் சில பிம்ப் எழுத்தாளர்கள்தான். அவர்கள் ஒழுங்காக எனது புத்தகத்தை வாங்கினால் நான் ஏன் வி.பி.பியில் அனுப்ப வேண்டும். அவர்கள் என் புத்தகத்தை படிப்பதில்லை என்பதற்காக நான் எனது விற்பனை முயற்சியை கைவிட்டு விட முடியாது. அதிலும் சில எழுத்தாளர்கள் பணத்தை செலுத்தி புத்தகத்தை வாங்காமல் திருப்பி அனுப்புகிறார்கள். அவர்களைத்தான் நான் தமிழ் துரோகிகள் என்கிறேன்.

- பின் நவீனத்துவம், உலகமயமாக்கல், மேலைத் தத்துவம், உலக சினிமா குறித்த நமது பல்வேறு கேள்விகளுக்கு எழுத்துச்சுனாமி அளித்த பதில்கள் வரும் இதழில் இடம் பெறும்.

பின் குறிப்பு: ‘நமக்கு நாமே மாமே’ என்ற கொள்கை முழக்கத்துடன் புளியேப்பம் சிற்றிதழ் எழுத்துச் சுனாமி பிரதியங்காரக மாசானமுத்துவால் துவங்கப்பட்டுள்ளது.

Comments

Anonymous said…
‘நமக்கு நாமே மாமே’

இந்த கருத்து சரியில்லையே, பிற்காலத்தில் உறவுமுறைச் சிக்கல்கள் வருமே!?#
selventhiran said…
தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழிதான் 'நமக்கு நாமே திட்டத்தின்' அடிநாதம். உதாரணமாக நம்முடைய பதிவைப் படிப்பதற்கு நாதியே இல்லையென்றால் நாமே போலிப் பதிவர்களாக மாறி பின்னுட்டம் போடுவது, எந்த நிருபருமே பிரஸ் மீட்டுக்கு வரவில்லையென்றால் தாமே கேள்வி எழுப்பி பதில் சொல்லிக்கொள்வது இதெல்லாம் நமக்கு நாமே மாமே என்ற திட்டத்தின் அடிப்படையில் விளைந்தவைதான்.
selventhiran said…
வாங்க விக்கி

சிபிண்ணே பெரியவுக இப்பல்லாம் இந்தப் பக்கம் வரத்தே இல்ல போலருக்கு...
Unknown said…
தங்களின் அற்புதமான அறிவார்ந்த கேள்விகளுக்கு மாசானமுத்துவின் நேர்மையான பதில்கள் மெய்சிலிர்க்க
வைத்தன. இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த இலக்கியவாதியை புளியேப்பம் பிரத்யேக நேர்காணல் செய்தது
வாசகர் வட்டத்துக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. வளையோசை போன்ற குப்பை
பத்திரிகைகளின் கொக்கரிப்புக்கள் இனி கொஞ்ச நாள்களுக்கேனும் அடங்கும். அடுத்த பகுதி எப்போது வரும்
என்று ஆர்வமுடன் சோறு 'தண்ணி' இறங்காமல் இப்போதிருந்தே காத்துக் கிடக்கிறேன்.
(இக்கடிதத்தை வாசகர் கடிதத்தில் பிரசுரம் செய்தால் இரண்டு வருட சந்தா கட்டுவதாக முடிவு
எடுத்துள்ளேன் - பல வருடமாக ஓசியிலும் லைப்ரரியிலும் உங்கள் புத்தகத்தை வாங்கும் ஒரே வாசகன்
என்ற பெருமையுடன் - இளவேந்திரன்)
selventhiran said…
வாங்க சக்தி... புளியேப்பத்தின் முதல் சந்தாதாரர் என்ற புகழை அடைகிறீர்கள். வாழ்த்துக்கள்.
புளியேப்பம் ஏப்பம் ஏற்படுத்தும் வகையில் நிறைவான விருந்தாய் அமைந்தது. தூள் மாமே
புளியேப்பம் ஏப்பம் ஏற்படுத்தும் வகையில் நிறைவான விருந்தாய் அமைந்தது. தூள் மாமே
Karthikeyan G said…
மிக நல்லா இருக்கு .
selventhiran said…
நம்பிராஜன், கோலிச்சோடான்னு ஒண்ணு கடையில் விப்பான். கேட்டு வாங்கி குடிச்சிங்கண்ணா ஏப்பம் குறையும்.

வாங்க கார்த்திக், வருகைக்கு நன்றி
Unknown said…
செல்வா, முடியலத்துவம் கவிதைத் தொகுப்புக்குப் பதிலாக இம்மாதிரி ஹல்வா பரிமாறியிருந்தால் தமிழகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் உங்களைத் தெரிந்திருக்கும். எப்பவுமே எப்படி செல்வா உங்களால ஃபார்ம்ல இருக்க முடியுது??? முடியல!

Popular Posts