வசந்த விழா!

கர்நாடகம், பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் மகரசங்கராந்தியாகவும், தமிழகத்தில் பொங்கலாகவும், அஸ்ஸாமில் மஹாபிகுவாகவும், ஆந்திராவில் போகியாவாகவும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் பஞ்சாபில் லோஹ்ரியாக கொண்டாடப்படுகிறது. லோஹ்ரி பஞ்சாபின் பாரம்பர்ய அடையாளங்களுள் ஒன்று. இயற்கைக்கும், நெருப்பிற்கும் நன்றி சொல்லும் இவ்விழாவின் கொண்டாட்டங்களும், சரித்திரமும் சுவாரஸ்யமானது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி13ம் தேதி கொண்டாடப்படுகிறது லோஹ்ரி. விழா நாளன்று மாலையில் உறவினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி மரத்துண்டுகளால் நெருப்பினை மூட்டுகின்றனர். அவ்வாறு மூட்டப்படும் நெருப்பிற்கு ‘பரிக்ராமா’ என்று பெயர். அந்த நெருப்பிற்கு மரியாதை செய்யும் விதமாக இனிப்பு வகைகள், சோளம், கிழங்கு மற்றும் காய்கறி வகைகளை தீயில் இடுவர். பின்னர் டோலக் எனும் தோல் கருவியின் ஒலிக்கேற்ப, கிராமிய நடனமான பாங்க்ராவினை ஆடத் தொடங்குவார்கள். ‘ஆதர் ஆயே.. திலாதர் ஜாயே..’ (வறுமை ஒழியட்டும், வளமை பெருகட்டும்) எனும் பாடலை உற்சாகமாக ஆண்களும் பெண்களும் பாடத் துவங்குவர். அந்த நெருப்பில் சுடப்படும் முள்ளங்கியை உண்பவர்களுக்கு வளம் சேரும் என்பது பஞ்சாபியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பெண்கள் தனியாக நெருப்பு மூட்டி, அதனைச் சுற்றி நளினமான நடனங்களை ஆடுவர். பெண்கள் மூட்டும் நெருப்பிற்கு ‘கிட்டா’ என்று பெயர்.

லோஹ்ரி தினத்தன்று சிறுவர்கள் வீடு வீடாக சென்று ‘துல்லா பட்டி’யின் புகழ் பாடும் பாடல்களை பாடுவர். (துல்லா பட்டி பஞ்சாபின் ராபின்ஹூட். பட்டிராஜபுத் வம்சத்தை சேர்ந்தவரும், மொகலாய மன்னர்களை துணிவோடு எதிர்த்ததால் ஜஹாங்கீரால் கொலை செய்யப்பட்டவருமான மாவீரன் சாந்தாளின் பேரன்தான் துல்லா பட்டி. இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த இவர், அக்பரின் காலத்தில் வாழ்ந்த வழிப்பறிக்கொள்ளையர். பணக்காரர்களிடம் கொள்ளையடித்த பணத்தை ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்தவர். இந்திய பெண்கள் மத்திய கிழக்கு ஆசியாவின் அரேபிய நாடுகளுக்கு கடத்தப்பட்டு அடிமைகளாக விற்கப்படுவதிற்கு எதிராக முழு மூச்சோடு போராடிய போராளி. மீட்கப்பட்ட இந்துப் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து இந்து இளைஞர்களுக்கு பாரம்பர்ய முறைப்படி திருமணம் செய்து வைத்த சமூக புரட்சியாளர்தான் துல்லாபட்டி) அச்சிறுவர்களுக்கு பணம், இனிப்பு வகைகள், பரிசு பொருட்கள், அன்பளிப்பது வழக்கம். இளைஞர்களுக்கோ இது ஒரு காதல் விழா. மாலையில் நடனம், பாட்டு கொண்டாட்டத்தோடு தங்கள் வயதொத்த பெண்களுடன் பேசி மகிழும் வசந்த விழாவாகவும் இருக்கிறது லோஹ்ரி.

பொதுவாக பஞ்சாபில் அக்டோபரில் கோதுமையை விதைத்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்வது வழக்கம். குளிர்காலம் முடிந்து வசந்தம் துவங்குவதை நல்ல அறுவடைக்கான நம்பிக்கையாக கருதுகின்றனர் விவசாயிகள். பஞ்சாபியர் குளிர்காலத்தை பவுஸ் என்றும் அதனைத் தொடர்ந்து வரும் மாதத்தை மகி என்றும் அழைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதி, பூமியின் மகர ரேகை சூரியனை நோக்கி திரும்புகிற நாள் மகி தினம் என்றழைக்கப்படுகிறது. அன்று மகர ராசிக்கு சூரியன் இடம் பெயர்வதாகவும் நம்பபடுகிறது. லோஹ்ரி திருநாளின் அடுத்த தினமான மகித்தினத்தன்று பெண்கள் கோதுமை, எள், சர்க்கரை பாகு, வேர்கடலை, சோளம் போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் தின்பண்டங்களையும், கறும்பு சாறு பாயாசத்தையும் இறைவனுக்கு படைக்கின்றனர். அன்றைய உணவில் மக்கா சோள ரோட்டியும் கடுகு இலையில் செய்யப்படும் கூட்டும் இடம் பெறும்.

மகி போர் வீரர்களுக்கு மரியாதை செய்யும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. சீக்கியர்களுக்கு ஐந்து கட்டளைகளை வழங்கியவரான குரு கோவிந்த் சிங்கின் நாற்பது முக்கிய சீடர்கள் அவுரங்கசீப்பிற்கு எதிரான போரில் மரணமடைந்தனர். டிசம்பர் 29ம் தேதி மரணமடைந்த அவர்கள் ஜனவரி 13ல் தான் எரியூட்டப்பட்டனர் (இந்த சம்பவத்திற்கு பிறகுதான் சீக்கியர்களுக்கு குறுவாள் வைத்துக்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது). போரில் தங்கள் இன்னுயிரை நீத்தவர்களுக்கு மரியாதை செய்யும் தினமாகக் கருதப்படுகிறது மகி தினம். இந்த மகி தினத்தன்று வண்ணமயமான சந்தைகள் கூடும். கிராமத்து மக்கள் ஒன்று கூடி இளைஞர்களுக்கான பல்வேறு பந்தயங்கள் நடத்துவர். பாட்டுப்போட்டி, மல்யுத்தம், பெண்களுக்கான போட்டிகள் என களை கட்டும் சந்தை. ஆரம்பத்தில் பஞ்சாபில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த மகிதினம் தற்போது ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, டெல்லி பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. திருமணமான பின் வரும் முதல் லோஹ்ரியும், தலைச்சன் பிள்ளை பிறந்த பின் வரும் முதல் லோஹ்ரியும் தமிழ்நாட்டு தலைதீபாவளி போல மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.

தகவல் தொடர்புத்துறையின் வளர்ச்சிக்கு பிறகு இரண்டாம் தலைமுறை இளைஞர்கள் டெல்லி, பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு புலம் பெயர்ந்த பின்னரும் லோஹ்ரி தன் பாரம்பரிய அடையாளங்களை இழக்காமல் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் காலமாற்றத்தின் அடையாளமாக இரவு நடனவிருந்துகளில் மது புகுந்திருக்கிறது. சிறுவர்களுக்கான பரிசுப் பொருளாக காட்பரீஸ் மாறியிருக்கிறது. நம் வீட்டு குக்கர் பொங்கல் போல!

(விக்கினேஸ்வரிக்கு...)

Comments

அரிய தகவல்கள்.....பகிர்ந்தமைக்கு நன்றி.....

அன்புடன்
ஆரூரன்
Rajan said…
வணக்கம் தலைவா ! நல்லா இருக்கீங்களா ?
butterfly Surya said…
இந்த தகவல் எதுவும் தெரியாமல் Happy Pongal ன்னு குறுஞ்செய்தி அனுப்பிட்டு தமன்னா பேட்டிய பார்த்து கொண்டே நாங்கல்லாம் ஜாலியா பொங்கல் கொண்டாடுவோம்.
butterfly Surya said…
அத்தனை தகவல்களும் புதியது தான்.அருமையான இடுகைக்கு நன்றி செல்வா.
RaGhaV said…
மிகவும் ரசித்து படித்தேன்.. :-))
அருமையான இடுகை..
Ganesan said…
சகோதரி விக்னேஸ்வரிக்கு,

பொங்கல் வாழ்த்துக்கள்
எழுதி ரெண்டு வருஷம் ஆகியும் இன்னும் பதிவுல வரலையேன்னு நினைச்சேன். நன்றி செல்வா.

அன்றைய உணவில் மக்கா சோள ரோட்டியும் கடுகு இலையில் செய்யப்படும் கூட்டும் இடம் பெறும். //
அதுக்குப் பேர் Makki di Roti & Sarson da Saag.
நம்ம ஊர்ல பொங்கல் அன்னிக்கு பொங்கல் பண்றது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி இங்கேயும் இந்த உணவு ரொம்ப முக்கியம். எங்கேயாவது பஞ்சாபி வீடுகளில் முடிந்தால் சுவைத்துப் பாருங்கள். உங்களின் பேவரிட் ஆகிடும்.
நல்ல பல தகவல்கள்
நல்ல தகவல் செல்வா, மிக்க நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்

Popular Posts