கோட்டி

இரைச்சல், கரைச்சல், புகைச்சல் என ஒவ்வொரு அங்குலத்திலும் மனுவிரோதம் காட்டுகிற நகரம் என்பதால் சென்னையிலிருந்து பின்னங்கால் பிடறி பட ஓடிவந்தேன். அதற்குக் கொஞ்சமும் குறைச்சல் இல்லாத நகரமாய் மாறிவருகிறது கோவை. உங்களுக்கு மட்டும் என்னடா சொகுசு என சொளெரென அறையும் வெயில், கால் இடுக்குகளில் கூட நுழைந்து வெளியேற துடிக்கும் வாகனங்கள், எந்நேரமும் தூசிகளோடு காதல் புரியும் காற்று, கடும் தண்ணீர் பஞ்சம் இத்தோடு நகர் நீங்கியிருந்த சண்டாளர்களும் வந்து சேர செளஜன்யத்துக்கு சவுகர்கர்யமில்லாத ஊரெனப் படுகிறது.

***

வார்த்தைகளை வைத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டில் எதிராளியின் ஈகோவையும் ஒரு குத்து குத்தி விளையாடுவது விறுவிறுப்பாய் இருக்கிறது.

***

இந்திய எழுத்தாளர்களுக்கு எழுத்தினால் கிடைக்கும் அதிகபட்ச பலன் ‘பெண்கள் தொடர்புதான்’ என்றார் செல்லமுத்து குப்புசாமி. ஓரளவுக்கு ஒத்துப் போகிறேன். அதிலும் எழுத்தாளன் என்ற உடனே ஒரு ‘ட்ரஸ்ட் வொர்த்தி’ ஃபீலிங் வந்து சேர்ந்து விடுகிறது. நிறைய பெண்கள் தங்கள் ஆதர்ச எழுத்துக்காரனிடம் அந்தரங்கமான பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

எழுத்தாளர்களால் முடியவே முடியாதது ரகசியங்களைப் பேணுவதுதான். எழுத்திலோ, பேச்சிலோ எப்படியோ வெளிப்பட்டுவிடும். நேரடியாகவோ அல்லது பவுடர் பூசிய வேறு வடிவங்களிலோ.

***

ஆண்கள் பேசத்துவங்கும்போது பத்து சதவிகிதம் அழகையும், புணர்ச்சியின் போது ஐம்பது சதவிகிதம் அழகையும் இழக்கிறார்கள் என்றாள் தோழி. பிப்ரவரி 18ல்தான் தாலி சுமந்து இருபதாம் தேதிக்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.

பெண்கள் பேசத்துவங்கும்போது முழு அழகையும் இழக்கிறார்கள் என்ற என் சொந்த அபிப்ராயத்தை அவளிடத்தில் மறைத்து விட்டேன்.

***
வெள்ளியில் தங்க முலாம் பூசிய பேனா ஒன்று பிறந்தநாள் பரிசாக கிடைத்தது. என் பத்து ரூபாய்க்கு மூன்று பேனாக்கள் செயலிழந்த தினத்தில் வெள்ளிப்பேனாவை பாக்கெட்டில் குத்திக்கொண்டேன்.

நினைவுச் சாமானை இப்படியா பயன்படுத்துவது என்று கேண்டி கோபித்துக்கொண்டாள். பொருட்களின் மீது நினைவை சேமித்து வைப்பது உசிதமல்ல. காலம் எல்லா பண்டக அறைகளிலும் பாழடைந்த நினைவுச்சாமான்களை நிறைத்து வைத்திருக்கிறது. அன்பின் வெளிப்பாடு பரிசு. பரிசின் பதில் மரியாதை பயன்பாடு.

***

கோட்டிக்காரத்தனமாக எதையாவது யோசித்துக்கொண்டே ரோட்டில் விழுந்து எழுவது சகஜமாகிவிட்டது. தாறுமாறாய் செல்லும் வாகனங்களை விட ஆபத்தானது தாறுமாறான மனம். முட்டியிலும் முழங்கையிலும் வாடகை இல்லாமல் குடியிருக்கின்றன சிராய்ப்புகள். காய்ந்த சிராய்ப்பின் பொருக்குகளை உதிர்ப்பதில் கூட ஒரு சுகம் இருக்கத்தானய்யா செய்கிறது. ரத்தத்தைத் தவிர உடலை விட்டு வெளியேறும் எல்லாவற்றிலும் மகத்தான சுகம் ஒன்று மறைந்திருக்கிறது.

***

சுயமரியாதை என்பதில் தனிமரியாதையும் இருப்பதைப் போலத்தான் சமூக அக்கறையில் சொந்த அக்கறையும் ஒளிந்திருக்கிறது. எதையாவது கண்டு கோபப்படால் ‘வந்துட்டாருய்யா ரமணா...’ எனும் கேலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ரோஷப்படுபவனையும், படுத்துகிறவனையும் சமூகம் கேலி செய்வது இயல்பு. இயலாமையும் கூட.

***

காமத்தைப் பற்றி மருத்துவர் / எழுத்தாளர் / சாமியார் - யார் எழுதினாலும் உடனே அவர்களது மரியாதை குறைந்து விடுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் குடும்ப கட்டமைப்பில் காமம் எத்தனை முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதை தினம் ஒரு உண்மைக்கதையாவது உணர்த்தி விடுகிறது. ட்ரஸ்ட் வொர்த்தி இமேஜில் சொல்லப்படுகிற விஷயங்களை கதையாக கட்டுரையாக எழுதக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். சதா சர்வ காலமும் அதைப்பற்றியே சிந்திக்கிற / ஆராய்கிற மனிதனாக ’காதல் அன்பை பேசுகிறது. காமம் அன்பை வெளிப்படுத்துகிறது’ என்கிற தேற்றத்தை நிறுவ முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

***

நமக்கு வரவேண்டிய பணமெல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்க நாம் செலுத்த வேண்டிய கடன்கள் கழுத்தை நெரிக்கும். எல்லோருக்கும் இதுதான் கதை. கொஞ்சம் பணம் புரட்டலாமென தெருவில் காலை வைத்தால் வீடு திரும்புவதற்குள் கைரேகை நிபுணன் ஆகிவிடலாம் போலிருக்கிறது.

வாழ்க்கைத் தரம் எத்தனைப் பணம் வைத்திருக்கிறோம் என்பதில் இல்லை. எத்தனைப் பணம் புரட்டமுடிகிறது என்பதில்தான் இருக்கிறது என்றார் அப்பா. இதுமாதிரி தத்துவங்களுக்கெல்லாம் ரெமுனரேஷன் கொடுத்தால் பணத்தேவையே இருக்காதுப்பா என்றேன். முறைத்தார்.

***
கூடிய வரைக்கும் பிழைகள் இல்லாமல் எழுதத்தான் முயற்சிக்கிறேன். அதை மீறி வருகிற பிழைகளை அறிவின் பிழைகளாகக் கொள்ளலாகாது. பின்னே ஃப்ரூப் ரீடர்களும் பிழைக்கவேண்டுமே?!

Comments

Ashok D said…
//எந்நேரமும் தூசிகளோடு காதல் புரியும் காற்று//
/எழுத்தினால் கிடைக்கும் அதிகபட்ச பலன் ‘பெண்கள் தொடர்புதான்’/
/பெண்கள் பேசத்துவங்கும்போது முழு அழகையும்/
/பரிசின் பதில் மரியாதை பயன்பாடு/
/உடலை விட்டு வெளியேறும் எல்லாவற்றிலும் மகத்தான சுகம்/
/காமம் அன்பை வெளிப்படுத்துகிறது/

இதமான பகிர்வு :)
க ரா said…
நல்லதொரு எழுத்து நடை உங்களது. அப்படியே வாசிப்பவர்களை வசியம் செய்து விடுகிறது.
// நிறைய பெண்கள் தங்கள் ஆதர்ச எழுத்துக்காரனிடம் அந்தரங்கமான பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
//

கொஞ்ச நாளைக்கு இந்த முடியலத்துவம் அது இது எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, 30 நாட்களில் எழுத்தாளர் ஆவது எப்படி என்ற புத்தகம் எழுதினால் உங்களுக்கும் பலன், எங்களுக்கும் பலன்:)
/
பிப்ரவரி 18ல்தான் தாலி சுமந்து இருபதாம் தேதிக்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்
/
:))
//கோட்டிக்காரத்தனமாக எதையாவது யோசித்துக்கொண்டே ரோட்டில் விழுந்து எழுவது சகஜமாகிவிட்டது.//

சத்தியமான உண்மை செல்வா..

தவறாக எடுத்துக் கொள்ளாவிட்டால் ஒரு விண்ணப்பம்.. கலவையாய் எழுதுவது நன்றாகத்தான் இருக்கிறது.. எனினும் பொட்டில் அறைந்தாற்போல உங்கள் சிறுகதைகளைப் படித்து நாளாகி விட்டது.. நேரம் கிடைப்பின் ஒன்றை எழுதுங்களேன்..:-)))
அன்பின் செல்வேந்திரன்

கோட்டி - ( ??? ) நன்றாகவே இருக்கிறது.

சென்னை கோவை ஒப்பு நோக்கு சரி - எல்லா நகரங்களூமே இப்படித்தான் ஆகிறது. காற்றின் காதல் தூசிகளோடு - ஆகா அருமையான கற்பனை.

எந்த விளையாட்டிலும் எதிரியின் ஈகோவைப் பங்கப்படுத்துவது மகிழ்ச்சி தான்.

18ல் தாலி சுமந்து 20ல் முடிவுக்கு வந்தவரா - என்ன இது உள்குத்து ?

பரிசின் பதில் மரியாதை பயன்பாடு - உடன்படுகிறேன். வீட்டில் பயன்படுத்தாமல் பல பொருட்கள் உண்டு - பயன் படுத்த வேண்டும்.

உடலை விட்டு வெளியேறும் எல்லாவற்றிலும் மகத்தான சுகம் - மறுப்பதிற்கில்லை.

ஃப்ரூப் ரீடர்கள் மறுமொழியையும் கவனிப்பார்களல்லவா

நல்வாழ்த்துகள்
RRSLM said…
//இதுமாதிரி தத்துவங்களுக்கெல்லாம் ரெமுனரேஷன் கொடுத்தால் பணத்தேவையே இருக்காதுப்பா என்றேன். முறைத்தார்.//
"வந்துட்டாருய்யா கருத்து கந்தசாமின்னு நினச்சிருப்பாரு......" :-)
Anonymous said…
வரவர எழுத்தாளர் மாதிரியே எழுதறே செல்வா :)) நல்லாருக்கு :))
butterfly Surya said…
அருமை செல்வா.
Sanjai Gandhi said…
புலி உறுமுது.. புலி உருமுது.. இடி இடிக்கிது...இடி இடிக்கிது..
Unknown said…
///ஃப்ரூப் ரீடர்களும்///

இது தவறு. ”ப்ரூஃப் ரீடர்” இதுதான் சரி. இதை அந்த ஃப்ரூப் ரீடரையே கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டேன்.

:))))

கொஞ்சம் பணம் புரட்டலாமென தெருவில் காலை வைத்தால் வீடு திரும்புவதற்குள் கைரேகை நிபுணன் ஆகிவிடலாம் போலிருக்கிறது.


செல்வேந்திரன் டச்.
ம்ம்........" தல " ஃ பார்முக்கு வந்தாச்சு...
Deepa said…
//பெண்கள் பேசத்துவங்கும்போது முழு அழகையும் இழக்கிறார்கள் என்ற என் சொந்த அபிப்ராயத்தை அவளிடத்தில் மறைத்து விட்டேன்.//

What a sexist remark? கோட்டிக்காரனாக இருந்தாலும் இப்படியெல்லாம் பேசக்கூடாது.
>:-(
அருவி said…
நன்றாக் இருக்கிறது உங்களது நடை. உதிரிகளாக இல்லாம கட்டுரையாகவும் எழுதுங்கள். கவிதைகளை படிக்கவும் ஆவலாயிருக்கிறது. சமாளிப்பும் அருமை
selventhiran said…
அசோக், இராமசாமி, மங்களூர் சிவா, சீனா சார், சூர்யா, வெங்கட்ராமன், திருநாவுக்கரசு, அருவி - வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றிகள்.

குசும்பா, உனக்கு ஜெயமோகனின் அனற்காற்றை சிபாரிசு செய்கிறேன்.

கார்த்தி, எல்லா பத்திரிகைகளும் நிராகரித்த ஒரு மீச்சிறு கதை இருக்கிறது. பதிவிடுகிறேன் விரைவில்.

ஆர்.ஆர் எப்படி இருக்கீங்க?

மயிலு, எல்லாம் உன் சமையலை சாப்பிடுறதுனால வந்த வினை!

சஞ்ஜெய்ணா, கொ. எடுத்த புலிதானே?

வாங்க விஜய், நீங்க ஒரு நுட்ப வாசகர் :)

தீபா, சாட்ல சண்டை போடலாம்.
அன்பின் வெளிப்பாடு பரிசு. பரிசின் பதில் மரியாதை பயன்பாடு. //
சரி தான்.

அடிக்கடி எழுது. நல்ல வாசிப்புக்கு உன் தளம் தவிர்த்து வேறெங்கு போக?