டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - வாசக அபிப்ராயம்

எந்தவொரு புத்தகத்தையும் முன் தீர்மானங்கள் இன்றி வாசக பரிவோடு அணுகுவது என் வழக்கம். அப்படித்தான் ஆசை ஆசையாகக் காத்திருந்து ‘டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்’ தொகுதியையும் வாசித்தேன்.

தொகுப்பிலுள்ள 17 கதைகளுள் பெரும்பாலானவை கதாசிரியனே கதையினை விவரிக்கும் பாணியிலானவை. அதிலும் அனுபவக் குறிப்புகளே அதிகம். உரையாடல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உரைநடையே நூலாசிரியரின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது.

பரிசல்காரன் பெரும்பாலும் வெகுஜன தன்மையோடு இயங்குகிற எழுத்துக்காரர் என்பதால் உத்தி, நடை, கலையம்சம் போன்ற கறாரான அளவுகோல்களை விடுத்து வெகுஜனக் கதைகளுக்குறிய வரையறைகளுக்குள்ளாவது மட்டுப்படுகிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ‘தனிமை - கொலை தற்கொலை’, நான் அவன் இல்லை, ஜெனிஃபர், டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும், நட்சத்திரம் ஆகிய ஐந்து கதைகளைத் தவிர்த்து ஏனைய பன்னிரெண்டு கதைகளும் ‘நாட் ஸோ பிரிண்ட் ஓர்த்தி’ வகையரா. ‘காதல் அழிவதில்லை’ கதையை அதன் தேர்ந்த நகைச்சுவைக்காக மன்னிக்கலாம். ஜெனிஃபர் கதையில் வரும் ‘திருமணவாதி’ என்கிற பதப்பிரயோகம் ருசிகரமானது.

பின்னட்டையில் நூலாசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்று இடம் பெற்றிருக்கிறது. அதனை எழுதிய கரங்களுக்குத் தங்க காப்பு. மூன்றே வாக்கியங்களில் எழுத்தாளரின் பெயர் உட்பட ஆறு பிழைகள்.

நூலாசிரியர் பதினெட்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார் என்பது என்னுரையில் தெரிகிறது. கதைகளில் தெரியவில்லை.

***

பல காலமாக இசை கேட்கிறோம். நல்ல இசை வடிவங்களை நம்மால் பகுத்தறிய முடிகிறது. அதற்காக யாராவது ஒரு இயக்குனர் தன் படத்திற்கு இசை அமைக்கச் சொன்னால் ஒத்துக்கொள்வோமா?!

இணையத்தில் அதிகம் இயங்குகிறோம். பல மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். மைக்ரோசாஃப்டிலிருந்து அழைத்து அடுத்த புரொஜெக்டுக்கு நீங்கதான் ஹெட் என்றால் ஒப்புக்கொள்வோமா?!

சமூக மாற்றம் பற்றி பேசுகிறோம், விவாதிக்கிறோம். பிரதமரே அழைத்து திட்டக்குழுத் தலைவராக நீங்களே இருந்து விடுங்கள் என்றால் உடனே டில்லி கிளம்பி விடுவோமா?!

நிச்சயம் மாட்டோம். மேற்கண்ட பணிகளுக்கு நாம் தகுதியானவர் இல்லை என்கிற உறுதியான சுயமதிப்பீடு. ஆனால், ஒரு பதிப்பகம் புத்தகம் போட அணுகினால் சுயமதிப்பீட்டைக் காற்றில் கரைத்து விட்டு உழைப்பின்மை மிளிரும் வரிகளை எழுதிக் குவித்து விடுகிறோம். பல வருடங்களாக எழுத்தியக்கத்தில் இயங்குகிறவர்களுக்கு தொடர்ச்சியான வாசிப்பின் மூலமும் எழுத்துப்பயிற்சியின் மூலமும் எது நல்ல எழுத்து என்கிற அளவுகோல் உருவாகவில்லை என்றால் அதன் துர்பலன் பதிப்பாளருக்கும் வாசகனுக்குமே போய்ச் சேரும்.

மஞ்சள் துண்டு கிடைத்ததும் மளிகைக்கடை வைக்க நினைத்த சுண்டெலி போல பின்னூட்டங்களின் அளவையும், வியந்தோதலையும் மனதிற்கொண்டு புத்தகம் போட துணிவது அபாயகரமானது. பிரதியின் பயணம் நீண்ட தூரம் கொண்டது. பலரால் பலகாலத்திற்கும் வாசிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்படுவதுதான் புத்தகத்தின் கவுரவம். பிரபல பதிவர் ஒருவரின் சமீபத்திய நூல் ஒன்றினை பழைய புத்தகக் கடையில் பார்க்க நேர்ந்தது. உள்ளீடற்ற எழுத்துக்களின் கதி இதுதான். தவிர குழுவினருக்காக எழுதப்பட்டு குழுவினர்களால் மட்டுமே வாங்கப்படுகிற சமாச்சாரத்திற்குப் பெயர் புத்தகமல்ல. சுற்றறிக்கை!

Comments

//நூலாசிரியர் பதினெட்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார் என்பது என்னுரையில் தெரிகிறது. கதைகளில் தெரியவில்லை.//
//திட்டக்குழுத் தலைவராக,புரொஜெக்டுக்கு நீங்கதான் ஹெட்,ஒரு இயக்குனர் தன் படத்திற்கு இசை அமைக்கச் சொன்னால்//
//தவிர குழுவினருக்காக எழுதப்பட்டு குழுவினர்களால் மட்டுமே வாங்கப்படுகிற சமாச்சாரத்திற்குப் பெயர் புத்தகமல்ல. சுற்றறிக்கை! //
இதெல்லாம் நச் ன்னு இருக்கு.நேர்க்கொண்ட பார்வை,நேர்மையான விமர்சனம்.எனக்கு பிடிச்சி இருக்கு.

//உள்ளீடற்ற எழுத்துக்களின் கதி இதுதான்// இங்கு உள்ளீடு என்பது எதை சார்ந்தது..?
//வியந்தோதலையும்// இந்த வார்த்தையை நான் இப்போதுதான் உங்களால் அறிந்து கொண்டேன்.இதற்க்கு சரியான பொருள் என்ன?
எதுவும் வாய்க்கா வரப்பு தகராறா இருக்குமோ! :)

உங்க அளவில் நேர்மையான விமர்சனம். புத்தகத்தை நான் படிக்காததால் விமர்சனத்தை முழுமையாக ஏற்கமுடியவில்லை
பரிசல்காரன் எழுதிய புத்தகத்துக்கான விமர்சனமா சார் இது! பாவம் சார் பரிசல்காரன், கொஞ்சம் என்கரேஜ் பண்ணும் விதமா உங்க விமர்சனத்தை எழுதியிருக்கலாம்! இது என் கருத்து. தப்பா நெனைச்சுக்காதீங்க.
Thamira said…
தேர்ந்த பதிவு செல்வா. நண்பரின் புத்தகமென்பதால் அதன் விமர்சனத்தை ஒட்டிய பதிவில் தொடரும் இரண்டாவது பகுதியை படிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் முதல் பகுதியை ஒப்புக்கொள்வதால் தவிர்க்கவேயியலாத நிலையில் இரண்டாவதையும் ஏற்கத்தான் வேண்டியதிருக்கிறது. அடுத்து என் புத்தகமா என்ற கேள்வியுடன் உலவும் வதந்தியே என் வயிற்றைக்கலக்குகிறது.
நான் இன்னும் பரிசலின் புத்தக‌த்தைப் படிக்கவில்லை. அதனால் அது பற்றி சொல்ல என்னிடம் கருத்து ஏதுமில்லை. நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கக்கூடும். ஆனால் பதிவுலகில் தொடர்ச்சியாக நான் விரும்பி வாசிக்கும் மிகச்சிலருள் நீங்களும் ஒருவர் என்கிற வகையில் நீங்கள் மேற்கூறிய விஷயங்களில் சில கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன.

//ஒரு பதிப்பகம் புத்தகம் போட அணுகினால் சுயமதிப்பீட்டைக் காற்றில் கரைத்து விட்டு உழைப்பின்மை மிளிரும் வரிகளை எழுதிக் குவித்து விடுகிறோம்//

நீங்கள் சொல்வது மிகச்சரியே. ஆனால் அதனால் தவறென்ன? முழுக்க முழுக்க தரமான படைப்பை மட்டும் தான் பிரசுரிப்பேன்; அது வரைக்கும் வலைப்பூவில் மட்டுமே எழுது எழுதி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பேன் என்று காத்திருந்தால், ஒரு சிலருக்கு எண்பது வயதிலும் புத்தகம் போடுதலோ, பத்திரிக்கையில் எழுதுதலோ சாத்தியமேயில்லை. இன்றைக்கு தமிழில் இருக்கும் ஆகச்சிறந்த எழுத்தாளரான ஜெயமோகனே அதைச் செய்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் குமுதம் விகடன் கல்கி இதழ்களில் வேறு பெயர்களில் ஜனரஞ்சகக் கதைகள் எழுதியதாக அவரே ஒப்புக் கொள்கிறார். அவை நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இருந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.

அவ்வளவு ஏன்? நீங்களே அதைத் தானே செய்திருக்கிறீர்கள்? விகடனில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான உங்களுடைய "கற்றதனால் ஆன பயன்..." என்கிற கவிதைக்கும் இலக்கியத்துக்கும் எள்முனையளவேனும் ஸ்நான ப்ராப்தி இருக்குமா? நீங்கள் எழுதிய வேறு நல்ல படைப்புகளுடனே அது ஒப்பிட லாயக்கற்றது. ஆனால் தமிழர்களின் வழக்கமான சிந்தனை ஊனத்தின் காரணமாக அதன் தகுதிக்கு மீறிய புகழை சம்பாதித்தது அக்கவிதை. (கவனியுங்கள்! நான் உங்கள் எழுத்தை எப்போதுமே குறைவாக மதிப்பிடவில்லை. பதிவுலகிலிருந்து தரமான எழுத்தாளனாய்ப் பரிமளித்து உயரும் வாசனையுடைய விரல் விட்டு எண்ணக்கூடிய‌ ஆசாமிகளுள் நீங்களும் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. மேலே நான் பேசியது குறிப்பிட்ட ஒரு படைப்பைப் பற்றி மட்டுமே).

நீங்கள் எந்த அளவுகோலைப் பயன்படுத்தி அதைக் கவிதை எனத் தீர்மானித்து தமிழகத்தின் முதன்மையானதொரு ஜனரஞ்சகப் பத்திரிக்கைக்கு அளித்தீர்களோ, அதே அடிப்படையில் தான் பரிசலும் தன் சிறுகதைகதைகளைப் புத்தகமாக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

நான் சொல்ல வருவது மிக எளிமையானது. பத்தக‌ம் போடுவதெல்லாம் விஷயமே இல்லை. ஆனால் அது நிகழும் போது கிடைக்கும் அங்கீகாரமும், பரவலான கவன ஈர்ப்பும் ஓர் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு மிக மிக அத்தியாவசியாமான கிரியா ஊக்கி என்றே நினைக்கிறேன். அதே போல் அது நிகழ்வதற்காக அவன் ஏற்றுக்கொள்ளும் வலிகளும், மேற்கொள்ளும் சமரசங்களும் எளிய தர்க்கத்தின் வாயிலாக புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று தான். "அதன் துர்பலன் பதிப்பாளருக்கும் வாசகனுக்குமே போய்ச் சேரும்" என்கிறீர்கள். ஓரளவிற்கு அதற்குக் காரணமே பாதிப்பளரும் வாசகர்களும் தான் என்கிறேன்.

நீங்களே சொல்வது போல் பதினேழில் ஐந்து தேறுகிறது என்றாலே (கிட்டதட்ட முப்பது சதவிகிதம்) அது ஒரு எழுத்தாளனின் கன்னி முயற்சி என்கிற வகையில் வெற்றி தான். சுற்றறிக்கையாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் இங்கே முக்கியத்துவம் பெற வேண்டியது அது எழுத்தாளனுக்கு அளிக்கும் நம்பிக்கையும், அடுத்த படைப்பை நோக்கி நகர்த்தும் மனோபலமும். இதற்கு நான் பதிவுலகின் புராதன நோயான பின்னூட்ட கும்மிகளை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. தவிர, குறிப்பிட வேண்டிய இன்னொரு ஆதார சங்கதி, பத்தகம் போட விரும்பும் எழுத்தாளனை இங்கே எல்லா பதிப்பாளர்களும் (கிழக்கு தவிர) கேட்கும் முதல் கேள்வி இதற்கு முன்பு என்ன புத்தக‌ம் போட்டிருக்கிறீர்கள் என்பது.

சில நேரங்க‌ளில் நாம் விரும்பாத சிறிய விஷயங்களைச் செய்தால் தான் நாம் விரும்பும் பெரிய விஷயம் சாத்தியமாகும்!
Unknown said…
கொஞ்சம் சீற்றத்தைக் குறைத்திருக்கலாமோ?
விமர்சனங்கள் எழுதுவது துணிச்சலானது என்பது நான் உணர்ந்த விஷயம்... உங்களிடம் அந்த துணிச்சல் இருக்கிறது ! வாழ்த்துக்கள்...
Aranga said…
விமர்சனம் என்றால் என்ன ? விளக்கம் , அருமை , அடுத்த படிப்புக்கு எழுத்தாளருக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்
அன்பின் செல்வேந்திரன்

நல்லதொரு விமர்ச்னம் - புத்தகம் பற்றி - ஆனால் எண்ணங்களோடு உடன் படவோ மறுக்கவோ மனம் மறுக்கிறது. ஏனெனத் தெரியவில்லை.
உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு... :)
காட்டமான விமர்சனம்.
அதிலை said…
புத்தகத்தை நான் படிக்கவில்லை..ஆனால் உங்கள் விமர்சனம் அருமை....
//
சி. சரவணகார்த்திகேயன் சொன்னதையே வழிமொழிகிறேன்.. தத்தி தவழ்ந்து விழுந்து எழுந்த குழந்தை தான் நடக்க முடியும் ஓட முடியும்.. தவழ்றதுலேயே நீ விழுந்துட்ட அதுனால உனக்கு நடக்குற தகுதி இல்லேங்குறது கொஞ்சம் நெருடலா இருக்கு.

விமர்சனத்திலிருந்த நேர்மை ”தட்டிக் கொடுப்பதிற்கு” பதிலாக ”தட்டி வைக்கிறது”.

பி.கு : நானும் அந்த புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை :(
//
அது எப்படிய்யா திட்டி எழுதினாலும் படிக்கப் படிக்க சில வார்த்தைப் பிரயோகங்கள்ல சபாஷ் போட வைக்கற?

நேத்தே படிச்சுட்டேன். தமிழ் எழுத்துரு இல்லாத கணினில படிச்சதால பின்னூட்டம் போடல. ஆனா அப்ப நான் மனசுல நெனைச்சத, வெண்பூ சொல்லிட்டார்.

இதே போல, இனியும் வெளிவர இருக்கும் எனது நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளுக்கும் அபிப்ராயம் எதிர்பார்ப்பேன்.. ஏமாத்தக்கூடாது சரியா?

:-)
//பிரபல பதிவர் ஒருவரின் சமீபத்திய நூல் ஒன்றினை பழைய புத்தகக் கடையில் பார்க்க நேர்ந்தது. உள்ளீடற்ற எழுத்துக்களின் கதி இதுதான்//

இந்த ஒரு கருத்தோடு மட்டும் மாறுபடுகிறேன். உங்களுக்கே தெரியும்.. பல பொக்கிஷங்களை பழைய புத்தகக் கடையில்தான் நாம் கண்டுகொள்கிறோம்!
Ganesan said…
இந்த பதிவை பொறுத்த வரையில் செல்வாவை விமர்சனகாரனாக தான் பார்க்கவேண்டுமே தவிர பரிசலின் நண்பனாகவோ , பதிவர்களின் நண்பனகாவோ பார்க்க வேண்டும்.

தான் மனதில் பட்ட விசயத்தை பட்டவர்தமாக , தைரியாமாக சொன்னதற்கு பாராட்டுகள் செல்வா.
வா’சக’ அபி’ப்ராயம்’?
இன்னும் படிக்கவில்லை.
பரிசலின் புத்தகத்தை இன்னமும் படிக்க வில்லை. நண்பன் என்பதால் கொஞ்சம் கடுமையாக விமர்சித் துள்ளீர்களோ?

//பிரபல பதிவர் ஒருவரின் சமீபத்திய நூல் ஒன்றினை பழைய புத்தகக் கடையில் பார்க்க நேர்ந்தது. உள்ளீடற்ற எழுத்துக்களின் கதி இதுதான். //

பழைய புத்தகக் கடையில் பார்த்ததினாலேயே தரம் தாழ்ந்தது என்று சொல்ல முடியுமா செல்வா? தி.ஜ, ஜெயகாந்தன் முதற்கொண்டு சுஜாதா வரை, பழைய புத்தகக் கடையில் வாங்கித்தான் படித்தேன்.

ஆனால் நீங்கள் சொல்ல வந்ததை புரிந்து கொள்கிறேன். பரிசலும் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.
Ashok D said…
சுற்றறிக்கை! //
நன்று (இப்ப தான் நைனா.. பட்ச்சேன்:)
சரியாக சொல்லி இருக்கீங்க நண்பரே !
தவறுகள் எப்பொழுது சுட்டிக்காட்டப்படாமல் மறைக்கப்படுகிறதோ அப்பொழுதே அந்த எழுத்தாளனின் திறமையும் மறையத் தொடங்கிவிடுகிறது . எல்லோரும் அவரின் புத்தகங்களை வாசித்தார்களோ இல்லையோ தெரியவில்லை . ஆனால் .
ஆஹா !
அருமை !
கலக்கல் !
எப்படி இப்படியெல்லாம் !
என்று ஏதோ கடமைக்கு விமர்சனம் செய்வதில் அந்த எழுத்தாளனுக்கு எந்த வளர்ச்சியம் ஏற்படப்போவதில்லை . ஆனால் தற்போது நீங்கள் சுட்டிக்காட்டிய சில தவறுகள் வருங்காலத்தில் இந்த நண்பர்கள் தங்களின் தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் என்று சொல்வதைவிட இங்கு மாற்றிகொள்வதற்கும் , இன்னும் தங்களின் திறமைகளை பட்டைத் தீட்டும் வகையில் அமையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் .
பகிர்வுக்கு நன்றி .
குகன் said…
ஒரு வாசகன் ஏமாறும் போது ஏற்ப்படும் நியாயமான கோபம் தான்.

//தவிர குழுவினருக்காக எழுதப்பட்டு குழுவினர்களால் மட்டுமே வாங்கப்படுகிற சமாச்சாரத்திற்குப் பெயர் புத்தகமல்ல. சுற்றறிக்கை! //

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.

**

சமிபத்தில் வந்த சிறுகதை தொகுப்பில் பரிசலின் சிறுகதை தொகுப்பு தான் பெஸ்ட் என்ற சொல்லபோவதில்லை. ஆனால், நல்ல இலக்கிய படைப்புகள் படைப்பார் என்பதில் இந்த முதல் தொகுப்பில் தெரிகிறது.

ஒரு எழுத்தாளனிடம் இருந்து சிறந்த படைப்பு வரும் வரை புத்தகம் வரக்கூடாது என்று இருந்தால்... முதுமை அவன் காத்திருக்க வேண்டியது தான்.
Sanjai Gandhi said…
அட.. இதெல்லாம் எப்போ நடந்தது? நானும் புத்தகம் வாங்கினேன்.. இன்னும் படிக்கவில்லை.. எனக்கு கதைகள் படிபப்தில் அவ்வளவு விருப்பம் இருப்பதில்லை.. நண்பர்கள் வற்புறுத்தலாம் சிலவை படிப்பதுண்டு.. விமர்சனம் எல்லாம் பண்ணத்தெரியாது..


பதிவுக்கு தொடர்பில்லாத என் பின்னூட்டம்..
//முழுக்க முழுக்க தரமான படைப்பை மட்டும் தான் பிரசுரிப்பேன்; அது வரைக்கும் வலைப்பூவில் மட்டுமே எழுது எழுதி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பேன் என்று காத்திருந்தால், ஒரு சிலருக்கு எண்பது வயதிலும் புத்தகம் போடுதலோ, பத்திரிக்கையில் எழுதுதலோ சாத்தியமேயில்லை.//

சரவண கார்த்திகேயன், யோசிச்சி தான் எழுதினிங்களா? . ஒருவர் எழுத்து அச்சில் வர வேண்டும் என்பதற்காகவே படைப்பு தரமில்லை என்றாலும் பிரசுரிக்க வேண்டுமா?. ஒருவேளை இலவசமாக வினியோகித்தால் அப்படி செய்யலாம்..

//பல பொக்கிஷங்களை பழைய புத்தகக் கடையில்தான் நாம் கண்டுகொள்கிறோம்!//

பரிசல் மாமா, பொதுவாக பார்த்தால் இது சரி தான்.. ஆனால் புத்தகம் வெளிவந்த 3 மாதங்களில் பழைய புத்தகக் கடைக்கு சென்றால்.. அது பொக்கிஷமாகுமா?????
{தவிர குழுவினருக்காக எழுதப்பட்டு குழுவினர்களால் மட்டுமே வாங்கப்படுகிற சமாச்சாரத்திற்குப் பெயர் புத்தகமல்ல. சுற்றறிக்கை! }

பதிவுகளிலேயே இந்தக் 'குழு ஊக்கப்படுத்துதல்' இருக்கிறது என்று சுட்டப் போய்த்தான் நான் வாங்கிக் கட்டிக் கொண்டேன்..
:)
ஆனால் உங்கள் நண்பரின் புத்தகம் என்றறிந்தும் அளித்திருக்கும் நேர்மையான விமர்சனம் உங்களது வாசிப்பின் மீது மதிப்பதைத் தருகிறது.
Kumky said…
புத்தகம் வாசுவிடமிருந்து பெற்று பத்திரமாக அலமாரியில் இருந்தது...

உங்க விமர்சனத்தை படிச்சு...அப்புறம் புத்தகத்தையும் படிச்சு....ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
பரிசல் கொஞ்சம் அவசரப்பட்டுட்டார் என்றுதான் தோன்றுகிறது.
நெக்ஸ்ட் பார்ப்போம்.

நேர்மையான விமர்சனம்..

ஹி..ஹி...உங்க புக் எப்பங்நா வரும்..?
Nat Sriram said…
வால்பையனின் பதிவு மூலம் வந்தேன். அவர் சொன்னது போல் இந்த விமரிசனம் / வாதங்கள் நல்ல வாசிப்பனுபவம் தான்.

கிட்டத்தட்ட செல்வேந்திரனின் எல்லா கருத்துகளும் 'அதானே' சொல்ல வைக்கையில், CSK யின் பதில் கருத்துக்களும் நன்று. சாம்ப்ராசின் ace செர்வீசை வியக்கையில் , அகாசி அதை விட நன்றாக அதை return செய்வது போல்..இது போன்ற வாதங்களே பதிவுலகத்தை சற்று stuff -ஓடு வைத்திருக்கின்றன.

மற்றும், பரிசலின் attitude , இதை எடுத்துக்கொண்ட விதம் எப்போவும் போல் குட் !
மோனி said…
செல்வேந்திரனுக்கு ஒரு 500 ரூபா மாலை போடலாம்னு ஆசைதான்..
மாயாவதி கோவிச்சிக்கிட்ட என்ன பண்றது ?
//பிரபல பதிவர் ஒருவரின் சமீபத்திய நூல் ஒன்றினை பழைய புத்தகக் கடையில் பார்க்க நேர்ந்தது. //
திருக்குறள் இல்லாத பழைய புத்தக கடையை உங்களால் காட்ட முடியுமா ?
திருக்குறள் பற்றிய உங்கள் விமர்சனத்தை எதிர்பாக்கிறேன்.

புத்தகங்களின் தரம் , வாசகனின் ரசனையை பொறுத்தது . எனக்கு எனக்கு ஜெயமோகனை விட சுஜாதாவை தான் பிடிக்கும்

விமர்சனம் குறை ,நிறையைகளை சுட்டி காட்ட வேண்டும் . உங்கள் விமர்சனத்தில் குறை மட்டுமே இருப்பது ஒரு குறை . ஆனால் பதிவை படித்தவுடன், நீங்கள் சொல்லவருவது எல்லாம் உண்மைதான் போல என்ற பிரமையை உங்கள் விமர்சனம் ஏற்படுத்துவதே இதன் வெற்றி .
selventhiran said…
கும்கீ, இமலாதித்தன், கிருபா, ஆதவன், ஆர்.ஆர், ஆமூகி, செல்வராஜ் ஜெகதீஸன், சரவண கார்த்திகேயன், சேவியர், அரன், சீனா, வெண்பூ, ச்சின்னப்பையன், அதிலை, ஆளவந்தான், பரிசல், காவேரி கணேஷ், வெயிலான், சிவா, ஸ்ரீ, பாலா, அசோக், பனித்துளி சங்கர், குகன், கார்த்திகேயன், சஞ்ஜெய் அண்ணா, வாசகன், நடராஜ், மோனி, மந்திரன் வருகைக்கும் கருத்துக்களின் மூலம் விவாதத்தை முன்னெடுத்துச் சென்றதற்கும் நன்றிகள்!

மின்னஞ்சலிலும், தங்களது பதிவுகளிலும் விவாதித்த இரும்புத்திரை, வால் பையன், கார்க்கிக்கும் நன்றிகள் பல!

Popular Posts