நெகிழ்தற் பொருட்டு


ஒருவழியாக திருமணம் முடிந்து; மறுவீடு; வரவேற்பு; விருந்து; பால்காய்ப்பு சம்பிரதாயங்களை முடித்து இன்று இருவரும் வீடு ஏகினோம். இனி நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து படைப்பதே முதற்பணியென முடிவு செய்திருக்கிறோம்.

***

காதல் என்றவுடன் ஆரம்பத்தில் எதிர்த்த குடும்பத்தார் திருமணம் என முடிவான பின் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்தது இன்ப அதிர்ச்சி. அண்ணன்மார் அவர்தம் மனைவியர் பிள்ளைகள்; அக்காள்மார் அவர்தம் கணவர்கள் பிள்ளைகள் - சகிதம் திருமணத்திற்கு இருபது நாட்களுக்கு முன்பே விடுப்பு எடுத்து வந்து விட்டார்கள். வீட்டில் ஜே...ஜே என திருவிழா கூட்டம். வாசல் தாண்டி வழிகிற பிரியம் கண்டு ஊரார் வியந்தார்கள்.

‘இருபது நாள் லீவு எடுக்கிற அளவுக்கு அப்படியென்ன அதிசய சித்தப்பா...?!’ என ஆத்திரப்பட்ட ஆசிரியை முறைத்துப் பார்த்து விட்டு அண்ணன் மகள் வீட்டுக்குத் திரும்பி விட்டாள். ஆறு வயது அவளுக்கு. அந்த ஸ்கூலே வேண்டாம் என்கிறாள்.

***

தாலிக்குத் தங்கம் அக்காள்மார் வைக்கவேண்டுமென்பது வாணியக்குடி மரபு. அக்காள்மார்கள் அத்தனை வசதி வாய்ந்தவர்களில்லைதான். தங்களது பல்லாண்டுகாலச் சிறுவாட்டுச் சேமிப்பில் பொற்காசுகள் வாங்கி வைத்தார்கள். பதிலுக்குச் செய்யும் சுருள் மரியாதையையும் என் பொருளாதாரம் அறிந்து தவிர்க்கச் சொன்னதில் துளிர்த்தது கண்ணீர்.

***

ஜெயமோகன், தேவதேவன், வசந்தகுமார், கலாப்ரியா, முருகேஷ் பாபு, பாஸ்கர் சக்தி, மாதவராஜ், சிதம்பரம், வடகரை வேலன், தண்டோரா, அப்துல்லா, பா.ராஜாராம், பட்டர் ஃபிளை சூர்யா, ஓ.சு. நடராசன், ஈஸ்வர் சுப்பையா என தங்கள் எழுத்துக்களால் என்னை மகிழ்வித்து வந்தவர்கள் நேரிலும் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்வித்தனர்.

***

திருமணத்திற்கென பிரத்யேகமான ஒட்ட வைத்த சிரிப்பை சிரித்துக்கொண்டிருந்தேன். ஜெயன் ‘செல்வேந்திரன்... நீங்க இன்னும் கொஞ்சம் மலர்ந்து சிரிக்கலாமே...’ என்று சொல்ல அரங்கம் சிரித்தது.

***
மகி கிராணியும் கடலாடி அருணும் இன்ப அதிர்ச்சிகள். முன்னவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறவர். பின்னூட்டங்கள் மூலம் பதிவர்களை உற்சாகப்படுத்தி வருபவர். பின்னவர் ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள கடலாடி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர். என் வலைப்பக்கங்களின் தீவிர வாசகர். இருவரது வருகையும் வாழ்த்துக்களும் என் மனதில் இன்னமும் ஊறிக்கொண்டே இருக்கிறது.

***

இன்னொருவர் அதிமுக்கியமானவர். குடிப்பதற்கென்றே வந்தார். குடித்துக்கொண்டே வந்தார். குடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். குடித்துக்கொண்டே சென்றிருக்கிறார். முதலிரவிற்கு முந்தைய நிமிடங்களில் ‘..ட்டேய்ய்...ங்கொத்தா...’ அலைபேசி வழியே அவரது ஆசீர்வாதம் வந்தடைந்தது.

***

ஈவெண்ட் மானேஜ்மெண்டில் என்னை ஜான் கில்லாடி என்பர். ஆனால், வந்தவர்களை வாங்க என்று கேட்டதைத் தவிர வேறெந்த உபச்சாரங்களும் செய்ய முடியாத அளவிற்கு அரேஞ்மெண்ட்ஸில் கோட்டை விட்டேன். வந்தவர்களனைவரும் சாப்பிட்டார்களா என்ற சந்தேகம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. மன்னிச்சுடுங்க பாஸ்!

***

திருமணத்தை வீடியோ எடுக்கவேண்டும் என்று முடிவு செய்தது ஒரு முட்டாள்தனம். அப்புறம் நல்ல நேரம், கெட்ட நேரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் அவர்களது இஷ்டப்படிதான். ஆட்டிப்படைத்து விட்டார்கள். இத்தனைக்கும் அட்வான்ஸ் கொடுக்கையில் எளிமையாய், இயல்பாய் எடுங்கள் போதுமென்று எத்தனையோ முறை சொல்லியும் கேட்டார்களில்லை.

மணப்பெண்ணின் நாடியை மணமகன் தாங்கி நிற்பதும், ஓரே குளிர்பானத்தில் இரு உறிஞ்சு குழல்களை சொருகிக் குடிப்பதும், மணமகள் ஊட்ட மணமகன் விரல் கடிப்பதும் இல்லாமல் ஒரு திருமண ஆல்பம் சாபல்யம் அடைவதில்லை போலும்.

***


திருமண இறுக்கம் தளர்ந்து மனமாரச் சிரிக்கவும், விரதம் முறித்து வயிறாரச் சுவைக்கவும் வகை செய்தார்கள் திருப்பூர் சேர்தளம் நண்பர்கள். குறுகிய கால அவகாசத்தில் அட்டகாசமான விருந்தினை ஏற்பாடுச் செய்து தந்தார்கள்.

நானும் பரிசலும் முந்தைய பிறவியில் மாமன் மச்சானாய்த்தான் இருந்திருக்க வேண்டுமென்பதை வந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். கேலியும் கிண்டலுமாய் கழிந்தது மாலை.

***

திருப்பூரில் தெருவுக்குத் தெரு மொபைல் கடை வைத்திருக்கும் வீனஸ் குழுமத்தின் முதலாளிகள் அனைவரும் மினி டைகர்ஸ் கிரிக்கெட் டீமின் ஆட்டக்காரர்கள். விளையாட்டுப் பிள்ளைகளாய்த் திரிந்தவர்களில் ஒருத்தன் மட்டும் திருப்பூர் வந்து ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்து பின் அக்கடையையே வாங்கி... பின் ஒவ்வொரு நண்பர்களாக அத்தொழிலில் சேர்ந்து இன்று ஊரையே விலை பேசிக் கொண்டிருக்கிற பிஸினஸ் மகாராஜாக்கள். நான் ஒருத்தன் மட்டும்தான் மணல் கடிகை சண்முகம் மாதிரி. திருச்செந்தூருக்கும் வந்திருந்தார்கள். திருப்பூரிலும் விருந்து பரிசுகளென அசரடித்தார்கள்.

***

புதுப்பொண்டாட்டி கோலமிடும் அழகை தோள் துண்டு, வாயில் சொருகிய டூத் பேஸ்ட் சகிதம் ரசிக்காதவன் தமிழ்க்கணவன் ஆகான். நானும் துணிந்தேன். கேண்டி முதலில் வெள்ளை மாவினால் ஒரு வட்டம் வரைந்தாள். அதை நீல நிறப்பொடி கொண்டு நிறைத்தாள். அருகிலே ஒரு சதுரம். அதை மஞ்சள் நிறப் பொடியால் நிறைத்தாள். அடுத்து ஒரு சிவப்பு முக்கோணம் உருவானது. அதனையொட்டி ஒரு கறுப்புச் செவ்வகம். அதனருகே ஓர் அலட்சிய அறுங்கோணம். துணுக்குற்றேன்.

‘பூவும் பறவைகளும்தான் கோலமா... இது மாடர்ன் ஆர்ட்...’ என்றாள். கோலம் போடத் தெரியலங்கிறத பயபுள்ள எப்படிச் சமாளிக்குது...?!

***

Comments

R. Gopi said…
ஆல்பம் மாதிரி இருக்கு பதிவு! அந்தக் கோலத்தையும் ஒரு போட்டோ புடிச்சுப் போட்டிருக்கலாம் (போட்ட கோலம், கோலம் போடுவதை நீங்கள் பார்க்கும் கோலம் ரெண்டையும் சொல்கிறேன்!)
Romeoboy said…
வாழ்த்துக்கள் பாஸ் ..
திருமண வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
கோலம் ரசனையான பகிர்வு பாஸ்!

என்சாய் த கிரேட் திருமண லைஃப்...
RaGhaV said…
தன்னந்தனியாய்
ஒரு தீவிலே கிடந்தாலும்
கூட்டநெரிசலில்
உள்ளூரில் கிடந்தாலும்
இனி உங்களுக்காய்
ஓர் உயிர் காத்திருக்கும்
எப்பொழுதும்.. :-)

திருமண நல்வாழ்த்துக்கள் செல்வா.. :-)

அழகானதொரு வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்.. :-))
தொலைபேசும் தூரத்தில் இருந்து வாழ்த்த எத்தனித்த மணநாள் அன்று பெரும் மழை இங்கே. வாய்த்த போது தாங்கள் அலுவலில் இருந்தீர்களென அறிந்தேன், சகோதரியிடம் வாழ்த்து தெரிவித்தாகி விட்டது என்றபோதும் மீண்டும் வாழ்த்துகள் செல்வேந்திரன் !
Anonymous said…
மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் தொடர என் வாழ்த்துக்கள் செல்வேந்திரன்.
வாழ்க்கையை கொண்டாட ஆரம்பிச்சிட்டிங்க..!! புதுமண தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்..!!
இனிய ஆசிகள்.

நல்லா இருங்க ரெண்டு பேரும்.
anujanya said…
வாழ்த்துகள் செல்வா.

அனுஜன்யா
அன்பு செல்வா,
நெகிழ்வும் மகிழ்வும்தான் திருமணம்... அந்த கடைசி வரியில் சொன்ன கோலத்தை விட கையில் மாவுத் தடத்துடன் திருவும் வாசலில் நீங்களும் நின்ற கோலமே திருக்கோலமாக இருந்திருக்கும். தினமும் நிகழட்டும் இந்தத் திருக்கோலம்.
அவ்வப்போது செல்லச் சண்டைகளும் இருக்கட்டும். சீடை இல்லாவிட்டால் சீனிச் சேவு இனிக்காது!
எல்லாம் நல்லபடியாக முடிந்ததா வாழ்த்துக்கள் செல்வா ........
vanila said…
"செல்வேந்திரன்+குரளரசி" இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்.. எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க..
மணிஜி said…
வாழ்த்துக்கள் தம்பி
sakthi said…
வாழ்த்துக்கள் செல்வா வாழ்க வளமுடன்!!!
Anonymous said…
//‘பூவும் பறவைகளும்தான் கோலமா... இது மாடர்ன் ஆர்ட்...’ என்றாள். கோலம் போடத் தெரியலங்கிறத பயபுள்ள எப்படிச் சமாளிக்குது...?
//

Kaikudunga acca.

Congrats to both of you.

- Ana
வாழ்த்துக்கள் பாஸ் :-)
selventhiran said…
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். பரிசுப்பொருட்களை இன்னமும் அனுப்பி வைக்காதவர்கள் செய்து கொண்டிருக்கிற வேலையை போட்டது போட்டபடி விட்டுவிட்டு உடனே ஓடிப்போய் பரிசுகளை அனுப்பி வைக்கவும்.
தவிர்க்க முடியாத அலுவல் பணி காரணமாக மகிழ்ச்சியான அந்த தருணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை!

கோவையில் சந்திக்கிறேன் தல!
பத்மா said…
adinga enga vaazhtha vida perusa parisu ....
//மணப்பெண்ணின் நாடியை மணமகன் தாங்கி நிற்பதும், ஓரே குளிர்பானத்தில் இரு உறிஞ்சு குழல்களை சொருகிக் குடிப்பதும், மணமகள் ஊட்ட மணமகன் விரல் கடிப்பதும் இல்லாமல் ஒரு திருமண ஆல்பம் சாபல்யம் அடைவதில்லை போலும்.//

:)))))

வாழ்த்துகள் செல்வா :)
Unknown said…
நலமும், வளமும், மக்களும் பெற்று மக்கட்செல்வங்களுடன் பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்!
RRSLM said…
வாழ்த்துகள் செல்வா!
வாழ்த்துக்கள் செல்வா!
vaanmugil said…
வாழ்த்துகள்...
Anand said…
வாழ்த்துக்கள் செல்வா.

ஆனந்த் காளியண்ணன்,
நாமக்கல், தற்பொழுது சிகாகோ.
Margie said…
Congratulations...Selvendiran & Thirukuralarasi
Mahi_Granny said…
லேட்டா வந்தாலும் எனது வாழ்த்தையும் வாங்கிக் கொள்ளுங்கள் மக்களே. எல்லா வளமும் பெருக நல் வாழ்த்துக்கள்.
Ganesan said…
ரொம்பவே மகிழ்ச்சியாய் இருக்கிறது தம்பி.

இனிய என் வாழ்த்துக்கள் செல்வா..
thenpandian said…
இனிய தோழமையே,

உங்கள் திருமணத்துக்கு நேரில் வர இயலவில்லை.. இருவரும் மணக்கோலத்தில் உள்ள புகைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தேன்.

எல்லா வளமும் பெற்று.. இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
தென்பாண்டியன்
அன்புள்ள செல்வேந்திரன்,

திருமணத்திற்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். நீங்கள் இருவரும் எல்லா வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்

அன்புடன்
இளங்கோ
butterfly Surya said…
வாழ்த்துகள் சகோ...

ரசித்தேன்.