ஆ. மாதவன் கதைகள் - வாசக அபிப்ராயம்

அவனும் நானும் நண்பர்கள். வறிய புலத்திலிருந்து வசதிக்கு மாறியவர்கள். ஒரே தொழில்; ஒரே நிறுவனம்; ஆயினும் ஓர் நிரை அல்ல. அவன் என்னிலும் சாதனையாளன். மிகுந்த அந்தரங்கமாக நட்பின் அடிப்படையில் அவனுக்கு வரவிருக்கும் நல்வாய்ப்பு குறித்த ரகசியமொன்றைச் சொன்னான். யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டான். ஓரிரு வாரங்களில் அவனுக்குத் திருமணம் என ஏற்பாடாகி இருந்தது

அத்தகவலை நான் எவ்வித முகாந்திரமுமின்றி கசிய விட்டேன். நிறுவனத்திலிருந்து வெளியேற்றி விட்டார்கள். அவனுக்கு கிடைக்க இருந்த வாய்ப்பிற்கும் குண்டு வைத்துவிட்டார்கள். ஓரே நாளில் வீதிக்கு வந்து விட்டான். விடைபெறும் முன் என் கரங்களை இறுகப் பற்றி ‘தேங்க்ஸ்டா...கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருடா’ செருப்பாலடித்தது போலிருந்தது. முகம் சிறுத்து தலை குனிந்து கொண்டேன். எவ்வித இலாப நோக்கமுமின்றி நான் நிகழ்த்தின இத்துரோகத்திற்குக் காரணம் என்ன? பொறாமையா?! நிச்சயம் இல்லை. அவனது வளர்ச்சி என்னை எவ்விதத்திலும் சீண்டியதில்லை. உண்மையில் எனக்கு உள்ளூர சந்தோசம்தான் கொண்டிருந்தேன். ஒருவன் வாழ்வழிந்துச் சீரழிவதைக் காண மனம் ரகசிய ஆவல் கொண்டிருந்ததா?! முகமறியா மனிதர்கள் படும் அவலம் கண்டு அல்லற்படுவது பாவனையா?! ஒருவனின் குடியைக் கெடுத்து விட்டுப் பின் அதற்குக் காரணங்கள் தேடும் நான் யார்?! மானுடம் பாடும் நூல்கள்; பெரியோரைத் துணைகொண்டிருத்தல்; பக்தி மார்க்கம் எதுவும் என்னை மனிதனாக்கும் முயற்சியில் துவண்டு விட்டனவா?!

இலக்கியத்தில் இதற்கு விடை இருக்கிறதா என புத்தகங்களைக் குடைந்து கொண்டிருந்தேன். காரண காரியங்களின்றி மானுடர்கள் குற்றம் புரியத் தலைப்பட்டிருக்கிறார்கள். மனதின் குரோதத்திற்கு வியாக்கியானங்கள் தேவையில்லை என்கிற ஆ. மாதவன் சிறுகதைகள் எனக்கு சற்று ஆறுதல் அளித்தன.

எந்தவொரு இலக்கிய ஆக்கத்தையும் முன்னுரையை வாசித்து விட்டுப் படிக்கும் வழக்கம் எனக்கில்லை. ஆ. மாதவனுடைய சிறுகதைகளை ஒருசேர படிக்கும்போது முற்றிலும் நெகட்டிவான மனிதர்களைச் சித்தரிக்கிற ஒரு எழுத்தாளராகவே எனக்குப் பட்டார். அவரது எழுத்து நடையும் மிகுந்த சாதாரணமாகவும் அயற்சியூட்டுவதாகவுமே தோன்றியது. எளிமையாக எழுதும் எழுத்தாளன் மீது இளக்காரம் எனும் மனக்காளான் முளைத்து விடுகிற தமிழ் மனம்தானே என்னுடையதும்?!

ஆனால், இப்படிப்பட்ட மீடியாக்கர் எழுத்தாளரை ந.பிச்சமூர்த்தி துவங்கி ஜெயமோகன்வரை வாழையடி வாழையாக கொண்டாடி வருகிறார்களே எனும் ஐயத்தில் வேதசகாயகுமார் எழுதிய முன்னுரையையும், ஜெயமோகன் எழுதிய பிற்சேர்க்கை கட்டுரையையும் வாசிக்கத் துவங்கினேன். ஆ. மாதவனின் எழுத்துக்களை எங்ஙனம் எதிர்கொள்வது என்கிற புதிரின் முடிச்சுகள் மெள்ள விலகத் துவங்கின.

பெரும்பாலும் மானுட அன்பைப் பேசுவதுதான் இலக்கியத்தின் பொதுவான குணாம்சமாக இருந்து வந்தது. மாதவனுடைய படைப்புகள் மானுட மனதின் இருண்மைகளை, தீமைகளைப் பேசியது.வேதசகாயகுமார் இதை கரும்புள்ளி என விளிக்கிறார். கதைமாந்தர்களின் மனதில் உறைந்து கிடக்கின்ற காமமும், வன்முறையும், குரோதமும் வெளிப்படுகின்ற தருணங்கள்தாம் ஆ. மாதவனின் கதைகளை முக்கியப்படுத்துகின்றன.

மாதவன் எல்லா மூத்த தமிழ் எழுத்தாளர்களைப் போலவே இளமைக்காலத்தில் திராவிடச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு கோபக்கார இளைஞனாக எழுதப் புகுந்தவர். அவருடைய ஆரம்பகால எழுத்துக்களில் பலவும் முரசொலியில் பிரசுரமாகி இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் அவரே டிஸ்கார்ட் செய்து விடுகிறார். அவருடைய எந்தத் தொகுப்பிலும் அவரது ஆரம்பகாலச் சிறுகதைகள் இடம் பெறவில்லை. ஆயினும் ஓரிரு கதைகளில் காணக்கிடைக்கிற ‘ஆன்மிக எள்ளல்’ அவரது திராவிடத் தொடர்பை நினைவூட்டுகின்றன.

மாதவனுடைய ஆகப்பிரதான ஆக்கமென கூறப்படுகிற கிருஷ்ண பருந்தையோ, புனலும் மணலும் நாவலையோ இன்னும் வாசித்தறியேன். ஆயினும், ஒரு வாசக மனதில் விஸ்வரூபம் கொள்ள அவரது சிறுகதைகளே போதுமானதாக இருக்கிறது.

ஆ.மாதவன் கதைகள் தொகுதி 1 & 2 - தமிழினி வெளியீடு

Comments

நல்ல பதிவு. படித்துப் பார்க்கிறேன்.
ஓம் சக்தி இந்த வருட மார்ச் இதழில் பக்கம் 87 ல் மேலாண்மை பொன்னுச்சாமியின் 'பூவுக்குள் தீ' என்ற சிறுகதை வந்திருக்கிறது. படித்துப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதுங்கள்.
அவரது மற்ற கதைகளும் படிக்க முயற்சி செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.