எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இசைக்கலைஞர் வாணிஜெயராம் ஆகியோருக்கு கண்ணதாசன் விருது

எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இசைக்கலைஞர் வாணிஜெயராம் ஆகியோருக்கு கண்ணதாசன் விருது!

கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் வழங்கப்படும் கண்ணதாசன் விருது இசைக்கலைஞர் வாணிஜெயராம் அவர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

 கண்ணதாசன் கழகம் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 87ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு 22.06.2014 அன்று மாலை 5.30 மணியளவில் கண்ணதாசன் விழா கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நிகழ்கிறது.

இவ்விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், பாடகி வாணிஜெயராம் ஆகியோருக்கு கண்ணதாசன் விருதுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 பொற்கிழியும்பட்டயமும் கொண்ட இவ்விருது கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களால் நிறுவப்பட்டுள்ளது.

 இவ்விழாவிற்கு மதுரை தியாகராஜர் குழு நிறுவனங்களின் தலைவர் திரு.கருமுத்து.தி. கண்ணன் தலைமையேற்று விருதுகளை வழங்குகிறார்.விழாவில் முதல்முறையாக இசைவடிவில் கவியரசு கண்ணதாசனின் "ஸ்ரீ கிருஷ்ண கவசம்" இசைத்தகடு வெளியிடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு. ம. கிருஷ்ணன் வெளியிட  ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திருமதி மலர்விழி பெற்றுக் கொள்கிறார்.

எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன், திரு.காந்தி கண்ணதாசன்,இசைக்கவி ரமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.திருச்சியை சேர்ந்த கவிஞர் நந்தலாலா சிறப்புரை நிகழ்த்துகிறார்.முன்னதாக செல்வி பிரியதர்ஷினி ராஜசேகர் வழங்கும் "கவிநயம் அபிநயம்"நிகழ்ச்சி நடைபெறுகிறது. திரு.குணசேகரன் வரவேற்றுப் பேசுகிறார்.திரு.தேவ.ஸ்ரீநிவாசன் நன்றி நவில்கிறார்.எழுத்தாளர் கனகதூரிகா தொகுத்து வழங்குகிறார். 

இது கண்ணதாசன் கழகத்தின் ஏழாம் ஆண்டுவிழா.கடந்த ஆறாண்டுகளாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் எழுத்தாளர்கள் திரு.அசோகமித்திரன்,திரு.வண்ணதாசன்,திரு.கலாப்ரியா,திரு.நாஞ்சில்நாடன்,
திரு.எஸ்.ராமகிருஷ்ணன்,  ஆகியோரும், கலைத்துறையில் பாடலாசிரியர் முத்துலிங்கம், பாடகர்கள் டி.ஆர்.எம்.சாவித்திரி,திரு.சீர்காழி சிவசிதம்பரம்,பதிப்பாளர் திரு பி.ஆர்.சங்கரன்,கவிஞரின் உதவியாளர் திரு.இராம.முத்தையா ஆகியோரும் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர்.

Comments